Wednesday, December 7, 2016

கம்பு நேப்பியர் தீவன ஒட்டுப்புல் கோ (க.நே) 4 சாகுபடி முறைகள்

கம்பு நேப்பியர் தீவன ஒட்டுப்புல் கோ (க.நே) 4


கால்நடை வளர்ப்பானது உழவுத் தொழிலின் உப தொழிலாக இருப்பதோடு மனிதர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்குகின்ற இன்றியமையாத வரப்பிரசாதமாகவும் அமைந்துள்ளது. பொதுவாக கால்நடைகளுக்கு வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை, மக்காச்சோளத்தட்டை மற்றும் பிற பயிர்களின் செடிகள் உணவாக கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மேற்கண்ட தீவனங்கள் கால்நடைகளுக்கு போதுமான ஊட்டச்சத்தினை அளிப்பதில்லை. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தினால் 2008ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கால்நடை வளர்ப்பதற்கு உகந்த தீவன புல் வகையான கோ 4 (கம்பு நேப்பியர்) ஒட்டுப்புல்லினை தீவனமாக கொடுப்பதன் மூலம் கால்நடைகளுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்தினை அளிக்கலாம். இது தீவனக்கம்பு மற்றும் நேப்பியர் புல் ஆகிய 2 புல் இனங்களை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்டது.

கம்பு நேப்பியர் தீவன ஒட்டுப்புல்லின் சிறப்பியல்புகள்

  • பெற்றோர் – கம்பு கோ.8 * எப்.டி.461
  • அதிக புரதச் சத்து (10.71%) மற்றும் இனிப்புத் தண்டுகளைக் கொண்டது.
  • அதிக படியான இலை நீளம் (110 – 115 செ.மீ) மற்றும் அகலமுடைய (4 – 5 செ.மீ) இலைகளைக் கொண்டது.
  • அதிக உயரம் (400 – 500 செ.மீ) வரை வளரும்.
  • அதிக (400 – 450 இலைகள்/குத்து) மற்றும் மிருதுவான தன்மை கொண்ட இலைகளை கொண்டது.
  • அதிக இலை தண்டு விகிதம் (0.71)
  • அதிக தூர்கள் (30 – 40/குத்து) மற்றும் சாயாதத் தன்மை உடையது.
  • வருடத்திற்கு ஏழு முதல் எட்டு முறை மறுதாம்பு பயிர் அறுவடை தரக்கூடியது.
  • வருடத்திற்கு ஏக்கருக்கு 150 முதல் 175 டன் வரை தீவன மகசூல் தரக்கூடியது.
  • பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு தன்மை உடையது.
  • குறைந்த இடத்தில் குறைந்த காலத்தில் அதிக மகசூல் தரக்கூடியது.
  • கணுக்களைக் சுற்றி உருவாகும் வேர்கள் விரைவாக முளைக்க உதவும்.
  • எல்லா மாவட்டங்களுக்கும் பயிரிட ஏற்றது.
பருவம்
இறவை பயிரை ஆண்டு முழுவதும் பயிரிட உகந்தது.
மண் வகை
அனைத்து மண் வகைகளிலும் பயிரிடலாம்.

நிலம் தயாரித்தல்

இரும்பு கலப்பை கொண்டு இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவு செய்தல் வேண்டும். பின்பு பார் அமைக்கும் கருவியைக் கொண்டு 60 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.

உர நிர்வாகம்

ஒரு எக்டருக்கு 25 டன் என்ற அளவில் தொழுஉரத்தினை கடைசி உழவிற்கு முன்பு இட்டு நன்கு உழுதல் வேண்டும். ஏக்கருக்கு 60 கிலோ தழைச்சத்து (130 கிலோ யூரியா), 20 கிலோ மணிச்சத்து (125 கிலோ சூப்பர்பாஸ்பேட்) மற்றும் 16 கிலோ சாம்பல்சத்து (27 கிலோ பொட்டாசு) இட வெண்டும். முழு அளவு மணி மற்றும் சாம்பல் சத்தினையும், 50 சதம் தழைச்சத்தினையும் அடியுரமாக இட வேண்டும். மீதமுள்ள 50 சதம் தழைச் சத்தை நட்ட 30வது நாளில் மேலுரமாக இட வேண்டும். மேலும் ஒவ்வொரு அறுவடைக்குப் பின்பும், 30 கிலோ தழைச்சத்தை (65 கிலோ யூரியோ) இடுவதால் அதிக தீவன மகசூல் கிடைக்கும். பரிந்துரைக்கப்பட்ட தழை மற்றும் மணிச்சத்தின் அளவின் 75 சதத்துடன் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போக்டீரியம் (ஏக்கருக்கு தலா 800 கிராம்) அல்லது அசோபாஸ் (1600 கிராம்) கலந்து கலவையாக இடும் போது விளைச்சல் அதிகரிப்பதுடன் 25 சதவீதம் உர அளவினைக் குறைக்கலாம்.

பயிர் இடைவெளி
60 செ.மீ * 50 செ.மீ.
விதையளவு
ஏக்கருக்கு 16,000 இருபரு வேர்க்கரணைகள் அல்லது தண்டு கரணைகள் தேவைப்படும். மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட வயதுடைய தண்டுகள் மட்டுமே விதைக் கரணைகளாக பயன்படுத்த வேண்டும்.

நடவு செய்தல்

வயலினை தயார்செய்து நீர் பாய்ச்சிய பின் வேர்க்கரணைகள் அல்லது தண்டுக் கரணைகளை பார்களில் 50 செ.மீ இடைவெளியில் 1 குத்துக்கு ஒரு வேர்கரணை என்ற அளவில் நடவு செய்ய வேண்டும். விதைக் கரணைகளை வயலில் நடும்போது அவை மண்ணுடன் இறுக்கமாக இருக்கும்படி அதனைச் சுற்றியும் காலால் நன்கு மிதித்துவிட வேண்டும். அப்படி செய்யாவிடில் கரணைகள் வேர்பிடிக்காமல் காய்ந்து விடும். கலப்பு பயிராக 3 வரிசைகள் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்லும் ஒரு வரிசை சேலிமசாலும் கலந்து பயிர் செய்வதால் ஊட்டச்சத்தினை அதிகப்படுத்தலாம்.

களை நிர்வாகம்

நடவு நட்ட 30 நாட்களுக்குள் களைகள் இருப்பின் ஆட்களை வைத்து கைக்களை எடுக்க வேண்டும். அதற்கு பிறகு கம்பு நேப்பியர் புல் அடர்த்தியாக வளருவதால் களைகள் முளைப்பதில்லை.

நீர் நிர்வாகம்

விதைக் கரணைகளை நட்டவுடன் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு மூன்றாவது நாளில் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு மண் மற்றும் கிடைக்கும் மழை அளவினைப் பொறுத்து 8 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். கழிவு நீரையும் நீர்ப்பாசனத்திற்கு பயன்படுத்தலாம்.
மண் அணைத்தல்
முதல் முறையாக நட்ட 30 நாட்களுக்கு பிறகு மண் அணைக்க வேண்டும். பிறகு மூன்று அறுவடைக்கு ஒரு முறை மண் அணைக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

பொதுவாக பூச்சி மற்றும் நோய்கள் கம்புநேப்பியர் ஒட்டுப்புல்லினை தாக்குவதில்லை. எனவே பயிர் பாதுகாப்பு தேவைப்படாது.

அறுவடை

நடவுக்கு பின்னர் 75 முதல் 80 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம். பிறகு ஒவ்வொரு 45 நாட்கள் இடைவெளியிலும் அடுத்தடுத்த அறுவடைகள் செய்யலாம். தீவனத்தை அறுவடை செய்யும்போது முடிந்த வரை நிலத்துடன் சேர்த்து அறுவடை செய்வது நல்லது. இரண்டு அல்லது மூன்று அறுவடைக்கு ஒரு முறை காய்ந்த இலை மற்றும் தண்டுப் பகுதியை அகற்றி விட்டு பரிந்துரைக்கப்பட்ட அளவு உரம் இட்டு, நீர் பாய்ச்சுவதன் மூலம் அதிக தூர்கள் வெடிக்கும்.
இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை தூர்களின் சுற்றளவை குறைத்து அதிகப்படியான தூர்களை அகற்றுவது நீர்பாய்ச்சுவதற்கு வசதியாக இருக்கும். இதன் மூலம் கிடைக்கும் வேர்க்கரணைகளை புதிதாக நடவு செய்ய பயன்படுத்தலாம். விதைக்கரணைகளை பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட தண்டினை (தண்டின் கணுவில் உள்ள முளைகள் நன்கு முற்றியவுடன்) பயன்படுத்தலாம்.
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்லில் ஆக்சலேட் என்ற நச்சுப் பொருள் அதிகமாக இருக்கும். எனவே இத்தீவனத்துடன் 5 கிலோ பயறு வகை தீவனத்தை கலந்து கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும். அல்லது சுண்ணாம்பு தண்ணீர் அல்லது தாது உப்பு கலவையை கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும்.



1 comment:

  1. Thanks for such a great and useful article..Very nice and useful post.it would be really helpful. Many times I see people confused about this.
    slotxo

    ReplyDelete