பாலைவனத்தில் விளையக்கூடிய பயிரான பேரீச்சையை நமது மண்ணிலும் விளைவிக்கலாம். உரிய முறையில் பேரிச்சையை சாகுபடி செய்து மார்க்கெட்டிங் செய்தால் லாபத்தில் அசத்தலாம் என்கிறார் திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையத்தை சேர்ந்த கே.ஜி.டேட்ஸ் உரிமையாளர் முருகவேல். அவர் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடியை சேர்ந்த அன்பழகன் என்ற விவசாயி புதிய ரக திசு பேரீச்சையை வளர்த்து லாபம் சம்பாதிப்பது பற்றி தெரிய வந்தது. அங்கு சென்று விவரங்களை கேட்டேன்.
நிச்சயம் இதில் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என நம்பிக்கை துளிர்த்தது. கையில் காசில்லாத நிலையில், இடத்தை விற்று பேரீச்சை சாகுபடியில் ஈடுபட்டேன். இது புது வகையான திசு வளர்ப்பு பேரீச்சை. இந்தியாவில் இந்த கன்று உற்பத்தி கிடையாது. இங்கிலாந்தில் மட்டும் ஆய்வுக்கூடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த திசு கன்றுகள் வளைகுடா நாடுகளில் பராமரிக்கப்பட்டு, பின் இந்தியா கொண்டு வரப்படுகிறது. குஜராத் வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து கன்றுகளை பெற்றேன்.
முருகம்பாளையத்தில் 2.5 ஏக்கரில் 200 திசு வளர்ப்பு பேரீச்சை கன்றுகளை, 2009ம் ஆண்டு பிப்ரவரியில் நடவு செய்தேன். பாலைவனத்தில் விளையும் சாதாரண பேரீச்சைக்கு தண்ணீர் தேவையில்லை. ஆனால் திசு பேரீச்சைக்கு தண்ணீர் தேவை. சொட்டு நீர் பாசன முறையில் நீர் பாய்ச்ச வேண்டும். மூன்று ஆண்டுகளில் காய்க்க தொடங்கி விடும். முறையான பராமரிப்பு காரணமாக எங்கள் தோட்டத்தில் 28மாதங்களிலேயே காய்க்க துவங்கியது. பராமரிப்பு மட்டும் சரியாக இருந்தால் ஒரு ஏக்கரில், மூன்றாம் ஆண்டில் இருந்து நல்ல வருவாய் கிடைக்கும்.
ரூ.8 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருஷம்தோறும் வருமானம் பார்க்க முடியும். ஆரம்ப கட்ட முதலீட்டை முதல் அறுவடையிலேயே பெற்றுவிடலாம். பிறகு,பராமரிப்பு மட்டும் செய்தால் போதும். வேறு எந்த விவசாயத்திலும் இதுபோன்று லாபம் பார்க்க முடியாது. பேரீச்சையை பொருத்தவரை, டேனின் என்ற வேதிப்பொருள் அதிகம் இருப்பதால் அதை அப்படியே உட்கொள்ள முடிவதில்லை. எனவே பதப்படுத்தப்பட்ட பழங்களே சந்தைக்கு வருகின்றன. இதற்கு முற்றிலும் மாறாக, திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்படும் பர்ரி வகை பேரீச்சைகளை அப்படியே சாப்பிடலாம்.
இவை இரும்பு சத்து மிக்கவை. சிறிய விவசாயிகள் இதை பயிரிட்டு அதிக லாபம் பார்க்கலாம். விவசாயம் தெரியாத இளைஞர்கள்கூட முறைப்படி கற்றுக்கொண்டால்,இது சிறந்த தொழில். கோவை மண்டலத்தில் முதலாவதாகவும், தென்னிந்தியாவில் இரண்டாவதாகவும் எங்களது திசு வளர்ப்பு பேரீச்சை பண்ணை உள்ளது. திருப்பூர் கலெக்டர் எங்கள் பண்ணைக்கு வந்து பார்வையிட்டு பாராட்டினார்.