Showing posts with label கேள்வி பதில். Show all posts
Showing posts with label கேள்வி பதில். Show all posts

Thursday, October 9, 2014

கால்நடை சார்ந்த கேள்வி பதில் - மாடு வளர்ப்பு

கேள்வி: மாடுகளுக்கு இதுவரை நானும் பத்து, பதினைந்து தடவை ஊசி போட்டு இருக்கிறேன். ஆனால் சினை பிடிக்க மாட்டேன் என்கிறது? என்ன செய்ய வேண்டும்?
பதில்: கால்நடை மருந்து விற்பனை செய்யும் மருந்துக்கடைகளில் பாண்டிகைண்ட் அல்லது பாணகீர் என்று மாத்திரை கிடைக்கும். இதில் ஏதாவது ஒன்றை வாங்கி ஒரே மாத்திரையை ஒரே நாள் மட்டும் கொடுக்க வேண்டும். அதன் பின்பு இரண்டு நாள் இடைவெளி விட்டு, ஒரு மாதம் வரை தினமும் ஒரு முட்டை ஒட்டோடு கொடுங்கள். அதன் பின்பு ஒன்றிரண்டு வாரங்களில் ஈத்து அடிக்கும். அப்போது சினை ஊசி போடுங்கள். அப்படியும் சினை நிற்கவில்லை என்றால் ஊசியில் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.
கேள்வி : சில நாட்களுக்கு முன்பு மாட்டுக்கு தடுப்பூசி போட்டேன். இன்னும் தடுப்பூசி போட்ட இடத்தில் தடித்து இருக்கிறது? தடிப்பு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
பதில்: மாட்டுக்கு தடுப்பூசி போட்ட உடனே, ஊசி போட்ட இடத்தினை நன்கு கரகர வென்று தேய்த்து விட வேண்டும். அவ்வாறு தேய்த்து விடாமல் விட்டுவிட்டால் தடிப்பு ஏற்பட்டிருக்கும். தற்போது தடிப்பு உள்ள இடத்தில் ஐயோடெக்ஸ் மருந்தை தடவி நன்கு தேய்த்து ஒத்தடம் கொடுங்கள். இரண்டு மூன்று நாட்கள் இதுபோல் செய்யும் போது தடிப்பு காணமல் போய்விடும்.
கேள்வி: மாட்டுக்கு தடுப்பூசி போடும் சேவையினை செய்து வருகிறேன். தடுப்பூசிகளுக்கும், சேவைக்கும் மானியம் பெற முடியுமா?
பதில்: உங்களின் சேவையினை நாங்கள் பாராட்டுகிறோம். சேவைகளுக்கு இதுவரை கால்நடை சார்ந்த சேவைகளுக்கு மானியம் வழங்கப்பட்டதாக நாங்கள் அறியவில்லை. மாட்டுக்கான தடுப்பூசிகள் கால்நடை மருந்து விற்பனை செய்யும் கடைகளிலேயே கிடைக்கின்றன. அவற்றை நீங்கள் சரியான விலைக் கொடுத்து வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
கேள்வி: மாடு கன்று போட்டு ஒரு மாதம் ஆகிறது. கன்று போட்ட நாள் முதல் பால் கறக்கவிட மாட்டேன் என்கிறது, உதைக்கிறது, காலை கட்டினாலும் துள்ளுகிறது. ஆனால் மடிவீக்கம் எதுவுமில்லை. பால் கறப்பதற்கு என்ன செய்யலாம்? வினோபிரியா
பதில்: மாட்டுக்கு இது முதல் கன்று என்பதால் கூச்சக்குணத்தால் இப்படி உதைக்கவும், பால் கறக்க விடாமல் செய்கிறது என்று நினைக்கிறேன். இது பிறவிக்குணமாகவோ இருக்கலாம். நாளாக நாளாக தான் இதை சரி செய்ய வேண்டும்.இனிமேல் பால் கறக்கும் போது ஏதாவது ஒரு வகையில் மாட்டின் திசை திருப்பி விடும் வகையில் செய்து பால் கறக்க வேண்டும்.
கேள்வி: தற்போது கால்நடைகளுக்கு சப்பை நோய் கட்டுப்பட்டு உள்ளது. ஆனால் கோமாரி நோய் இன்னும் இருக்கிறது. இதனை வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? கோமாரி நோய்களில் நிறைய வகைகள் இருக்கின்றனவா? இந்த நோய் ஐம்பது கிலோமீட்டர் தூரத்துக்கு பரவும் என்கிறார்களே உண்மையா? எந்த காலத்தில் கோமாரி நோய் வரும்? இதற்கு என்ன மாதிரியான தடுப்பூசி போட்டு தடுப்பது?
பதில்: முதலில் எவ்வாறு தடுப்பது என பார்ப்போம். கோமாரி நோய்க்கு கட்டுத்தரை மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். ஈரத்தன்மை இருக்கக்கூடாது. பால் கறந்த பின்பு மடி, காம்பு போன்றவற்றை பொட்டாசியம் பெர்மாங்கனேட் 1:1000 என்ற வகையில் ஒரு சிறிய துகளை எடுத்து நீரில் கரைத்து பால்மடியை கழுவிய பின்னர் தான் பால் கறக்க வேண்டும். மேலும் பால் கறக்கும் போது கட்டை விரலை மடக்கி கறக்காமல் விரல் நுனியில் கறக்க வேண்டும். மேலும், பால் கறந்த பின்னரும் மடியை தூய்மைப்படுத்த வேண்டும். பொதுவாக பால் கறந்த பின்பு உடனே, கொஞ்சம் தீவனம் போடுங்கள். இதன் மூலம் பத்து நிமிடங்கள் மாடு நின்று தீவனம் சாப்பிடும். இதனால் மடி திறந்து இருப்பது மூடி விடும். இதனால் நோய் ஏற்படுவது குறையும். கோமாரி நோய் காற்றில் பரவும் நோய் அல்ல. கோமாரி நோய் தொற்று நோய் வகையை சார்ந்தது. பக்கத்து வீட்டில் இருந்து மாடு கோமாரி நோய் தாக்கப்பட்டு இருந்து, அங்கு பால் கறக்கும் பால்காரர் நம்ம வீட்டில் வந்து பால் கறக்கும் போது எளிதாக தொற்றிக் கொள்ளும். இதைத்தான் 50 கிலோமீட்டர் பரவும் என்று சொல்லி இருப்பார்கள்.

கால்நடை சார்ந்த கேள்வி பதில்

கேள்வி: மழைக்காலத்தில் ஆடுகளுக்கு நீலநாக்கு நோய் வருகிறது? எவ்வாறு தடுப்பது? (பரமசிவம், தூத்துக்குடி)
பதில்: ஆடுகளுக்கு வரும் நீலநாக்கு நோய்க்கு தடுப்பு ஊசி போட்டு தான் தடுக்க வேண்டும். இதற்கு மாற்று வழியே இல்லை.
கேள்வி: சில ஆட்டுக்கு மூக்கு, ஆசன வாயிலில் ரத்தம் வந்து துடிதுடித்து இறந்து விடுகின்றன. இதனை எவ்வாறு தடுக்கலாம்?
பதில் : இந்த நோய்க்கு அடைப்பான் நோய் என்று பெயர். இந்த நோய் கண்ட ஆட்டினை விற்கக்கூடாது குழித்தோண்டி புதைத்துவிட வேண்டும். இந்த நோய்க்கண்ட ஆட்டின் மாமிசத்தை உண்ணும் போது மனிதர்களும் பரவும் வாய்ப்பு இருக்கிறது. ஆகையால், இறந்த ஆட்டினை உடனே புதைத்து விட வேண்டும்.
கேள்வி: செம்மறிகள் ஆடு குட்டி போடும் போது கஷ்டப்படுகின்றன. சில சமயங்களில் தாய் ஆட்டின் உயிரை காப்பாற்றினால் போதும் என்றாகி விடுகிறது? எதனால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது?
பதில் : சில தாய் ஆடுகளில் இடுப்பு எலும்பு சரியான முறையில் இல்லை என்றால் இது போல் பிரச்சனை வரும். இன்னும் சில வேளைகளில் கிடா சரியானதாக இல்லாமல் இருந்தாலும் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
கேள்வி: நல்ல வெள்ளாடு இனத்தை வளர்க்கலாம் என்று இருக்கிறேன். ஒரிஜனல் வெள்ளாட்டு இனம் எங்கு கிடைக்கும்?
பதில்: சென்னைக்கு செல்லும் வழியில் செங்கல்பட்டுக்கு அடுத்து காட்டாங்குளத்துர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள காட்டுப்பாக்கம் கால்நடை ஆராய்ச்சி நிலையம் மற்றும் கால்நடை பண்ணை இருக்கிறது. இங்கு வெள்ளாட்டு ஒரிஜனல் ரகமான சமுனாபாரி ஆட்டை வளர்க்கிறார்கள். இந்த ஆட்டின் குட்டியை நீங்கள் வாங்கி வளர்க்கலாம். இதற்கு, இங்கு உங்களுடைய பெயரை பதிவு செய்துக் கொள்ள வேண்டும். ஆடு குட்டி போட்டு, சில நாட்களில் தகவல் கொடுப்பார்கள். அப்போது நீங்கள் சென்று வாங்கி சிறப்பாக வளர்க்கலாம்.
கேள்வி: ஆடுகளுக்கு மார்கழி மாதங்களில் அதிகளவில் துள்ளு நோய் ஏற்படுகிறது. ஆடுகள் திடீரென்று துள்ளி விழுந்து இறந்துவிடுகின்றன. ஏற்கனவே இதனை தடுக்க தடுப்பூசி எல்லாம் போட்டு இருக்கிறோம். இருந்தாப்போதிலும் நோய் தாக்குகிறது. இதனை எப்படி தடுப்பது?
பதில் : ஆடுகளுக்கு முறையான குடல்புழு நீக்கமும் செய்திருக்கிறீர்கள். கூடுதலாக நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசிகளையும் போட்டிருக்கிறீர்கள். ஆனால் நோய் தாக்கம் இருக்கிறது என்று சொல்கிறீர்கள். போட்டிருந்தால் பரவாயில்லை. மூன்று மாதத்துக்கு ஒரு முறை குடல்புழுவுக்கு செய்திருக்கிறீர்கள். இருந்தாலும் வருகிறதா? கால்நடை மருத்துவரை அழைத்து ரத்தம் எடுத்து சோதனை சாலைக்கு அனுப்பி சோதனை செய்ய வேண்டும்.
கேள்வி: ஆடு குட்டி போட்ட பின்பு, வாலில் புண் வருகிறது. அந்த புண்ணில் இருந்து புழுக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. எப்படி தடுப்பது?
பதில் : புண் உள்ள இடத்தில் டர்பண்டைடு ஆயிலை ஊற்றவும். இரண்டு மூன்று நிமிடங்களில் புழுக்கள் எல்லாம் வெளியே வந்து விடும். அதுபின்பு வேப்பண் கொழுந்து, கல் உப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து வையுங்கள். ஒன்றிரண்டு நாட்களில் நன்றாகி விடும்.