Showing posts with label மண் புழு உரம். Show all posts
Showing posts with label மண் புழு உரம். Show all posts

Thursday, December 10, 2015

பண்ணைக் கழிவுகளில் இருந்து உரம் தயாரிப்பு

செயற்கை உரங்களால் மண் தனது வளத்தை இழந்து வரும் நிலையில், விவசாயிகளின் கவனம் இயற்கை உரங்களின் பக்கம் திரும்பியுள்ளது. செயற்கை உரங்களைக் காட்டிலும் இயற்கை உரங்களின் விலை குறைவு என்பதை விட அவற்றை விவசாயிகளே உற்பத்தி செய்ய முடியும் என்பதே இதன் தனிச் சிறப்பு.


விவசாயிகள் பண்ணைக் கழிவுகளில் இருந்து அங்கக உரம் தயாரிக்கும் முறை குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக சூழல் அறிவியல் துறை, வளங்குன்றா அங்கக வேளாண்மைத் துறைப் பேராசிரியர் அ.பரணி கூறியதாவது:

மண்ணின் வளம் இயல்பாக இருந்தால் மட்டுமே பயிர் உற்பத்திக்கு ஏற்ற நிலை உருவாகும். பயிர்க் கழிவுகள், விலங்கினக் கழிவுகள் காலப்போக்கில் ரசாயன மாற்றம் அடைந்து மண்ணின் அங்ககப் பொருளாக மாற்றம் அடைகின்றன. இந்த ரசாயன மாற்றம் ஏற்படுவதற்கு மண்ணில் இயற்கையாக உள்ள ஏராளமான நுண்ணுயிர்கள் உதவுகின்றன.
இதைத் தவிர மண் புழுக்கள், பல்வேறு பூச்சிகள், நத்தை, கரையான், எறும்பு திண்ணி போன்ற பிராணிகளும் மண்ணின் வளம் சிறக்க வழிவகுக்கின்றன. 10 டன் குப்பை உரம் 50 முதல் 70 கிலோ தழைச் சத்தையும், 15 முதல் 20 கிலோ மணிச் சத்தையும், 50 முதல் 70 கிலோ சாம்பல் சத்தையும் தரவல்லது.
திடக் கழிவுகளில் பயிர்களுக்குத் தேவையான எல்லா சத்துகளும் அடங்கி உள்ளன. இந்த பண்ணைக் கழிவுகளைச் சரியான முறையில் பயன்படுத்தினால் அதில் இருந்து அதிக சத்துகளை பயிர் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு மாற்றித் தர முடியும்.
மக்க வைத்தல்: மக்கும் நிகழ்வின்போது, கழிவுகளின் துகள்களின் அளவு முக்கியப் பங்கு வகிக்கிறது. பண்ணைக் கழிவுகளை மக்கச் செய்வதற்கு முன் அவற்றை 2 முதல் 2.5 செ.மீ. கொண்டதாக நறுக்க வேண்டும். கரிமச் சத்து, தழைச் சத்தின் விகிதம்தான் மக்கும் காலத்தையும், வேகத்தையும் முடிவு செய்கின்றன.

எனவே, கிளைரிசீடியா இலைகள், அகத்தி, தக்கைப் பூண்டு இலைகள் போன்ற பச்சைக் கழிவுகளையும், வைக்கோல், காய்ந்த இலைகள், காய்ந்த புல்கள் போன்ற கரிமச் சத்து அதிகமுள்ள பழுப்பு நிறக் கழிவுகளையும் சேர்த்தால் அது விரைவில் மக்கிவிடும். அதேபோல, கால்நடைகள், பறவைகள், பண்ணையில் வளர்க்கப்படும் விலங்குகளின் கழிவுகளிலும் தழைச் சத்து அதிகம் உள்ளது.

 கம்போஸ்ட் உரம் தயாரிப்பு:

கம்போஸ்ட் உரக் குவியல் அமைக்க குறைந்தது 4 அடி உயரத்துக்கு கழிவுகளை போட்டு அவற்றின் அளவை சமப்படுத்த வேண்டும். மக்க வைக்கும் இடம் சற்று உயர்வாகவும், நிழலாகவும் இருக்க வேண்டும். கழிவுகள் அனைத்தையும் நன்கு கலக்கி விட வேண்டும். கரிமம், தழைச் சத்து நிறைந்த கழிவுகளை மாற்றி, மாற்றி பரப்பி, இடையிடையே கால்நடைக் கழிவுகளையும் கலந்து, போதுமான அளவு நீர் தெளிக்க வேண்டும்.


கழிவுகளைத் துரிதமாக மக்க வைக்க வேளாண் பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்ட நுண்ணுயிரிக் கூட்டுக் கலவையான பயோமினரலைசரை ஒரு டன் கழிவுக்கு 2 கிலோ என்ற அளவில் பயன்படுத்தலாம். திடக்கழிவு குவியலில் தேவையான அளவுக்கு உயிர் வாயு இருக்க வேண்டும்.

குவியலை 15 நாள்களுக்கு ஒருமுறை கிளறி விடவேண்டும். மக்கும் நிகழ்வு முடிந்த பின் உரத்தின் அளவு குறைந்து, கருப்பு நிறமாகவும், மண்ணின் மணமும், துகளின் அளவு குறைந்தும் இருக்கும். இதனையடுத்து மக்கிய உரக் குவியலை கலைத்து, சலித்து எடுக்க வேண்டும். மக்காதவற்றை மறுபடியும் உரக்குவியலில் போடலாம்.
மக்கிய உரத்தை செறிவூட்டுவது எப்படி?
அறுவடை செய்யப்பட்ட மக்கிய உரத்தை நிழலில், கடினமான தரையில் குவித்து, நன்மை தரக்கூடிய நுண்ணுயிர்களான அசடோபாக்டர், அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ், பாஸ்போ பாக்டீரியா (0.2 சதம்) ஆகியவற்றை ஒரு டன் மட்கிய உரத்துடன் கலக்கவேண்டும்.
இதை 20 நாள்களுக்கு அப்படியே வைத்திருக்க வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட. துரிதப்படுத்தப்பட்ட மக்கிய உரத்தில் சாதாரண மக்கிய உரத்தைக் காட்டிலும் ஊட்டச் சத்தின் நிலை அதிகமாவும், நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அதிகமாகவும் இருக்கும்.

Tuesday, August 4, 2015

மண்புழு உயிர் உர தொழில்நுட்பம் (TNAU) - BIOFERTILIZERS & VERMICULTURE


இந்த புவியியல் 120 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இருந்தே மண்புழுக்கள் வாழ்ந்து வருகின்றன. இவைகள் அங்கக கழிவுகளை மட்கவைத்து உரமாக்கி மீண்டும் பயிர்கள் கிரகித்துக் கொள்ளும் நிலைக்கு கொண்டு செல்கின்றன. இதனால் மண்ணில் மண்புழுக்களின் செயல்பாடுகள் மிகவும் முக்கியமானது ஆகும். மேலும் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதோடு, நோய் கிருமிகளை இந்த மண்புழுக்கள் அழித்து விடுகின்றன. மண்புழுக்களை சுற்றுப்புற சூழ்நிலை அமைப்பாளர்கள் எனக் கூறலாம். ஏனெனில் அவை மண்ணின் இயற்பியல் சுற்றை மாற்றி அமைக்கிறது.
மண்புழு உரத்தின் தொழில்நுட்பம்
மண்புழு உரத்தின் தொழில் நுட்பமானது, அங்ககக் கழிவுகளை, மண்புழுக்களை கொண்டு மதிப்பூட்டுதல், கழிவுகளை அந்த இடத்திலேயே மேம்படச் செய்தல் மற்றும் கழிவுகளில் உள்ள வேதியியல் மற்றும் உயிரியல் மாசுக்களை அப்புறப்படுத்துதல்.
மண்புழு உரம் தயாரிக்க உகந்த மண்புழுக்களை தேர்வு செய்வதற்கு வேண்டிய குணாதிசயங்கள்
  • அங்ககக் கழிவுகளில் அதிக எண்ணிக்கையில் வளரும் தன்மை உடையனவாக இருக்க வேண்டும்.
  • எல்லாச் சூழ்நிலைகளிலும் வளரும் இரகமாக இருக்க வேண்டும்.
  • அதிக எண்ணிக்கையில் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் இரகமாக இருக்க வேண்டும்.
  • அதிகஅளவில் உணவை உட்கொண்டு செரித்து, வெளியேற்றும தன்மை உடையதாக இருக்க வேண்டும்.
மண்புழு இரகங்கள்
வாழும் இடத்தை பொருத்து மண்புழு இரகங்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றன.
  1. மண்ணின் மேற்பரப்பில் அங்ககக் கழிவுகள், மற்றும் கால்நடைக் கழிவுகளில் வளரும் தன்மை உடையது.
  2. மண்ணில் சற்று உள்ளே வளரும் தன்மை உடையது.
  3. மண்ணின் கீழ்பரப்பில் வளரும் தன்மை உடையது.
மண்ணின் மேற்பரப்பில், அங்ககக் கழிவுகளில், கால்நடைக் கழிவுகளில் வளரும் மண்புழுக்களுக்கு, எப்பிஜிக் (Epigeic) என்று பெயர். இந்த மண்புழுக்கள் நிறமானதாகவும், எல்லா தட்ப வெப்ப சூழ்நிலைகளிலும் வளரும் தன்மை உடையதாக இருக்கும். இதற்கு உதாரணம், லும்பிரிக்கஸ் மற்றும் எஹ்சீனியா மண்புழுக்கள். மண்ணில் சற்று கீழே வளரக் கூடிய மண்புழுக்களை, என்டோஜியிக் (Endogeic) என அழைப்பார்கள். இவைகள் மண்ணில் இருந்து 30 செ.மீ ஆழத்தில் வளரும் தன்மை உடையவை. இவை பொதுவாக மண் மற்றும் அங்கக பொருட்களை சேர்த்து உணவாக எடுத்துக் கொள்ளும். இவை மண்ணில் துளையிட்டு செல்லும் தன்மை உடையவை. இதனால் மேல் பாக மண்ணும் கீழ்பாக மண்ணும் ஒன்றாகக் கலந்துவிடும். மண்புழுக்கள் விட்டுச் செல்லும் துளைகளினால் காற்றும், நீரும், வேர்மண்டலத்தை சென்று அடைகிறது. இவ்வகை மண்புழுக்களுக்கு உதாரணம் அபரேக்டிடா (Aporrectedea) ஆகும்.
மண்ணின் கீழ்பாகத்தில் வசிக்கும் மண்புழுக்கள் அனிசிக் (Anecic) என்று அழைக்கப்படும். இவை மண்ணில் நீண்ட ஆழத்திற்கு (3 மீட்டர்) துவாரம் இட்டு செல்கிறது. இவை மண்ணில உள்ள அங்ககப் பொருட்களை மண்ணின் அடிப்பாகம் வரை எடுத்துச் செல்கிறது. இவ்வகை மண் புழுக்களுக்கு உதாரணம் லும்பரிக்கஸ் டெரஸ்டிரில், அபரோகிடா லாங்கா.
மண்ணின் மேற்பரப்பில் வளரும் மண்புழுக்களான யூட்ரில்லஸ், எய்சீனியா மற்றும் பிரியானிக்ஸ் மண்புழுக்கள் மிகவும் பிரபலமானவை. இவற்றில் ஆப்ரிக்கன் மண்புழு என்று அழைக்கப்படும் யூட்டிரில்லஸ் யூஜினியே அதிக எண்ணிக்கையில் வளர்ந்து, அதிக அளவு கழிவுகளை மக்க வைக்கும் தன்மை கொண்டவை.
2. மண்புழு உரம் தயாரிப்பதற்கான பல்வேறு நிலைகள்
நிலை – 1
மட்கக்கூடிய கழிவுகளை சேகரித்தல், சிறு சிறு துண்டுகளாக மாற்றுதல், உலோகம், கண்ணாடி மற்றும் பீங்கான் பொருட்களை பிரித்து எடுத்தல்.

நிலை – 2
மட்கக்கூடிய கழிவுகளை மூட்டம் போட்டு, அதில் சாணக்கரைசலை தெளித்து, 20 நாட்களுக்கு மக்கவிடுதல். இவ்வாறு 20 நாட்கள் மட்கிய கழிவுகள் மண்புழு சாப்பிடுவதற்கு ஏதுவாக இருக்கும். நன்றாக உலர்ந்த கால்நடை கழிவுகளையும், சாண எரிவாயுக் கழிவுகளையும் மட்டுமே மண்புழு உரம் தயாரிக்க நேரடியாக உபயோகிக்கலாம்.

நிலை – 3
மண்புழு உரப்படுக்கை தயாரித்தல். மண்புழு உரம் தயாரிக்க கடின தரை மிகவும் அவசியம். தரை மிருதுவாக இருந்தால் மண்புழு மண்ணுக்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறது. மேலும் மண்புழு படுக்கையில் தண்ணீர் விடும் பொழுது, கரையக் கூடிய சத்துக்கள் எல்லாம் நீரில் கரைந்து மண்ணுக்குள் சென்றுவிடும்.

Wednesday, February 11, 2015

இயற்கையான உயிர் உரங்கள்

இயற்கையான உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் இடுபொருளுக்கு ஆகும் செலவைக் குறைத்து மண் வளத்தைப் பெருக்கி அதிக மகசூல் பெறலாம்.
அனைத்து தாவரங்களுக்கும் தழைச்சத்து இன்றியமையாதது. நைட்ரஜன் எனப்படும் தழைச்சத்தில் இருந்துதான் தாவரங்களில் உள்ள புரதங்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, தழைச்சத்தை பெறுவதற்கு நுண்ணுயிர் அடங்கிய உரங்களையோ அல்லது நுண்ணுயிரோடு இயைந்து வாழும் உயிரினங்களையோ உரமாக இட்டு சாகுபடி செலவைக் குறைக்கலாம்.
மணிச்சத்தை மண்ணில் இருந்து செடிகளுக்கு கிடைக்குமாறு செயல்படும் பாஸ்போ பாக்டீரியா மற்றும் வேர் உட்பூசணங்களும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ரைசோபியம்:
உளுந்து, பாசிப்பயறு போன்ற பயறு வகைத் தாவரங்கள், நிலக்கடலை போன்ற பயிர்கள் காற்றில் உள்ள தழைச்சத்தை ரைசோபியட் என்னும் பாக்டீரியாவின் துணை கொண்டு செடிகளில் சேர்க்கின்றன. பயறு வகை பயிர்களின் விதையுடன் ரைசோபியம் உயிர் உரங்களை கலந்து விதைத்தால் வேர் முடிச்சுகள் அதிகரித்து அதிக தழைச்சத்து நிலைநிறுத்தப்பட்டு மகசூல் அதிகரிக்கிறது.
சாதாரணமாக 20 கிலோ விதைகளுக்கு 200 கிராம் ரைசோபியத்தை சோற்றுக்கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்து ஒரு நாள் கழித்து விதைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அதிக மகசூல் கிடைக்கிறது. மேலும் 3-ல் ஒரு பங்கு உரத் தேவையும் குறைகிறது.
அசோஸ்பைரில்லம்:
அசோஸ்பைரில்லம் என்ற நுண்ணுயிர் பாக்டீரியா நெல், மக்காச்சோளம், கம்பு, பருத்தி, கரும்பு உள்ளிட்ட பயிர்களின் வேர்ப்பகுதிகளில் வளர்ந்து காற்றில் உள்ள தழைச்சத்தை நிலைநிறுத்துகிறது. இதை பயன்படுத்தும்போது ஏக்கருக்கு 10 கிலோ வரை தழைச்சத்து (22 கிலோ யூரியா அளவு) சேர்க்கப்படுகிறது. மேலும் ஜிப்பர்லிக் அமிலம், இன்டோல் அசிட்டிக் அமிலம் போன்ற பயிர் வளர்ச்சி ஊக்கிகளையும் அசோஸ்பைரில்லம் உற்பத்தி செய்வதால் பயிர் நன்கு வளர்ந்து விளைச்சல் அதிகமாகிறது. இதை விதை நேர்த்தி செய்தும், நாற்றின் வேர்ப்பாகத்தில் நனைத்தும் மக்கிய தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இட்டும் பல வகைகளில் பயன்படுத்தலாம்.
பாஸ்போ பாக்டீரியா:
இது மண்ணில் உள்ள மணிச் சத்தை கரைத்து பயிர்களுக்கு வழங்குகிறது. சிலவகை அமிலங்களை இந்த பாக்டீரியா உற்பத்தி செய்து மண்ணிலுள்ள கரையாத பாஸ்பேட்டை கரைத்து செடிகளுக்கு கொடுக்கிறது. இதை பயன்படுத்துவதால் 20 சதவீதம் மணிச்சத்து தரும் ரசாயன உர பயன்பாட்டை குறைக்கலாம். வேர்கள் செழித்து வளரவும், திசுக்கள் வளம் பெற்று கதிர்கள் செழித்து வளரவும், தழைச்சத்தை அதிக அளவு ஈர்க்கவும் பாஸ்போ பாக்டீரியாபயன்படுகிறது.

Saturday, January 17, 2015

மண்புழு குளியல் நீர் உற்பத்தி செய்யும் முறை

மண்புழு குளியல் நீர் உற்பத்தி செய்யும் முறை
பழங்காலத்தில் விவசாயமானது இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி செய்யப்பட்டு வந்தது.
இதனால், நிறைவான உற்பத்தி அடைந்ததோடு மண்ணின் வளமும் பாதுகாக்கப்பட்டது.
ஆனால் இன்றைய சூழலில் பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப பசுமைப்புரட்சியின் காரணமாக அதிக விளைச்சல் தரக் கூடியதும், இரசாயன உரங்களால் கூடுதல் பயன் தரக் கூடியதுமான ரகங்கள் உருவாக்கப்பட்டன.
ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளின் அதிகமான பயன்பாட்டினால் மண்ணின் வளம் குறைந்ததோடு மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது.
எனவே இத்தகைய தரம் குறைந்த வளமற்ற நிலங்களை வளமான நிலங்களாக மாற்றுவதில் இயற்கை உரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மண்புழு உயிர் உரமானது இயற்கை உரங்களில் மிக முக்கியமான ஒன்றாகும். இயற்கையில் கிடைக்கக் கூடிய கழிவுகளை உணவாக உட்கொண்டு குடலில் உள்ள நுண்ணுயிர், நொதிகளால் மண் புழுக்கள் மூலம் செரிக்கப்பட்டு சிறு சிறு உருண்டைகளாக மலப்புழை வழியாக வெளித்தள்ளப்படும் கட்டிகளே மண்புழு உரம் எனப்படுகிறது.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்க வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் (உழவியல்) பெ. முருகன் மண் புழு உரத்தின் பயன்பாடுகள் மற்றும் மண் புழு உற்பத்தி குறித்து கூறியது:
மண்புழு உரத்தின் பயன்கள்: நிலத்தின் அங்ககப் பொருள்களின் அளவு, நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. மண்ணின் நீர்ப் பிடிப்பு சக்தி, காற்றோட்டம், வடிகால் வசதியை அதிகரிக்கிறது. தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, நுண்ணுட்டச் சத்துக்களின் பயன்பாட்டை அதிகரிக்கிறது.
பயிரின் வளர்ச்சிக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகளான சைட்டோகைனயீன், ஆக்ஸின், பலவகை நொதிகள் உள்ளன.
மற்ற மட்கும் உரங்களை விட மண்புழு உரத்தில் சத்துகள் அதிகம். இது வேர்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
செழிப்பான பயிர் வளர்ச்சி, அதிக மகசூல் எடுக்க வழி வகை செய்யும். கழிவுகளைப் பயன்படுத்தி மண்புழு உரம் தயாரிப்பதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
மண் புழு உரம் தயாரிப்பதைத் தொழிலாக மேற்கொள்வதால் வருமானம், வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.

Tuesday, January 13, 2015

மண்புழு உயிர் உர தொழில்நுட்பம் – TNAU

வேளாண் பல்கலைக் கழக இணைய தளம் என்பது விவசாயிகள், கால்நடை வளர்ப்போர்களின் சொர்க்க பூமி. அதிலிருந்து ஒரு பயனுள்ள கட்டுரை.

இந்த புவியியல் 120 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இருந்தே மண்புழுக்கள் வாழ்ந்து வருகின்றன. இவைகள் அங்கக கழிவுகளை மட்கவைத்து உரமாக்கி மீண்டும் பயிர்கள் கிரகித்துக் கொள்ளும் நிலைக்கு கொண்டு செல்கின்றன. இதனால் மண்ணில் மண்புழுக்களின் செயல்பாடுகள் மிகவும் முக்கியமானது ஆகும். மேலும் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதோடு, நோய் கிருமிகளை இந்த மண்புழுக்கள் அழித்து விடுகின்றன. மண்புழுக்களை சுற்றுப்புற சூழ்நிலை அமைப்பாளர்கள் எனக் கூறலாம். ஏனெனில் அவை மண்ணின் இயற்பியல் சுற்றை மாற்றி அமைக்கிறது.

மண்புழு உரத்தின் தொழில்நுட்பம்
மண்புழு உரத்தின் தொழில் நுட்பமானது, அங்ககக் கழிவுகளை, மண்புழுக்களை கொண்டு மதிப்பூட்டுதல், கழிவுகளை அந்த இடத்திலேயே மேம்படச் செய்தல் மற்றும் கழிவுகளில் உள்ள வேதியியல் மற்றும் உயிரியல் மாசுக்களை அப்புறப்படுத்துதல்.
மண்புழு உரம் தயாரிக்க உகந்த மண்புழுக்களை தேர்வு செய்வதற்கு வேண்டிய குணாதிசயங்கள்
  • அங்ககக் கழிவுகளில் அதிக எண்ணிக்கையில் வளரும் தன்மை உடையனவாக இருக்க வேண்டும்.
  • எல்லாச் சூழ்நிலைகளிலும் வளரும் இரகமாக இருக்க வேண்டும்.
  • அதிக எண்ணிக்கையில் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் இரகமாக இருக்க வேண்டும்.
  • அதிகஅளவில் உணவை உட்கொண்டு செரித்து, வெளியேற்றும தன்மை உடையதாக இருக்க வேண்டும்.
1. மண்புழு இரகங்கள்
வாழும் இடத்தை பொருத்து மண்புழு இரகங்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றன.
  1. மண்ணின் மேற்பரப்பில் அங்ககக் கழிவுகள், மற்றும் கால்நடைக் கழிவுகளில் வளரும் தன்மை உடையது.
  2. மண்ணில் சற்று உள்ளே வளரும் தன்மை உடையது.
  3. மண்ணின் கீழ்பரப்பில் வளரும் தன்மை உடையது.
மண்ணின் மேற்பரப்பில், அங்ககக் கழிவுகளில், கால்நடைக் கழிவுகளில் வளரும் மண்புழுக்களுக்கு, எப்பிஜிக் (Epigeic) என்று பெயர். இந்த மண்புழுக்கள் நிறமானதாகவும், எல்லா தட்ப வெப்ப சூழ்நிலைகளிலும் வளரும் தன்மை உடையதாக இருக்கும். இதற்கு உதாரணம், லும்பிரிக்கஸ் மற்றும் எஹ்சீனியா மண்புழுக்கள். மண்ணில் சற்று கீழே வளரக் கூடிய மண்புழுக்களை, என்டோஜியிக் (Endogeic) என அழைப்பார்கள். இவைகள் மண்ணில் இருந்து 30 செ.மீ ஆழத்தில் வளரும் தன்மை உடையவை. இவை பொதுவாக மண் மற்றும் அங்கக பொருட்களை சேர்த்து உணவாக எடுத்துக் கொள்ளும். இவை மண்ணில் துளையிட்டு செல்லும் தன்மை உடையவை. இதனால் மேல் பாக மண்ணும் கீழ்பாக மண்ணும் ஒன்றாகக் கலந்துவிடும். மண்புழுக்கள் விட்டுச் செல்லும் துளைகளினால் காற்றும், நீரும், வேர்மண்டலத்தை சென்று அடைகிறது. இவ்வகை மண்புழுக்களுக்கு உதாரணம் அபரேக்டிடா (Aporrectedea) ஆகும்.
மண்ணின் கீழ்பாகத்தில் வசிக்கும் மண்புழுக்கள் அனிசிக் (Anecic) என்று அழைக்கப்படும். இவை மண்ணில் நீண்ட ஆழத்திற்கு (3 மீட்டர்) துவாரம் இட்டு செல்கிறது. இவை மண்ணில உள்ள அங்ககப் பொருட்களை மண்ணின் அடிப்பாகம் வரை எடுத்துச் செல்கிறது. இவ்வகை மண் புழுக்களுக்கு உதாரணம் லும்பரிக்கஸ் டெரஸ்டிரில், அபரோகிடா லாங்கா.
மண்ணின் மேற்பரப்பில் வளரும் மண்புழுக்களான யூட்ரில்லஸ், எய்சீனியா மற்றும் பிரியானிக்ஸ் மண்புழுக்கள் மிகவும் பிரபலமானவை. இவற்றில் ஆப்ரிக்கன் மண்புழு என்று அழைக்கப்படும் யூட்டிரில்லஸ் யூஜினியே அதிக எண்ணிக்கையில் வளர்ந்து, அதிக அளவு கழிவுகளை மக்க வைக்கும் தன்மை கொண்டவை.

Monday, December 29, 2014

மண்புழு உரம்

மண் புழு உரம் தயாரிப்பு

கழிவுகள் என்பது நாம் முறையாக பயன்படுத்த தவறிய மூலப்பொருள்கள் ஆகும். பொதுவாக வேளாண் கழிவுகள், கால்நடை கழிவுகள் போன்றவற்றை ஒரே இடத்தில் குவித்து வைக்கும் பொழுது கெட்ட நாற்றம் ஏற்படுகிறது. ஆனால் அவற்றில் இருந்து அதிக அளவிலான இயற்கை எருவை உருவாக்க முடியும். இந்த மதிப்புள்ள மூலப்பொருள்களை முறையாக மட்கவைப்பதின் மூலம் நமக்கு மதிப்பூட்டப்பட்ட எரு கிடைக்கிறது. இவ்வாறு அங்ககக் கழிவுகளை மக்கவைத்து வளம் குன்றிய மண்ணை பேணிக்காப்பதே மண்புழு உரத்தின் முதன்மையான பயனாகும்.


உள்ளுர் இரக மண்புழுக்களைக் கொண்டு மண்புழு உரம் தயாரித்தல்

உலக அளவில் சுமார் 2500 மண்புழு இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 500 வகை இனங்கள் இந்தியாவில் உள்ளன. வெவ்வேறு மண்வகைக்கு ஏற்ப மண்புழு உரங்கள் மாறுபடும். எனவே மண்புழு உரம் தயாரிக்க அந்தந்த மண்ணிற்கு ஏற்ற மண்புழுக்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில் பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேடஸ் மற்றும் லேம்பீட்டோ மெளருட்டி என்ற இரு இனங்களை பயன்படுத்துகிறோம். மண்புழுக்களை வளர்ப்பதற்கு, குழிகளையோ, தொட்டிகளையோ அல்லது வளைவான கட்டமைப்புகளையோ பயன்படுத்தி கொள்ளலாம்.

 எவ்வாறு உள்ளூர்ரக மண்புழுக்களை தேர்வு செய்யமுடியும்?

   1. மண்ணின் மேற்பரப்பில் தென்படக்கூடிய, புழுக்களின்  ஆக்கிரமிப்புள்ள மண்ணை கண்டறிய வேண்டும்.
   2. 500 கிராம் வெல்லம் மற்றும் ஒரு கிலோ மாட்டுச்சாணம் ஆகிய இரண்டையும் 2 லிட்டர் தண்ணீரில் கரைத்து 1 மீ x 1 மீ பரப்பளவில் மண்ணின் மேல் தெளிக்க வேண்டும்.
   3. வைக்கோல் கொண்டு மூடிவிட்டு பின்பு அதன் மேல் கோணிப்பை வைத்து போர்த்த வேண்டும்.
   4. 20-30 நாட்களுக்கு தண்ணீர் தெளிக்க வேண்டும்.
   5. அந்த இடத்தில், மண்புழுக்கள் மேற்பரப்பில் அதிக அளவில் வரத்தொடங்கும். அவற்றை சேகரித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
எரு-குழி தயாரித்தல்

எரு-குழி தயாரிப்பதற்கு பல முறைகள் இருந்தாலும், நாம் நம் வசதிக்கேற்ற வடிவமைப்பில், வீட்டின் பின்புறத்திலோ, தோட்டத்திலோ அமைக்கலாம். செங்கற்கள் கொண்டு ஒரு குழி, இரு குழி அல்லது வசதிக்கேற்ற அளவிளான தொட்டிகள் போன்றவற்றை முறையான நீர் வெளியேற்றக் குழாய்களுடன் அமைக்க வேண்டும். வேளாண் கழிவுகள் மற்றும் இதர பொருட்களின் கொள்ளவைக் கொண்டு தொட்டிகளின் அளவை தீர்மானம் செய்ய வேண்டும். தொட்டிகளின் சுவரின் நடுவில் சிறு குழிகளில் நீர் தேக்கம் செய்வதன் மூலம் புழுக்களை எறும்பு தாக்கத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.

Tuesday, November 11, 2014

மண்புழு உரப்பைக் கொண்டு மண்புழு உரம் தயாரித்தல்


மண்ணின் மைந்தன், உழவனின் நண்பன், நிலத்தின் வேர்கள் என்றெல்லாம் அழைக்கப்படுபவை மண்புழுக்கள்.


மண்புழு உரம் தயாரித்தல் என்பது தாவர மற்றும் விலங்கு கழிவுகளை மண்புழுக்களின் உதவியால் மட்க வைத்தலாகும். புழுக்கள் கழிவுகளை ஜீரணிக்க வேண்டுமானால் அக்கழிவுகளின் ஒரு பகுதியாவது மக்கியிருக்க வேண்டும்.

மண்புழு உரம் தயாரிக்கும் முறையை எளிதாக்கி அனைத்து விவசாயிகளும் தங்கள் விளைநிலங்களில் இருந்து கிடைக்கும் இயற்கை கழிவுகளையும் மக்கவைக்கும் மண்புழுக்களையும் கொண்டு தங்கள் இடத்திலேயே மண்புழு உரத்தை எளிதில் தயாரிக்க குறைந்த முதலீடு மண்புழு உரப்பை உதவுகிறது.




ரம் தயாரிக்க உகந்த மண்புழு

1. ஆப்ரிக்கன் மண்புழு
2. சிவப்பு மண்புழு
3. மக்கும் புழு

இவற்றுள் ஆப்ரிக்கன் மண்புழு குறைந்த கால இடைவெளியில் அதிக அளவு மண்புழு உரம் மற்றும் புழுக்களையும் உற்பத்தி செய்வதால் உரம் தயாரிக்க மிகவும் சிறந்தது

மண்புழுக்களுக்கு உகந்த கழிவுகள்

மட்கும் எந்த ஒரு அங்ககக் கழிவுகளையும் உரம் தயாரிக்க பயன்படுத்தலாம்
உதாரணம்:
பண்ணைக் கழிவுகள்
காய்கறிக் கழிவுகள்
இலைச் சருகுகள்
கால்நடை கழிவுகள்
ஆலைக் கழிவுகள்

உர உற்பத்திக்கான இடம்

சற்று மேடானமழைநீர் தேங்காதநாள் முழுவதும் நன்கு அடர்ந்த நிழல் இருக்கும் இடமாகவும் இருக்க வேண்டும்

உரப்பை அமைக்க தேவையான பொருட்கள்

மண்புழு உரப்பை 250 gsm அளவிலான கனத்தை கொண்டு இருக்க வேண்டும்.
இதன் நிகர எடை - 4 கிலொ
இதன் அளவு - 12 x 4 x 2 அடிகள்
இத்தொட்டியை அமைக்க 1" கனம் கொண்ட குழாய் / மூங்கில் / சவுக்கு குச்சிகள்
அவைகளில் 13 அடி நீள்ம் உள்ள 4 குச்சிகளும்
அடி நீள்ம் உள்ள 10 குச்சிகளும் தேவை
பைகளை குச்சிகளுடன் கட்ட சிறிய நைலான் சரடுகள்

Monday, November 10, 2014

மண் புழு உரம் தயாரிப்பு



இன்றைய தேதியில் நாம் மிக அதிக பணத்தைச் செலவு செய்வது நம் உடல் ஆரோக்கியத்திற்குதான். இதுவரை இல்லாத பல நோய்கள் நம்மை தாக்கக் காரணம், செயற்கையான ரசாயன உரங்களைக் கொண்டு விளைவிக்கப்படும் விவசாயப் பொருட்களை நாம் பெருமளவில் உட்கொள்ள ஆரம்பித்ததுதான். செயற்கை உரங்களைக் கொண்டு விளைவிக்கப்படும் காய்கறிகளை ஒதுக்கிவிட்டு, இயற்கையான உரங்கள் மூலம் விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கு இப்போது மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இயற்கை உரங்களில் பல வகை உண்டு. அதில் ஒன்றுதான் மண் புழு உரம்.
ஒவ்வொருவர் வீட்டிலும் காய்கறிகள், பழங்கள், உணவு போன்ற மக்கும் கழிவுகள் நிறையவே கிடைக்கின்றன. தேவை இல்லாததால் தூக்கி எறியப்படும் இந்த கழிவுகளைக் கொண்டு மண் புழு உரம் தயாரிக்க பயன்படுத்தினால், நல்ல லாபம் பார்க்க முடியும். 'வெர்மி கம்போஸ்ட்’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த மண் புழு உரம், நிலத்திற்கு மாசு ஏற்படாமல் தடுப்பதோடு, நம் உடலுக்கும் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாத காய்கறிகளை அதிக அளவில் விளைவிக்கவும் உதவுகிறது. மண் புழு உரம் தயாரிக்கும் தொழிலில் அனைவரும் இறங்கி ஜெயிக்க முடியும். ஆனால், அதற்கென இருக்கும் தயாரிப்பு முறையை மட்டும் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.
சந்தை வாய்ப்பு!
விவசாயத்திற்கும், தரிசுநில மேம்பாட்டிற்கும் மிகவும் பயன்படக்கூடியது இந்த மண் புழு உரம். வீடுகளில் செடி வளர்ப்பவர்களுக்கும், தோட்டம் அமைத்திருப்பவர் களுக்கும் இந்த மண் புழு உரம் அதிக நன்மை தருபவை. நஞ்சை நிலங்களில் பல விவசாயிகள் மண்புழு உரம் உபயோகிப்பதன் மூலம் தங்களது விளைச்சலை அபரிமிதமாகப் பெருக்கிக் காட்டியுள்ளனர். கோழி வளர்ப்பவர்கள் அதற்குத் தீனியாக மண் புழுக்களைப் போடுகிறார்கள். விலை உயர்ந்த மீன்குஞ்சுகளை வாங்கி வளர்த்தாலும் அதற்கு இரையாக மண் புழுக்களை உணவாகப் போடுகின்றனர். மஹாராஷ்டிரா மாநிலத்தில் மேற்கொண்ட ஓர் ஆய்வில், மண் புழு உரம் போட்டு பயிரிடப்பட்ட திராட்சைகள் நல்ல தரத்துடனும், அதிகளவில் விளைச்சலும் கொடுத்தது என தெரிய வந்துள்ளது. எனவே, இதுபோன்ற இயற்கை உரத்திற்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.

Thursday, October 9, 2014

இயற்கை உரத் தொழில்நுட்பம்

மண் வளத்தை மேம்படுத்தும் இயற்கை உரத் தொழில்நுட்பம்
மண் வளத்தை இயற்கை முறையில் மேம்படுத்த தகுந்த உரத்தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.
விவசாய நிலங்களில் தொடர்ந்து சாகுபடி செய்வதால், மண் வளம் குன்றிவிடும். எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காது. மண் வளத்தை அதிகபடுத்த சத்துக்களைச் சரியான அளவில் அளிக்க வேண்டும். ரசாயண உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் மண்ணிலுள்ள நுண்ணியிரிகளையும் மண்புழுக்களையும் அழிக்கின்றன.
நுண்ணுயிரிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள வளமற்ற மண்ணில், ரசாயன உரங்கள் இடும்போது அவற்றின் முழுப்பயனும் பயிர்களை சென்றடைவதில்லை. இதனால் தான், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு எவ்வளவு ரசாயன உரங்களைப் பயன்படுத்தினாலும் விளைச்சல் அதிகரிக்காததுடன், இடுபொருட்களுக்கான செலவும் குறைவதில்லை.
மேலும் உயிரற்ற மண்ணில் வேளாண்மை செய்வதால் லாபம் இருக்க முடியாது. மண்ணுக்கும் உயிருண்டு என்பதை விவசாயிகள் உணர வேண்டும்.
மண் வளத்தை அளிக்கும் காரணிகள்:
மண்ணில் நுண்ணுயிரிகள் கோடிக்கணக்கில் உள்ளன. மேலும் மண் புழுக்கள், கரையான், மண் வாழ் பூச்சியினங்களும் உள்ளன. இவையே மண்ணின் இயற்கை சூழலைப்பாதுகாக்கின்றன.
இந்த நுண்ணியிரிகள் மிகவும் சுறுசுறுப்பானவை. நாம் மண்ணில் இடும் தொழு உரம், பசுந்தாள் உரம் பண்ணைக்கழிவுகள் மீது செயல்பட்டு, அவற்றை உணவாக பயன்படுத்தி, மக்கச் செய்து மண் வளத்தை பெருக்குகின்றன.
எனவே, மண்ணில் இயற்கையாக மக்கும் பொருள்கள் இல்லையென்றால் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையும் குறையும். மண்ணில் ஒரு பாக்டீரியா செல்லானது 15 முதல் 20 நிமிஷங்கள் இரண்டாக உடையும். ஒரு நாளில் அவை பல மில்லியன்களாக மாறுகின்றன.
ஆனால், இயற்கை வளங்கள் ஏதுமற்ற நிலையில் பாக்டீரியாக்கள் இறந்து விடும். அல்லது உறக்க நிலைக்கு சென்று விடும். இவை அங்ககப்பொருட்களை மக்கச் செய்து, மண்ணிற்கு அளிப்பதோடு மட்டுமல்லாமல், காற்றிலுள்ள தழைச்சத்தை உள்வாங்கி, மண்ணில் நிலைநிறுத்தி, பயிர்களுக்கு அளிக்கின்றன. எனவே மண் வளத்தை பாதுகாக்க அதிக அளவில் இயற்கை உரங்கள் அதாவது கரிமக் கார்பனை மண்ணில் மேம்பாடு அடையச் செய்ய வேண்டும். மண் இயற்கையாக அதிக கரிம ஊட்டத்தோடு இருந்தால், மண்ணில் இடும் எந்த உரத்தையும் இழப்பில்லாமல் சரியான வகையில் பயிர் பயன்படுத்திக் கொள்ளும். அந்த வகையில் வயலிலேயே தயாரிக்கக்கூடிய சில இயற்கை வழி உரங்களை காண்போம்.
பண்ணைக்கழிவுகள் :
அன்றாடம் பண்ணையில் பலவகையான திடக்கழிவுகள் உண்டாக்குகின்றன. இவற்றில் இலைச் சருகுகள், மாட்டுத் தொழுவக்கழிவுகள், பயிர்க்கழிவுகள் மிகுதியாக உள்ளன. அவற்றை நுண்ணுயிர்களின் உதவியால் மட்கச்செய்து பயிர்ச்சத்து நிறைந்த இயற்கை உரமாக மாற்றலாம்.
தொழு உரம்:
கால்நடைகளில் இருந்து கிடைக்கக்கூடிய கழிவுகளை மட்கச்செய்து பயன்படுத்துவது தொழு உரம். மாடுகள் சராசரியாக நாள் ஒன்றுக்கு 10 கிலோ சாணத்தையும், 6-7 லிட்டர் சிறுநீரையும் கழிக்கின்றன.
இவ்வாறாக ஓராண்டுக்கு 3.5 டன் சாணமும், 2500 லிட்டர் சிறுநீரும் ஒரு மாட்டிலிருந்து கிடைக்கின்றன. மாட்டின் சாணத்தைவிட சிறுநீரில் தான் தழைச்சத்து 50 சதமும், சாம்பல் சத்து 25 சதமும் அதிகம் உள்ளன. மக்கிய தொழு உரத்தில் ஒவ்வொரு 100 கிலோவிலும் தழைச்சத்து 500 கிராமும், மணிச்சத்து 300 கிராமும், சாம்பல்சத்து 500 கிராமும் உள்ளன.

மண் புழு உரம் தயாரிப்பு – கேள்வி பதில்கள்

பொதுவாக மண் புழு உர படுக்கையில் தொடர்ந்து தண்ணீர் தெளிக்க வேண்டுமா?
முதலில் 15 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் தெளித்து வரவேண்டும். பிறகு ஈரத்தின் அளவை பொருத்து மூன்று நாடகளுக்கு ஒருமுறை தண்ணீர் தெளித்து வரவேண்டும்

சாணக்கரைசல் குளோரின் கலந்த குடிநீரில் தயாரிக்கலாமா?
குடிநீரில் குறைந்த அளவே குளோரின் இருப்பதனால் பயன்படுத்தலாம்.

மண் புழு உரம் பயன்படுத்தும் வயலில் பியூரிடான் குருனை பயன்படுத்தலாமா?
இரசாயன உரம் பயன்படுத்தும் அதே வேளையில் பயன்படுத்த கூடாது.

மண் புழு உர படுக்கையில் எறும்புகளால் பாதிப்பு உண்டா?
மண் புழு உர படுக்கையில் கட்டாயம் எறும்புகள் மற்றும் பூச்சிகளின் பாதிப்பு இல்லாதவாறு கவனிக்க வேண்டும். அவ்வாறு இருப்பின் உர படுக்கையை சுற்றி இரண்டு அடி தள்ளி எறும்பு மருந்தை தூவி பாதுகாக்கலாம்.

உர படுக்கையில் தயாராகும் உரத்தை எப்படி பாதுகாக்க வேண்டும்?
உரத்தை கண்டிப்பாக பாலித்தீன் பைகளில் அடைக்கக்கூடாது. நல்ல காற்றோட்டம் உள்ள துனிப்பைகளில் சேகரிக்க வேண்டும்.

மண் புழு வடிநீர் (வெர்மி ஸ்ப்ரே) பயிர்களுக்கு எப்படி எந்த அளவுகளில் தெளிக்க வேண்டும்?
ஒரு லிட்டர் மண் புழு வடிநீருடன் பத்து லிட்டர் தண்ணீர் கலந்து இலை வழியாக தெளிக்கலாம்.

மண் புழு உர படுக்கை திறந்த வெளியில் அமைக்கலாமா?
திறந்த வெளியில் மண் புழு உர படுக்கை அமைக்கலாம் ஆனால் நேரடியாக சூரிய ஒளி படக்கூடாது. உர படுக்கையில் உள்ள மண் புழுக்கள் இறந்துவிட வாய்ப்புள்ளது ஆகையால் மர நிழல்களில் அல்லது கீற்றுக்கொட்டகை அமைத்து உர படுக்கை அமைக்கலாம்.

மண் புழு உரம் தயாரிக்க என்னென்ன வேளாண் கழிவுகளை பயன்படுத்தலாம்?
தினந்தோரும் வீடுகளில் பயன்படுத்தும் வேளாண் கழிவு பொருட்களான காய்கறி கழிவுகள், வைக்கோல், மர இலை தழைகள், மாட்டுச் சாணம் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

Wednesday, May 7, 2014

மண் புழு உரம் தயாரிப்பு

தொழு உரம் தயாரிக்க 15 அடி நீளம், 8 அடி அகலம், 3 அடி ஆழம் என்ற அளவில் குழி வெட்ட வேண்டும்.
குழியில் அடுக்கடுக்காக சாணக்குப்பையை போட வேண்டும்.

முதல் அடுக்கில் முக்கால் அடி உயரத்திற்கு சாணக்குப்பையை போடவேண்டும். அன்றாடம் சேரும் சாணக்குப்பையை கொஞ்சம் கொஞ்சமாக இந்த குழியில் சேகரித்து வரலாம்.

முக்கால் அடி உயரத்திற்கு சாணக்குப்பையை வந்ததும், அதன் மேல் கால் அடி அளவு மண் போட்டு நிரப்ப வேண்டும்.

மண்ண போட்டு முடித்ததும், இரண்டாவ அடுக்கு ஆரம்பிக்க வேண்டும்.

இரண்டாவ அடுக்கில் முக்கால் அடி சாணக்குப்பையை போட்டு அதன் மேல் கால் அடி அளவு மண் போடவேண்டும்.
இரண்டாவ அடுக்க அமத்த பிறகு குழியில்மீதம் ஒரு அடி இருக்கும்.

இதில் மூன்றாவ அடுக்கு சாணக்குப்பையை போட்டு, கால் அடி மண் போடவேண்டும். குழி தரமட்டத்திற்கு நிரம்பிவிடும். குப்பை மக்க ஆரம்பித்தம் அடுக்குகள் இறங்கிவிடும். இதனால் பள்ளம் ஏற்படும். இத தடுக்க மேலும் தரமட்டத்திற்கு மேல் 1 அடி உயரம் மண் போடவேண்டும்.

மண் மேட்டின் மீது தண்ணீர் தெளித்து மெழுகிவிடவேண்டும். இது ஆறு மாதத்தில் நன்றாக மக்கிவிடும்.

வெட்டிப்பார்த்தால் கருகருவென மக்கிய தொழு உரம் காணப்படும்.

தொழு உரத்திலுள்ள சத்துகள் :

0.4-1.5 சதவிகிதம் தழைச்சத்து
0.3-0.9 சதவிகிதம் மணிச்சத்து
0.3௧.9 சதவிகிதம் சாம்பல் சத்து