இந்த புவியியல் 120 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இருந்தே மண்புழுக்கள் வாழ்ந்து வருகின்றன. இவைகள் அங்கக கழிவுகளை மட்கவைத்து உரமாக்கி மீண்டும் பயிர்கள் கிரகித்துக் கொள்ளும் நிலைக்கு கொண்டு செல்கின்றன. இதனால் மண்ணில் மண்புழுக்களின் செயல்பாடுகள் மிகவும் முக்கியமானது ஆகும். மேலும் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதோடு, நோய் கிருமிகளை இந்த மண்புழுக்கள் அழித்து விடுகின்றன. மண்புழுக்களை சுற்றுப்புற சூழ்நிலை அமைப்பாளர்கள் எனக் கூறலாம். ஏனெனில் அவை மண்ணின் இயற்பியல் சுற்றை மாற்றி அமைக்கிறது.
மண்புழு உரத்தின் தொழில்நுட்பம்
மண்புழு உரத்தின் தொழில் நுட்பமானது, அங்ககக் கழிவுகளை, மண்புழுக்களை கொண்டு மதிப்பூட்டுதல், கழிவுகளை அந்த இடத்திலேயே மேம்படச் செய்தல் மற்றும் கழிவுகளில் உள்ள வேதியியல் மற்றும் உயிரியல் மாசுக்களை அப்புறப்படுத்துதல்.
மண்புழு உரம் தயாரிக்க உகந்த மண்புழுக்களை தேர்வு செய்வதற்கு வேண்டிய குணாதிசயங்கள்
- அங்ககக் கழிவுகளில் அதிக எண்ணிக்கையில் வளரும் தன்மை உடையனவாக இருக்க வேண்டும்.
- எல்லாச் சூழ்நிலைகளிலும் வளரும் இரகமாக இருக்க வேண்டும்.
- அதிக எண்ணிக்கையில் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் இரகமாக இருக்க வேண்டும்.
- அதிகஅளவில் உணவை உட்கொண்டு செரித்து, வெளியேற்றும தன்மை உடையதாக இருக்க வேண்டும்.
மண்புழு இரகங்கள்
வாழும் இடத்தை பொருத்து மண்புழு இரகங்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றன.
- மண்ணின் மேற்பரப்பில் அங்ககக் கழிவுகள், மற்றும் கால்நடைக் கழிவுகளில் வளரும் தன்மை உடையது.
- மண்ணில் சற்று உள்ளே வளரும் தன்மை உடையது.
- மண்ணின் கீழ்பரப்பில் வளரும் தன்மை உடையது.
மண்ணின் மேற்பரப்பில், அங்ககக் கழிவுகளில், கால்நடைக் கழிவுகளில் வளரும் மண்புழுக்களுக்கு, எப்பிஜிக் (Epigeic) என்று பெயர். இந்த மண்புழுக்கள் நிறமானதாகவும், எல்லா தட்ப வெப்ப சூழ்நிலைகளிலும் வளரும் தன்மை உடையதாக இருக்கும். இதற்கு உதாரணம், லும்பிரிக்கஸ் மற்றும் எஹ்சீனியா மண்புழுக்கள். மண்ணில் சற்று கீழே வளரக் கூடிய மண்புழுக்களை, என்டோஜியிக் (Endogeic) என அழைப்பார்கள். இவைகள் மண்ணில் இருந்து 30 செ.மீ ஆழத்தில் வளரும் தன்மை உடையவை. இவை பொதுவாக மண் மற்றும் அங்கக பொருட்களை சேர்த்து உணவாக எடுத்துக் கொள்ளும். இவை மண்ணில் துளையிட்டு செல்லும் தன்மை உடையவை. இதனால் மேல் பாக மண்ணும் கீழ்பாக மண்ணும் ஒன்றாகக் கலந்துவிடும். மண்புழுக்கள் விட்டுச் செல்லும் துளைகளினால் காற்றும், நீரும், வேர்மண்டலத்தை சென்று அடைகிறது. இவ்வகை மண்புழுக்களுக்கு உதாரணம் அபரேக்டிடா (Aporrectedea) ஆகும்.
மண்ணின் கீழ்பாகத்தில் வசிக்கும் மண்புழுக்கள் அனிசிக் (Anecic) என்று அழைக்கப்படும். இவை மண்ணில் நீண்ட ஆழத்திற்கு (3 மீட்டர்) துவாரம் இட்டு செல்கிறது. இவை மண்ணில உள்ள அங்ககப் பொருட்களை மண்ணின் அடிப்பாகம் வரை எடுத்துச் செல்கிறது. இவ்வகை மண் புழுக்களுக்கு உதாரணம் லும்பரிக்கஸ் டெரஸ்டிரில், அபரோகிடா லாங்கா.
மண்ணின் மேற்பரப்பில் வளரும் மண்புழுக்களான யூட்ரில்லஸ், எய்சீனியா மற்றும் பிரியானிக்ஸ் மண்புழுக்கள் மிகவும் பிரபலமானவை. இவற்றில் ஆப்ரிக்கன் மண்புழு என்று அழைக்கப்படும் யூட்டிரில்லஸ் யூஜினியே அதிக எண்ணிக்கையில் வளர்ந்து, அதிக அளவு கழிவுகளை மக்க வைக்கும் தன்மை கொண்டவை.
2. மண்புழு உரம் தயாரிப்பதற்கான பல்வேறு நிலைகள்
நிலை – 1
மட்கக்கூடிய கழிவுகளை சேகரித்தல், சிறு சிறு துண்டுகளாக மாற்றுதல், உலோகம், கண்ணாடி மற்றும் பீங்கான் பொருட்களை பிரித்து எடுத்தல்.
நிலை – 2
மட்கக்கூடிய கழிவுகளை மூட்டம் போட்டு, அதில் சாணக்கரைசலை தெளித்து, 20 நாட்களுக்கு மக்கவிடுதல். இவ்வாறு 20 நாட்கள் மட்கிய கழிவுகள் மண்புழு சாப்பிடுவதற்கு ஏதுவாக இருக்கும். நன்றாக உலர்ந்த கால்நடை கழிவுகளையும், சாண எரிவாயுக் கழிவுகளையும் மட்டுமே மண்புழு உரம் தயாரிக்க நேரடியாக உபயோகிக்கலாம்.
நிலை – 3
மண்புழு உரப்படுக்கை தயாரித்தல். மண்புழு உரம் தயாரிக்க கடின தரை மிகவும் அவசியம். தரை மிருதுவாக இருந்தால் மண்புழு மண்ணுக்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறது. மேலும் மண்புழு படுக்கையில் தண்ணீர் விடும் பொழுது, கரையக் கூடிய சத்துக்கள் எல்லாம் நீரில் கரைந்து மண்ணுக்குள் சென்றுவிடும்.
நிலை – 4
மண்புழு உரம் தயாரித்த பின்பு மண்புழுக்களை பரித்து எடுத்தல் அவசியமாகும். மண்புழு உரத்தை சல்லடையில் இட்டு சலிக்கும் பொழுது, நன்றாக மக்கிய உரம் மற்றும், மக்காத கழிவுகளை தனித்தனியாக பிரித்து எடுக்கப்படும். மக்காத கழிவுகளை மறுபடியும் மண்புழு படுக்கையில் இடவும்.
நிலை – 5
சேகரித்த மண்புழு உரத்தை அதிக வெயில்படாத காற்றோட்டம் உள்ள இடத்தில் சேமித்து வைக்கவும். இவ்வாறு சேமித்து வைக்கப்பட்டுள்ள மண்புழு உரத்தில் நன்மை தரும் நுண்ணுயிர்கள் அதிக அளவில் வளரும்.
மண்புழு உர உற்பத்தி முறைகள்
உகந்த மண்புழுவை தேர்ந்தெடுத்தல்
மண்புழு உரம் உற்பத்திக்காக நிலப்பரப்பின் மேல் வாழக்கூடிய மண்புழுரகம் மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது. மண்ணின் ஆழத்தில் வாழக்கூடிய மண்புழுவானது, மண்புழு உரத்தின் உற்பத்திக்கு உகந்ததல்ல. ஆப்ரிகன் மண்புழு (யூடிரிலஸ் யுஜினியே), சிவப்பு புழு (எய்சினியா ஃபோய்டிடா), மக்கும் புழு (பெரியானிக்ஸ் எக்ஸ்கவேடஸ்) இவை அனைத்தும் மண்புழு உரத்தின் உற்பத்திக்கான சிறந்த மண்புழுக்களாகும். மூன்று மண்புழுக்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து மண்புழு உரத்தை உற்பத்தி செய்ய முடியும். மற்ற இரண்டை காட்டிலும் ஆப்ரிக்கன் (யூடிரிலஸ் யுஜினியே) புழுவானது மிகவும் சிறந்தது. ஏனெனில் குறைந்த கால இடைவெளியில் அதிகளவு மண்புழு உரம் மற்றும் புழுக்களையும் உற்பத்தி செய்கிறது.
அட்டவணை:1 மண்புழு உரம் தயாரிக்க உகந்த கழிவுகள்
கழிவுகள் கிடைக்கும் இடம் | உபயோகிக்க கூடிய கழிவுகள் |
---|---|
வேளாண் பண்ணைகள் | பயிர் தூர்,களைகள்,வைக்கோல்,உமி,எரு |
மலைப் பயிர்கள் | தண்டு,இலைகள்,பழத்தோல்கள் |
கால்நடைகள் | சாணம்,மூத்திரம்,சாண எரிவாயு கழிவு |
உணவு பதப்படுத்தும் ஆலை | தோல்,ஓடு,உபயோகப்படுத்தாத குழம்பு, காய்கறிகள் |
சமையல் எண்ணெய் ஆலை | விதை ஓடு, பிரஸ்மட் |
வடிப்பாலை | உபயோகப்படுத்தப்பட்ட கழிவு நீர், பார்லி கழிவுகள் |
விதை பதப்படுத்தும் ஆலை | பழங்கள் (மத்திய பகுதி), முளைக்காத விதைகள் |
வாசனை திரவியங்கள் ஆலை | தண்டு, இலை, பூக்கள் |
தென்னை நார் ஆலை | தென்னை நார்க் கழிவு |
மண்புழு உர உற்பத்திக்கான இடம்
மண்புழு உரம் உற்பத்தி செய்ய நிழலுடன், அதிகளவு ஈரப்பதம் மற்றும் குளிர்ச்சியான பகுதியாக இருத்தல் வேண்டும். உபயோகப்படுத்தாத மாட்டுத் தொழுவம், கோழிப்பண்ணை மற்றும் கட்டிடங்களை உபயோகப்படுத்த முடியும். திறந்த வெளியில் உற்பத்தி செய்வதாக இருந்தால், நிழலான இடத்தை தேர்ந்தெடுக்கவும். வெயில் மற்றும் மழையிலிருந்துபாதுகாப்பதற்கு, தென்னைக் கீற்று கூரையை பயன்படுத்தலாம். மண்புழு உர உற்பத்திக்கான குப்பை குவியலை உபயோகமில்லாத ஈரமான சாக்குப்பை கொண்டு மூட வேண்டும்.
மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்புகள்
ஒரு சிமென்ட் தொட்டி கட்டுவதற்கு அதன் உயரம் 2 அடி மற்றும் அகலம் 3 அடி ஆக இருக்கவேண்டும். அந்த அறையின் அளவை பொருத்து நீளமானது எந்த அளவு வேண்டுமானாலும் இருக்கலாம். அடிப்பகுதியான தொட்டியானது சாய்வான வடிவம் போன்று கட்டப்பட வேண்டும். அதிகளவு தண்ணீரை வடிகட்டுவதற்காக மண்புழு உரத்தின் அமைப்பிலிருந்து ஒரு சிறிய சேமிப்பு குழி அவசியம். ஹாலோ ப்ளாக்ஸ், செங்கல் இவற்றை பயன்படுத்தியும் மேலோ சொன்ன முறையில் கட்டமைப்புகளை உருவாக்கலாம். இந்த முறையில் சரியான அளவில் ஈரப்பதத்தை பராமரிக்க முடியும். இதனால் தேவையற்ற நீர் வெளியேறாது.
மண்புழு உர உற்பத்திக்கான படுக்கை
நெல், உமி அல்லது தென்னை நார்கழிவு அல்லது கரும்புத் தோகைகளை மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்பின் அடிப்பாகத்தில் 3 செ.மீ உயரத்திற்கு பரப்பவேண்டும். ஆற்று மணலை இந்த படுக்கையின் மேல் 3 செ.மீ உயரத்திற்கு தூவ வேண்டும். பிறகு 3 செ.மீ. உயரத்திற்கு தோட்டக்கால் மண் பரப்ப வேண்டும். இதற்கு மேல் தண்ணீரைத் தெளிக்க வேண்டும்.
கழிவுகளை படுக்கையில் போடும்முறை
பாதி மக்கிய கழிவுகளை 30 சதவீதம் கால்நடை கழிவுடன் (எடை அல்லது கன அளவின் அடிப்படையில்) கலக்க வேண்டும். இக்கலவையை மண்புழு உர கட்டமைப்பின் விளிம்பு வரை நிரப்ப வேண்டும். ஈரப்பதம் 60 சதம் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மண்புழுவை சமமாக பரப்ப வேண்டும். ஒரு மீட்டர் நீளம்X1மீட்டர் அகலம்X.5 மீட்டர் உயரத்திற்கு இரண்டு கிலோ மண்புழு (2000 மண்புழு) தேவைப்படுகிறது. மண்புழுவினை, கழிவுகளுக்குள்ளே விட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதனை மேலே பரப்பினால் போதுமானது.
தண்ணீர் தெளிக்கும் முறை
தினமும் தண்ணீர் தெளித்தல் அவசியமானது, 60 சதவீதம் ஈரப்பதம இருக்க வேண்டும். தேவையான போது தண்ணீரினைத் தெளிக்க வேண்டும். ஊற்றக் கூடாது. அறுவடைக்கு முன்னதாக தண்ணீர் தெளிப்பதனை நிறுத்தி விடவேண்டும்.
மண்புழு உரத்தினை ஊட்டமேற்றுதல்
அசிட்டோபேக்டர், அஸோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டிரியா,சூடோமோனாஸ், போன்ற உயிர் உரங்கள் மூலம் மண்புழு உரத்தினை ஊட்டமேற்றலாம். ஊட்டமேற்றுதல் மூலம் பயிர்ச்சத்துக்கள் மற்றும் உயிர் சத்துக்கள் அதிகரிக்கின்றன. மேலும் நன்மை தரும் உயிரினங்கள், ஊட்டமேற்றிய மண்புழு உரத்தில் அதிகரிக்கின்றன. ஒரு டன் கழிவிற்கு ஒரு கிலோ அசோபாஸ் (அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ – பேக்டீரியா) என்ற அளவில் இருபது நாட்களுக்கு பின் மண்புழு படுக்கையில் சேர்க்கலாம்.
மண்புழு உர அறுவடை செய்முறை
தொட்டி முறையில், மண்புழு உர படுக்கையின் மேல் உள்ள மண்புழு கழிவினை மட்டும் அறுவடை செய்ய வேண்டும். இந்த அறுவடை வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். கையால் மண் புழு கழிவினை சேகரித்து நிழலில் குவித்து வைக்க வேண்டும். இந்த அறுவடையினை மண்புழு தெரியும் இடம் வரை செய்யவேண்டும். இந்த அறுவடையினை தகுந்த இடைவெளியில் செய்வதன் மூலம் நல்ல தரமான மண்புழு உரத்தினை பெறமுடியும்.
சிறியபடுக்கை முறையில், தகுந்த இடைவெளியில் மண்புழு உர அறுவடை தேவையில்லை. இந்த முறையில் கழிவுகளின் குவிப்பு 1மீட்டர் வரை இருப்பதனால், இந்த கழிவுகள் முழுவதும் மக்கிய பிறகு அறுவடை செய்தால் போதுமானது.
மண்புழு அறுவடை முறை
மண்புழு உரம் தயாரிப்பு முடிந்தவுடன், மண்புழுக்கள் கருவுருதல் முறையில் உரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன. இம்முறையில் சிறிய மாட்டு சாணப்பந்துகள் உரக்குழியில் பல இடங்களில் வைக்கப்பட வேண்டும். இதனால் மண்புழுக்கள் அந்த சாணத்தினால் கவரப்படுகின்றன. பிறகு இதனை தண்ணீரில் போடுவதன் மூலம் சாணம் கரைந்து மண் புழுக்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இந்தப் புழுக்கள், அடுத்த மண்புழ உரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
மண்புழு உர பயிர்ச்சத்துக்களின் அளவு
பயிர்ச்சத்துக்களின் அளவானது, நாம் பயன்படுத்தும் மூலப்பொருட்களுக்கு தகுந்தாற்போல் வேறுபடுகிறது. வெவ்வேறு விதமான கழிவுகளை பயன்படுத்தினால், பலதரப்பட்ட பயிர்ச் சத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கும். ஒரே விதமான கழிவுகளைப் பயன்படுத்தினால் குறிப்பிட்ட சத்துக்கள் மட்டுமே அதிக அளவில் இருக்கும். மண்புழு உரத்தில் காணப்படும் பொதுவான பயிர்ச்சத்துக்களின் அளவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
சத்து | அளவு |
---|---|
கரிமச்சத்து | 9.5 – 11.98 சதவீதம் |
தழைச்சத்து | 0.5 – 1.5 சதவீதம் |
மணிச்சத்து | 0.1 – 0.3 சதவீதம் |
சாம்பல்சத்து | 0.15 – 0.56 சதவீதம் |
சோடியம் | 0.06 – 0.30 சதவீதம் |
கால்சியம்+மெக்னீசியம் | 22.67 – 47.6 மி.இக்/100 கிராம் |
தாமிரச்சத்து | 2 – 9.5 மி.கிராம்/கிலோ |
இரும்புச்சத்து | 2 – 9.3 மி.கிராம்/கிலோ |
துத்தநாகச்சத்து | 5.7 – 11.55 மி.கிராம்/கிலோ |
கந்தகச்சத்து | 128 – 5485 மி.கிராம்/கிலோ |
மண்புழு உர சேமிப்பு முறை
அறுவடை செய்யப்பட்ட மண் புழு உரத்தை இருட்டான அறையில் 40 சதவிகித ஈரப்பதத்தில், சூரிய ஒளி படாதவாறு வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதால் ஈரப்பதம் வீணாவதைத் தடுக்கலாம். மக்கிய உரத்தை பாக்கெட் செய்வதை விட திறந்த வெளியில் சேமிப்பது சாலச் சிறந்ததாகும். திறந்த வெளியில் மக்கிய உரத்தை சேமிக்கும் பொழுது தண்ணீர் தெளித்து ஈரப்பதத்தை காக்க வேண்டும். இதனால் நுண்ணுயிர்கள் அழிவதை தடுக்கலாம். 40 சதவிகித ஈரப்பதத்துடன் வைப்பதினால் மண்புழு உரத்தின் தரம் குறையாமல் பாதுகாக்கலாம். விற்கும் சமயத்தில் மட்டுமே பைகளில் நிரப்ப வேண்டும்.
மண்புழு உரத்தின் நன்மைகள்
- மற்ற மக்கு உரங்களை விட மண்புழு உரத்தில் சத்துக்கள் அதிகம்.
- மண்புழு உரத்தில் நன்மை தரும் நுண்ணுயிர்களான அசட்டோபேக்டர், அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பேக்டீரியாக்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன.
- இந்த நன்மை தரும் நுண்ணுயிர்கள் காற்றில் இருக்கும் தழைச்சத்தை மண்புழு உரத்தில் நிலைநிறுத்துகிறது. பயிர்களுக்கு வேண்டிய வளர்ச்சி ஊக்கிகளை சுரந்து மண்புழு உரத்தில் நிலை பெறச் செய்கிறது.
- கரையாமல் இருக்கும் மணிச்சத்தை கரைத்து கொடுக்கிறது.
- திடக்கழிவுகளில் ஏதேனும் நச்சுத் தன்மை கொண்ட பொருட்கள் இருந்தால் அவை மண்புழு வயிற்றுக்குள் செல்லும் பொழுது அவைகளின் குணங்கள் மாற்றப்படுகின்றன.
மண்புழு உரம் தயாரிக்கும் தொழில்நுட்பம்
மண்புழு உரம் உபயோகப்படுத்துதல்
ஒரு எக்டேர் நிலத்திற்கு 5 டன் மண்புழு உரம் பரிந்துரைக்கப்படுகிறது. தொட்டில்களில் போடப்படும் மண் கலவையில் மண்புழு உரம் 40 சதவிகிதம் கலக்கப்பட்டு பின்பு தொட்டிகளில் இடப்பட்டு நாற்றுகள் நடப்படுகின்றன. வளர்ந்த மரங்களான தென்னை, வாழை போன்ற மரங்களுக்கு ஒரு மரத்திற்கு 5 கிலோ இடவேண்டும். மண்புழு உரத்தை மண்ணில் இடும் பொழுது, மண்ணின் அடிப்பாகத்தில் இடவேண்டும். மண்ணில் மேல் பரப்பில் இடக்கூடாது. மண்ணின் மேல் பரப்பில் இட்டால், மண்புழு உரத்தில் இருக்கும் நன்மைதரும் நுண்ணுயிர்கள் வெயில்படும் பொழுது இறந்து விடும் நிலை உள்ளது.
மண்புழு உரம் தயாரிக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை
- சரியான இரக மண்புழுவை தேர்ந்து எடுக்க வேண்டும்.
- எல்லா நிலைகளிலும், மண்புழு வளர்வதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
- மண்புழுக்கள் தேவைக்கும் அதிகமாக வளர்ந்துவிட்டால், தேவையான அளவுக்கு போக மீதமுள்ள எண்ணிக்கையை அப்புறப்படுத்த வேண்டும். இல்லை எனில் இடவசதி இல்லாததால் மண்புழுக்கள் இறந்துவிடும்
ஒரு எளிய செயல்முறை அசைபடம்
இந்த ஆந்திரப் பெண்மனியின் தன்னம்பிக்கையைப் பாருங்கள். எந்த ஒரு மாற்றமும் சரி, நம் நாட்டுப் பெண்கள் கைகளில்தான் உள்ளது.
Do you need Finance? Are you looking for Finance? Are you looking for finance to enlarge your business? We help individuals and companies to obtain finance for business expanding and to setup a new business ranging any amount. Get finance at affordable interest rate of 3%, Do you need this finance for business and to clear your bills? Then send us an email now for more information contact us now via (financialserviceoffer876@gmail.com) whats-App +918929509036 Thank
ReplyDelete