Showing posts with label மருத்துவகுணம். Show all posts
Showing posts with label மருத்துவகுணம். Show all posts

Saturday, March 28, 2015

காலிபிளவர் சாகுபடி (Cauliflower Saagubadi) - Cauliflower Cultivation

காலிபிளவர் சாகுபடி மூலம், 80 நாள்களில் ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்ட முடியும் என்கின்றனர் இதனை பயிர் செய்யும் விவசாயிகள்.
காலிபிளவர் அதிக சுவையுள்ள உணவுப் பொருள். காலிபிளவரில் கால்சியம் அதிகம் உள்ளது. இது நரம்பை பலமாக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இது நல்ல உணவு. எனவே இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

காலிபிளவர் கன்று ஒன்று 50 பைசாவுக்கு ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்கின்றன. ஒரு ஏக்கர் நிலத்தில் 15 ஆயிரம் கன்றுகள்வரை வைக்கலாம். கன்றுகள் வைத்து முறையாக பராமரித்து வந்தால் 60 நாள்களில் பூக்கள் வர ஆரம்பிக்கும். 80 நாள்களில் பூக்களை அறுவடை செய்ய முடியும்.
காலிபிளவர் செடிகள் வாங்குவது மற்றும் உரங்கள், உழவுக் கூலி, களைச் செடிகள் எடுப்பது, பூச்சிக் கொல்லி மருந்துகள் என மொத்தம் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவாகிறது.
காலிபிளவரின் ஒரு செடியில் இருந்து ஒரே ஒரு பூ மட்டுமே வரும். ஒரு ஏக்கரில் நடப்படும் 15 ஆயிரம் செடிகளில் 7,500 செடிகள் நல்ல முறையில் வளர்ந்து பூக்கள் வந்தால் கூட போதுமானது.
ஒரு காலிபிளவரின் விலை ரூ.20-க்கு விற்றால் 7,500 பூக்கள் மூலம் ரூ.1,50,000 ஆயிரம் கிடைக்கும். செலவுகள் போக 80 நாளில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் எடுக்க முடியும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.திடீர் விலை குறைவு ஏற்பட்டு பாதி விலைக்கு விற்றால் கூட ரூ.50 ஆயிரத்துக்கும் அதிக அளவில் லாபம் கிடைகிறது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சிங்கனூர் கிராமத்தில், காலிபிளவர் சாகுபடி செய்யும், பண்ருட்டியைச் சேர்ந்த விவசாயி ஜெயபால் கூறும்போது –
  • காலிபிளவர் நல்ல லாபம் தரும் பயிர். குறிப்பாக பனிக்காலங்களில் பயிர் செய்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும். கார்த்திகை மாதத்துக்கு முன் பயிர் செய்து தை மாதத்துக்குள் மகசூல் எடுத்துவிட வேண்டும்.
  • முறையாக, பராமரித்தால் 80 நாள்களில் மகசூல் எடுக்கலாம். சில நேரங்களில் ஒரு பூவின் விலை ரூ.40-க்கு கூட விற்பனை ஆகும்.
  •  காலிபிளவர் சாகுபடி செய்யும் கால நிலைகளையும், மண்ணின் தன்மையையும், அறுவடை செய்யும்போது காலிபிளவர் பூக்களின் மார்க்கெட் நிலவரத்தையும் விவசாயிகள் தெரிந்து கொண்டு பயிர் செய்தால் அதிக லாபம் பெறமுடியும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மண்ணின் தன்மைக்கே காலிபிளவர் அதிகம் விளைகிறது. கண்டமங்கலம், திண்டிவனம் பகுதிகளில் காலிபிளவரை சிறப்பாக விளைவித்து காண்பித்துள்ளனர் விவசாயிகள்.

Wednesday, March 4, 2015

நோய் எதிர்ப்பு சக்தி மிக்க "கடக்நாத்' கருங்கோழிகள் (Kadaknath Karunkozhi) - Most Immunity " Kadaknath " Black Chickens

நோய் எதிர்ப்பு சக்தி மிக்க "கடக்நாத்' கருங்கோழிகள் : இதய நோயாளிகள் மத்தியில் வரவேற்பு அதிகரிப்பு




மத்தியபிரதேச மாநிலத்தில், காடுகளில் வளரும் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க, "கடக்நாத்' கருங்கோழிகள், சேலம் மாவட்டம் ஓமலூரில் பண்ணை அமைத்து வளர்க்கப்படுகின்றன. இந்த கோழிகளுக்கு, இதய நோயாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், கிலோ, 370 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கடக்நாத் என்னும் கருங்கோழிகள், மத்திய பிரதேசத்தை தாயகமாகக் கொண்டவை. இந்த கோழிகள் அங்குள்ள மலை வாழ் பழங்குடியின மக்களால் பராமரிக்கப்பட்டும், காடுகளில் தானாக வளரும் இயல்பை கொண்டவை.

"பிளாக் மீட் சிக்கன்' : இக்கோழிகளின் இறைச்சி கருப்பாக இருப்பதால், இதற்கு பிளாக் மீட் சிக்கன், காலாமாசி என, அழைக்கப்படுகிறது. இக்கோழியின் இறைச்சி, ருசியாகவும், மணமாகவும் இருப்பதுடன், மருத்துவ குணமும் கொண்டது. இக்கோழி இறைச்சியை அதிக நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகப் பயன் படுத்துகின்றனர். ஹோமியோபதி மருத்துவத்தில், நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களுக்கு, கடக்நாத் கோழி இறைச்சியை சாப்பிட அறிவுறுத்துகின்றனர். இக்கோழி இறைச்சி, 25 சதவிதம் அளவுக்கு புரதச்சத்து கொண்டுள்ளது. கொலஸ்ட்ரால், 0.73 -1.05 சதவீதம் மட்டும் உள்ளது.
இதன் காரணாக, இந்த இறைச்சியை இரத்த கொதிப்பு, இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள் அதிக அளவில் விரும்பி சாப்பிடுகின்றனர். இறைச்சியில் அதிகமான அமினோ அமிலங்களும், மனிதர்களுக்கு தேவையான ஹார்மோன் சத்துக்களும் அதிகம் உள்ளது.


முழுதும் கறுப்பு தான் : இந்த கோழி ரகம் வெளிப் பகுதியில் மட்டுமின்றி உட் பகுதி, அதாவது சதைப்பகுதி அனைத்திலும் கருப்பாகவே காட்சி அளிக்கிறது. உட்பகுதியில், ஒரு சில பகுதிகளில் மட்டும் சதை கருப்பு, வெள்ளை கலந்து காணப்படுகிறது. தற்போது இந்த கோழி ரகங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், சேலம் மாநகரில், பத்துக்கும் மேற்பட்ட குறிப்பிட்ட கடைகளில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கோழி உயிருடன் கிலோ, 300 ரூபாய்க்கும், கறியாக, 370 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது. நாட்டுக் கோழியை போல் அல்லாமல், முற்றிலும் கருப்பு நிறத்தில் காட்சி அளிக்கும், இக்கோழி ரகங்கள், தமிழகத்தில்ல சேலம் மாவட்டம் ஓமலூரிலும், வேலூரிலும் பிரத்தியோக பண்ணை அமைத்து வளர்க்கப்பட்டு வருகின்றன.