Showing posts with label பயிர். Show all posts
Showing posts with label பயிர். Show all posts

Monday, November 28, 2016

பயிர்களும் பட்டங்களும்

பட்டம் என்றால் என்ன?
பட்டம் என்பது காலநிலையின் குறியீட்டு வார்த்தை ஆகும். பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம் ஆகும். பாரம்பரிய விவசாயத்தில் பட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒரு பயிர் சாகுபடி செய்த நிலத்தில் தொடர்ந்து மீண்டும் அதே பயிரைச் சாகுபடி செய்யவும் மாட்டார்கள். வருடத்தில் எந்தெந்தப் பட்டத்தில் என்னென்ன பயிர் சாகுபடி செய்ய வேண்டுமோ அந்தந்தப்பட்டத்தில் அந்தந்தப் பயிர்தான் சாகுபடி செய்வார்கள். ஆடிப்பட்டத்தில் தானியப் பயிர்கள் அனைத்தும் சாகுபடி செய்வார்கள், தவிரக் காய்கறிப் பயிர்களும் பெரும்பாலானவைற்றைச் சாகுபடி செய்வார்கள். மார்கழிப்பட்டம், மாசிப்பட்டம், சித்திரைப்பட்டம் என்றும் தமிழ் மாதங்களைக் கணக்கிட்டும் அந்தந்தப் பட்டத்துக்கு ஏற்ற பயிர்களைச் சாகுபடி செய்வார்கள். ஆடிப்பட்டத்தில் பாதி நிலத்தில் மானாவாரியாகச் சாமை விதைத்து கார்த்திகை, மார்கழி மாதங்களில் அறுவடை செய்யலாம். மீதிப் பாதி நிலத்தில் மாசி, பங்குனி மாதங்களில் சோளம் விதைத்து ஆனி மாதவாக்கில் அறுவடை செய்யலாம். மறு வருடம் சாகுபடி செய்யும்போது முந்தைய வருடம் சாமை விவசாயம் செய்த நிலத்தில் சோளமும், சோளம் விவசாயம் செய்த நிலத்தில் சாமையும்தான் சாகுபடி செய்வர். நிலத்தில் ஒரு பயிர் செய்தால் அந்தப் பயிரின் ஆயுளுக்குப் பின்னால் அவற்றின் கழிவுகளும் அவற்றில் அண்டி வாழ்ந்து வந்த நோய்க் கிருமிகளும், அடுத்து அதே பயிர் செய்யும்போது புதிதாகச் செய்யும் பயிரையும் பாதிக்க ஏதுவாகிறது. மாற்றுப் பயிர் செய்யும்போது மாற்றுப் பயிர்களுக்கு முந்தைய பயிரின் கழிவுகள் எருவாகப் பயன்படுவதோடு முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க்கிருமிகளும் புதுப்பயிரைத் தாக்குவது இல்லை. நோய்களும் நோய்க்கிருமிகளும் பயிருக்குப் பயிர் வேறுபடுகின்றன. அதனால் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. மாறாக கிருமிகளை அழிகின்றன. குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னால் வேறெரு பயிர் செய்தபின்னால் மீண்டும் பழைய பயிர் சாகுபடி செய்வதால் எந்தப் பாதிப்பும் ஏற்படுவது இல்லை. இடைக்காலத்தில் அவை பெரும்பாலும் அழிந்து விடுகின்றன.



பயிர்களுக்கு ஏற்ற பட்டங்கள்
  • ஜனவரி: (மார்கழி, தை) கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி, கீரைகள்.
  • பிப்ரவரி: (தை,மாசி) கத்தரி, தக்காளி, மிளகாய், பாகல், வெண்டை, சுரை, கொத்தவரை, பீர்க்கன், கீரைகள், கோவைக்காய்.
  • மார்ச்: (மாசி, பங்குனி) வெண்டை, பாகல், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கன்.
  • ஏப்ரல்: (பங்குனி, சித்திரை) செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை.
  • மே: (சித்திரை, வைகாசி) செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை.
  • ஜூன்: (வைகாசி, ஆனி) கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள், வெண்டை.
  • ஜூலை: (ஆனி, ஆடி) மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி.
  • ஆகஸ்ட்: (ஆடி, ஆவணி) முள்ளங்கி, பீர்க்கன், பாகல், மிளகாய், வெண்டை, சுரை.
  • செப்டம்பர்: (ஆவணி, புரட்டாசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கன், பூசணி.
  • அக்டோபர்: (புரட்டாசி, ஐப்பசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி.
  • நவம்பர்: (ஐப்பசி, கார்த்திகை) செடிமுருங்கை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி.
  • டிசம்பர்: (கார்த்திகை, மார்கழி) கத்தரி, சுரை, தக்காளி, பூசணி, முள்ளங்கி, மிளகாய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

Tuesday, April 28, 2015

மக்காச்சோள விவசாயத்தில் மாநில சாதனை (Makka Chola Vivasayathil Maanila Saathanai) - The state record in maize agriculture

வறட்சியிலும் குறைந்த தண்ணீரை பயன்படுத்தி, மக்காச்சோளம் சாகுபடியில் ஒரு எக்டேருக்கு 12 டன்கள் (120 மூட்டைகள்) வரை மகசூல் எடுத்து சாதனை படைத்துள்ளார் பழநி பாலசமுத்திரத்தை சேர்ந்த விவசாயி எஸ்.ராமசாமி. மாநிலஅளவில் முதலிடம் பிடித்த இவருக்கு வேளாண்மைத்துறை மூலம் ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. தனது சாதனை குறித்து ராமசாமி கூறியதாவது:
ஒரு எக்டேரில் சாகுபடி செய்வதற்கு உரம், வேலையாட்கள் கூலி, நீர் பாசனத்திற்காக ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்தேன்.


பொதுவாக ஒரு எக்டேருக்கு 8 டன்கள் தான் மகசூல் கிடைக்கும். வேளாண்மைத்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதால், 12 டன்கள் வரை கிடைத்துள்ளது. தற்போது ஒரு மூடை ரூ.1,350 விற்பனையாகிறது. இதன் மூலம் ரூ.1.35 லட்சம் லாபம் கிடைத்துள்ளது.

பயிரிடும் முறை:
  • மக்காச்சோளத்தை ஐப்பசியில் பயிரிட்டேன். விதைப்பதற்கு முன்பாக நிலத்தில் கட்டிகள் இல்லாதவாறு தொடர்ந்து பலமுறை உழவு செய்ய வேண்டும்.
  • மண் பொலிவாக இருந்தால் தான் வேர் வெகுவாக கீழே செல்லும். மண் பரிசோதனைப்படி உரமிட்டால், உரம் வீணாவதை தவிர்க்கலாம். ஒரு எக்டேருக்கு அடியுரமாக 135 கிலோ டி.ஏ.பி.,- 30 கிலோ யூரியா, 85 கிலோ பொட்டாஷ் இட வேண்டும்.
  • தொடர்ந்து 12.5 கிலோ நுண்ணூட்ட சத்துகளை 20 கிலோ மண் கலந்து இட வேண்டும். நான், 52/11 என்ற வீரிய ரக விதைகளை பயன்படுத்தினேன். ஒரு எக்டேருக்கு 12.5 கிலோ வரை விதைவேண்டும்.
  • அஸ்சோஸ்பைரில்லம் மூலம் விதை நேர்த்தி செய்தால், வேருக்கு தேவையான தழைச்சத்தை பெற்று தரும். ஒரு கிலோ 10 கிராம் டிவிரிடி அஸ்சோடோமோனசில் பூஞ்சன விதை நேர்த்தி செய்தால், நோய் தாக்குதல் ஏற்படாது.
  • 60 X 20 செ.மீ., இடைவெளியில் விதைகள் நட வேண்டும். களைகொல்லி பயன்படுத்தினேன். களையெடுக்கும்போது, மேலுரமாக 150 கிலோ யூரியா பயன்படுத்த வேண்டும்.
  • பால் பிடிக்கும் தருணத்தில் 75 கிலோ யூரியா பயன்படுத்த வேண்டும். நான், கிணற்று பாசனம் மூலம் நீர் பாய்ச்சினேன். சொட்டுநீர் பாசனம் பயன்படுத்தினால், நீரை மிச்சப்படுத்தலாம். 15 நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும், என்றார்.
இவருடன் பேச: 09362686204

இ.ஜெகநாதன், திண்டுக்கல்.

Friday, April 17, 2015

இனிப்பு மக்காச்சோளம் சாகுபடி தொழில்நுட்பங்கள் (Enippu Makka Cholam Saagubadi) - Sweet Corn Cultivation



  • இனிப்பு மக்காச்சோளம்: இதன் வயது 90 நாட்கள். இதை அனைத்து மண் வகையுள்ள நிலங்களிலும் சாகுபடி செய்யலாம். வடிகால் வசதி அவசியம். இதை அனைத்துப் பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம்.
  • ரோட்டோ வேட்டர் மூலம் ஓர் உழவும், கொக்கி கலப்பை மூலம் ஓர் உழவும் செய்து களைகளை அகற்றி, ஏக்கருக்கு 3 டிப்பர் என்ற அளவில் தொழுஉரம் கொட்டி கலைத்து விட வேண்டும். ஓர்அடி இடைவெளியில், ஓர் அடி அளவுக்கு பார் அணைத்து அதன் மையத்தில் ஓர் அடிக்கு ஒரு விதை வீதம் ஒரு அங்குல ஆழத்தில் நடவு செய்து தண்ணீர் கட்ட வேண்டும். ஏக்கருக்கு 5 கிலோ விதை தேவைப்படும்.
  • விதைத்த 3ம் நாள் முளைக்க ஆரம்பிக்கும். அன்று ஒரு தடவை தண்ணீர் கட்ட வேண்டும். பின்னர் மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் கட்டினால் போதும்.
  • 20ம் நாளில் களை எடுத்து பரிந்துரைக்கப்பட்ட உரம் வைக்க வேண்டும்.
  • தொடர்ந்து 10 நாட்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசனத் தண்ணீரில் கலந்து விட வேண்டும். வேறு எந்த பராமரிப்பும் தேவையில்லை.
  • பெரும்பாலும் பூச்சி, நோய் தாக்குதல் இருக்காது.கதிர் வருவதற்கு முன்பாக பூச்சிகள் தாக்கினால் மூலிகை பூச்சி விரட்டி தெளிக்கலாம்.
  • 55ம் நாளில் ஆண் பூவெடுக்கும் 60-ம் நாளில் பெண் பூவெடுத்து, கதிர் உருவாகும். 75ம் நாளிலிருந்து கதிர்முற்ற ஆரம்பிக்கும். தொடர்ந்து 90ம் நாள் வரை தினம் அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 6 டன் அளவிற்கு கதிர்கள் கிடைக்கும். ஒவ்வொரு கதிரும் அரை அடி நீளத்தில் இருக்கும். கிலோவுக்கு 3-4 கதிர்கள் நிற்கும்.
  • அனுபவ விவசாயி சேகர், திருவண்ணாமலை மாவட்டம், சு.கீழநாச்சிப்பட்டு கிராமம், தினமும் 200 கிலோவில் இருந்து 300 கிலோ அளவுக்கு அறுவடை செய்து 1 கிலோ 20 ரூபாய்க்கு உழவர் சந்தையில் விற்பனை செய்கிறார். 1 ஏக்கரில் கிடைக்கிற 6 டன் கதிர் மூலம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் எடுக்கிறார். 30 ஆயிரம் ரூபாய் செலவு போக 90 ஆயிரம்  ரூபாய் லாபம் கிடைக்கிறது. கமிஷன் கடைகளுக்கு அனுப்பினால் 50 ஆயிரம் ரூபாய் தான் லாபம் கிடைத்திருக்கும் என்கிறார். தொடர்புக்கு : சேகர், போன்: 09787600991.


  • Saturday, March 28, 2015

    சூரியகாந்தி சாகுபடி (Suriya Kaanthi Saagubadi) - Sunflower Cultivation


    • சூரியகாந்தி பயிரின் வயது 80-85 நாட்களாகும்.
    • சாகுபடிக்கு ஏற்ற ரகங்கள் அட்வான்ஸ் கார்கில், கே.பி.எஸ்.எச்.1, மாடர்ன் மற்றும் கோ.3. ஒரு ஏக்கருக்கு 6 கிலோ விதை தேவைப்படும்.
    • நீண்ட கால விதை ரகங்களை 60க்கு 15செ.மீ. இடைவெளியிலும், குறுகிய கால விதை ரகங்களை 30க்கு 15 செ.மீ. இடைவெளியிலும் விதைக்க வேண்டும்.
    • விதை முளைப்பு சீராக இருப்பதற்கு தண்ணீரில் ஊறவைத்து பின் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.
    • நீண்டகால ரகமாக இருந்தால் சதுரமீட்டரில் 12 செடிகளும், குறுகிய கால ரகமாக இருந்தால் சதுர மீட்டரில் 24 செடிகளும் இருக்கும்படி கவனித்துக்கொள்ள வேண்டும்.
    • ஒரு கிலோ விதையுடன் 42 கிராம் திரம் என்னும் மருந்தைக் கலந்து விதைக்க வேண்டும்.
    • ஏக்கருக்கு 10 முதல் 20 வண்டிகள் நன்கு மக்கிய தொழு உரம் இட்டு நிலத்தைப் பண்பட உழ வேண்டும்.
    • தொழு உரத்தோடு உயிர் உரமாகிய அசோஸ்பைரில்லத்தையும் கலந்து இடவேண்டும்.
    • 10 கிலோ தொழு உரம், 10 கிலோ மண் இவற்றுடன் 4 பாக்கெட் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தையும் கலந்து வயலில் சீராகத் தூவ வேண்டும்.
    • ஏக்கருக்கு அடி உரமாக தழைச்சத்து 8 கிலோ, மணிச்சத்து 8 கிலோ, சாம்பல்சத்து 8 கிலோ ஆகியவை கிடைப்பதற்கு ஏற்ற ரசாயன உரங்களை இடவேண்டும்.
    • கடைசியாக 5 கிலோ நுண்ணூட்டச் சத்துக்களை 15 கிலோ ஆற்று மணலுடன் கலந்து ஏக்கர் பரப்பில் சீராகத் தூவ வேண்டும்.
    விதைத்தல்:
    • விதையுடன் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தைக் கலந்து விதைக்கலாம்.
    • விதைக்கும் நிலத்தில் விதையை உளுந்து தெளிப்பது போல் தெளித்து விதையை மண்ணால் மூடி, பின் பாத்தி கட்டி பாசனம் செய்து சதுர மீட்டரில் ரகங்களுக்குத் தக்கவாறு 12 அல்லது 24 செடிகள் உள்ளபடி செய்து அதிகமாக இருக்கும் செடிகளைக் களைந்துவிடலாம்.
    • இல்லையேல் பாருக்கு பார் 60 அல்லது 30 செ.மீ. உள்ளபடி அமைத்துக் கொண்டு விதையை பாருக்கு பக்கவாட்டில் 15 செ.மீ. இடைவெளியில் ஊன்றலாம்.
    • 10வது நாளில் நன்கு வளர்ந்த ஒரு செடியை விட்டுவைத்து மற்ற செடிகளைக் களையெடுக்க வேண்டும்.
    • சூரியகாந்தி பயிருக்கு ஒரு முறை களையெடுத்து நிலத்தைக் கொத்திவிட்டு பின் மீதமுள்ள தழைச்சத்தாகிய 18 கிலோ அளவை மேலுரமாக இடவேண்டும். இதற்கு 18 கிலோ யூரியா இடவேண்டும்.
    • விதை விதைப்பதற்கு முன் விதைத்த நான்காம் நாள் உயிர்த்தண்ணீர், விதைத்த 20ம் நாள், 35ம் நாள், 40ம் நாள், 60ம் நாள், 20-25வது நாள் மொட்டுகள் உருவாகும் சமயம், 30-45வது நாள் பூக்கள் மலரும் போதும், 50-60வது நாள் விதை முற்றும் சமயம் மண்ணில் ஈரம் இருக்கும்படியாக நீர் பாய்ச்ச வேண்டும்.
    • நிலத்தில் நீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
    • அறுவடைக்கு ஒரு வாரம் முன் பாசனத்தை முற்றிலும் நிறுத்திவிட வேண்டும்.
    • விதைத்த 30வது நாள் ஏக்கருக்கு 111 மில்லி பிளானோபிக்ஸ் பயிர் ஊக்கியை 250 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். இது பூக்களில் அதிக விதை பிடிக்க உதவுகின்றது.
    • சூரியகாந்தியில் அயல் மகரந்த சேர்க்கையை ஏற்படுத்தி அதிக விதை உற்பத்தி செய்யலாம். இதற்கு பூ மலர்ந்த பிறகு காலை 9 மணியிலிருந்து 11 மணிக்குள் தொடர்ந்து 10 நாட்களுக்குள் மற்றொரு பூவுடன் உராயும்படி செய்ய வேண்டும்.
    • பூக்களில் விதைகள் முதிர்ச்சி அடையும்போது பச்சைக்கிளிகள் பூக்கொண்டைகளை அலகால் கொத்தி கடும் சேதத்தை உண்டாக்கும். டப்பாக்களைத் தட்டி சத்தம் எழுப்பி கிளிகளைத் துரத்தவேண்டும்.

    அறுவடை

    • சூரியகாந்தி பூக்களின் அடி பாகம் மஞ்சள் நிறமாக மாறிய உடன் பூக்களை அறுவடை செய்து களத்துமேட்டில் காயப்போட வேண்டும்.
    • பூக்கள் சரியாக காயாமல் இருக்கும்போது கோணிச்சாக்கில் சேமித்தால் அவற்றில் பூசணம் வளர்ந்து நஷ்டம் ஏற்படும்.
    • களத்துமேட்டில் அடிக்கடி பூக்களை கிளறிவிட்டு நன்கு காயப்போட வேண்டும்.
    • நன்கு உலர்ந்த பூக்களை தடியால் அடித்து விதையைப் பிரித்து அவற்றை சுத்தம் செய்து விற்பனை செய்துவிடலாம். நல்ல முறையில் சாகுபடி நுட்பங்களை அனுசரித்தால் கணிசமான லாபத்தை அடையமுடியும்.

    Wednesday, March 18, 2015

    மழைக்கு பின் நெல், தென்னை, வாழை பயிர்களில் ஏற்படும் பூச்சி தாக்குதல் மற்றும் நோய்கள் (Malaikku Pin Yaerpadum Puuchi Thaakuthal Matrum Nooigal) - Pest Attacks and Diseases in Crops After Rains


    ழை அதிகம் பெய்த நிலையில் சில பயிர்களில் பூச்சிகளும், நோய்த்தாக்குதலும் காணப்படுவதுண்டு. இது குறித்து பார்க்கலாம்.




    நெல் 
    மழைக்குப் பின் நெல் பயிரில் இலைப்பேன் தாக்குதல் குறைவாக இருக்கும். ஆனால் படைப்புழு மற்றும் கூண்டுப்புழுக்களின் தாக்குதல் அதிகம் காணப்படும். இதில் படைப்புழுவால், குன்றுகள், காடுகள், வாய்க்கால்களை ஒட்டி அமைந்துள்ள வயல்களுக்கு சேதம் ஏற்படலாம். படைப்புழு பகலில் பதுங்கியிருந்து இரவில் நெற்பயிரை தாக்கும். இந்த புழுவின் தாக்குதலால், பயிர்கள் ஆடு, மாடு மேய்ந்தது போல் இலைகள் வெட்டப்பட்டு காணப்படும். இதனை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 400 மில்லி குளோரிபைரிபாஸ் மருந்தினை இருநூறு லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு பயிர் முழுவதும் நனையும்படி மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். 

    கூண்டுப்புழு
    வடிகால் வசதியில்லாமல் தண்ணீர் அதிகம் தேங்கும் வயல்களில் கூண்டுப்புழு சேதம் ஏற்படும். இலை நுனிகள் வெட்டப்பட்டும், இலைகளில் வெண்ணிறமாக அரிக்கப்பட்டது போல் காணப்பட்டால் கூண்டுப்புழு தாக்குதலால் ஏற்பட்டது என்பதை உறுதி செய்து கொள்ளலாம். கூண்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வயலின் குறுக்கே கயிற்றை இழுத்து கூண்டுப்புழுக்களை நீரில் விழச்செய்ய வேண்டும். பின்னர் தண்ணீரை வடிக்க வேண்டும்.
    வடிகாலில் வைக்கோல் பிரி அல்லது சாக்கு வைத்து மிதந்து வரும் கூண்டுப்புழுக்களை சேகரித்து அழிக்க வேண்டும். வயிலில் இருந்து தண்ணீரை முழுவதும் வடித்த பின்னர் தான் மருந்து தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு 400 மிலி மனோகுரோட்டோபாஸ் மருந்து தெளித்து கூண்டுப்புழுவினை கட்டுப்படுத்தலாம்.



    தென்னை
    குருத்தழுகல் நோய்
    பெருமழை பெய்து மழைநீர் சில நாட்கள் தங்கியுள்ள தென்னந்தோப்புகள், குளங்கள் அருகிலுள்ள தோப்புகள் மற்றும் ஊடுபயிராக நெல் பயிரிடப்பட்ட தோப்புகளில் தென்னை மரங்கள் குருத்தழுகல் நோய் என்ற பூசண நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. குருத்தழுகல் நோய் பாதித்த தென்னையில் குருத்து வாடி அழுகித் தொங்கும். முழுவதும் பாதிக்கப்பட்ட குருத்து பிடித்து இழுத்தால் கையோடு வந்து விடும். குருத்தின் அழுகிய பகுதியை அறுத்து எடுத்து விட்டு போர்டோ பசை தடவ வேண்டும். அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு எனப்படும் புளு காப்பர் மருந்தை பசை போல் கரைத்து தடவ வேண்டும். மேலும் கலவையினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டரை கிராம் வீதம் குறுத்து மற்றும் அருகில் உள்ள மட்டை இடுக்குகளில் தெளிக்க வேண்டும். பாதிப்பு ஏற்பட்ட மரத்துக்கு அருகில் உள்ள மரங்களுக்கும் பாதுகாப்பு நடவடிக்கையாக தெளிக்க வேண்டும்.





    வாழை
    மழைக்குப் பின் வாழைப் பயிரில் இலைப்புள்ளி நோய் தோன்றும். இதனை கட்டுப்படுத்த அதிகம் பாதித்த இலைகளை அறுத்து எடுத்து அப்புறப்படுத்தி எரித்து அழிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் இலைப்புள்ளி நோய் அடுத்த இலைக்கு பரவுவது தடுக்கப்படும். காற்றோட்டமான தோட்டங்களில் நோய் விரைந்து பரவாது. இந்த நோயின் தொடக்க அறிகுறிகள் இலைகளில் தென்பட்டவுடன் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் கார்பன்டாசிம் அல்லது இரண்டரை கிராம் காப்பர் மாங்கோசெப் அல்லது இரண்டு கிராம் குளரோதலோனில் மருந்து வீதம் கலந்து தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால் பதினைந்து நாட்களுக்கு பின்னர் மீண்டும் தெளிக்க வேண்டும்.

    விவசாயிகள் தரமான விதைகளை கண்டறிவது வாங்குவது எப்படி?


    தரமான விதைகளை கண்டறிந்து பயிரிடும் போது தான் எதிர்பார்த்த மகசூலை பெற முடியும். இதற்கு, நிர்ணயிக்கப்பட்ட சில காரணிகளை கொண்டு நடவுக்கு தேர்வு செய்யப்படும் விதைகளின் தரத்தை விவசாயிகள் கண்டறிய முடியும். சாகுபடிக்கு பிரிக்கப்படும் விதைகளில் காணப்படும் முளைப்புத்திறன், புறத்தூய்மை, இனத்தூய்மை, ஈரப்பதம் மற்றும் விதை நலம் என்பதே அந்த காரணிகளாகும். இந்த காரணிகளை வைத்து தான் தரமான விதைகள் என்பது நிர்ணயம் செய்யப்படுகிறது. இவற்றை பற்றி பார்க்கலாம்.




    முளைப்புத் திறன்
    விவசாயிகள் பொதுவாக அதிகம் மகசூல் தரும் முளைப்புத் திறன் கொண்ட விதைக்காரணியையே பெரிதும் விரும்புகின்றனர். இவற்றையே சார்ந்தும் உள்ளனர். ஒரு விதைக்குவியலின் முளைப்புத்திறன் 98 சதவீதமோ அல்லது அதற்கும் அதிகமானதாக இருந்தால் அந்த விதைகளின் விலை மதிப்பு அதிகமானதாக இருக்கும். ஆனால் அதே சமயத்தில் விதைப்புக்கு குறைவான எண்ணிக்கையே போதுமான விதைகளாகவும், முளைப்புத்திறன் அதிகமும் உள்ள விதைகள் அதிக மகசூலை கொடுக்கின்றன. முளைப்புத்திறனை வைத்து விதைகளின் தரத்தை நிர்ணயிப்பதால் ஒவ்வொரு விதைக்கும் அதற்கான குறிப்பிட்ட முளைப்புத் திறன் பரிந்துரைக்கப்படுகிறது. விதைகளை விற்கும் போது அந்த விதையின் குறைந்த பட்ச முளைப்பு திறனை அட்டையில் குறிப்பிட்டிருப்பார்கள். அதன்படி, நெல்லுக்கு 80 சதவீதம், மக்காச்சோளதிற்கு 80, கம்பு பயிர் 75 , கேழ்வரகு 75, பருத்தி65, எள் 80 , தக்காளி 70 , வெண்டை 65 , கத்தரி 70, மிளகாய் 60 சதவீதமும் முளைப்பு திறன் கொண்டிருக்க வேண்டும்.



    புறத்தூய்மை
    பொதுவாக அறுவடை செய்யப்பட்ட பின்பு அந்த விதைகளில் கல், மண் மற்றும் பிற பயிர் விதைகள் கலந்திருக்கும். இவைள் அனைத்தும் விதைகளின் புறத்தூய்மையை பாதிக்கும். எனவே விவசாயிகள் விதைகளை வாங்கும் போது அதில் குறிப்பிட்டிருக்கும் புறத்தூய்மையின் மதிப்பு அளவை பார்த்து தான் வாங்க வேண்டும். சில குறிப்பிட்ட விதைகளின் புறத்தூய்மை அளவுகளை பார்க்கலாம். நெல் என்றால் அதன் புறத்தூய்மை அளவு 98 சதவீதம் இருக்க வேண்டும். இதே போல் மக்காச்சோளத்திற்கு 98, சோளம் 98, கம்பு 98, கேழ்வரகு 97, பருத்தி 98, பயறு வகைகள் 98, நிலக்கடலை 97, எள் 97, சூரியகாந்தி 98, ஆமணக்கு 98, தக்காளி 98, வெண்டை 99, கத்தரி 98, மிளகாய் 98 சதவீதம் என்ற அளவுகளில் இருக்க வேண்டும்.

    இனத்தூய்மை
    விதைகளை விற்பனை செய்வதற்கு முன்பு அந்த விதைகளின் இனத்தூய்மையை ஆய்வு செய்த பின்னரே விற்பனை செய்ய வேண்டும். இனக்கலப்படம் உள்ள விதைகளால் மகசூல் பெரிதும் பாதிக்கப்படும். உதாரணமாக அதிக வாழ்நாள் கொண்ட ரக விதையும், குறுகிய வாழ்நாள் கொண்ட ரக விதையும் ஒரு விதைக்குவியலில் கலந்திருக்கலாம். இதை விதைக்கும் விவசாயிகள் திகைத்து போவார்கள். இந்த இரண்டு ரகமும் மாறுபட்ட காலங்களில் பூ பூக்கும். இதனால் ஒரே சமயத்தில் பயிரை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிப்படைவார்கள். எனவே, ஒரு விதைகளை வாங்கும் போது அந்த விதைகள் குறைந்த பட்ச இனத்தூய்மையை கொண்டுள்ளதா என்று சான்று அட்டையை பார்த்து வாங்க வேண்டும். ஒவ்வொரு விதைக்குரிய அதிகபட்ச பிற ரக விதைகளின் கலப்பை இங்கே பார்க்கலாம். நெல்லுக்கு ஆதாரநிலையில் ஒரு கிலோ விதையில் 10 மற்றும் சான்று நிலையில் 20 என்ற எண்ணிக்கையில் கலப்பு விதைகளின் அளவு இருக்கலாம். இதே போல் மக்காச் சோளத்திற்கு ஆதார நிலையில் 10 மற்றும் சான்று நிலையில் 20, சோளம் 10 மற்றும் 20, பயறு வகைகள் ஆதார நிலையில் கிலோவுக்கு 10 மற்றும் சான்று நிலையில் 20,எள் பயிரில் ஆதார நிலையில் 10 மற்றும் சான்று நிலையில் 20 என்ற எண்ணிக்கையிலும், கம்பு, கேழ்வரகு, பருத்தி, நிலக்கடலை, தக்காளி, கத்தரி, சூரியகாந்தி போன்றவை கலப்பு இன்றியும் இருக்க வேண்டும்.



    விதை ஈரப்பதம்
    விதைகளின் தரமும், சேமிப்பு தன்மையும் அந்த விதைகளின் ஈரப்பதத்தை பொறுத்தே அமைகின்றன. எனவே, விதையின் ஈரப்பதத்தில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அது விதையின் தரத்தை பெரிதும் பாதிக்கிறது. விதையின் ஈரப்பதம் பயிருக்கு பயிர் மாறுகிறது. உதாரணமாக, நெல் விதைகளை 13 சதவீதம் ஈரப்பதத்திலும், கம்பு, சோளம், மக்காச்சோளம் மற்றும் தானிய விதைகளை 12 சதவீதம் ஈரப்பதத்திலும், பருத்தி, வெண்டை மற்றும் தீவனப்பயிர் விதைகளை 10 சதவீதம் ஈரப்பதத்திலும், நிலக்கடலை, சூரியகாந்தி, சணப்பு ஆகியவற்றை 9 சதவீதம் ஈரப்பதத்திலும் காற்று புகாத பைகளில் சேமிக்கலாம். 

    நெல் பயிருக்கு எந்த அளவு நீர்பாய்ச்சலாம்

    அதிக மகசூல் பெற முடியும் என்று கருதி நெல்லுக்கு அதிக நீர் பாய்ச்சுவதால் அது எதிர்மாறான விளைவுகளை தான் ஏற்படுத்துகிறது என்பது ஆய்வுகளில் தெரிகிறது. எனவே நெல் பயிர் வளர்ச்சியுறும் நிலையில் அதன் வளர்ச்சி காலகட்டத்தை பொறுத்து சரியான அளவு நீரை பாய்ச்சினால் மட்டுமே அதிக மகசூலை பெற முடியும். எந்தகட்டத்தில் எவ்வளவு நீர் பாய்ச்சலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.



    சாகுபடி செய்யப்படும் நெல்லின் வயது, மண்ணின் வாகு, சாகுபடியாகும் பட்டம் மழைநீரின் அளவு, வடிகால் வசதி ஆகியவற்றை பொறுத்து பாசனநீரின் தேவை நிர்ணயிக்கப்பட வேண்டும். 135 நாள் வயதுடைய உயர்விளைச்சல் நெல் வகையில் அதிக மகசூல் எடுக்க பயிரிடப்படும் முறையை கவனியுங்கள். அதாவது, 

    நடவு வயல் சுலபமாக நீர் பாய்ச்சுவதற்கு ஏற்ப ஒரே மேடு பள்ளங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். 

    இநாற்று நடும் போது ஒன்றரை முதல் 2 சென்டிமீட்டர் ஆழம் நீர் இருக்க வேண்டும். நடவு செய்து 3 முதல் 14 நாட்கள் வரை நட்ட பயிர் நன்கு வேர் ஊன்ற சுமார் 2 முதல் 3 செ.மீட்டர் ஆழத்திற்கு வயலில் பாசன நீர் வைக்க வேண்டும்.

    நடவு செய்த 15 முதல் 30 நாட்கள் வரை தூர்கள் தண்டு கிளைக்க தண்ணீர் அளவு 5 செ.மீட்டர் வரை இருத்தல் அவசியம். 

    நடவு செய்து 31 முதல் 55 நாட்கள் வரை தூர்கள் திரண்டு வளரவும், மென்மையான தூர்கள் அழியவும் தண்ணீரை வடித்து விடுவது அவசியம். வயிலின் மேற்பரப்பு மெழுகு பதத்தில் இருக்க வேண்டும். வயலில் வெடிப்புகள் அல்லது பிளவுகள் வராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

    நடவு செய்த 36 முதல் 45 நாட்கள் வரை தூர்களை அதிக எண்ணிக்கையில் பெற 5 செ.மீட்டர் வரை பாசன நீர் விட வேண்டும். 

    நடவு செய்த 46 முதல் 50 நாட்கள் வரை இளங்கதிர் பருவத்தை சீராக பேண தண்ணீர் வடித்து விட வேண்டும். மயிரிழை போன்ற வெடிப்புகள் தோன்றினாலும் பாசன நீர் விட வேண்டும்.

    நடவு செய்த 51 நாள் முதல் 95 நாட்கள் வரை இளங்கதிர் வெளியில் வந்து கதிர் முற்றும் வரை 4 முதல் 5 செ.மீட்டர் அங்குல நீர் வயலில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். பயிர் அறுவடைக்கு 10 முதல் 15 நாட்களுக்கு முன் பாசனநீரை நன்கு வடித்து வயலை காயவிட வேண்டும். 



    அதிகமானால் என்ன நடக்கும்?
    நீர் அளவு அதிகமானாலே, குறைந்தாலோ நெல் வயலில் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.

    நீர் அளவு அதிகமானால் பயிரின் உயரம் அதிகரிக்கும். தூர்களின் எண்ணிக்கை குறைவதுடன் அவைகளின் வீரியமும் குறைகிறது. அதிக அளவு நீர் தேங்குவதால் மண்ணில் துத்தநாக குறைபாடு ஏற்படுகிறது.

    பூக்கும் பருவத்தில் வயலில் நீர் கட்டாயம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அதிக பதர்கள் உருவாகி மகசூல் பாதிக்கும்.

    அறுவடைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு நெல் வயலில் இருந்து நீரை வடித்து விடுவது நல்லது. இதனால் நெல்மணிகள் சீராகவும், துரிதமாகவும் முற்ற உதவுகிறது.

    நெற்பயிருக்கு பெரும்பாலான நாட்களில் தேவைப்படும் 5 செ.மீட்டர் அளவு நீரை தொடர்ந்து அளவு குறையாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். வயலில் தொடர்ந்து நீர் நிறுத்தும் முறையினால் களைநிர்வாக செலவு குறையும். நடவு வயலில் 100 நாட்கள் இருக்கும் நெற்பயிருக்கு சுமார் 1200 மி.மீட்டர் அளவு நீர் தேவைப்படுகிறது. நெல்லைப் பொருத்த மட்டில் இளம்நாற்று, தூர் கிளைக்கும் பருவம், இளங்கதிர் உருவாகும் பருவம் முதல் பூக்கும் பருவம் மற்றும் பால் பிடிக்கும் பருவம் வரை தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும்.

    Thursday, March 12, 2015

    மஞ்சள் நாற்று நடவு

    பொதுவாக மஞ்சள் பயிர் கிழங்கின் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. மஞ்சள் நடவிற்கு விரலி, குண்டு மஞ்சள் பயன்படுகிறது.
    விதை மஞ்சள் 25 முதல் 30 கிராமிற்கு குறையாமலும் 3 முதல் 4 பரு கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

    ஒரு எக்டருக்கு 2000 முதல் 2500 கிலோ விதைமஞ்சள் தேவைப்படுகிறது.

    பவானி சாகரிலுள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் விதை கிழங்கிற்குபதிலாக மஞ்சள் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    மஞ்சள் நாற்றை நாம் விதை கிழங்கின் மூலம் சாகுபடி செய்வதைப்போல் சாகுபடி செய்யலாம்.

    ஒரு ஏக்கருக்கு தேவையான நாற்றுக்களை உற்பத்தி செய்ய 500 கிலோ மஞ்சள் போதுமானது.



    ஒரு ஏக்கருக்கு நடவு செய்ய 55,000 முதல் 60,000 நாற்றுகள் தேவைப்படுகிறது.

    விதைக்கிழங்கினை பயன்படுத்தும்போது 80 சதவீதம்தான் முளைப்புத்திறன் இருக்கும். ஆனால் நாற்றுக்களை நடவிற்கு பயன்படுத்துவதால் 98 சதவீதம் பயிர்கள் முளைத்திருக்கும்.
    நாறறுக்கள் நட்ட 2ம் மாதத்திலேயே கிழங்கு உருவாக ஆரம்பித்துவிடும்.

    8ம் மாதத்தில் நன்கு திரட்சியடைந்து 5 முதல் 6 தூர்கள் கொண்ட கிழங்குகள் அறுவடைக்கு தயாராகிவிடும்.

    மிதமான அளவுக்கு நோய், பூச்சி தாக்குதல் இருக்கும். பொருளாதார சேத நிலையைத் தாண்டும்போது தகுந்த பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

    விதைக்கிழங்கு பயிரிட்டு கிடைக்கும் மகசூலைவிட அதிகபட்சமாக 50 சதவீதம் வரை நாற்றுக்கள் நடுவதன் மூலம் பெறலாம்.
    (தகவல்: பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பவானிசாகர்-638 451, போன்: 04295240244). மஞ்சளில் ஒருங்கியணைந்த பயிர் பாதுகாப்பு

    செதில் பூச்சி :
    இவை மஞ்சளின் கிழங்குப் பகுதியினைத் தாக்கிச் சேதம் விளைவிக்கும்.இதனால் கிழங்குகள் சுருங்கி, பின் காய்ந்துவிடும்.

    இதனைக் கட்டுப்படுத்த பாசலோன் 1.5 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் கரைசலில் 15 நிமிடம் ஊறவைத்து, கிழங்குகளை நடவு செய்யவேண்டும்.

    செதில் பூச்சியால் பாதிக்கப்படும் சேனைக்கிழங்கு போன்ற பயிர்களை மஞ்சள் பயிரிடும் நிலத்தில் பயிர் செய்யக்கூடாது.

    நடவு செய்யப்பட்ட வயலில் செதில் பூச்சிகளை ஒழிக்க டைமீதோயேட் (ரோகார்) 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்த வேர்ப்பாகம் நனையும்படி ஊற்றவேண்டும்.

    தண்டுத் துளைப்பான் :

    இவை தண்டு, கிழங்குப் பகுதியினைத் துளைத்து செல்வதால் நடுக்குருத்து காய்ந்துவிடும்.
    இதனைக் கட்டுப்படுத்த எண்டோசல்பான் 0.1 சதம் தெளிக்கவேண்டும்.

    தண்டுத் துளைப்பான் விரும்பி உண்ணும் ஆமணக்கு, மாதுளை, பலா, இஞ்சி போன்றவை மஞ்சள் தோட்டத்திற்கு அருகில் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

    இலைப்பேன் :

    இலைகளில் சாறை உறிஞ்சி பயிர்களை வாடச்செய்யும்.

    மெட்டாசிஸ்டாக்ஸ் மற்றும் டைமெத்ரான் 750 மில்லி , தெளிப்பதன் மூலம் இலைப்பேனைக் கட்டுப்படுத்தலாம்.

    நூற்புழு :

    செம்மண் கலந்து மணற்பாங்கான இடங்களில் நூற்புழு தாக்குதல் தென்படும்.

    இவை மஞ்சளைத் தவிர புகையிலை, மிளகாய், கத்தரி, வாழை, கானகாம்பரம் ஆகிய பயிர்களைத் தாக்கும். எனவே இவற்றை ஊடுபயிராகப் பயிரிடுவதைத் தவிர்க்கவேண்டும்.

    செண்டு மல்லியை ஓரங்களில் பயிரிட்டால் நூற்புழுவைக் கட்டுப்படுத்தலாம்.

    நூற்புழுத் தாக்குதலைக் குறைக்க ஒரு எக்டருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு கடைசி உழவின்போது இடவேண்டும். மீண்டும் யூரியா இடும்போது 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு கடைசி உழவின்போது இடவேண்டும்.

    நட்ட 5வது மாதத்தில் ஒரு எக்டருக்கு 35 கிலோ கார்போபியூரான் குறுணையை செடியைச் சுற்றி 2-3 செ.மீ ஓரத்தில் இடவெண்டும். பின்பு மணல் கொண்டு மூடி நீர்ப்பாய்ச்சவேண்டும். மஞ்சளில் நுண்ணூட்டச் சத்து குறைபாடு.