Thursday, December 8, 2016

தீவனச் சோளம் கோ எஃப், எஸ் 29, கோ 31 சாகுபடி முறை

விவசாயிகள் தீவனச் சோளம் பயிரிட்டு, தங்களது கால்நடைகளுக்கான தீவனச் செலவைக் குறைக்கலாம்.


பருவம்

இறவைப் பயிராக ஜனவரி - பிப்ரவரி, ஏப்ரல் - மே மாதங்களில் தீவனச் சோளம் பயிரிட உகந்த மாதங்கள். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடலாம். மானாவாரிப் பயிராக ஜூன் - ஜூலை, செப்டம்பர் - அக்டோபர் மாதங்களிலும் அனைத்து மாவட்டங்களில் பயிரிடும் வாய்ப்புள்ளது.
ரகங்கள்
கோ எஃப், எஸ் 29, கோ 31 (மறுதாம்பு சோளம்) ரகங்கள் சிறந்தவை. தீவனச் சோளத்துடன் கோ 5, கோ எஃப் சி 8 ரக தட்டைப்பயறு சேர்த்து ஊடுபயிராகப் பயிரிட்டால் சத்தான தீவனம் பெறலாம்.

சாகுபடிக் குறிப்புகள்

தீவனச் சோளம் கோ 31 ரகத்தை ஆண்டு முழுவதும் இறவைப் பயிராகப் பயிரிடலாம். ஒருமுறை விதைத்து பலமுறை அறுவடை செய்யலாம்.
நிலம்
நீர் தேங்காத நல்ல வடிகால் வசதியுள்ள நிலத்தைத் தேர்வு செய்ய வேண்டும். நிலத்தைத் தயார் செய்யும்போது 2 அல்லது 3 முறை உழுது பண்படுத்த வேண்டும். பண்படுத்தப்பட்ட நிலத்தில் 60 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். உழும் முன்பு ஹெக்டேருக்கு 25 டன் தொழுவுரம் இடுதல் அவசியம்.
விதையளவு
ஹெக்டேருக்கு 5 கிலோ விதை போதும். 30-க்கு 15 செ.மீ. இடைவெளியில் விதைகளை பார்களின் இருபுறமும் விதைக்க வேண்டும். விதை உற்பத்தி செய்ய 60-க்கு 15 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.

உர நிர்வாகம்

  • அடியுரமாக தழை, மணி, சாம்பல் சத்து ஆகியவற்றை 45: 40: 40 என்ற விகிதாசாரத்தில் இட வேண்டும்.
  • விதைத்த 30-ஆவது நாளில் 45 கிலோ யூரியா இட வேண்டும். ஒவ்வோர் ஆண்டு முடிவுக்குப் பிறகு 45: 40: 40 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து இட வேண்டியது அவசியம்.

களை நிர்வாகம்

விதைத்த 25 அல்லது 30 நாளில் முதல் களை எடுக்க வேண்டும். பிறகு தேவைப்படும்போது ஒவ்வொரு அறுவடைக்குப் பின்பும் ஒருமுறை களையெடுத்து உரமிட வேண்டும்.
நீர்ப்பாசனம்
விதைத்தவுடன் நீர்ப் பாய்ச்சி மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் கொடுத்த பிறகு 7 அல்லது 10 நாள்களுக்கு ஒருமுறை மண் வகை, மழை அளவைப் பொறுத்து நீர் பாய்ச்ச வேண்டும். தீவனச் சோளத்தில் பயிர்ப் பாதுகாப்பு பொதுவாக தேவையிராது.
பசுந்தீவன அறுவடை
50 விழுக்காடு பூக்கும் தருணத்தில் அறுவடை செய்யலாம். முதல் அறுவடையானது விதைத்த 65 முதல் 70 நாளில் மேற்கொள்ளலாம். அடுத்த அறுவடைகளை 50 நாட்களுக்கொருமுறை மேற்கொள்ள வேண்டும்.
விதை அறுவடை
விதைத்த 110 அல்லது 125ஆவது நாளில் அறுவடை செய்யலாம்.
பசுந்தீவன மகசூல்
ஹெக்டேருக்கு ஆண்டுக்கு 192 டன்கள் கிடைக்கும். 6 அல்லது 7 முறை அறுவடை செய்ய வேண்டும்.
விதை மகசூல்

ஹெக்டேருக்கு 1,000 கிலோ விதை கிடைக்கும். ஆண்டுக்கு 3 முறை அறுவடை செய்யலாம். விதை உறக்க நிலை 45 முதல் 60 நாளாக உள்ளது. எனவே, அறுவடைக்குப் பிறகு 60 நாள் கழித்து விதைக்க வேண்டும்.

No comments:

Post a Comment