வருஷத்துக்கு ஒரு முறை காசை கண்ணால் பார்க்கும் விவசாயிகள் அன்றாடம் காசு பார்க்க அவர்கள் காய்கறிகள் என்னும் அதிர்ஷ்ட தேவதையை கைபிடிக்க வேண்டும்.
உலக அளவில் காய்கறி உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் இருப்பது சீனா.
2009 ம் ஆண்டு புள்ளிவிவரப்படி 7.958 மில்லியன் எக்டரில் 133.74 மில்லியன் டன் காய்கறிகளை நாம் உற்பத்தி செய்கிறோம்.
தமிழ்நாட்டின் மொத்த காயகறி சாகுபடி பரப்பளவு 2.63 லட்சம் எக்டர்
இந்தியாவில் ஒரு எக்டரில் காய்கறி மூலம் கிடைக்கும் சராசரி விளைச்சல் 16.7 டன்.
ஆனால் தமிழ்நாட்டின் உற்பத்தித் திறன் ஒரு எக்டருக்கு 28.9 டன்
ஒரு நாளைக்கு ஒரு நபர் சாப்பிடும் காய்கறிகளின் அளவு 210 கிராம்
சிபாரிசு செய்யப்படும் அளவு 300
கிராம்.
சுமார் 50 வகை காயகறிகளை நாம் பயிர் செய்கிறோம்
தக்காளி, மிளகாய், கத்தரி, வெண்டை, கொடிவகைக் காய்கள், வெங்காயம், முட்டைக்கோசு,பூக்கோசு, கேரட், பீட்ரூ;ட், கிழங்குகள், முருங்கை, கீரைகள் ஆகியவை தமிழ்நாட்டின் முக்கிய காயகறிகள்.
நாம் ஏன் காய்கள் சாகுபடி செய்ய வேண்டும் ?
தினசரி வருமானம், கூடுதல் லாபம், அதிக வேலை வாய்ப்பு, குறுகிய பயிர் வயது, மதிப்பு கூட்டுவதற்கான வாய்ப்பு, ஏற்றுமதிக்கு வாய்ப்பு, இவை எல்லாமே காய்கறி சாகுபடியில் பிரகாசமாக உள்ளது.
அதுசரி, காய்கறி சாகுபடியில் அதிக லாபம் பெற என்ன செய்ய வேண்டும் ?
உயர் தொழில் நுட்பங்களை கடைபிடிக்க வேண்டும்.
உயர் தொழில் நுடபங்கள் என்றால் என்ன ?
வீரிய ஒட்டு ரகங்களை தெரிந்தெடுத்தல், குழித்தட்டு நாற்றங்கால் முறையை கையாளுதல்,சொட்டு நீர்ப்பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சுதல், பாசனம் அளிக்கும் நீருடன் கலந்து உரமிடுதல் , பசுமைக் கொட்டகையில் சாகுபடி செய்தல், நிழல் வலைக் கொட்டகை அமைத்து பயிர் செய்தல்.
தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, பூசணி, சுரைக்காய், கோவைக்காய் ஆகியவற்றில் என்னென்ன உயர் விளைச்சல் தரும் வீரிய ஒட்டு ரகங்கள் உள்ளன என்று பார்க்கலாம்.
கோ.டி.எச். 2 வீரிய ஒட்டுத் தக்காளி
செடிகள் 80 முதல் 85 செமீ உயரம் வளரும். அடர் நடவு முறைக்கு ஏற்றது. பழங்கள் வெண்மை கலந்த பச்சை நிறமாக இருக்கும். கொத்துக்கு 3 முதல் 5 பழங்கள் தரும். ஒவ்வொரு பழமும் 60 முதல் 70 கிராம் எடையுடன், உருண்டை அல்லது நீள் உருண்டை வடிவத்தில் இருக்கும். இலை சுருட்டு நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டது. விளைச்சல் ஒரு எக்டரில் 90 முதல் - 96 டன் தரும்.
கோ.டி.எச். 3 வீரிய ஒட்டுத் தக்காளி
செடிகள் 90 முதல் 95 செமீ உயரம் வளரும். அடர் நடவு முறைக்கு ஏற்றது. பழங்கள் சிவப்பு நிறமாக இருக்கும். கொத்துக்கு 3 முதல் 5 பழங்கள் தரும். ஒவ்வொரு பழமும் 55 முதல் 60கிராம் எடையுடன், உருண்டை வடிவத்தில் இருக்கும். இலை சுருட்டு, மற்றும் வைரஸ் நோய்க்கும் எதிர்ப்புத் திறனும் வேர் முடிச்சு நூற்புழுவுக்கு மிதமான எதிர்ப்புத் திறனும் கொண்டது. விளைச்சல் ஒரு எக்டரில் 90 முதல் - 96 டன் தரும்.