Showing posts with label ஏற்றுமதி. Show all posts
Showing posts with label ஏற்றுமதி. Show all posts

Thursday, April 2, 2015

வறட்சிக்கு உதவும் தென்னை நார்க் கழிவுத்துகள் (Varatchiku Uthavum Thennai Naar Kalivugal) - Coconut Coir Helps in Drought

கடும் வறட்சி காரணமாக தென்னைநார்க் கழிவுத்துகள்களின் தேவை அதிகரித்துள்ளது. பொள்ளாச்சிப் பகுதியில் இருந்து முதன்முறையாக ஆப்பிரிக்காவுக்கு இக்கட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

தென்னை நகரான பொள்ளாச்சிப் பகுதியில் சுமார் ஒரு கோடி தென்னை மரங்கள் உள்ளன. கடந்த ஆண்டு தென்மேற்கு, வடகிழக்குப் பருவ மழைகள் பொய்த்து விட்டன.
இதனால் பொள்ளாச்சிப் பகுதியில் மட்டும் 20 சதவீத தென்னை மரங்கள் முழுமையாகக் காய்ந்துவிட்டன. மேலும் 20 சதவீதத்துக்கு மேற்பட்ட மரங்கள் காய்க்கும் திறனை இழந்துவிட்டன.
பொள்ளாச்சிப் பகுதியில் சில ஆண்டுகளாக தென்னை மட்டையில் இருந்து தயாரிக்கப்படும் நார் மற்றும் தென்னைநார்க் கழிவுத்துகள் கட்டிகளின் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது.
இப்பகுதியில் மட்டும் சுமார் 500-க்கு மேற்பட்ட தென்னைநார்த் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
நாளொன்றுக்கு ஒரு தொழிற்சாலைக்கு சுமார் 40 ஆயிரம் மட்டைகள் தேவைப்படுகின்றன. ஏற்றுமதி அதிகரிப்பதால் மட்டைகளின் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தேவை அதிகரித்ததால், கடந்த 6 மாதங்களுக்கு முன் 50 பைசாவுக்கு விற்ற தென்னை மட்டை இப்போது ரூ. 2-ஆக விலை உயர்ந்துள்ளது.
இங்கு தென்னை மட்டை கிடைக்காத காரணத்தால், கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து தினமும் 20 லோடு முதல் 40 லோடு வரை தென்னை மட்டைகள் கொண்டு வரப்படுகின்றன.
பொள்ளாச்சியில் இருந்து கொரியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிக அளவில் தென்னைநார்க் கழிவுத்துகள் கட்டிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
முதன்முறையாக இந்த ஆண்டு பொள்ளாச்சியில் இருந்து ஆப்பிரிக்காவுக்கும் கழிவுத்துகள் கட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
வீடுகளின் மாடிகளில் காய்கறித் தோட்டம் அமைக்குமாறு தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. வீடுகளின் மாடியில் தோட்டம் அமைக்கும் பகுதியில் கழிவுத்துகள் கட்டிகளை மண்ணுடன் கலந்து பயிரிடுவதால் மகசூல் அதிகரிப்பதுடன் தண்ணீரின் தேவையும் குறைகிறது.

இதனால் கழிவுத்துகள் கட்டிகளின் தேவை அதிகரித்துள்ளது.
மேலும் வறட்சியால் வாடும் தென்னை மரங்களைக் காப்பாற்றுவதற்காக மரத்தைச் சுற்றிலும் இக்கழிவுத் துகள்களைப் பரப்புகின்றனர். இதனால், தினமும் தென்னை மரத்துக்குத் தண்ணீர் விடுவதற்குப் பதிலாக, 4 அல்லது 6 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் விட்டால் போதுமானதாக இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
தண்ணீரைச் சேமிக்க வேண்டுமானால் கழிவுத்துகள் கட்டியைப் பயன்படுத்துங்கள் என்ற கோஷம், இப்போது புதிதாக பொள்ளாச்சியில் உள்ள கழிவுத்துகள் கட்டி உற்பத்தியாளர்களிடம் எழுந்துள்ளது.
ஒரு கிலோ கழிவுத்துகள் கட்டி 8 கிலோ தண்ணீரைத் தன்னுள் தாங்கும். இதனால் தென்னை மரத்தைச் சுற்றிலும் ஈரம் இருந்து கொண்டே இருக்கும்.
அதற்காகவே கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள், வறட்சியின்போது கழிவுத்துகள்களை தென்னை மரத்தின் வேரைச் சுற்றிலும் பரப்பி ஆயுள்காலப் பயிரான தென்னையைக் காப்பாற்றி வந்தனர்.
பொள்ளாச்சிப் பகுதியில் இருந்து மட்டும் தென்னைநார்க் கழிவுத்துகள் கட்டி ரூ. 250 கோடிக்கு மேல் ஏற்றுமதியாவது குறிப்பிடத்தக்கது.

Saturday, March 28, 2015

வீரிய வெள்ளரி சாகுபடியில் சாதனை (Veeriya Vellari Saagubadiyil Saathanai) - Hybrid cucumber cultivation

வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகும் வீரிய வெள்ளரி சாகுபடியில் செஞ்சி விவசாயிகள் சாதனை படைத்து வருகின்றனர்.
செம்மண் பூமியாக உள்ள மேல்மாம்பட்டு, தொரப்பாடி, ஈயகுணம், எய்யில், தாதங்குப்பம், தாயனூர், கண்டமநல்லூர், மேல் அருங்குணம், புத்தகரம் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங் களில் வெளிநாடுகளுக்கு ஊறுகாய் தயாரித்து ஏற்றுமதி செய்யும் வீரிய வெள் ளரியை (மாத்திரை காய் ) சாகுபடி செய்கின்றனர்.
குறைந்த இடம்
வீரிய வெள்ளரியை 20 சென்ட் முதல் 1 ஏக்கர் வரை ஆடி, கார்த்திகை, சித்திரை என மூன்று பட்டத்தில் சாகுபடி செய்கின்றனர்.
விதைப்பு முதல் அறுவடை வரை தேவையான விதை, உரம், பூச்சி மருந்துகளை தனியார் நிறுவனங்கள் சப்ளை செய்கின்றன.
விதைப்பு, கொடிகள் படர வலைகள் அமைக்கின்றனர். விதைத்த பிறகு 30 வது நாள் முதல் அறுவடை துவங்கி விடும்.
50 சென்ட் சாகுபடி செய்த நிலத்தில் அறுவடை துவங்கியதும் தினம் நூறு கிலோவில் துவங்கி அதிகளவாக 600 கிலோ வரை மகசூல் உயர்ந்து பிறகு படிப்படியாக குறைகிறது.
சராசரியாக தினசரி 250 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது.
காய்களை கொள்முதல் செய்யும் நிறுவனங் கள் உற்பத்தி செய்யும் இடத்திலேயே காய்களை வாங்கி செல்கின்றனர்.
50 சென்டில் சாகுபடி செய்யும் விவசாயி ஒரு முறை 15 ஆயிரம் கிலோ மகசூல் எடுக்கிறார்.
மூன்று வகை விலை
அளவில் சிறிதாக உள்ள பிஞ்சு காய்களுக்கு கிலோ ஒன்றுக்கு 22 ரூபாயும், அடுத்த ரகத்திற்கு 10 ரூபாய், முற்றிய பெரிய ரகத்திற்கு 3 ரூபாய் தருகின்றனர்.
சராசரியாக ஒரு கிலோ 12 முதல் 13 ரூபாய் வரை கிடைக்கிறது. இதன்படி 50 சென்ட் பயிரிடும் விவசாயி 1 லட்சத்து 50 ஆயிரம் முதல் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை பெறுகிறார்.
40 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. இந்த தொகையை அறுவடை முடிந்த ஒருவாரத்தில் தனியார் நிறுவனங்கள் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தி விடுகின்றனர்.
சொட்டு நீர் பாசனம்
வீரிய வெள்ளரி பயிரிடுவதற்கு குறைந்த அளவு தண்ணீர் போதுமானது.
தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களிலும் விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசன வசதிகளை வெள்ளரி காய்களை கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனங்கள் செய்து தருகின்றன.
சொட்டுநீர் பாசன வசதியை முறையாக பயன்படுத்தினால் 5 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.
இதற்கான தொகையை முதல் சாகுபடி தொகை வழங்கும் போது இந்நிறுவனத்தினர் பிடித்தம் செய்து விடுகின்றன.

ஆட்கள் தேவை
வீரிய வெள்ளரி பயிரிடுவதில் முதல் 30 நாட்கள் வரை விவசாயிகளின் குடும்பத்தினரே அனைத்து வேலைகளையும் செய்கின் றனர்.
காய் பறிக்க துவங்கிய பிறகு தினமும் 3 முதல் 6 ஆட்கள் வரை தேவைப்படுகிறது. இவர்களுக்கு அரை நாள் கூலியாக நூறு முதல் 120 ரூபாய் வரை வழங்குகின்றனர்.
வெளிநாட்டு வர்த்தகம்
வீரிய வெள்ளரிகளை கொண்டு பெங்களூரு நிறுவனங்கள் ஊறுகாய் தயாரிக்கின்றனர். இவை அமெரிக்க, ரஷ்யா நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
வெளிநாடுகளிள் இதை பயிர் செய்தாலும், சரியாக வளர்த்து தினமும் அறுவடை செய்ய ஆட்கள் இல்லை. எனவே ஒரே முறை மட்டும் சாகுபடி செய்து மொத்தமாக ஒரே நாளில் அறுவடையை முடித்து விடுகின்றனர்.இதனால் முதல் தரமான காய்கள் கிடைப்பதில்லை.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் ஊறுகாய்கள் முதல் தரமானது என்பதால் வெளிநாடுகளில் இந்திய ஊறுகாய்களுக்கு கிராக்கி உள்ளது.
தமிழகம் முதலிடம்
இந்த வகை வீரிய வெள் ளரிகளை உற்பத்தி செய்வதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
இதில் செஞ்சி தாலுகா மேல்மாம்பட்டு கிராமத்தில் இருந்து ஆண்டுக்கு நான்காயிரம் டன் உற்பத்தி செய்கின்றனர். வறண்ட பகுதியான செஞ்சி பகுதியில் குறைந்த தண்ணீர் செலவில் நிறைந்த வருவாய் ஈட்டும் விவசாயிகள் சத்தமின்றி இந்தியாவிற்கு கணிசமான அன்னியச்செலானியை ஈட்டி தந்து வருகின்றனர்.

25 சென்ட் நிலத்தில் 60 நாளில் 8 டன் வெள்ளரி (Vellari) - Cucumber Cultivation

சுற்றிலும் வீடுகள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த மதுரை வீரபாஞ்சான் பகுதியில் 25 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தில் அழகான பங்களா கட்டலாம் அல்லது குடோன் நடத்த வாடகைக்கு விடலாம். வேறென்ன செய்ய முடியும்? என கேட்கலாம்.


சிறிய அந்த இடத்தில் “பசுமை குடில்’ அமைத்து 60 நாட்களுக்கு ஒருமுறை 8 டன் வெள்ளரியை அள்ளுகிறார் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரி லோகேஷ்,27, என்றால் நம்ப முடிகிறதா?
  • இஸ்ரேல் தொழில் நுட்ப உதவியுடன் வெள்ளரிக்காய் உற்பத்தி செய்கிறார். தோட்டக்கலைத்துறை 50 சதவீதம் மானியம் வழங்கியது. இஸ்ரேல் வெள்ளரி விதை ஒன்றின் விலை ரூ.7.
  • தனது 25 சென்ட் நிலத்தில் 1000 சதுர மீட்டர் அளவில் “பசுமை குடில்’ அமைத்தார். இதற்குள் 28 டிகிரி வெப்பம் நிலவ வேண்டும். தட்பவெப்ப நிலை வெப்பமானி மூலம் அறியப் படுகிறது. வெப்பம் கூடினால் தானியங்கி மூலம் தண்ணீர் தெளித்து கட்டுப்படுத்துகின்றனர்.
  • பசுமை குடிலில் 4,500 விதைப்பைகளில் தலா ஒரு விதை மூலம் வெள்ளரி செடி வளர்க்கப்படுகிறது. விதை பையில் மண்ணிற்கு பதில் தென்னை நார் மட்டுமே இருக்கும்.
  • பசுமை குடிலுக்குள் பூச்சிகள் நுழைய இயலாது.
  • சொட்டுநீர் பாசனம் மூலம் அனைத்து விதைப்பைகளுக்கும் சமச்சீராக தண்ணீர் பாய்ச்சப்படும்.
  • தேவைக்கு ஏற்ப “இயற்கை சத்து டானிக்’ தெளிக்கப்படுகிறது.
  • விதை விதைத்து 46வது நாளில் இருந்து தொடர்ந்து 60 நாட்களுக்கு பலன் கிடைக்கிறது.
  • நாள் ஒன்றுக்கு சராசரியாக 250 கிலோ வெள்ளரி கிடைக்கிறது.
  • ஏஜென்டுகள் மூலம் மொத்தமாக கொள்முதல் செய்து அரபு நாடுகளுக்கு கிலோ ரூ.250 விலையில் பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இன்ஜினியரிங் விவசாயி லோகேஷ் கூறியதாவது:
  • “ஏ.எஸ். பார்ம்’ என்ற பெயரில் “ஹைடெக் ஹார்ட்டிகல்சுரல்’ மூலம் வெள்ளரி உற்பத்தி செய்கிறேன். மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஜெயசிங்ஞானதுரை, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தேன்மொழி ஆகியோரின் வழிகாட்டுதல் தொடர்கிறது.
  • இரண்டரை ஏக்கர் நிலத்தில் விளையும் வெள்ளரியை வெறும் 25 சென்ட் நிலத்தில் விதைத்து லாபம் ஈட்டி வருகிறேன்.
  • பிஞ்சு இருக்காது; பழமும் வராது. வெள்ளரி ஒன்று தலா 110 கிராம் எடையில் இருக்கும். செடி ஒன்றுக்கு 60 நாட்களுக்கு 300 மில்லி தண்ணீர் மட்டும் போதும்.
  • காயின் தண்ணீர் சத்து குறித்து தினமும் ரசாயன முறையில் பரிசோதனை செய்து அதற்கு ஏற்ப சத்துக்கள் செலுத்தப்படுகிறது. இதனால் சுவை, மணம், சத்து மாறாது. கடந்த முறை 7 டன் வெள்ளரி எடுத்தேன். இந்த முறை 8 டன் கிடைத்தது. பசுமை குடிலை இத்தாலி, இஸ்ரேல் விஞ்ஞானிகள் பார்வையிட்டுள்ளனர்.
  • அடுத்ததாக வெற்றிலை, இஞ்சி, மல்லியை உற்பத்தி செய்யவுள்ளேன். விதையை இங்கேயே உற்பத்தி செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன் என்றார். 09362444441ல் தொடர்பு கொள்ளலாம்.
-கா.சுப்பிரமணியன், மதுரை.

ஹாலந்து வெள்ளரி (Holland Vellari) - Holland Cucumber

தாண்டிக்குடி மலைப்பகுதியில் வெளிநாட்டு ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹாலந்து வெள்ளரி பசுமைக்குடிலில் விளைவிக்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் நிலவும் சீதோஷ்ண நிலை கொய்மலர் உற்பத்திக்கு சிறப்பாக இருக்கிறது. இருந்தபோதிலும் ஆய்வுக்காக பசுமைக்குடிலில் ஹாலாந்து நாட்டு வகையான பீட்-ஆல்பா வகை வெள்ளரியை பயிரிட்டுள்ளனர்.
நடவு செய்த 30 நாளில் பூக்கள் பூக்கும். தொடர்ந்து 45 வது நாள் முதல் காய்கள் அறுவடைக்கு தயாராகி 120 நாட்கள் பலனளிக்கும்.
ஒரு கொடியில் சாரசரியாக 10 கிலோ, காய் கிடைக்கும்.
9286
 ஓராண்டில் 3 முறை மகசூல் செய்து ஒரு மகசூலுக்கு ரூ. 2 லட்சம் செய்து ரூ.3 லட்சம் லாபம் ஈட்டலாம். தரணி பார்ம் நிறுவனர் மனோகரன் கூறியதாவது:
  • இங்கிலீஷ் குக்கும்பர் என அழைக்கப்படும் வெளிநாட்டு ரகம் அதிக மகசூல் தரக்கூடியது.
  • கால் ஏக்கரில் “பாலி ஹவுசி’ல் பயிரிட்டால் அதிகபட்சமாக 25 டன் கிடைக்கும்.
  • விலையை பொறுத்தமட்டில் கிலோ ரூ.20 முதல் 40 வரை கிடைக்கும்.
  • தேங்காய் நார் அமைத்து “குரோ பேக்’ மூலம் விதைகள் நடவு செய்து சொட்டு நீர் பாசனம் மூலம் பராமரிப்பு செய்யப்படுகிறது.
  • தண்ணீர் சத்து நிறைந்தும், நீரில் எளிதில் கலக்கும் நார்சத்தும் அதிகமுள்ளது. இதனால் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் தவிர்க்கப்படுகிறது.
  • ஐரோப்பிய நாடுகளில் இவ்வகைக்கு கிராக்கி உள்ளது. மேலும் சாலட், அழகு சாதன பொருட்கள் தயாரிப்புக்கு பயன்படுகிறது.
  • பறிக்கப்படும் காய்களை கேரளாவிற்கு சப்ளை செய்கிறோம், என்றார்.