Showing posts with label நீர் பாசனம். Show all posts
Showing posts with label நீர் பாசனம். Show all posts

Wednesday, January 6, 2016

பண்ணைக் குட்டையின் அற்புத பலன்கள்

மழை இல்லாத கோடையிலும் விவசாயம்.

வறட்சி
எதிர்பாராத வறட்சி விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. வறட்சி வரும் என்பதை கணித்து அதில் இருந்து பயிர்களை தற்காத்துக் கொள்ள நமது முன்னோர்கள் பல உத்திகளை கையாண்டுள்ளனர். அதில் பண்ணைக் குட்டைகள் என்ற நீர் சேமிப்பு குழிகளும் ஒரு வகை உத்தி ஆகும்.

மழை காலத்திலும், கோடை மழை காலங்களிலும் பெய்யும் மழைநீரை பண்ணைகுட்டை எனப்படும் குழிகளில் தேக்கி வைத்தனர். வறட்சி காலத்தில் பயிர்களுக்கு இதில் சேமிக்கப்பட்டிருக்கும் நீரை பயன்படுத்தியுள்ளனர். சில நேரங்களில் இதே குழிகளில் விவசாய கழிவுகளை மக்க வைத்து உரமாக மாற்றி இயற்கை உரமாக பயிர்களுக்கு அளித்து நல்ல மகசூலையும் பெற்று வந்துள்ளனர்.


வேளாண்மையின் உயிர்நாடிகள்
போதிய நீரும், வளமான மண்ணும் வேளாண்மையின் உயிர் நாடி ஆகும். புவியியல் அமைப்பு அடிப்படையில் தமிழகம் மிகக் குறைந்த நிலத்தடி நீரை கொண்டதாக இருக்கிறது. மழைநீரை நம்பித்தான் பெரும்பாலான விவசாயிகள் பயிர் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. பொதுவாக, மானவாரி நிலங்களில் மழைநீரை சேமித்து பயிர்களுக்கு தேவைப்படும் சமயத்தில் பயன்படுத்திக் கொள்ள முடிவதில்லை.

மேலும், அதிக மழை பொழியும் காலங்களில் நிலத்தில் விழுந்து ஓடும் மழைநீரும் அதனால் ஏற்படும் மண் அரிமானமும் மண்ணின் வளத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்படி வழிந்து ஓடும் நீரை கட்டுப்படுத்த வயல் தோறும் ஒரு பண்ணைக்குட்டையை அமைக்கலாம். குறிப்பிட்ட நீள, அகல மற்றும் ஆழத்தில் அமைக்கப்படும் இந்த அமைப்பில் மழை நீரை சேமித்து வைப்பதன் மூலம் பயிரிடப்படும் நிலங்களில் மண் அரிப்பை தடுக்கலாம்.

எருக்குழி
மழை பெய்யும் போது, நிலத்தில் வழிந்தோடும் நீரால் பயிரிடப்படும் மண்ணில் உள்ள சத்துக்கள் நீரால் அரித்து செல்லப்படும். அப்போது அந்த மண்ணில் பயிரிட தேவையான சத்துக்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும். அப்போது, நிலத்தில் மக்கு மற்றும் தொழுஉரங்களை இட்டு மீண்டும் மண்ணில் பயிர் செய்வதற்கான போதிய சத்தை நிலைநிறுத்த வேண்டியுள்ளது.

பொதுவாக, இது போன்ற நிலைகளில் விவசாயிகள் அவசர நிலை கருதி நன்கு மக்காத எருவை வயலில் இடுவார்கள். அப்போது, அந்த மக்காத எருவில் இருக்கும் களைவிதைகளும் நிலத்தில் விழுந்து முளைக்க தொடங்குகின்றன. இந்த நிலையில் முக்கிய பயிரை சாகுபடி செய்யும் போது அதனுடன் சேர்ந்து நிலத்தில் முளைத்திருக்கும் களைகளும் உணவுக்கும், ஊட்டச்சத்திற்கும் போட்டி போடுகின்றன. இதனால் மகசூல் குறைகிறது.

இது போன்ற நிலையில் விவசாய கழிவுகளை மக்கிய உரமாக மாற்ற "வயல் தோறும் எருக்குழி" என்ற அமைப்பை நிறுவலாம். இது பயிர்களுக்கு தேவையான மக்கிய உரத்தை உற்பத்தி செய்யும் அமைப்பாக இருக்கிறது.

அருமையான பண்ணைக்குட்டைகள்
பயிரை விளைவிக்கும் போது அதற்கு தேவையான உரத்தை இடுவது மிகவும் முக்கியம். அதே போல் அந்த பயிருக்கு தேவையான நீரை குறைவில்லாமல் பாசனம் செய்வதும் அதை விட முக்கியம். இந்த இரண்டுக்கும் உதவுவதே பண்ணைக்குட்டைகள் என்ற அமைப்பு ஆகும்.

வயல்வெளிகள் தோறும் விவசாயிகள் சிறிய பண்ணைக்குட்டை அமைப்பை ஏற்படுத்திக் கொண்டால் அதில் நீரையும் சேமிக்கலாம். அதையே சமயங்களில் விவசாயக் கழிவுகளை மக்க வைத்து பயன்படுத்தும் உரசேமிப்பு குழியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Thursday, December 10, 2015

கடலில் வீணாகக் கலக்கும் பாலாற்று நீர்

கடந்த 23 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து பெய்த பலத்த மழையால் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டும், போதிய தடுப்பணைகள் இல்லாததாலும், பல இடங்களில் மணல் வரைமுறையின்றி மொத்தமாக அள்ளப்பட்டதாலும் வீணாக உருண்டோடி கடலில் கலக்கிறது. எனவே பாலாற்றை சுற்றியுள்ள பகுதிகளின் நீராதாரத்தை பாதுகாக்கும் வகையில் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பில் இருந்தும் எழுந்துள்ளது.

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் உற்பத்தியாகும் பாலாறு கர்நாடகத்தில் 93 கி.மீ. தொலைவும், ஆந்திரத்தில் 33 கி.மீ. தொலைவும், தமிழகத்தில் 222 கி.மீ. தொலைவும் ஓடி சென்னைக்கு தெற்கே 100 கி.மீ. தொலைவில் உள்ள வயலூர் என்ற இடத்தில் கடலில் கலக்கிறது.
இந்த பாலாறு ஆசியாவின் தொன்மையான ஆறுகளில் ஒன்று. இதன் மணற்பரப்பின் உயரத்தைக் கொண்டு நீரியல் அறிஞர்கள் ஆற்றின் வயதை கணக்கிட்டு இதனை தொன்மையான ஆறு என்று உறுதியாகக் கூறுகின்றனர். இந்த ஆற்றின் வழியாகப் படகுகள் மூலம் பொருள்கள் வந்தது தொடர்பாக பெரும்பானாற்றுப்படை உள்ளிட்ட நூல்களில் குறிப்புகள் உள்ளன.


வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா, வேலூர், ஆற்காடு, வாலாஜாபேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நகரங்கள் இந்த ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளன. வடதமிழ்நாட்டின் பெரும் பகுதிகளை வளமாக்கி வந்த பாலாற்றில் கடந்த 23 ஆண்டுகளாக தண்ணீர் வரவில்லை. ஆற்காடு பகுதியில் அணை உள்ள இடத்தில் மட்டும் அவ்வப்போது தண்ணீர் வரும். ஆறுகளில் நீர் ஓடும்போது மணலில் நீர் ஊறி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும். ஆனால் இந்த ஆற்றில் மணல் பெருமளவு அள்ளப்பட்டு விட்டதால் வரும் நீர் அப்படியே உருண்டோடுகிறது என்றும், எனவே இந்த ஆற்று நீரை சேமிக்கும் வகையில் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் பலர் வலியுறுத்துகின்றனர்.

இது குறித்து பாலாறு பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் காஞ்சி அமுதன் கூறியதாவது:
கோமதிநாயகம் என்னும் நீரியல் அறிஞர் ஆசியாவின் மிகத் தொன்மையானது பாலாறு என்று தனது குறிப்புகளில் தெரிவித்துள்ளார்.

Thursday, April 2, 2015

நீர் பரிசோதனை அவசியம் (Neer Parisothanai Avasiyam) - Water Quality Testing is Necessary

சிறந்த வேளாண்மைக்கு மண் பரிசோதனை எவ்வளவு அவசியமோ, அந்த அளவுக்கு பாசன நீர் பரிசோதனையும் மிகவும் அவசியம்.

முற்றிலும் ஏரி, குளங்களில் தேக்கிய மழைநீரைக் கொண்டு விவசாயம் செய்த நிலை மாறி வருகிறது. ஆறுகள் குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள், மக்களாலும், தொழிற்சாலைகளாலும் பெருமளவுக்கு மாசுபடுத்தப்படுகின்றன.
தற்போது நாம் திறந்த வெளிக்கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகளில் இருந்து பெறப்படும் நீரைப் பாசனத்துக்கு அதிக அளவில் பயன்படுத்துகிறோம். நீரின் தன்மை இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம் மாறுபடுகிறது. நிலம் வளமானதாக இருந்தாலும் பாசன நீரின் தன்மையால் நிலவளம் மாறுபடுகிறது. மோசமான நீர், வளமான நிலத்தையும் பயிரிடத் தகுதியற்றதாக மாற்றிவிடும்.
இரு தன்மைகள்
  • திறந்த வெளிக் கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகள் புதிதாக அமைத்த உடனேயே நீரின் பண்புகளை ஆராய்ந்து அறிவது விவசாயத்துக்கு நல்லது. பாசன நீரில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை உவர் தன்மை, களர் தன்மை.
  • பாசன நீரில் கால்சியம், மெக்னீஷியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களின் குளோரைடுகள், சல்பேட்டுகள் அதிகம் இருந்தால் உவர் தன்மை ஏற்படும்.
  • சோடியம் கார்பனேட், சோடியம் பை கார்பனேட், மெக்னீஷியம் கார்பனேட் ஆகிய உப்புகள் அதிகம் இருந்தால் பாசன நீரில் களர் தன்மை ஏற்படும்.
  • பாசன நீரை ஆய்வு செய்யும் போது அந்த நீரால் பாசன வசதி பெறும் நிலத்தில் உள்ள மண்ணையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று வேளாண் துறை பரிந்துரைக்கிறது.


பரிசோதனை  செய்வது எப்படி
  • கிணற்றில் பம்புசெட் பொருத்தப்பட்டு இருந்தால், அரைமணி நேரம் மோட்டாரை ஓடவிட்டு பின்னர் கிடைக்கும் நீரை மாதிரியாகச் சுத்தமான பாட்டிலில் காற்றுக் குமிழிகள் இல்லாமல் சேகரிக்க வேண்டும்.
  • சேகரிக்கும் முன், அதே நீரைக் கொண்டு முதலில் பாட்டிலைக் கழுவ வேண்டும். தாமதம் இல்லாமல் விரைவில் ஆய்வுக் கூடங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
  • பம்பு செட் இல்லாத கிணறாக இருந்தால், மேல்மட்ட நீரைச் சேகரிக்காமல் வாளியைக் கொண்டு, ஆழத்தில் உள்ள நீரைச் சேகரிக்க வேண்டும்.
  • கவலை பொருத்தப்பட்ட கிணற்றில், ஒரு மணி நேரம் நீரை இரைத்து விட்டு, பின்னர் நீர் மாதிரியைச் சேகரிக்க வேண்டும். பாசன நீர் மாதிரியுடன் விவசாயியின் பெயர், முகவரி, நிலத்தின் சர்வே எண், திறந்த வெளிக் கிணறா? ஆழ்குழாய்க் கிணறா? குளம் அல்லது ஆற்று நீரா? கிணற்றின் ஆழம் எவ்வளவு மண்ணின் விவரம் போன்றவற்றைத் தெரிவிக்க வேண்டும்.
  • பாசன நீரை ஆய்வு செய்து, உவர்நிலை, களர் நிலை, கார்பனேட், பை கார்பனேட், குளோரைடு, சல்பேட் ஆகியவற்றின் நிலை, கால்ஷியம், மெக்னீஷியம், சோடியம், பொட்டாசியம் எஞ்சிய சோடியம் கார்பனேட் மற்றும் சோடியம் ஈர்ப்பு விகிதம், மெக்னீஷியம் கால்சியம் விகிதம், நீரின் ரசாயனத் தன்மை, ஆகிய விவரங்கள் விவசாயிகளுக்குத் தெரிவிக்கிப்படுகின்றன.
  • பாசன நீரை ஆய்வு செய்த பிறகு விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய உழவியல் முறைகள், தண்ணீரின் தன்மைக்கு ஏற்ப சாகுபடி முறைகள், உர நிர்வாகம், நீர் நிர்வாகம் ஆகியவைகளும் வேளாண் அலுவலர்களால் சிபாரிசு செய்யப்படுகின்றன.

கட்டணம் எவ்வளவு?
  • பாசன நீரை ஆய்வு செய்வதற்கு மாதிரி ஒன்றுக்கு, 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  பாசன நீர் ஆய்வுக்காக, மாதிரிகளை சேகரித்து அந்தந்தப் பகுதி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் அளவிலும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேளாண் பல்கலைக்கழக கிளை அலுவலகங்களிலும், கூட்டுறவுத் துறை மூலம் தேர்ந்து எடுக்கப்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள வேளாண் சேவை மையங்களிலும் பாசன நீர் ஆய்வுக் கூடங்கள் உள்ளன.
  • நீரை ஆய்வு செய்வதற்காக இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில், 1,700 ஆய்வு மையங்களை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளதாக வேளாண் துறை தெரிவிக்கிறது.

வறட்சிக்கு உதவும் தென்னை நார்க் கழிவுத்துகள் (Varatchiku Uthavum Thennai Naar Kalivugal) - Coconut Coir Helps in Drought

கடும் வறட்சி காரணமாக தென்னைநார்க் கழிவுத்துகள்களின் தேவை அதிகரித்துள்ளது. பொள்ளாச்சிப் பகுதியில் இருந்து முதன்முறையாக ஆப்பிரிக்காவுக்கு இக்கட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

தென்னை நகரான பொள்ளாச்சிப் பகுதியில் சுமார் ஒரு கோடி தென்னை மரங்கள் உள்ளன. கடந்த ஆண்டு தென்மேற்கு, வடகிழக்குப் பருவ மழைகள் பொய்த்து விட்டன.
இதனால் பொள்ளாச்சிப் பகுதியில் மட்டும் 20 சதவீத தென்னை மரங்கள் முழுமையாகக் காய்ந்துவிட்டன. மேலும் 20 சதவீதத்துக்கு மேற்பட்ட மரங்கள் காய்க்கும் திறனை இழந்துவிட்டன.
பொள்ளாச்சிப் பகுதியில் சில ஆண்டுகளாக தென்னை மட்டையில் இருந்து தயாரிக்கப்படும் நார் மற்றும் தென்னைநார்க் கழிவுத்துகள் கட்டிகளின் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது.
இப்பகுதியில் மட்டும் சுமார் 500-க்கு மேற்பட்ட தென்னைநார்த் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
நாளொன்றுக்கு ஒரு தொழிற்சாலைக்கு சுமார் 40 ஆயிரம் மட்டைகள் தேவைப்படுகின்றன. ஏற்றுமதி அதிகரிப்பதால் மட்டைகளின் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தேவை அதிகரித்ததால், கடந்த 6 மாதங்களுக்கு முன் 50 பைசாவுக்கு விற்ற தென்னை மட்டை இப்போது ரூ. 2-ஆக விலை உயர்ந்துள்ளது.
இங்கு தென்னை மட்டை கிடைக்காத காரணத்தால், கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து தினமும் 20 லோடு முதல் 40 லோடு வரை தென்னை மட்டைகள் கொண்டு வரப்படுகின்றன.
பொள்ளாச்சியில் இருந்து கொரியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிக அளவில் தென்னைநார்க் கழிவுத்துகள் கட்டிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
முதன்முறையாக இந்த ஆண்டு பொள்ளாச்சியில் இருந்து ஆப்பிரிக்காவுக்கும் கழிவுத்துகள் கட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
வீடுகளின் மாடிகளில் காய்கறித் தோட்டம் அமைக்குமாறு தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. வீடுகளின் மாடியில் தோட்டம் அமைக்கும் பகுதியில் கழிவுத்துகள் கட்டிகளை மண்ணுடன் கலந்து பயிரிடுவதால் மகசூல் அதிகரிப்பதுடன் தண்ணீரின் தேவையும் குறைகிறது.

இதனால் கழிவுத்துகள் கட்டிகளின் தேவை அதிகரித்துள்ளது.
மேலும் வறட்சியால் வாடும் தென்னை மரங்களைக் காப்பாற்றுவதற்காக மரத்தைச் சுற்றிலும் இக்கழிவுத் துகள்களைப் பரப்புகின்றனர். இதனால், தினமும் தென்னை மரத்துக்குத் தண்ணீர் விடுவதற்குப் பதிலாக, 4 அல்லது 6 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் விட்டால் போதுமானதாக இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
தண்ணீரைச் சேமிக்க வேண்டுமானால் கழிவுத்துகள் கட்டியைப் பயன்படுத்துங்கள் என்ற கோஷம், இப்போது புதிதாக பொள்ளாச்சியில் உள்ள கழிவுத்துகள் கட்டி உற்பத்தியாளர்களிடம் எழுந்துள்ளது.
ஒரு கிலோ கழிவுத்துகள் கட்டி 8 கிலோ தண்ணீரைத் தன்னுள் தாங்கும். இதனால் தென்னை மரத்தைச் சுற்றிலும் ஈரம் இருந்து கொண்டே இருக்கும்.
அதற்காகவே கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள், வறட்சியின்போது கழிவுத்துகள்களை தென்னை மரத்தின் வேரைச் சுற்றிலும் பரப்பி ஆயுள்காலப் பயிரான தென்னையைக் காப்பாற்றி வந்தனர்.
பொள்ளாச்சிப் பகுதியில் இருந்து மட்டும் தென்னைநார்க் கழிவுத்துகள் கட்டி ரூ. 250 கோடிக்கு மேல் ஏற்றுமதியாவது குறிப்பிடத்தக்கது.

நிலப்போர்வை அமைத்து விவசாயம் (Nilapporvai Amaithu Vivasayam) - Mulching in Agriculture

கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, தோட்டக்கலைத்துறை சார்பில், அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலப்போர்வை எனப்படும் “மல்ச்சிங்’ முறையை விவசாயிகள் கடைபிடித்தால், அதிக மகசூல் பெற முடியும்.



கோடை காலத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பிரச்னை ஏற்படுவது இயற்கையே.

மின்வெட்டு மற்றும் தண்ணீர் பிரச்னையை விவசாயிகள் கட்டாயம் சமாளித்தாக வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி பகுதியில் உள்ள விவசாயிகள் நிலப்போர்வை முறையில் தர்ப்பூசணி, மிளகாய் செடிகளை பயிரிட்டுள்ளனர்.



சேலம் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் இன்பராஜ் கூறியதாவது:

  • கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும்.
  • பயிர்களை காப்பாற்ற நிலப்போர்வை (மல்ச்சிங்) (“Mulching“) அமைக்க வேண்டும்.
  • பிளாஸ்டிக் மல்ச்சிங், இயற்கை உர மல்ச்சிங் என்ற இரண்டு முறையின் மூலம் விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற முடியும்.
  • பிளாஸ்டிக் மல்ச்சிங் முறை மூலம், நீர் ஈரப்பதம் பராமரிக்கப்படுவதால், பயிர்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது.
  • மழை காலத்தில் செடியில் உள்ள வேரில் நீர் தேங்காமல் இருப்பதால், அழுகல் நோயிலிருந்தும் தப்பலாம்.
  • அசுவின் என்ற பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தவும் முடியும்.
  • “மல்ச்சிங்’ முறையை கடைபிடிப்பதன் மூலம் மூன்று நாட்களுக்கு முன்பாகவே மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
  • நிலப்போர்வை அமைக்க, தமிழக அரசு மானியத் திட்டங்களை அறிவித்துள்ளது.
  • தேசிய தோட்டக்கலை திட்டத்தின் மூலம், நிலப்போர்வை வாங்க, 10 ஆயிரம் ரூபாய் மானியம் அளிக்கப்படுகிறது.
  • விவசாய பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் நிலப்போர்வை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
  • ஒரு போகம் முடிந்ததும், நிலத்தை மீண்டும் களைக்காமல், மற்றொரு போகம் பயிர் செய்ய முடியும்.
  • சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் உள்ள விவசாயிகள் மிளகாய், தக்காளி, தர்ப்பூசணி போன்ற பயிர்களை நிலப்போர்வை மூலம் பயிரிட்டுள்ளனர்.
  • இந்த பகுதியில், 50 எக்டர் பரப்பளவில் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.
  • நிலப்போர்வை முறையில், சொட்டு நீர் பாசனம் பயன்படுத்துவதால், தண்ணீர் செலவு குறைகிறது. மகசூல் அதிகம் கிடைக்கிறது.
  • விவசாயிகள் உரிய ஆவணங்களுடன், அந்தந்த வட்டார உதவி வேளாண் இயக்குனர்களை சந்தித்து, விண்ணப்பங்களை கொடுக்கலாம்.
    இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, March 31, 2015

தெளிப்பு நீர் பாசனம் (Thelippu Neer Paasanam) - Sprinkler Irrigation

தெளிப்பு நீர் பாசன முறை பற்றி விவரிக்கும் விவசாயி ராஜேந்திரன்:

  • விழுப்புரம் மாவட்டம், கீழ்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். பெரும்பாலும், சோளம், கம்பு, மணிலா போன்ற பயிர்களை தான் பயிரிடுவோம்.
  • கடந்த சில ஆண்டுகளாக, உரிய மழை இல்லாததால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கிணறுகளும் வற்றின. அதனால், விவசாயம் செய்வதே, பெரும் சவாலாக இருந்தது.
  • இச்சூழலில், குறைந்த நீரில் தெளிப்பு நீர்ப்பாசனத்தின் மூலம், பயிர்களை சாகுபடி செய்து லாபம் பெறலாம் என்பதை, திண்டிவனம் வேளாண் பொறியியல் துறையின் வல்லுனர்கள் வாயிலாக அறிந்தேன்.
  • அதுமட்டுமின்றி, தெளிப்புநீர்ப் பாசனத்திற்கான கருவிகளை, மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருவதும் தெரிந்தது.
  • இதற்காக விண்ணப்பித்த போது, 5 ஏக்கருக்கு மேல் எனக்கு நிலம் இருப்பதால், 75 சதவீத மானியத்தில், தெளிப்புநீர்ப் பாசனத்திற்கான ரெயின்கன் கருவியையும், 30 மீட்டர் நீளமுள்ள டியூப் பைப்பையும், வேளாண் பொறியியல் வல்லுனர்கள் வழங்கினர்; மேலும், கருவியை பொருத்துவது குறித்த பயிற்சியையும் அளித்தனர்.
  • வயலில் உள்ள மோட்டார் பைப்பில், டியூப் பைப்பை இணைத்து, அதனுடன் ரெயின் கன் கருவியின் பைப்பை இணைத்து, மோட்டாரை ஆன் செய்தால், நிலம் முழுவதும் சுழற்சி முறையில், 64 மீ., பரப்பளவிற்கு சாரல் மழை பொழிவது போன்று, நீர் தெளிக்கப்படும்.
  • ரெயின் கன் கருவியை, சுலபமாக எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என்பதால், அதிகபட்சமாக மூன்று முதல், நான்கு மணி நேரத்திற்குள், ஒரு ஏக்கரில் பயிர்களுக்கு நீர் அளித்து விடலாம்.
  • கடந்த பருவத்தில், உளுந்து மற்றும் எள் பயிரை தெளிப்பு நீர்ப் பாசனத்தில் பயிர் செய்திருந்த போது, அதிகபட்சமாக, நான்கு முறை மட்டுமே நீர் அளித்தேன்.
  • விதைப்புக்கு முன் ஒருமுறையும், அதன் பின், 15 நாட்கள் இடைவெளியிலும், பயிர்களுக்கு நீர் அளித்தேன்.
  • வழக்கமாக பெரும் மகசூலைவிட தெளிப்பு நீர் பாசனத்தின் மூலம் பயிர் செய்தபோது, அதிக அளவில் மகசூல் கிடைத்தது.
  • மணிலா, உளுந்து, எள் போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ள நிலத்தின் மண், 2 அங்குலம் உயரத்திற்கு ஈரப்பதத்துடன் இருந்தால், பயிர்களைப் பாதுகாத்து விடலாம்.
  • தெளிப்பு நீர் பாசன முறையில், 5 எச்.பி., திறன் கொண்ட மோட்டார் மூலம், கருவியைப் பயன்படுத்தி, வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், விவசாயிகள் லாபம் பெறலாம்.

குறைந்த நீரில் அதிக விவசாயம் (Kuraintha Neeril Athiga Vivasayam) - Water Conservation Methods for Agriculture

காய்ச்சலும் பாய்ச்சலுமாக தண்ணீர் கொடுத்தால் தான் விளைச்சல் அபரிமிதமாக இருக்கும் எனக் கூறும், தமிழ்நாடு மண் மற்றும் நீர் ஆராய்ச்சி நிலைய நீர் மேலாண்மை வல்லுனர் முனைவர் பொற்பாவை:


  • நமக்குக் கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்தி, அதற்குத் தகுந்த பயிர்களைத் தேர்வு செய்து, பயிர் செய்தால், நல்ல மகசூல் எடுக்க முடியும்.
  • உதாரணத்திற்கு, 1 ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய தேவையான நீரை வைத்து, 3 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம். இதுபோல கிடைக்கும் தண்ணீருக்கு ஏற்ப திட்டமிட்டு விவசாயம் செய்யும்போது, விவசாயம் லாபகரமான தொழிலாக மாறும்.
  • மேலும், நமக்குக் கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்தி, அதற்கேற்ப நாம் நடவுமுறையைப் பயன்படுத்தலாம்.
  • திருந்திய நெல் சாகுபடியில் நடவு செய்யும்போது, நாற்றங்கால், நடவு போன்றவற்றில் பெருமளவு தண்ணீர் தேவை குறையும்; அதிக லாபமும் ஈட்ட முடியும்.
  • டெல்டா மாவட்டங்களில் எப்போதெல்லாம் தண்ணீர் குறைவாக வந்ததோ, அப்போதெல்லாம் விளைச்சல் அதிகமாக இருந்திருக்கிறது.நீர்க்கட்டு என்பதுதான், நெல்லுக்கு தாரக மந்திரம்.

  • நெல் நடவு செய்த வயலில் தூர் கட்டும் வரை, 2 முதல் 2.5 செ.மீ., உயரம் தண்ணீர் கட்டினால் போதும்.
  • தூர் கட்டும் பருவத்தில் நீரை வடிகட்ட வேண்டும்; அப்போதுதான் அதிக அளவில் தூர் வெடிக்கும்.
  • அதுபோல, பூ பூக்கும் சமயத்தில், பூ பூப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்பும், பூத்த பின்பும், 5 செ.மீ., தண்ணீர் இருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல முறையில் பூக்கள் பூத்து, பால் வைக்கும்.
  • அதன் பின், தொடர்ச்சியாக, 2 செ.மீ., உயரம் தண்ணீர் இருந்தால் போதுமானது.
  • அதுபோல அவ்வப்போது தண்ணீரை வடித்து, வயலை நன்கு காயவிட்டு, பின் தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும்; அப்போதுதான் அதிக அளவில் விளைச்சல் இருக்கும்.
  • தொடர்ச்சியாக வயலில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது, பயிரின் வேர்களுக்கு காற்றோட்டம் செல்வதில்லை.மேலும், தண்ணீரை வடித்து வடித்துக் கட்டும்போது, அதிக விளைச்சல் கிடைக்கும்.
 

  • தண்ணீர் சிக்கனத்திற்கு உளுந்து சிறந்த பயிராக உள்ளது; இது, 65 நாட்கள் பயிர் தான். இதற்கு, 300 மி.மீ., தண்ணீர் போதுமானது.
  • கரும்பு சாகுபடி செய்யும்போது, தண்ணீர் சிக்கனத்திற்காக சொட்டுநீர்ப் பாசனம் செய்யலாம்.
  • அதுபோல தென்னை, வாழை போன்ற நீண்ட காலப் பயிர்களுக்கும், சொட்டுநீர்ப் பாசன முறை சிறந்த பயன் தருகிறது.இதுபோல சிறு தானியங்கள், காய்கறிகள், பூ வகைகள் போன்றவற்றை மாற்றுப்பயிராக செய்யும்போது, குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு அதிக அளவில் விவசாயம் செய்ய முடியும்.

உப்பு நீரை பாசனத்திற்கு பயன்படுத்துவது எப்படி? (Uppu Neerai Paasanthuku Yeatrapadi Maatrum Murai) - Process for the conversion of salt water for irrigation purposes

களரிப்பாக்கம் வேளாண் அறிவியல் மையம் உதவிப் பேராசிரியர் வேல்முருகன் தெரிவிக்கும் நுட்பங்கள்:

  • குறிப்பாக ஆழ்துளைக் கிணற்றிலிருந்து வரும் உப்புநீரை பாசனத்திற்கு  பயன்படுத்துவது எப்படி என்று கேள்வி. ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் மழைநீரைச் சேகரிக்க பண்ணைக்குட்டை அல்லது மழைநீர் சேகரிப்பு, தொட்டிகள் அமைக்கலாம் என்கிறார் பேராசிரியர் வேல்முருகன்.
  • அதாவது ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் 3 அடி நீளம் 2 1/2 அடி அகலம், 4 அடி ஆழத்துக்கு குழி எடுத்து அதில் 3 அடி உயரத்துக்கு ஜல்லி, ஜல்லிகற்களை நிரப்பி அதற்கு மேல் ஒரு அடி உயரத்துக்கு மணல் நிரப்பினார். மழைநீர் சேகரிப்பு தொட்டி தயாராகி விடும். இதன் மூலம் ஆழ்துளைக் கிணற்றின் நீர்மட்டம் உயரும். காலப்போக்கில் உப்புத்தன்மையும் குறைய வாய்ப்புகள் உள்ளன.
  • தவிர தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் பயிர்களை சாகுபடி செய்வதால் அது மண்ணில் உள்ள உப்புத்தன்மைக் குறைக்கிறது.
  • நன்றாக விளைச்சல் கொடுக்கக்கூடிய திருச்சி1, திருச்சி 3 ஆகிய நெல் ரகங்களை சாகுபடி செய்யலாம்.
  • கூடவே இயற்கை உரங்களை நிறைய பயன்படுத்த வேண்டும். கேழ்வரகு, வரகு போன்ற உப்புத்தன்மையைத் தாங்கி வளரும்.சிறு தானியங்களையும் சாகுபடி செய்யலாம்.
  • பழமரங்களைப் பொறுத்தவரையில் கொய்யா, புளி, நாவல், நெல்லி போன்றவற்றை இந்த மாதிரியான நிலத்திற்கு ஏற்றதாக இருக்கும். 

சொட்டுநீர் பாசன டிப்ஸ் (Sottu Neer Pasanam Tips) - Tips for Drip Irrigation

“சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தும் விவசாயிகள், முறையாக பயன்படுத்த வேண்டும்’ என, ராசிபுரம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகன் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:
  • சொட்டுநீர் பாசன முறை விவசாயிகள், நீர் பாய்ச்சுவதற்கு முன், டிஸ்க் வடிகட்டியை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
  • மெயின் பைப், சப்மெயின் பைப், பக்கவாட்டு குழாய்களை, 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்.
  • உபகரணத்தில் உள்ள வடிகட்டியின் இன்லெட் மற்றும் அவுட்லெட், சப்மெயின், பக்கவாட்டு குழாயின் இறுதியில் தேவையான அழுத்தம் உள்ளதா என பார்க்க வேண்டும்.
  • உபகரணத்தை மண்ணின் ஈரப்பதம் மற்றும் பயிரின் நீர் தேவைக்கேற்ப இயக்க வேண்டும்.
  • உப்பு மற்றும் பாசனத்தினால், டிரிப்பரில் அடைப்பு ஏற்படாமல் இருக்க பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • நீண்ட நாட்கள் இயக்க தேவையில்லாத போதும் கூட உபகரணத்தை இயக்க வேண்டும்.
  • ஒவ்வொரு முறையும், உரம் மற்றும் அமில சிகிச்சை முடிந்து, 15 முதல், 30 நிமிடம் நீர் பாசனம் செய்ய வேண்டும்.
  • தண்ணீரில் கரையக்கூடிய உரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • மண்ணுக்கு அடியில் அமைக்கப்பட்ட சொட்டுநீர் பாசனமெனில், தினந்தோறும் குறிப்பிட்ட அழுத்தத்தில் இயக்க வேண்டும்.

Wednesday, March 18, 2015

நெல் பயிருக்கு எந்த அளவு நீர்பாய்ச்சலாம்

அதிக மகசூல் பெற முடியும் என்று கருதி நெல்லுக்கு அதிக நீர் பாய்ச்சுவதால் அது எதிர்மாறான விளைவுகளை தான் ஏற்படுத்துகிறது என்பது ஆய்வுகளில் தெரிகிறது. எனவே நெல் பயிர் வளர்ச்சியுறும் நிலையில் அதன் வளர்ச்சி காலகட்டத்தை பொறுத்து சரியான அளவு நீரை பாய்ச்சினால் மட்டுமே அதிக மகசூலை பெற முடியும். எந்தகட்டத்தில் எவ்வளவு நீர் பாய்ச்சலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.



சாகுபடி செய்யப்படும் நெல்லின் வயது, மண்ணின் வாகு, சாகுபடியாகும் பட்டம் மழைநீரின் அளவு, வடிகால் வசதி ஆகியவற்றை பொறுத்து பாசனநீரின் தேவை நிர்ணயிக்கப்பட வேண்டும். 135 நாள் வயதுடைய உயர்விளைச்சல் நெல் வகையில் அதிக மகசூல் எடுக்க பயிரிடப்படும் முறையை கவனியுங்கள். அதாவது, 

நடவு வயல் சுலபமாக நீர் பாய்ச்சுவதற்கு ஏற்ப ஒரே மேடு பள்ளங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். 

இநாற்று நடும் போது ஒன்றரை முதல் 2 சென்டிமீட்டர் ஆழம் நீர் இருக்க வேண்டும். நடவு செய்து 3 முதல் 14 நாட்கள் வரை நட்ட பயிர் நன்கு வேர் ஊன்ற சுமார் 2 முதல் 3 செ.மீட்டர் ஆழத்திற்கு வயலில் பாசன நீர் வைக்க வேண்டும்.

நடவு செய்த 15 முதல் 30 நாட்கள் வரை தூர்கள் தண்டு கிளைக்க தண்ணீர் அளவு 5 செ.மீட்டர் வரை இருத்தல் அவசியம். 

நடவு செய்து 31 முதல் 55 நாட்கள் வரை தூர்கள் திரண்டு வளரவும், மென்மையான தூர்கள் அழியவும் தண்ணீரை வடித்து விடுவது அவசியம். வயிலின் மேற்பரப்பு மெழுகு பதத்தில் இருக்க வேண்டும். வயலில் வெடிப்புகள் அல்லது பிளவுகள் வராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

நடவு செய்த 36 முதல் 45 நாட்கள் வரை தூர்களை அதிக எண்ணிக்கையில் பெற 5 செ.மீட்டர் வரை பாசன நீர் விட வேண்டும். 

நடவு செய்த 46 முதல் 50 நாட்கள் வரை இளங்கதிர் பருவத்தை சீராக பேண தண்ணீர் வடித்து விட வேண்டும். மயிரிழை போன்ற வெடிப்புகள் தோன்றினாலும் பாசன நீர் விட வேண்டும்.

நடவு செய்த 51 நாள் முதல் 95 நாட்கள் வரை இளங்கதிர் வெளியில் வந்து கதிர் முற்றும் வரை 4 முதல் 5 செ.மீட்டர் அங்குல நீர் வயலில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். பயிர் அறுவடைக்கு 10 முதல் 15 நாட்களுக்கு முன் பாசனநீரை நன்கு வடித்து வயலை காயவிட வேண்டும். 



அதிகமானால் என்ன நடக்கும்?
நீர் அளவு அதிகமானாலே, குறைந்தாலோ நெல் வயலில் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.

நீர் அளவு அதிகமானால் பயிரின் உயரம் அதிகரிக்கும். தூர்களின் எண்ணிக்கை குறைவதுடன் அவைகளின் வீரியமும் குறைகிறது. அதிக அளவு நீர் தேங்குவதால் மண்ணில் துத்தநாக குறைபாடு ஏற்படுகிறது.

பூக்கும் பருவத்தில் வயலில் நீர் கட்டாயம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அதிக பதர்கள் உருவாகி மகசூல் பாதிக்கும்.

அறுவடைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு நெல் வயலில் இருந்து நீரை வடித்து விடுவது நல்லது. இதனால் நெல்மணிகள் சீராகவும், துரிதமாகவும் முற்ற உதவுகிறது.

நெற்பயிருக்கு பெரும்பாலான நாட்களில் தேவைப்படும் 5 செ.மீட்டர் அளவு நீரை தொடர்ந்து அளவு குறையாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். வயலில் தொடர்ந்து நீர் நிறுத்தும் முறையினால் களைநிர்வாக செலவு குறையும். நடவு வயலில் 100 நாட்கள் இருக்கும் நெற்பயிருக்கு சுமார் 1200 மி.மீட்டர் அளவு நீர் தேவைப்படுகிறது. நெல்லைப் பொருத்த மட்டில் இளம்நாற்று, தூர் கிளைக்கும் பருவம், இளங்கதிர் உருவாகும் பருவம் முதல் பூக்கும் பருவம் மற்றும் பால் பிடிக்கும் பருவம் வரை தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும்.