Wednesday, September 30, 2015

டீசலோடு போட்டி போடும் புன்னை (Punnai Maram) - Calophyllum inophyllum / Indian doomba oiltree / Alexandrian laurel


அறிவிக்கப்படாத மின் வெட்டு... தலை விரித்தாடும் டீசல் தட்டுப்பாடு, என்று கடந்த சில மாதங்களாக தமிழகமே திண்டாட்டத்தில் இருக்கிறது. 



பம்ப்செட்டை நம்பியிருக்கும் பயிர்கள் எல்லாம் தாகத்தில் தவிக்கின்றன. ‘இதே நிலை நீடித்தால் விவசாயத்துக்கு எதிர்காலமே இல்லை’ என்றபடி விவசாயிகள் பலரும் தலையில் கை வைத்து உட்கார்ந்திருக்கிறார்கள்.

ஆனால், நாகப்பட்டினம் மாவட்டம், கண்டியன்காடு கிராமத்தைச் சேர்ந்த தீவர விவசாயி ராஜசேகரோ.. மின்சாரத்தையும், டீசலையும் நம்பாமல், “புன்னை, கைவிடாது என்னை... !” என்று தெம்பாகச் சொன்னபடி, தன் தோட்டத்துக்கு தேவைப்பட்ட போதெல்லாம் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்.. புண்ணை எண்ணெய் புண்ணியத்துல!

ஆம்.. பம்ப்செட் மோட்டாருக்காக முழுக்க முழுக்க இவர் பயன்படுத்துவது புன்னை எண்ணெயைத்தான்!



இதைப் பற்றிக் கேள்விப்பட்டதுமே.. “என்னது புன்னை எண்ணெயில்.. பம்ப்செட் ஓடுதா..?” என்று உற்சாகத் துள்ளல் போட்டபடி கண்டியன் காடு சென்றடைந்தோம். குளிர்ந்தக் காற்றையும், பரந்த நிழலையும் வாரி வழங்கியபடி தோட்டத்தில் நின்றிருக்கும் புன்னை மரங்கள்.. பூமாரி தூவிக்கொண்டிருந்த வேளையில் உள்ளே நுழைந்தோம். சடசடவென புன்னைக்கு ‘வாழ்த்துமாரி’ பொழிய ஆரம்பித்தார் ராஜசேகர் (அலைபேசி : 97510 02370).

சுனாமியில கூட சுழற்ற முடியல !

“டீசல் மோட்டார் பம்ப்செட்டுகளில், டீசலுக்குப் பதிலாக புன்னை எண்ணெயைப் பயன்படுத்தினால் பல மடங்கு செலவு குறையும். கூடுதல் இணைப்பாக சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் இந்த மரத்தை, இயற்கை நமக்குத் தந்த வரம்ன்னு தான் சொல்லணும். இதுக்கு இலையுதிர் காலம்ன்னு ஒண்ணு கிடையாது. வருஷம் முழுக்க நிழல் கொடுக்கும். மழ வரப்போகுதுன்னா, ஒரு வாரத்துக்கு முன்னாடியே நமக்குச் சொல்லிடும். அதாவது, மரத்துல பூ பூத்துக் குலுங்கினா, கண்டிப்பா மறுவாரம் மழை பெய்யும். புயல் அடிச்சாக்கூட சாயாம நிக்கக்கூடிய மரம். இது கடற்கரையோர பூமி, சுனாமி வந்தப்பக்கூட இந்த மரங்களுக்கு ஒண்ணும் ஆகலனா பார்த்துக்கோங்க.. இந்த அளவுக்கு வலுவான மரம். இதுக்கு எத்தனை வருஷம் ஆயுள்ன்னு தெரியல. 70 வருஷத்துக்கும் மேல் வயசுள்ள மரங்கள் கூட விதைகளைக் கொட்டுது என்ற புன்னையை வாழ்த்தித் தள்ளியவர்.

“செடியை நட்ட 5ம் வருஷமே காயாகி, பழம் கிடைக்கும். புன்னை மரம் இருந்தாலே வெளவால் நிறைய இருக்கும். அதுங்க பழத்தைத் தின்னுட்டு, கொட்டையைக் கீழே போட்டுடும். அதனால பழத்தைக் காய வைக்க வேண்டிய அவசியம் இல்ல. தானா கீழே விழுற பழத்தை ஆறு நாளைக்கு வெயில்ல காய வெச்சா.. கொட்டையை உடைச்சி எடுக்கலாம். கொட்டைக்குள்ள இருக்கற பருப்புதான் முக்கியம். அதைத் தனியா எடுத்து, வெயில்ல 10 நாள் காய வைக்கணும். காய்ஞ்ச பருப்பை, செக்குல கொடுத்து ஆட்டினா, 70 சதவிகிதம் முதல் 75 சதவிகிதம் வரை எண்ணெய் கிடைக்கும். அதாவது, ஒரு கிலோ பருப்புக்கு 700 முதல் 750 மில்லி எண்ணெய் கிடைக்கும். இதுவே மெஷின்ல ஆட்டினா 80 சதவிகிதம் அதாவது ஒரு கிலோ பருப்புக்கு 800 மில்லி எண்ணெய் கிடைக்கும்.

கரும்புகை போகுது.. கமழும் புகை வருது !

5 ஹெச்.பி டீசல் மோட்டார் வெறும் 600 மில்லி புன்னை எண்ணெய்தான் ஊத்துறேன். வேற ஆயில் எதையும் கலக்கறதில்லை. இந்த 600 மில்லி ஊத்தறதுக்கே ஒரு மணி நேரம் ஓடுது. இதுவே டீசலா இருந்தா, ஒரு மணி நேரம் ஓடறதுக்கு 900 மிலி தேவைப்படும்.

ஒரு லிட்டர் டீசலோட விலை 53 ரூபாய் ஆனா, ஒரு லிட்டர் புன்னை எண்ணெய் தயாரிக்க கிட்டத்தட்ட 10 ரூபாய் தான் செலவாகுது. மழை இல்லாத காலத்துல தான் மோட்டார் தேவை. அப்படிப் பார்த்தா வருஷத்துக்கு 5 மாசத்துக்குத் தான் மோட்டார் ஓடணும். அதுக்கு 75 லிட்டர் எண்ணெய் தேவைப்படும் இதைத் தயாரிக்கறதுக்கு 800 ரூபாய் தான் செலவு. இதே அளவு டீசலுக்கு.. 2,666 ரூபாய் செலவாகும் என்று கணக்கு வழக்கோடு சொன்ன ராஜசேகர், தன் தோட்டத்தில் இருக்கும் டீசல் மோட்டாரில் புன்னை எண்ணெயை ஊற்றி இயக்கியும் காட்டினார்.

டீசல் மோட்டாரைப் போல குபுகுபுவென கரும்புகை கண்களை சூழவில்லை. வாடையும் மூக்கைத் தூக்கிக்கொண்டு ஓட வைக்கவில்லை. குறைவான புகையே வெளிப்பட்டதோடு, கோயில்களில் கமழ்வதைப் போன்ற சுகந்த வாடையும் வீசியது.

“புன்னை எண்ணெய்ல நிறைய மருத்துவ குணமிருக்கு. அதனால தான் முன்னயெல்லாம் கோயில்ல விளக்கேத்தறதுக்கு இதைப் பயன்படுத்தினாங்க. இந்தப் புகையில நீங்க நின்னாலும் ஒண்ணும் செய்யாது. ஆனா, டீசல் புகைன்னா, கண் எரிச்சல் ஏற்படும். அந்தப் புகையால பயிரும் மாசுபடும். ஆனா, எல்லாவிதத்துலயும் தொல்லை இல்லாதது புன்னை எண்ணெய்தான் ” என்று அதற்கு விளக்கமும் கொடுத்தார் ராஜசேகர்.

10ஹெச்பி.. 20 ஹெச்.பி..

புன்னை எண்ணெய் பயன்படுத்துவதால் இன்ஜின் துருபிடிப்பதில்லை. இன்ஜின் இயங்கும் சத்தமும் குறைவாகத் தான் கேட்கிறது. மூன்று ஆண்டுகளாக இந்த எண்ணெயைத்தான் பயன்படுத்துகிறார் ராஜசேகர். இதுவரை இன்ஜினில் எந்தப் பிரச்சனையும் வராமல் மோட்டார் நல்லபடியாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.

இதைப்பற்றி பேசும்போது, “ டீசல் பயன்படுத்தினப்ப.. ஒரு நிமிஷத்துக்கு 750 லிட்டர் தண்ணியை மோட்டார் கொட்டும். புன்னையைப் பயன்படுத்தினாலும் அதே அளவு தண்ணிக் கொட்டுது. 10 ஹெச்.பி ஜெனரேட்டர், 20ஹெச்.பி ஜெனரேட்டர் இதுல கூட புன்னை எண்ணெயை ஊத்திப் பயன்படுத்திப் பார்த்தேன். நல்லாவே ஓடுச்சி.. எந்தப் பிரச்சனையும் இல்லை. 
அதனால.. டீசல்ல ஓடுற வண்டிகளுக்கும் கண்டிப்பாக இதைப் பயன்படுத்த முடியும்ன்னு நம்புறேன். அரசாங்கமும் ஆய்வாளர்களும் தான் அதுக்கான முயற்சியைச் செய்யணும். இதுல நிச்சயம் வெற்றி கிடைக்கும்கிறது என்னோட நம்பிக்கை என்று உறுதியான குரலில் சொன்ன ராஜசேகர், புன்னை வளர்ப்புப் பற்றி பாடமெடுத்தார். அது.

புன்னை வளர்ப்பு !

எல்லா வகையான மண்ணிலும் புன்னை நன்றாக வளரும். குறிப்பாகக் கடலோரங்களிலும் ஆற்றோரங்களிலும் சிறப்பாக வளரும். உப்புத் தண்ணீர் பூச்சி, நோய், கரையான் என எதையும் சமாளிக்கும் வல்லமை இதற்கு உண்டு.

நிழலும், லேசான வெயிலும் கலந்த இடத்தில், ஒரு பாலித்தீன் பேப்பரைப் போட்டு அதில் மணலைப் பரப்பவேண்டும். அதன் மீது விதைகளைப் (முழுக் கொட்டைகளாகப் பயன்படுத்தவேண்டும்) பரப்பி, அவை மூடுமளவுக்கு மணல் போடவேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விடவேண்டும். ஒரு மாதத்தில் செடிகள் முளைத்துவிடும். பிறகு, பாலித்தீன் பாக்கெட்டுகளில் மண், மணல் தொழுவுரம் அல்லது மண்புழு உரம் போட்டு, ஒரு பாக்கெட்டுக்கு ஒரு செடி வீதம் ஊன்றி, தினமும் ஒரு வேளை தண்ணீர் ஊற்றவேண்டும். இதை நிழலில் வைத்துதான் பராமரிக்க வேண்டும். மூன்றாவது மாதம், நடவுக்குக் கன்று தயாராகிவிடும்.

அரை அடி சுற்றளவு, அதே அளவு ஆழம் கொண்ட குழிகளைத் தோண்டி, ஈரப்பதம் ஏற்படுமளவு தண்ணீர் தெளித்து, அதில் தொழுவுரம் போட்டுச் செடியை நடவேண்டும். ஒரு ஏக்கருக்கு 20 அடி இடைவெளிக் கொடுத்து நடவு செய்வதன் மூலமாக 75 மரம் வரைக்கும் வளர்க்கலாம். இரண்டு மாதம் வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் ஊற்றவேண்டும். அதன் பிறகு பெரிதாக எந்தப் பராமரிப்பும் இல்லை.

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி? (90 Naatkalil Maram Valarppu) - Growing a tree in 90 days


குறுக்கு வழியில் எப்படி முன்னேறுவது என பலரும் சுயநலமாக


யோசிக்கும் மக்களில் மிகவும் வித்தியாசமானவர் அர்ஜுனன்...

மரம் வளர்க்க பல ஆண்டுகளாகும் நிலையில் 90 நாட்களில் மரம் வளர்க்கும் வித்தையை கண்டறிந்த பாராட்டுக்கும்,நன்றிக்கும் உரிய சமூக சேவகர்....

பொதுமக்களின் நலனுக்காக உழைக்கும் இவரைப்பற்றி பதிவதில் நேர்வழி வலைதளம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.



90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி? 

‘பனை வைத்தவன் பார்த்துச் சாவான்’ என்பது கிராமத்து சொலவடை. அதாவது ஒரு மரம் தரும் பலனை, வைத்தவன் அனுபவிக்க முடியாது. அவனின் அடுத்த தலைமுறைக்குத்தான் மொத்த பலனும் என்பது அர்த்தம். மரம் வளர்ந்து தளைக்க அத்தனை ஆண்டுகள் ஆகும். இனி இதுபோல ஆண்டுக்கணக்கில் காத்திருக்க அவசியம் இல்லை. நட்ட மூன்றே மாதங்களில் மரம் ரெடி என்று நிரூபித்திருக்கிறார், நெல்லை இராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த அர்ஜுனன். ‘செப்பறை வளபூமி பசுமை உலகம்’ அமைப்பின் தலைவர் இவர்.

என் சின்ன வயசில அப்பா, அம்மா இறந்திட்டாங்க. உடன் பிறந்தவர்கள் மொத்தம் 13 பேர். வறுமை வாட்டி எடுத்தது. ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டம். பத்தாம் வகுப்பு வரை படித்தேன். அதற்கே நான் படாதபாடு பட்டேன்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போதே அர்ஜுனன் கண்களில் சோகம் தெரிந்தது.



இது வெப்ப பூமி. வருஷம் முழுக்க உஷ்ணம்தான். அதிலேயும் கோடைக்காலத்தில் கேட்கவே வேண்டாம். பாலைவனம் மாதிரி தகிக்கிற வெயில்ல, வெளியில தலை காட்ட முடியாது. அப்படி வந்து வெளியில எட்டிப் பார்த்தீங்கன்னா, மருந்துக்குக்கூட மரத்தைப் பார்க்க முடியாது. பச்சையே எங்கேயும் இல்லாததால மழையும் இல்லை. நான் பாலாமடை அரசுப் பள்ளியிலதான் படிச்சேன். மரம் வளர்க்குறதுல ஆர்வம் வந்ததுக்குக் காரணம், என்னோட பள்ளித் தலைமையாசிரியர் முகம்மது கனி.

செடி நட்டு, அது மரமாக வளர ஆண்டுக் கணக்காகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நட்டு, மரங்களாக உருவாக்கும் முயற்சி செய்தேன். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து விட்டன. மரக்கிளைகளை வெட்டி நட்ட ஆயிரம் மரங்கள் இராஜவல்லிபுரத்தைச் சுற்றி உள்ளன. இதை என் சொந்தச் செலவிலேயே செய்தேன். மேலும் எங்கள் ஊர் குளத்துக்கரையைச் சுற்றிலும் பனங்கொட்டைகளை சும்மா விதைத்து வைத்தேன். தற்போது சுமார் 2,000 பனைகள் குருத்துவிட ஆரம்பித்துள்ளன.

கடந்த மூன்றாண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கோயில்கள், தனியார் நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் மரங்களை இலவசமாக வழங்கியுள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.

90நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?

*பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.

*ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.

* கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.

* நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.

* வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.

Monday, September 28, 2015

மண் இல்லாமல் விவசாயம் - காணொளி (Mann Illaa Vivasayam) Growing plants without soil / Hydroponics & Aeroponics


அதிவேகமாக முன்னேறிவரும இந்த கால கட்டத்தில் , நம் உணவு தேவையும் அதிகரித்து வருகிறது, இரண்டாயிரத்து ஐம்பதாம் ஆண்டு சுமார் , ஆயிரத்து முந்நூறு கலோரிகள் நம் ஒவொருவருக்கும் குறைந்த பட்சம் தேவைப்படும் என கனகிடப்படுள்ளது , இதற்கு இன்றைய விளைநிலங்களை விட இரண்டு கோடி ஏகர் அதிகம் தேவை படுகிறது.


இந்த தேவையை சமாளிக்க பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அதில் ஒன்று மண் இல்லா விவசாயம். இந்த விவசாயத்தில் உள்ள வலி முறைதான்ஹைட்ரோபோனிக்ஸ் (hydroponics)மற்றும் ஏறோபோநிக்ஸ்(aeroponics). ஹைட்ரோபோநிக்ஸ் என்றல் மண் இல்லாமல் நீர் மற்றும ஒரு செடி வளர்வதற்கு தேவைப்படும் தாதுக்களையும் , வைத்து மண் இல்லாமல் வளர்ப்பது. aeroponics என்றால் செடி வளர்வதற்கான ஈரப்பததை உண்டாகுவது இதற்கு உயரமான கடிதங்கள் தேவை. ஹைட்ரோபோநிக்ஸ் , aeroponics மற்றும் சொட்டுநீர் வழிமுறைகளை பயன் படுத்தி உயரமான கட்டங்களின் உதவியுடன் காய்கறிகள் மற்றும் பழங்களை ஒர்லண்டோவில் உள்ள ஒரு ஆய்வகதில் உருவாகியுள்ளனர். இந்த வழிமுறையால் நோய் இல்லாத காய்கறிகளை உருவாக்க முடியும் என்கின்றனர், மேலே உள்ள படத்தில் இருப்பது ஒரே தாக்காளி செடிதான். இதன் மூலம் நீர் செலவும் குறைவுதான். இவை உயரமான் கட்டிடங்களில் வளர்வதால் நோய் பரவுவதை தடுக்கலாம், நீரை மறு உபயோகபடுத்தலாம் .









மண் இல்லா விவசாயம் - மண் இல்லா தீவன வளர்ப்பு (Mann Illaa Theevana Valarppu) - Grow fodder with varsity little water and no soil / Hydroponics


ண் இல்லாமல் பயிர் வளருமா? வளராது என்பதே நம்மில் பலருக்கும் தோன்றும் கருத்து. ஆனால், மண் இல்லாமல் பயிர் வளரும் என்பதை அறிவியல் நிரூபித்துவிட்டது. ஆஹா, அப்படியா? அது நிச்சயம் செலவு அதிகம் பிடிக்கும் விஷயமாகத்தான் இருக்கும் என்று நினைப்போம்.


கேரள மாநிலம், கோட்டயம் செல்லும் வழியில் பலா என்ற சிறு ஊரின் அருகில் வசிக்கும் என் நண்பர் திரு.டோனி மைக்கேல் அவர்களைச் சந்தித்தபோது, அவர் அப்போதுதான் மண் இல்லா தீவன அமைப்பை நிறுவியிருந்தார். தினமும் 100 கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்யும் அந்த இயந்திரத்தின் அப்போதைய (2010-ல்) விலை சுமார் ரூபாய் 6.5 லட்சம். ஏகப்பட்ட கலர் கலர் பட்டன்கள், மீட்டர்கள் என பார்க்கவே பயமுறுத்தின.
சரி, வந்துவிட்டோம். பத்திரிகைக்கு ஒரு பேட்டி எடுக்கலாமே என்று நினைத்து அவரைப் பேட்டி கண்டு, ஒரு வேளாண்மைப் பத்திரிகையில் வெளியிட்டதில், வாசகர்களிடையே அமோக வரவேற்பு. அதற்குப் பின், பல முறை பல தரப்பிலான நண்பர்களுடன் அவரது பண்ணையைப் பார்க்க வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
ரூ.6.5 லட்சம் முதலீட்டில், ஒவ்வொரு முறையும் 100 கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்யக்கூடிய இந்த முறையை, சாமானிய கால்நடை வளர்ப்பவர்களும் எளிய முறையில் பயன்படுத்த முடியுமா என்று பலமுறை யோசித்தேன். அதுபற்றி நண்பர் டோனியிடம் கேட்டேன். முடியாது, நிச்சயம் முடியாது, முடியவே முடியாது என்று அவர் உறுதியுடன் சொன்னபோது, மண் இல்லா தீவனப் பயிர் வளர்ப்பை எளிய முறையில் செய்ய வேண்டும் என்ற உறுதியை என் மனத்தில் விதைத்துக்கொண்டேன்.
2013-ல் கடுமையான தீவன பற்றாக்குறை. மேல் மழையில்லை. கிணறு வறண்டுபோகும் நிலை. போதுமான உலர் தீவனமும் இருப்பு இல்லை. பசுக்கள் தீவனத்துக்கு ஏங்கி இளைத்துவிடும்முன் விற்றுவிடலாம் என முடிவு செய்து பசுக்களை விற்கத் தொடங்கினேன். தலைமுறை தலைமுறையாக மாடு வளர்க்கும் நாம், தீவன விஷயத்தில் எந்த இடத்தில் தோற்றோம் என ஆராய்ந்தேன். கவனக் குறைவு, சரியான திட்டமிடல் இல்லாதது, தீவன சேமிப்பில் அக்கறை காட்டாதது, இயற்கையின் சதி என பல காரணங்கள் வரிசை கட்டி நின்றன.
எல்லாப் பசுக்களையும் விற்க முடிந்ததா என்றால் அதுவும் இல்லை. இரண்டு சோனிப் பசுக்கள், ஒரு வண்டிக் காளையை விற்க முடியவில்லை. என் வீட்டோடு தங்கிவிட்ட இந்த மூன்று வாயில்லா ஜீவன்களை காப்பாற்றியே ஆக வேண்டிய கட்டாயச் சூழல். போனதெல்லாம் போகட்டும். இனி இருக்கும் ஜீவன்களை காப்பாற்ற என்ன செய்யலாம் என யோசிக்கும்போது, ஹைட்ரோஃபோனிக்ஸ் என அழைக்கப்படும் மண் இல்லா தீவன வளர்ப்பை எளிய முறையில் செய்து பார்க்கலாமே என்று தோன்றியது.
மனத்தில் ஏற்கெனவே விதைக்கப்பட்டிருந்த உறுதியுடன், இன்டர்நெட்டில் தகவல்களைத் தேடினேன். கென்யாவில் ஒருவர் எளிய முறையில் மண் இல்லா தீவன உற்பத்தியைச் செய்வதாகத் தெரிந்தது. அவருடன் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு பேசியதில், தெளிவான பதில் கிடைக்கவில்லை. 2000 அமெரிக்க டாலர் (சுமார் ஒரு லட்சத்துக்கு 25 ஆயிரம் ரூபாய்) அனுப்பினால், தொழில் ரகசியத்தைச் சொல்கிறேன் என்றார். அவ்வளவு பெரிய தொகையை யாரோ கண்ணுக்குத் தெரியாத ஆப்பிரிக்கருக்குக் கொடுப்பதைவிட, அந்தப் பணத்தை வைத்து நாமே முயற்சிக்கலாமே என்று முடிவு செய்தேன். இரண்டு மாதங்களுக்கும் மேலாக, மண் இல்லா தீவன வளர்ப்பு முறையைப் பற்றிப் படித்தேன். குறிப்புகள் எடுத்தேன். கால்நடை தகவல் மற்றும் விற்பனை மையம் எனப்படும் முகநூல் குழுவைச் சேர்ந்த நண்பர்களும் செய்திகள் சேகரித்துக் கொடுத்தனர்.
ஒரு சுபயோக சுபதினத்தில் எனது முயற்சியைத் தொடங்கினேன். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியைத் தரும் என்பது மண் இல்லா தீவன வளர்ப்பில் நான் கண்ட உண்மை. முதல் தட்டு தீவனம் உற்பத்தி செய்த நாளில் என் மனத்தில் தோன்றிய உணர்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. நான் என்ன செய்தேன், என்னென்ன பிரச்னைகளை எதிர்கொண்டேன், எது சரி, எது தவறு? கடைசியில் வெற்றியை ருசித்தது எப்படி...
உங்களுக்கும் சொல்கிறேன்.
இந்த மண் இல்லா தீவன வளர்ப்புக்கு...
      * குறைந்த இடம்
      * குறைந்த தண்ணீர்
      * குறைந்த நேர கவனிப்பு
      * குறைந்த உடல் உழைப்பு
      * குறைந்த முதலீடு
      * பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, ரசாயன உரம் எதுவும்
        தேவையில்லை.
இப்படி குறைவாகப் பயன்படுத்தி, குறைந்த இடத்தில் அதிக அளவில் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பதுதான் இதில் உள்ள வெற்றியே. இது எல்லாவற்றுக்கும் ஒன்றே ஒன்றுதான் வேண்டும். அது, விடாமுயற்சி.
எங்கள் வீட்டு மாட்டுக்கொட்டகையில் 10 * 8 அடிக்கு ஓர் இடம் இருந்தது. ஓடு வேய்ந்த இடம். ஓட்டுக் கூரை தூசி கீழே விழாமல் இருக்க, சீலிங்குக்குப் பச்சை நிழல் வலை அடித்தேன். உள்ளே வெளிச்சம் வர வேண்டும், ஆனால் உள்ளே இருக்கும் குளிர் நிலையும், காற்றின் ஈரப்பதமும் மாறக்கூடாது என்பதற்காக ஒளி ஊடுறுவும் கனமான பாலிதீன் ஷீட்டால் சுற்றிலும் மூடி, உள்ளே சென்று வர ஒரு கதவு. இதுதான் மண் இல்லா தீவன வளர்ப்புக்காக நான் அமைத்துக்கொண்ட அறையின் அமைப்பு.

Tuesday, September 8, 2015

நாட்டுக் கோழி குஞ்சு பராமரிப்பு (Naatu Koli Kunchu Paraa Marippu) - Country chicken hatchery maintenance

புதிதாக வாங்கி வரப்படும் குஞ்சுகள் அனைத்தும் ஒரே மூலையில் ஒடுங்கினார் போல காணப்படுகிறதே அதை தவிர்க்க என்ன செய்யலாம்?

குஞ்சுகள் ஒன்றோடு ஓன்று ஒட்டினாற்போல் ஒன்றின் மீது ஓன்று எரிகொள்ளும் அதனால் அடியில் சிக்கிகொள்ளும் குஞ்சுகள் உயிர் இலக்க நேரிடும் அதை தவிர்க்க இதோ சில அனுபவமிக்க வழிமுறைகள்

1. எல்லா குஞ்சுகளையும் ஒரே இடத்தில் முத்தமாக விடக்கூடாது, 500 குஞ்சுகள் வாங்கினால் 500 குஞ்சுகளையும் ஒன்றாக விடக்கூடாது.

2. அவற்றை 50 குஞ்சுகள் வீதம் 10 பகுதியாக பிரிக்க வேண்டும்.


3. சுமார் 5 மீட்டர் நீளமுள்ள இரும்பு தகரத்தை( 5 மீட்டர் கு மேலும் இருக்கலாம், உயரம் 2 அடி ) வட்டமாக செய்து அந்த வட்டத்திற்குள் 50 குஞ்சுகளாக விடவும் அதன் குறுக்கு வாக்கில் 2 அல்லது 3 100 வாட்ஸ் pulb எரிய விடவும், தீவனத்தை ஒரே இடத்தில் போடாமல் அடியில் பிளாஸ்டிக் பை விரித்து அதன்மேல் காகித பேப்பர் விரித்து அதன்மேல் தீனவனத்தை பரவலாக இடவேண்டும், ஒரே இடத்தில் தீவனமிட்டால் குஞ்சுகளால் ஒன்றன்மேல் ஓன்று ஏறத்தான் செயும் அதனால் அடியில் சிக்கும் குஞ்சுகள் இறக்க வாய்ப்பு உள்ளது.


4. இவ்வாறாக 500 குஞ்சு வாங்கினால் குறிப்பு எண் 3 இல் சொன்னது போல் 50 குஞ்சுகள் வீதன் 10 பகுதியாக பிரித்து 3 இல் சொன்னது போல் நடைமுறை படுத்துங்கள்.

5. தரையில் பிளாஸ்டிக் பை விரித்து அதன்மேல் காகித பேப்பர் விரித்து அதன்மேல் தீனவனத்தை பரவலாக இடவேண்டும், குஞ்சுகள் எச்சமிடுவத்தால் காலை, மாலை இரண்டு நேரமும் காகித பேப்பரை மாற்ற வேண்டும்.

6. வெட்பம் குறைவான நேரங்களில் , மாலை , இரவு, பனி நேரங்களில் பண்ணையை மூடி வைப்பது சிறந்தது.

7. மின்சாரம் வசதி இல்லாதவர்கள் ஒரு பானை இல் தீ மூட்டி(மர கரி கட்டடைகளை நெருப்பாக்கி) அடியில் செங்கல் வைத்து அதன் மேல் பானையை குஞ்சுகளுக்கு நடுவில் வைத்து வெட்ப அளவுகோல் கொண்டும் தட்ப வெட்ப நிலையை சரிசெய்யலாம்.


8. முதல் இரண்டு வாரத்திற்கு நீரை சுடவைத்து அதை முழுவதும் ஆற வைத்து கொடுக்கவும்.

9. முதல் ஒரு வாரத்திற்கு குஞ்சுகளை அவ்வப்போது ஓட்டி விட வேண்டும் அப்போதுதான் அது ஓட பழகி அதனால் தீவனமும் அதிகம் சாப்பிடும்.

10 முதல் இரண்டு வாரதிக்கு கொடுக்கப்படும் தீவனம் தவடுபோல் சிறுசிறு தூளாக இருக்க வேண்டும், பெரும் துகளாக இருந்தால் அவை குஞ்சீன் தொண்டையில் மாட்டி கொள்ள வைப்பு உள்ளது.

நல்வழி காட்டும் நாட்டுக்கோழி வளர்ப்பு - கோழிக்குஞ்சு உற்பத்தி மூலமே நல்ல வருமானம் - Country Chicken Farming

கால்நடை
''நாட்டுக்கோழியை, மேயவிட்டுத்தான் வளக்கணும். பிராய்லர் கோழி மாதிரி கொட்டகைக்குள்ள அடைச்சு வெச்சு கம்பெனி தீவனத்தைக் கொடுத்தா... அதை நாட்டுக்கோழினு சொல்ல முடியாது. 'நாட்டு பிராய்லர் கோழி'னு வேணும்னா சொல்லிக்கலாம். அதேசமயம்... மேய்ச்சல் முறையில அதிகளவு கோழிகளைப் பராமரிக்க முடியாதுங்கறதும் உண்மை. அதனால... அடைப்புடன் கூடிய நடமாடும் முறையில (கொட்டில் மற்றும் மேய்ச்சல் முறை) வளர்க்கும்போது, நாட்டுக்கோழிகளைத் தரம் குறையாமலும் ஆரோக்கியமாவும் வளர்க்க முடியுது'' என்று உற்சாகமாக தன் அனுபவத்தைச் சொல்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், திருமங்கலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த துரைசாமி.



கோழிகளுக்குத் தீவனம் போட்டபடியே நம்மிடம் பேச்சைத் தொடர்ந்த துரைசாமி... ''நான் 5 ஏக்கர்ல நெல் விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்கேன். அதோட கொட்டில் மற்றும் மேய்ச்சல் முறையில ஆடுகளை வளர்க்கலாம்னு வலை வேலியோட கொட்டகை அமைச்சேன். ஆனா, ஆடு வளர்ப்பு எனக்கு சரிப்பட்டு வரல. அதனால, அதை விட்டுட்டேன். சும்மா கிடக்குற கொட்டகையில உருப்படியா ஏதாவது செய்யலாமேனு யோசிப்ப கிடைச்சதுதான்... கோழி வளர்ப்பு! ஆட்டுக்கொட்டகையில் தோன்றிய யோசனை !

நாமக்கல்ல இருக்கற நாட்டுக்கோழிப் பண்ணையில, ஒரு குஞ்சு 35 ரூபாய்னு ஒரு நாள் வயசுள்ள 200 கோழிக்குஞ்சுகள வாங்கிக்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சேன். என்கிட்ட இருந்த கொட்டகையில 100 கோழிகளத்தான் வளர்க்க முடியும். அதனால மூணு மாசத்துல குஞ்சுகள் கொஞ்சம் பெருசானதும் 90 பெட்டை, 10 சேவல்களை மட்டும் வெச்சுக்கிட்டு மிச்சத்தை வித்துட்டேன். குஞ்சுகளை வாங்கிட்டுப் போனவங்க அடிக்கடி வந்து, 'கோழிக்குஞ்சு வேணும்’னு கேட்டாங்க. அப்போதான் குஞ்சுகளுக்கு நிறைய தேவை இருக்குதுனு புரிஞ்சுச்சு. அதுக்கப்பறம் கோழிக்குஞ்சு உற்பத்தியில தீவிரமா இறங்கிட்டேன்.


வாரத்துக்கு 75 குஞ்சுகள் !
பொதுவா, அஞ்சாறு மாச வயசுக்கு மேல ஒண்ணொண்ணா முட்டை போட ஆரம்பிச்சு... 9-ம் மாசத்துல இருந்து முட்டைகள் அதிகளவுல கிடைக்க ஆரம்பிச்சுது. முட்டைகளை இன்குபேட்டர் மூலமா பொரிச்சு விற்பனை பண்றேன். முட்டைகளைத் தனியா விக்கறதில்லை. வாரத்துக்கு அம்பதுல இருந்து 100 குஞ்சுகள் வரைக்கும் உற்பத்தியாகும். ஏதாவது காரணத்தால இறந்தது போக, சராசரியா வாரத்துக்கு 75 குஞ்சுகள வித்துக்கிட்டிருக்கேன்.

மூணு வயசானதுக்கப்பறம் முட்டை உற்பத்தி குறைஞ்சுடும். அதனால மூணு வருஷத்துக்கு ஒரு தடவை தாய்க்கோழிகளை மாத்திடணும். என்கிட்ட உற்பத்தியாகுற குஞ்சுகளையே தனியா வளர்த்து, தாய்க்கோழிகளா வெச்சுக்குவேன்'' என்ற துரைசாமி, தீவன மேலாண்மை பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

செலவைக் குறைக்கும் பசுந்தீவனம் !
ஒரு கோழிக்கு ஒரு நாளைக்கு 120 கிராம்ங்கிற கணக்குல, 100 கோழிகளுக்கும் சேர்த்து தினமும் 12 கிலோ அடர்தீவனம் தேவைப்படும். நான் பசுந்தீவனத்தை அதிகமா கொடுத்து, அடர்தீவனச் செலவைக் குறைச்சுக்கிறேன். 100 கோழிகளுக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு 4 கிலோ அடர்தீவனம்தான் கொடுக்கிறேன். எருமைப்புல், கிளரிசீடியா, வாதமடக்கி, முள்முருங்கை, அசோலா, குதிரைவாலினு கிடைக்கற தீவனங்கள 15 கிலோ அளவுக்கு கொடுக்கிறேன்.

அதுவுமில்லாம அடர்தீவனத்துக்காகவும் நான் அதிகமா செலவழிக்கறதில்ல. 3 கிலோ சோள மாவு, 800 கிராம் நொய் குருணை, 100 கிராம் கம்பு, 100 கிராம் கேழ்வரகு இதை மட்டும் வெச்சு 4 கிலோ தீவனம் தயாரிச்சுடுவேன். இதுக்கு 60 ரூபாய்தான் செலவாகுது.
காய்கறி கடைகள்ல இலவசமா கிடைக்கக்கூடிய கழிவுகளையும் அப்பப்போ எடுத்துட்டு வந்து கோழிகளுக்கு கொடுக்கிறேன். இதையெல்லாம் கோழிகள் விரும்பி சாப்பிடறதால நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிச்சு, ஆரோக்கியமா இருக்கு. பெருசா நோய்களும் வர்றதில்லை.


பேன்களைத் துரத்தும் மண்குளியல் !
நாட்டுக்கோழிகளுக்கு இயற்கையாகவே மண் குளியல் செய்யுற பழக்கம் உண்டு. றெக்கையை விரிச்சு வெயில்ல காய வெச்சு மண்ணுல போட்டு அடிச்சுக்குறதால தேவையில்லாத ரோமங்கள், பேன்கள்லாம் தானாவே உதிர்ந்துடும். கொட்டில்ல அடைச்சு வெச்சா... மண்குளியலுக்கு வாய்ப்பில்லாமப் போயிடும். கொட்டில் மற்றும் மேய்ச்சல் முறையில கோழிகளுக்கு சுதந்திரமா மேயுற உணர்வும் இருக்கறதால, இயற்கையாவே கோழிகள் ஆரோக்கியமா வளருது. இந்த முறையில எச்சங்களால பரவுற நோய்கள் இந்த முறையில் குறைவா இருக்கு.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னான்னா... கொட்டில்ல அடைச்சு வெக்கிறப்போ கோழிகளுக்குள்ள சண்டை வந்து ஒண்ணை ஒண்ணு கொத்திக்கும். அதுக்காக அலகை வெட்டி விடுவாங்க. ஆனா, கொட்டில் மற்றும் மேய்ச்சல் முறையில இந்தப் பிரச்னை இருக்கறதில்ல. கோழிகளுக்குள்ள சண்டை வந்துச்சுன்னா, பறந்து போய் தப்பிச்சுக்கும். நாட்டுக்கோழிகளோட அலகை வெட்டிவிட்டா, அதுக்கு சந்தையில விலை கிடைக்காதுங்கறதையும் மனசுல வெச்சுக்கணும்'' என்ற துரைசாமி நிறைவாக,

''நான் உற்பத்தி பண்ற குஞ்சுகள பெரும்பாலும் ஒரு நாள் வயசுலயே வித்துடுவேன். ஒரு குஞ்சு 35 ரூபாய்னு வாரத்துக்கு 75 குஞ்சுகள் மூலமா 2,625 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல தீவனச்செலவு, பராமரிப்பு எல்லாம் போக வாரத்துக்கு 2,000 ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்குது. நானே பராமரிச்சுக்குறதால பெரிய அளவுல செலவில்லை. அதனால விவசாயத்தோட சேர்த்து நான் மட்டுமே பாத்துக்குற அளவுக்கு 100 கோழிகளை மட்டும் வெச்சுக்கிட்டிருக்கேன்'' என்றார், உற்சாகமாக.

நாட்டுக் கோழி தீவன கலவை


தீவன கலவைக்கு (100 கிலோ கிராம்) தேவையான மூலப்பொருட்களும் அளவுகளும்

1 மக்காச்சோளம் 40 கிலோ

2 சோளம் 7 கிலோ

3 அறிசிகுருணை 15 கிலோ

4 சோயா புண்ணாக்கு 8 கிலோ

5 மீன் தூள் 8 கிலோ

6 கோதுமை 5 கிலோ

7 அரிசித் தவிடு 12.5 கிலோ

8 தாது உப்புக் கலவை 2.5 கிலோ

9 கிளிஞ்சல் 2 கிலோ

மொத்தம் 100 கிலோ


புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளுக்கு புரத சத்து மிகக் குறைவாகவே கிடைக்கிறது. இதனை ஈடுசெய்வதற்கு புரதச்சத்து நிறைந்த பானைக் கரையானும், அசோலாவும் கொடுத்து வளர்க்கும் பொழுது தீவன செலவுவெகுவாக குறைய வாய்ப்புள்ளது. சிறு வெங்காயம் மற்றும் கீரைகளை நறுக்கி நாட்டுக் கோழிகளுக்கு உணவாக கொடுக்கலாம்.

செயற்கை முறையில் நாட்டுக் கோழி முட்டைகளை குஞ்சு பொரிக்கச் செய்தல் (Seyarkkai Murayil Naatu Kozhi Kunchu Porithal) - Artificial Incubation of country chicken eggs and brooding



1. கிராமப் பகுதிகளில் எளிதாக கிடைக்கும் அட்டைப்பெட்டி அல்லது சாந்துச்சட்டி அல்லது பழைய மண்பானை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து அதனுள் பாதி அளவிற்கு அரிசித் தவிடு அல்லது மணலை நிரப்பவும்.

2. இவ்வாறு நிரப்பப்பட்ட அரிசித் தவிடு அல்லது மணலின் மீது குஞ்சு பொரிக்க வேண்டிய கோழி முட்டைகளை வைக்கவும்.

3. வட்டத்தட்டினுள் பொருத்தப்பட்ட 15 வாட் முதல் 40 வாட் வரையிலான மின்சார பல்பினை தவிடு அல்லது மணலின் மீது பரப்பப்பட்ட முட்டைகளின் மேல் சீரான வெப்பம் பரவத்தக்க வகையில் தொங்கவிடவும்.


4. 100 டிகிரி பார்ஹீன் அளவு சீரான வெப்பம் தரத்தக்க வகையில் மின்சார பல்புக்கும், கோழி முட்டைகளுக்கும் இடையே உள்ள தூரத்தை அவ்வப்போது தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்ளவும்.

5. உடல் வெப்ப நிலையைக் கணக்கிடக்கூடிய வெப்பநிலைமானியை பயன்படுத்தி கோழி முட்டையின் மீது சீரான வெப்பம் பரவச் செய்யும் வகையில் கண்காணித்துக்கொள்ளலாம்.


6. முட்டைகளை முதல் நாள் முதல் 17வது நாள் வரை ஒரு நாளைக்கு 3 முறை வீதம் அதாவது 8 மணி நேரத்திற்கு ஒருமுறை திருப்பி விடவேண்டும்.

7. 18வது நாள் முட்டைகளைத் திருப்பி விடுவதை நிறுத்திவிட வேண்டும்.

8. 18வது நாள் முதல் ஈரப்பதம் 80% வரை தேவைப்படுவதால் வெது வெதுப்பான நீரில் நனைத்த பருத்தி துணியை முட்டைகளின்மீது 1 நிமிடம் பரப்பி விடவும். இவ்வாறு 18 வது நாள் முதல் 22வது நாள் வரை ஒரு நாளைக்கு 3 முறை செய்தால் குஞ்சு பொரிப்புத் திறன் நன்கு இருக்கும்.


9. மின்சாரத் தடை ஏற்பட்டு வெகு நேரம் ஆகிவிட்டால் சற்றே சூடு செய்யப்பட்ட தவிட்டின் மூலம் முட்டைகளை மூடி வைத்து விடவும்.

10. இந்த எளிய முறையை வாத்து, வான் கோழி, கினிக் கோழி மற்றும் காடை முட்டைகளை பொரிக்கச் செய்யவும் பயன்படுத்தலாம்.

கோழிபண்ணை சந்தைப்படுத்த அலோசனைகளுடன் தொழிற்களம் பார்வை (Koli Pannai Santhai Padutha Aalosanai) - Business and Marketing Plan for poultry farm




கிராமத்து வீடுகளின் முற்றங்களில் சுற்றித் திரிந்த நாட்டுக்கோழிகளையும் இன்று ப்ரீட் செய்து பண்ணையில் வளர்த்து அதிக அளவில் இலாபத்தை பெற விவசாயிகளுக்கு ஒரு மாற்றுத் துணை தொழிலாக இருக்கிறது பண்ணை கோழி வளர்ப்பு.

பண்ணைக்கோழி வளர்ப்பு ::
நிச்சயமாக கோழிப்பண்ணை என்பது ஒரு  நல்ல இலாபகரமாண தொழில்தான். காரணம் கோழியின் கறி, முட்டை மட்டுமல்ல அதன் கழிவுகளும் கூட நல்ல விலைக்கு விற்பனைசெய்துவிடலாம் என்பதே ஆகும்.

    நல்ல சீதோசனமும், ஆலோசனைக்கு நல்ல மருத்துவரையும் உங்கள் பக்கம் ஒத்துழைக்கும்படி அமைந்துவிட்டால் அடுத்த 90 நாட்களில் நீங்கள் இலட்சாதிபதியாக மாறிவிடுவீர்கள்.. ஆம், கோழி வளர்ப்பு நல்ல இலாபம் தரக்கூடியது தான்.

    முதலில் புதிதாக கோழிப்பண்ணை அமைக்க எண்ணம் உள்ளவர்கள் அடிப்படையில் அமைந்த சில விசயங்களை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

கோழி வளர்ப்பு கறிக்கோழி (பிராய்லர்), நாட்டுக்கோழி, முட்டைக்கோழி என தனித்தனி வளர்ப்பு முறை உள்ளது. இதில் உங்களுக்கு ஏற்புடையது எது என்பதை உங்கள் முதலீட்டு தொகையை வைத்து முடிவு செய்யுங்கள்.


கோழிவளர்ப்பில் கறிக்காக வளர்க்கப்படுபவை, முட்டைக்காக வளர்க்கப்படுபவை என்று இரு வேறு பண்ணைகள் உண்டு.

பெறும்பாலும் பலரும் கறிக்கோழி வளர்ப்பதையே குறைந்தம் முதலீடு என்பதற்காக தேர்வு செய்கின் றனர்.

காரணம், முட்டைக்காக பண்ணை அமைக்க மற்றும் பாதுகாக்க செய்யப்படும் செலவுகள் கறிக்கோழி பண்ணைகள் அமைப்பதை காட்டிலும் கொஞ்சம் கூடுதல் செலவு பிடிக்கும் என்பதால் கொஞ்சம் அனுபவம் பெற்ற பெரிய நிறுவனங்களே முட்டைக்கோழி வளர்ப்பில் அதிக இலாபம் பார்க்கின்றன.

முட்டைக்கோழி வளர்ப்பு :
கூண்டு முறையில் வளர்க்கப்படும் முட்டைகோழி வளர்ப்பில் முதல் 10 வாரங்கள்  செட்டில் வளர்க்கப்படும். ( கொட்டகை போன்ற அமைப்பு ) பிறகு செல்களில் அடைத்து முட்டையிடும் பருவத்தில் வாரம் ஆறு முட்டை வீதமாக கிட்டத்தட்ட 52 வாரங்களுக்கு ஒவ்வொரு கோழியும் முட்டையிடும். பருவம் முடிந்ததும் அந்த கோழிகள் கறிக்காக கொல்லப்பட்டு விடும்.


இவ்வாறு, முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகள் இடும் முட்டை இருவிதமாக வளர்க்கப்படும். நல்ல உயர் ரக சேவல்களிலிருந்து  செமன் எடுக்கப்பட்டு அதை கோழிகளுக்குள் இன்செமனேசன் செய்து குஞ்சு பொறிக்கத் தகுந்த முட்டைகள் ஒருபுறம் உற்பத்தி செய்யப்படும். இன்செமனேசன் செய்யாத முட்டைகள் தனியாக விற்பனைக்கு அனுப்படுகிறது.

அவ்வாறு இன்செமனேசன் செய்யப்பட்ட முட்டைகள் பண்ணைகளில் தனியே தரம் பிரிக்கப்பட்டும்  இயந்திரத்தின் உதவியுடன் குஞ்சுகளாக பொறிக்கப்பட்டு தனியே சிறு பண்ணைகளுக்கு "கோழி  வளர்ப்பிற்க்காக விற்பனை செய்யப்படுகிறது."

இவ்வாறான பெரிய நிறுவனங்கள் தான் பயனீர், சுகுணா, சாந்தி, எஸ்.ஆர்.எஸ் போன்றவைகள். 



      பொங்களூர், கோவை, பல்லடம் போன்ற தென்மாவட்டங்களில் அதிக அளவில் கோழிப் பண்ணைகள் உள்ளது. நாமக்கல் தமிழகத்தின் மிக முக்கியமான நகரமாக இருந்து வருகிறது. இங்கே முட்டை, கறிக்கோழிகளின் விலை தீர்மானிக்கப்படுகிறது.

Tuesday, September 1, 2015

வாழையைத் தாக்கும் காய்ப்பேன்

வாழைக்காய்களை இரண்டு வகையான காய்ப்பேன்கள் தாக்குகின்றன. 1. பூவைத் தாக்கும் பேன், 2. வாழைப்பழத்தோலில் காயம் ஏற்படுத்தும் பேன்.மிகச்சிறிய காய்களை பூப்பேன் தாக்குகிறது. சிறு காயங்களிலிருந்து சாற்றை உறிஞ்சுவதால் காய்களின் பரப்பில் சிறிய சிவப்புநிற புள்ளிகள் நாளடைவில் வளர்ந்து கறுப்பு நிற புள்ளிகளாக மாறிவிடும்.

பூ பேன் தாக்கும் ரகங்கள் – பூவன், நேந்திரன், கற்பூரவல்லி இரகங்களிலும், ரஸ்ட் காய்ப்பேன் சபா, மொந்தன், கற்பூரவல்லி, ரஸ்தாளி ஆகிய இரகங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பூ வெளிவந்தவுடன் மாலை நேரத்தில் குளோர்பைரிபாஸ் 20 உஇ மருந்தினை லிட்டருக்கு 2.5மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும். இதனை கடைசி சீப்பு வெளிவந்த 2-15 தினங்களுக்குள் தெளித்தல் அவசியம். ரஸ்ட் காய்ப்பேன் – காய்களின் மேற்தோலினை சுரண்டி சாற்றை உறிஞ்சுவதால் மற்றும் முட்டை இடுவதாலும் விரிசல் ஏற்பட்டது போன்ற காய்கள் காணப்படும்.
ஒருங்கிணைந்த கட்டுப்பாடு

  • வறட்சி நிலையாக குறைத்து போதுமான அளவு நீர்பாய்ச்சுவதால் இலைப்பேனைக் கட்டுப்படுத்தலாம்.
  • அனைத்து சீப்புகளும் வெளிவந்த உடனே வாழை ஆண் பூவை வெட்டி விடுதல் அவசியம்.
  • அல்லது பவேரிய பேசியானா 3மிலி, 100மிலி நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • மண்ணில் கார்போபியூரான் 20 கிராம் அளவில் மரத்திற்கு கீழ் இட்டு கட்டுப்படுத்தலாம்.
  • ஷபாலி புரோபைலீன் பை கொண்டு தாரினை முழுமையாக மூடிவிடலாம்.
  • குளோர்பைரிபாஸ் மருந்தினை 1 லிட்டர் நீருக்கு 2.5மிலி அளவில் பூ மற்றும் தாரில் தெளிக்கலாம்.
தகவல் : முனைவர் பா.பத்மநாபன் மற்றும் எம்.எம்.முஸ்தபா, தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சி-102.

1கிலோ ரூ.250-க்கு விற்பனையாகும் நாவல் பழம் - Indian Blackberry Fruit

நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை, விதை என அனைத்துமே மருத்துவக் குணங்கள் கொண்ட காரணத்தாலும், நாவல் மரங்கள் குறைந்து வருவதாலும், அதன் பழங்கள் தற்போது ஒரு கிலோ ரூ. 250-க்கு விற்பனை செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்படாதவர்கள் அரிதாகிவிட்ட நிலையில், நாவல் பழமும், விதைகளும் படிப்படியாக நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சிறந்த மருந்தாக அறியப்பட்டுள்ளதால், அவற்றின் மதிப்பு தற்போது பன்மடங்கு உயர்ந்துவிட்டது.
நீரிழிவு நோய் தவிர, பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும் குணமும், தொண்டைப் புண், தொண்டை அழற்சி போன்ற தொந்தரவுகளைப் போக்குவதற்கும் நாவல் மரப்பட்டைகள் உதவுகின்றன.
சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல், சிறுநீர்க்கட்டால் அவதிப்படுவோர் நாவல் பழங்களை பிழிந்து சாப்பிடுவதன் மூலம் குணமடைகின்றனர். நாவல் பழத்துக்கு சிறுநீர் பெருக்கம், பசியைத் தூண்டும் தன்மை உண்டு. மேலும், நாக்கு மற்றும் பல் ஈறுகளைச் சுத்தம் செய்யும் தன்மையும், குடல், இரைப்பை, இதயத்தின் தசைகளை வலுவாக்கும் குணமும் நாவல் பழத்துக்கு உள்ளது.
அதோடு, நாவல் பழச்சாற்றுக்கு நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குணமும், நாவல் மரத்தின் பட்டைக்கு நரம்பை பலப்படுத்தும் சக்தியும், மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணமாக்கும் சக்தியும் உண்டு. மேலும், ரத்தம் சுத்தப்படுத்துதலிலும் நாவல் பழம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அனைவராலும் மிகச் சாதாரணமாகக் கருதப்பட்ட நாவல் பழத்துக்கு இத்தகைய மருத்துவக் குணங்கள் உள்ளது என்ற விழிப்புணர்வு தற்போது அனைவருக்கும் ஏற்பட்டுள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்றார் இயற்கை விவசாயி ஜி.எஸ். தனபதி.
இதுகுறித்து புதுகை உழவர் சந்தை அருகே பழ வியாபாரம் செய்யும் பெண் கூறியது:
நாட்டு நாவல் மரங்களில் இருந்து ஆடிக்காற்றில் கீழே விழும் பழங்களைத்தான் கிராமங்களில் விற்று வந்தோம். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக நகர்ப்புறங்களில் நாவல் பழங்களுக்கு மிகுந்த முக்கியத்தும் கிடைத்துள்ளது. அதை வாங்குபவர்கள் சர்க்கரை நோய்க்கு மருந்தாகப் பயன்படுவதாகத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நாவல்பழம் உள்ளூரின் தேவையைப் பூர்த்தி செய்யமுடியாததால், ஆந்திர மாநிலத்திலிருந்து திருச்சி காந்தி சந்தைக்கு வரும் நாவல் பழங்களை வாங்கிவந்து விற்கிறோம். ஒரு கிலோ ரூ. 200-க்கு வாங்கி ரூ. 250-க்கு விற்க வேண்டியுள்ளது. எனினும், இதை வாங்கிச் செல்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்றார் அவர்.