Tuesday, November 11, 2014

நிலக்கடலை



பருவத்தே விதைத்திடல் பலனைக் கூட்டும். நிலக்கடலை விதைப்புக்குச் சிறந்த பருவம் ஜ¤ன் - ஜ¤லை மற்றும் டிசம்பர் - ஜனவரி மாதங்களே ஆகும்.



உயர் விளைச்சல் இரகங்கள்


உயர்விளைச்சல் இரகங்களைத் தேர்வு செய்து அவற்றில் விதை உற்பத்தி செய்வது நல்லது. ஏனெனில் அவைகள் அதிக உரமிடலைத் தாங்கும், குறைந்த வயதுடையவை. பூச்சி நோய் எதிர்ப்புத் திறன் உடையவை. அவற்றை பயிர் செய்து அதிக மகசூல் பெற்று அதிக லாபம் பெற முடியும்.

விளை நிலம் தேர்வு

• நல்ல வளமான செம்மண்பாங்கான காற்றோட்டமும் நல்ல வடிகால் வசதி உடைய நிலமாக இருக்க வேண்டும்.

• போரான் மற்றும் கால்சியம் (சுண்ணாம்புச்) சத்துக்கள் குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் தரமான நல்ல விதைகளைப் பெறமுடியும்.

விதைத் தேர்வு:- 18/64” அளவுள்ள (7.2 மி.மீ. வட்டமுள்ள) வட்டக்கண் சல்லடை கொண்டு சலித்து நல்ல பருமனுள்ள, நோய் தாக்காத பொருக்கு விதைகளையே விதைப்புக்காக பயன்படுத்த வேண்டும். உடைந்து போன, சுருங்கிய மற்றும் மிகவும் வற்றிப்போன நோய் தாக்கிய விதைகளை நீக்கிவிட வேண்டும்.

விதை அளவு (ஒரு ஏக்கருக்கு)

சிறிய பருப்பு விதைகள்

(டிஎம்வி2, 7 போன்ற இரகங்கள்) = 50-55 கிலோ

பெரிய பருப்பு விதைகள்

(ஜேஎல்24, விஆர்ஐ2) = 55-60 கிலோ


பயிர் விலகு தூரம்:- நிலக்கடலை முற்றிலும் தன் மகரந்தச் சேர்க்கை கொண்ட பயிராகும். விதைக்கப் பயிரிடப்படும் இரகத்தை மற்ற இரகங்கள் பயிரிடப்படும் நிலத்திலிருந்து 3 மீட்டருக்கு அப்பாலுள்ள நிலத்தில்தான் பயிரிடவேண்டும். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் முந்திய இரண்டு பருவங்களில் மற்ற இரக நிலக்கடலை பயிரிட்டிருக்கக் கூடாது.


விதை நேர்த்தி :-பயிர் நன்கு வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் நல்ல வகையில் அமையும் வண்ணம் விதைக்கும் செய்யப்படும் சில வழிமுறைகளே விதை நேர்த்தி ஆகும்.


நிலக்கடலையில் விதைமூலமும் மண்மூலமும் பரவும் வேர் அழுகல் தண்டு அழுகல் மற்றும் இலைப்புள்ளி நோய்களைக் கட்டுப்படுத்தவும் பயிர் எண்ணிக்கையைச் சீராகப் பராமரிக்கவும் இராசயன பூசணக் கொல்லி அல்லது உயிரியல் பூஞ்சாணக் கொல்லி அல்லது உயிரியல் பூஞ்சாண மருந்தான டிரைக்கோடெர்மா விரிடியைக் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். காற்றில் கரைந்துள்ள நைட்ரஜன் சத்தை பயிருக்கு அளிக்க டிஎன்ஏயூ14 ரைசோபியம் என்ற நுண்ணுயிரைக் கொண்டும் விதைக்கு விதை நேர்த்தி செய்து பின்னர் விதைக்க வேண்டும்.


பூசணக் கொல்லி விதை நேர்த்தி


ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திராம் மருந்தை கலந்து விதை நேர்த்தி செய்யவும். விதை நேர்த்தி செய்த விதைகளை குறைந்த பட்சம் 24 மணி நேரம் வைத்திருந்து விதைப்பது நல்லது.


பூஞ்சாண விதை நேர்த்தி


டிரைக்கோ டெர்மா விரிடி என்ற உயிரியல் பூஞ்சாணக் கொல்லியை ஒரு கிலோ விதைப்பருப்புக்கு 4 கிராம் என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். விதையை விதைப்பிற்கு முன் ஈரப்படுத்தி பின் பூஞ்சாணத்தை அதன் மீது தூவி கலக்க வேண்டும்.

நிலம் தயாரித்தல்

விதை உற்பத்தி செய்வதாகத் தேர்ந்தெடுத்த நிலத்தை நான்கைந்து முறை நன்கு உழவு செய்து கட்டிகளை உடைத்து புழுதிபட தயார் செய்ய வேண்டும். அகல உழுவதைவிட ஆழ உழவு செய்வது சாலச்சிறந்தது. கடைசி உழவிற்கு முன் ஒரு ஏக்கருக்கு 5 டன் (10 வண்டி) மக்கிய தொழு உரம் இடவேண்டும். நிலத்தை உழுது தயார் செய்த பின்னர் அதை விதைப்பதற்கு ஏற்றவாறு மண்ணின் தன்மை மற்றும் நீர் பிடிப்பு ஆகியவற்றைப் பொருத்து பாத்திகளாகவோ (அல்லது) பார்களாகவோ அமைத்துக் கொள்ளலாம்.

பயிர் இடைவெளி

விதைக்கும் போது விதைக்கு விதை இடைவெளி விட்டு விதைப்பது மிக முக்கியமாகும். விதை விதைக்கும் போது வரிசைக்கு வரிசை ஒரு அடியும் (30 செ.மீ), செடிக்குச் செடி 15 செ.மீ. இடைவெளி இருக்குமாறு விதைக்க வேண்டும். விதைக்கப்படும் விதை 4 செ.மீ ஆழத்திற்கும் கீழே சென்று விடக்கூடாது.

பயிர் எண்ணிக்கை பராமரித்தல்

நிலக்கடலையில் பயிர் எண்ணிக்கையை சீராகப் பராமரிப்பதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும். செடி எண்ணிக்கையைப் பராமரிக்க, கீழ்க்காணும் உத்திகளை பின்பற்ற வேண்டும்.

• தேவையான அளவு விதைப்பருப்பைப் பயன்படுத்த வேண்டும்.

• தூய்மையான, நன்கு முற்றிய பருமனான பொருக்கு விதைகளை பயன்படுத்த வேண்டும்.

• விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

• முளைகட்டுதல் முறையினை பின்பற்றிட வேண்டும்.

• நிலத்தைத் தயார் செய்யும்போது தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

• விதைப்பில் நன்கு அனுபவமும் பயிற்சியும் பெற்ற நபர்களைக் கொண்டு சரியான இடைவெளி கொடுத்து விதைக்க வேண்டும்.

மேற்கூறிய முறைகளைக் கையாண்டு இடப்படும் உரம் வீணாகாமல் தடுத்து நன்கு பயன்படுத்தி செடிகளின் எண்ணிக்கை குறையாது பராமரித்து அதிக மகசூல் பெறலாம்.

உர நிர்வாகம் :- பயிர் செழித்து வளர்வதற்கும் பயிர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் தவிர்க்க, வேர் வளர்ச்சிக்கும், பூக்கள் அதிகரிக்க மற்றும் வறட்சி, பூச்சி நோய்களைத் தாங்கி வளர்ந்து அதிக மகசூல் பெறுவதற்கு நிலக்கடலையில் ஒருங்கிணைந்த உர நிர்வாகம் செய்வது மிக அவசியமாகும்.

தொழு உரம் : ஒரு ஏக்கருக்கு 5 டன் நன்கு மக்கிய தொழு உரம் அல்லது கம்போஸ்ட் உரத்தினை இட்டு நிலத்தினை 4-5 தடவை நன்கு உழவு செய்ய வேண்டும்.

இரசாயன உரங்கள்

பேரூட்ட மற்றும் நுண்ணுயிர்ச் சத்துக்கள் இட்ட மகசூலை அதிகரிக்கலாம்.

• தழைச்சத்து உரங்கள் பயிர் வளர்ச்சிக்கு உதவுகின்றன

• மணிச்சத்து உரங்கள் வேர் வளர்ச்சிக்கும் காய்கள் உருவாகவும்

• சாம்பல் சத்து உரங்கள் தரமான மகசூலுக்கும் பூச்சி, நோய், வறட்சி தாங்கிடவும்

• நுண்ணூட்ட சத்துக்கள் பயிர் குறைபாடு இன்றி வளர்ந்து மற்ற சத்துக்களை எடுக்க உதவுகின்றன.

பேரூட்ட ச் சத்துக்களான தழை, மணி, சாம்பல் சத்து உரங்களை அடியுரமாக இடவேண்டும்.

உர அளவு (ஒரு ஏக்கருக்கு - கிலோவில்)













மேலும் போராக்ஸ் 4 கிலோ மற்றும் நுண்ணுயிர் கலவை 5 கிலோவும் இடவேண்டும். போராக்ஸ் மற்றும் நுண்ணூட்டக் கலவையை விதைப்பு முடிந்தவுடன் நிலத்தின் மேல் இடவேண்டும்.


களை நிர்வாகத்தின் முக்கியத்துவம்


நிலக்கடலையில் அதிக மகசூல் பெற களை கட்டுப்பாடு மிகவும் அவசியம். நிலத்தில் உள்ள பயிர்சத்து வீணாகாமல் தவிர்த்திடவும், களைகள் மூலம் மண், ஈரம் வீரயமாவதைத் தவிர்த்திடவும், பயிர்களுக்கு போதிய சூரிய ஒளி கிடைத்திட மற்றும் பூச்சி நோய்கள் பரவாமல் தடுத்து அதிக விளைச்சல் பெறுவதற்கு களை கட்டுப்பாடு மிகவும் அவசியமாகிறது. விதைத்த 45 நாட்களுக்குள் களைகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். ஏனெனில், களை நிர்வாகம் பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம்.


விதைப்புக்குப் பின் களைக் கொல்லி பயன்படுத்துதல்

ஒரு ஏக்கருக்கு புளுகுளோரலின் களைக் கொல்லியை 800 மில்லி என்ற அளவில் விதைத்த 3 நாட்களுக்குள் நிலத்தில் அடித்து களைகளைக் கட்டுப்படுத்தலாம். மணலுடன் கலந்தும் தூவலாம். கைத் தெளிப்பான் கொண்டும் தெளிக்கலாம். கைத் தெளிப்பான் கொண்டு தெளிக்கும்போது அகல வாய் தெளிப்பு முனை பயன்படுத்தி தெளிக்க வேண்டும். 

பயன்கள்

• களைக்கொல்லி அடிப்பதன் மூலம் முதல் களை எடுக்க வேண்டியதில்லை.

• களை எடுப்பதற்கு குறைந்த ஆட்களைப் பயன்படுத்தினால் போதுமானது.

• பயிருக்கு இடப்பட்ட இயற்கை/செயற்கை உரங்களின் சேதாரம் தவிர்க்கப்பட்டு விதை உற்பத்தி செலவு குறையும்.

• பயிர்களின் வளர்ச்சி வேகம் கூடி மகசூல் அதிகரிக்கவும்.

• மேலும் களைக்கொல்லி பயன்படுத்துவதன் மூலம் வேலை ஆட்கள் பற்றாக்குறையைச் சமாளித்து விடலாம்.

முக்கிய பின்செய் நேர்த்தி :மண் அணைத்தல்

நிலக்கடலையில் இது ஒரு முக்கிய பின்செய் நேர்த்தி ஆகும். விதைத்த 45ம் நாள் மண் அணைக்க வேண்டும். அதாவது மண்ணை எடுத்து செடியினைச் சுற்றியும் அதன் மேலும் இட்டு அணைத்து விடவேண்டும். மண் அணைப்பதால் விழுதுகள் எளிதில் மண்ணில் இறங்குவதற்கு ஏதுவாகின்றன. செடியில் அதிக எண்ணிக்கையில் காய்கள் பிடிக்கும்.

ஜிப்சம் இடுதல்

நிலக்கடலை உற்பத்தியில் பயிருக்கு ஜிப்சம் இடுவது மிக அவசியம். ஜிப்சத்தில் சுண்ணாம்புச் சத்தும், கந்தகச் சத்தும் அடங்கி உள்ளன. சுண்ணாம்புச் சத்து காய்கள் திறட்சியாகவும், அதிக எடை உடையதாகவும் உருவாக வழி செய்கிறது. கந்தகச் சத்து நிலக்கடலையில் எண்ணெய்ச் சத்தை அதிகரிக்கிறது.ஒரு ஏக்கருக்கு 160 கிலோ ஜிப்சத்தை விதைத்த 40-45ம் நாள் இட்டு செடிகளைச் சுற்றி மண் அணைக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதை உற்பத்தியில் வயலில் களைகள் அதிகமாக பெருகுவதைத் தடுக்கவும், பூச்சி நோய் கட்டுப்பாட்டிற்கும் செடிகள் நன்கு வேåன்றி காய் உருவாகவும் சிறந்த நீர் நிர்வாகம் மிக முக்கியமாகும். நிலக்கடலை விதை உற்பத்தியில் நீர் பாய்ச்ச வேண்டிய அதிமுக்கிய நிலைகளாவன:

• விதைக்கும் சமயம்

• உயிர்த் தண்ணீர் (விதைத்த 4-5வது நாள்)

• விதைத்த 20-22ம் நாள்

• விழுது இறங்கும் சமயம் மற்றும்

• காய்பிடிப்பு மற்றும் முதிர்சி தருணத்தில் நன்கு நீர்பாய்ச்ச வேண்டும்.

நிலக்கடலையைத் தாக்கும் பூச்சிகள்

பொதுவாக நிலக்கடலையை தாக்கும் பூச்சிகளை நாம் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

• சாறு உறிஞ்சும் பூச்சிகள்

• இலையை கடித்து உண்ணும் பூச்சிகள்

• காய்களை துளைத்தும், வேர்களை கடித்து சேதம் விளைவிக்கும் பூச்சிகள்.

இந்த மூன்று வகை பூச்சிகளும் எப்படி பயிருக்கு சேதம் விளைவிக்கின்றன, அவற்றை எவ்வாறு கட்டப்படுத்த வேண்டும் என்பதை இப்பொழுது பார்ப்போம்.

சாறு உறிஞ்சும் பூச்சிகள்

இலைப்பேன்

இலைப்பேன் தாக்கிய செடியில்




• இலையின் மேல் பகுதியில் வெண்படலம் போன்று காணப்படும். கீழ்ப்பாகம் பழுப்பு நிறமாக மாறியிருக்கும்.

• இலைகள் கிண்ண வடிவில் மேல நோக்கி குவிந்து இருக்கும்.

• இலைகளின் ஓரங்கள் காய்ந்து காணப்படும்.

• இலைகள் சுருங்கி வளர்ச்சியின்றி இருக்கும்.

பச்சைத் தத்துப் பூச்சி

இந்த தத்துப்பூச்சி தாக்கப்பட்ட பயிர்களில் கீழ்கண்ட அறிகுறிகள் தென்படும்.

• இலைகளில் கொப்புளங்கள் ஏற்பட்டு பொரிந்தது போல் தெரியும்

• இலைகளின் ஓரங்கள் மஞ்சள் நிற மாற்றம் காணப்படும்.

அசுவினி 

அசுவினி தாக்கப்பட்ட பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி, சுருங்கிக் காணப்படும்.

கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதாவது ஒன்றை அடித்து சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

ஒரு ஏக்கருக்கு மானோ குரோட்டபாஸ் 300 மில்லி அல்லது குளோர்பைரிபாஸ் 300 மில்லி அல்லது டைகுளோராவாஸ் 250 மில்லி அடித்து கட்டுப்படுத்தலாம்.

அறுவடை நுட்பங்கள்


• நுனி இலை மஞ்சளாக மாறுதல் மற்றும்

• அடி இலைகள் காய்ந்து உதிர்வது பயிர் முதிர்ச்சி அடைந்ததற்கு அறிகுறியாகும்.

• சில செடிகளைப் பிடுங்கி காய்களை உடைத்துப் பார்த்தால் தோலின் உட்பாகம் கரும்பழுப்பு நிறமாக இருக்கும்.

சரியான அறுவடைத் தருணம்

• நிலம் காய்ந்து இருந்தால் நீர்பாய்ச்சியபின் களை கொத்து மூலமாகவோ, கையினாலோ செடிகளை பிடுங்க வேண்டும்.

• செடிகளைப் பிடுங்கி காய்களைப் பறிக்காமல் குவித்து வைக்கக் கூடாது.

• செடிகளைப் பிடுங்கி சேகரித்தவுடன் ஆட்களை கொண்டு காய்களை செடியிலிருந்து பரித்தெடுக்க வேண்டும்.


பூ பூக்கும் காலத்தில் மணிலா



அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் விதைக்கப்பட்டுள்ள மானாவாரி மணிலா பயிர் இப்போது பூ பூக்கும் நிலையை எட்டியுள்ளது. இந்நிலையில் காய்கள் முதிர்ச்சி அடையும் பருவம் வரை சுண்ணாம்புச் சத்து 90 சதவீதத்துக்கும் அதிகமாகத் தேவை. இதனால் மணிலாவுக்கு ஜிப்சம் மேலுரமாக இடுவது அவசியம். சுண்ணாம்பு சத்தை மணிலா செடிகள் வேர் மூலம் மண்ணில் இருந்து உறிஞ்சி, இலை திசுக்களில் நிலை நிறுத்திக் கொள்கிறது. பின்னர் வளரும் காய்களுக்கு சத்தை விழுது மூலம் இறங்கிச் செல்வதைத் தடுத்து விடுவதும் ஆராய்ச்சி முடிவுகளின் மூலம் அறியப்பட்டுள்ளது. மணிலாவில், சுண்ணாம்புச் சத்து தேவையை பூர்த்தி செய்தால் மட்டுமே, பொக்கு காய்கள் குறைந்து, திரட்சியுடன் கூடிய முதிர்ந்த காய்கள் கிடைக்கும்.

எப்படி இட வேண்டும்?

மணிலா பயிரில், பூ பூத்த நிலையில் இருந்து அதற்கு தேவையான சுண்ணாம்புச் சத்தை மண்ணில் இட்டு ஈடுசெய்ய வேண்டும். இதற்கு ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சத்தை மேலுரமாக இட வேண்டும். மணிலா விதைப்பு செய்த 6 முதல் 9 வார காலத்துக்குள் மண்ணில் போதிய ஈரப்பதம் உள்ள நேரங்களில் இட்டு, மண்ணை கைக் களை மூலம் 3 செ.மீட்டர் ஆழத்துக்கு நன்கு கிளறி விட வேண்டும். மண்ணில் நேரடியாக இடுவதற்கு பதிலாக, நன்கு பொடி செய்த ஜிப்சத்தை துணியின் மூலம், கைகளால் செடிகளைச் சுற்றி தூவி, மண்ணை கிளறி விடுவதால் மட்டுமே, ஒரு ஏக்கரில் 100 முதல் 200 கிலோ அளவுக்கு கூடுதல் மகசூல் கிடைக்கும்.

நிலக்கடலையின் உரத் தேவைகள்




மண் பரிசோதனை அடிப்படையில் தழைச் சத்து, மணிச் சத்து மற்றும் சாம்பல் சத்தை ஆய்வு செய்ய வேண்டும்.மண் பரிசோதனை செய்யாவிட்டால் ஏக்கர் ஒன்றுக்கு யூரியா

• மானாவாரியில் 9 கிலோவும், 

• இறவையில் 15, 

• சூப்பர் பாஸ்போட் மானாவாரியில் 25, 

• இறவைக்கு 85, 

• பொட்டாஷ் 3 கிலோவும், 

• இறவையில் 36 கிலோ 

உரங்களை அடி உரமாக இட வேண்டும். இத்துடன் 5 கிலோ நுண்ணூட்டச் சத்துக் கலவையை தேவையானயளவு மணலுடன் கலந்து விதைத்தவுடன் நிலத்தின் மேல் சீராக தூவ வேண்டும்.

ஜிப்சம் இடுதல்:


நிலக் கடலைப் பயிரில் நன்கு திரட்சியான பருப்புகள் உருவாக சுண்ணாம்புச் சத்து தேவைப்படுகிறது. அடியுரமாக ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் இடவேண்டும். மேலும் நிலக்கடலையின் விழுதுகள் இச்சத்தை நேரடியாக கிரகித்துக் கொள்ளக் கூடியதாக இருப்பதால் காய்கள் உருவாகும் தருணமான விதைத்த 40-45 வது நாட்களில் ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் இட்டு மண் அணைத்தல் அவசியம். ஜிப்சத்தில் 24 சதம் சுண்ணாம்புச் சத்தும், 18.6 சதம் கந்தகச் சத்தும் உள்ளது.


போராக்ஸ் இடுதல்:

விதையில்லா காய்கள் வராமல் தடுக்க ஏக்கருக்கு போராக்ஸ் 4 கிலோவை விதைத்த 45-வது நாளில் ஜிப்சத்துடன் கலந்து இட வேண்டும்.

ஊட்டச் சத்து கரைசல் தெளித்தல்:


நிலக்கடையில் நல்ல மகசூல் பெற ஊட்டச் சத்து கரைசல் தெளித்தல் மிகவும் அவசியம். ஒரு ஏக்கருக்கு டைஅம்மோனியம் பாஸ்பேட் ஒரு கிலோவை 20 லிட்டர் தண்ணீரில் இரவில் ஊற வைத்து தெளிந்த நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்நீரில் போராக்ஸ் 300 கிராம், ஜிங்க் சல்பேட் 250 கிராம், பெரஸ் சல்பேட் 500 கிராம் ஆகியவற்றை கலந்து இத்துடன் ப்ளானோபிக்ஸ் என்ற வளர்ச்சி ஊக்கியை 100 மி.லி. கலக்க வேண்டும். இக்கரைசலை 100 லிட்டர் கரைசலாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இவற்றை விதைத்த 30 மற்றும் 45 நாட்களில் மாலை வேளையில் தெளிக்க வேண்டும். இதன் மூலம் நல்ல திரட்சியான காய்கள் அதிகம் பிடிப்பதுடன், எண்ணெய் சத்தின் சதவீதமும் அதிகரிக்கும்.

மார்கழிப் பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி நுட்பங்கள்



நிலக்கடலை விதைப்பு செய்ய ஏற்றப் பருவமான இந்த தருணத்தில் பின்வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மணிலா பயிரிட்டு கூடுதல் மகசூல் பெற்று லாபம் அடையலாம். தை மாதம் முதல் தேதிக்குள் மணிலா விதைப்பை செய்து முடித்திட வேண்டும். காற்றோட்டம் மற்றும் வடிகால் வசதி உள்ள செம்மண் மற்றும் இருமண் பாடுள்ள மண்வகை, மணிலா பயிரிட ஏற்றது. நல்ல விளைச்சல் பெற வேண்டுமானால் நல்ல விதை அவசியம். சான்றுப் பெற்ற டி.எம்.வி.2,டி.எம்.வி.7, வி.ஆர்.ஐ.2, வி.ஆர்.ஐ.3, வி.ஆர்.ஐ.ஜி.என்.5 ஆகிய ரகங்கள் இப்பருவத்துக்கு ஏற்றதாகும். சிறியப் பருப்பு விதைகள் ஏக்கருக்கு 50 முதல் 55 கிலோவும், பெரிய பருப்புகள் கொண்ட விதைகள் ஏக்கருக்கு 55 முதல் 60 கிலோ தேவைப்படும்.

விதை நேர்த்தி:

விதைகளின் மூலமும், மண்ணின் மூலமும் பரவும் வேர் அழுகல் நோய், தண்டு அழுகல் நோய், இலைப்புள்ளி நோய் போன்றவற்றை கட்டுப்படுத்த ரசாயனப் பூச்சிக் கொல்லிகளான திராம் மற்றும் பாவிஸ்டின் ஆகியவற்றை ஒரு கிலோ விதைப் பருப்புக்கு 2 கிராம் வீதம் நன்றாக கலந்து 24 நேரம் வைத்திருந்து, பின்னர் விதைப்பது அவசியம்.


மானாவாரி நிலக்கடை சாகுபடி செய்யும் விவசாயிகள் :-




தற்போதே ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் பணியை துவங்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 4 கிலோ மணிச்சத்து தரக்கூடிய 25 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை 300 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து மூட்டம் போட்டு வைக்க வேண்டும்.15 நாட்கள் கழித்து கிளறிவிட்டு மீண்டும் மூட்டம் போட வேண்டும். இதன் மூலம் கிட்டா நிலையில் உள்ள மணிச்சத்துகள் பயிருக்கு கிட்டும் நிலைக்கு வரும். ஒரு மாதம் முடிந்து மானாவாரி நிலக்கடலை விதைக்கும்போது இந்த உரக்கலவையுடன் 9 கிலோ யூரியா மற்றும் 30 கிலோ பொட்டாஷ் ஆகிய உரங்களை கலந்து விதைப்பு சாலில் இட வேண்டும். ஊட்டமேற்றிய தொழுஉரம் இடுவதால் நிலக்கடலை மகசூல் அதிகரிப்பதுடன் மண்ணின் வளமும், ஈரத்தன்மையும் பாதுகாக்கப்படும். வறட்சியை தாங்கி வளரும் தன்மை பயிருக்கு கிடைக்கும். நிலக்கடலை பயிரின் வேர் வளர்ச்சி அதிகரிக்கும். விழுதுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கூடுதல் மகசூல் பெறமுடியும். வைகாசி பட்டத்தில் நிலக்கடலை விதைப்பு மழை பெறப்பட்டவுடன் துவங்கும்.


நிலக்கடலையில் அதிக மகசூல் பெற நவீன தொழில்நுட்பம் அவசியம் :-

எண்ணெய் நிலக்கடலையில் அதிக மகசூல் பெற நவீன தொழில்நுட்பம் அவசியம் தேவை என்றார் பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் சி. செந்தமிழ்ச்செல்வன். நிலக்கடலையில் அதிக மகசூல் பெறுவது குறித்தும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முறை குறித்தும் அவர் மேலும் கூறியது:




விதை நிலக்கடலையை விதைக்கும் முன் உயிர் உரங்களான ரைசோபியம் (கடலை) 3 பாக்கெட், பாஸ்போ பாக்டீரியா 3 பாக்கெட்டை ஆறிய அரிசிக் கஞ்சியில் கலந்து 24 மணி நேரத்துக்குள் விதைக்க வேண்டும். விதைப்புக்கு முன், ஒரு ஏக்கருக்கு 5 கிலோ கடலை நுண்சத்தை மணலுடன் கலந்து விதைக்க வேண்டும். பயிருக்கு தேவையான பேரூட்டச் சத்துக்களுடன், நுண்ணூட்டச் சத்துகளும் பயிருக்கு கிடைத்து அதிக மகசூல் பெறலாம். ஜிப்சம் 80 கிலோவை மேலுரமாகவும், அடியுரமாகவும் விதைத்து 40 அல்லது 45 நாள்களில் செடிகள் பூத்து விழுதுகள் இறங்கும் காலத்தில் வயலில் இட்டு மண் அணைக்க வேண்டும். மேலுரமாக இடும்போது, வயலில் போதிய ஈரப்பதம் இருக்க வேண்டும். இதனால் மண் பொலபொலவென இருப்பதால், விழுதுகள் இறங்கி காய்ப் பிடிக்க உதவும். காய்கள் முற்றி, தரமான நிலக்கடலை உருவாக சுண்ணாம்புச் சத்தும், எண்ணெயில் புரத அளவு அதிகரிக்க கந்தகச் சத்து உதவகிறது.

பூ, பிஞ்சு உதிர்வதை தடுக்க, பயிர் பூக்கும் தருணத்தில் 75 நாள்கள் கழித்து மீண்டும் நுண்ணூட்டக் கரைசல் தெளிக்க வேண்டும். இரண்டு கிலோ டி.ஏ.பி. உரத்தை தண்ணீரில் கரைத்து 1 நாள் ஊறவைத்து, மறுநாள் தெளிந்த கரைசலை வடிகட்டியப் பிறகு மற்ற உரங்களைக் கரைத்து 490 லிட்டர் நீரில் கலந்து தெளித்தால் பூ மற்றும் பிஞ்சு உதிர்வதைத் தடுத்து, அதிகமான மகசூல் பெறலாம்.

விவசாயிகளுக்குத் தேவையான விதைக் காய்கள் திண்டிவனம்- 7 (டி.எம்.வி-76) விருத்தாசலம்- 2 (வி.ஆர்.ஐ-2) உள்ளிட்ட விதை ரகங்கள் மற்றும் டி.ஏ.பி. அம்மோனியம் சல்பேட், போராக்ஸ், பிளானோபிக்ஸ் ஆகிய உரங்கள் பெரம்பலூர் வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் வழங்கப்படுகிறது என்றார் அவர்.

1 comment:

  1. Do you need Finance? Are you looking for Finance? Are you looking for finance to enlarge your business? We help individuals and companies to obtain finance for business expanding and to setup a new business ranging any amount. Get finance at affordable interest rate of 3%, Do you need this finance for business and to clear your bills? Then send us an email now for more information contact us now via (financialserviceoffer876@gmail.com) whats-App +918929509036 Thank

    ReplyDelete