Showing posts with label பூக்கள். Show all posts
Showing posts with label பூக்கள். Show all posts

Tuesday, November 29, 2016

இயற்கை முறையில் மல்லிகைப் பூ சாகுபடி


ஆறு மாதத்தில் முதல் வருமானம்!
“நெல், கரும்பு மாதிரியான பயிர்கள்ல சிலசமயம் நஷ்டம் வந்துடும். அதனால, நிரந்தர வருமானம் கிடைக்கணுங்கிறதுக்காக 15 சென்ட் இடத்துல மல்லிகை நடவு செய்யலாம்னு முடிவு பண்ணினேன். ராமேஸ்வரத்துல இருந்து நாற்று வாங்கிட்டு வந்து நடவு செய்தேன். முழுக்க இயற்கை முறையில சாகுபடி செய்றதால, செடியோட வளர்ச்சி சிறப்பா இருக்கு. ஆறாவது மாசத்துல இருந்து வருமானம் எடுத்துக்கிட்டிருக்கேன். நட்டு 14 மாசமாகுது.
ஆரம்பத்துல தினமும் 100 கிராம், 200 கிராம்னு கிடைச்சது. ஆறாவது மாசத்துக்குப் பிறகு ஒரு கிலோ அளவுல கிடைச்சது. ஒவ்வொரு மாசமும் மகசூல் கூடிக்கிட்டே இருக்கு. இப்போ, தினமும் ரெண்டு கிலோவுல இருந்து, பத்து கிலோ வரைக்கும் மகசூல் கிடைக்குது. அடுத்த வருஷத்துல தினமும் 25 கிலோ அளவுக்கு மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்.
இடையில ஊடுபயிரா மிளகாய், வெங்காயம் போட்டேன். மிளகாய் மூலம் 12 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சது. வெங்காயத்தை வீட்டுத் தேவைக்கு வெச்சுக்கிட்டோம். ரசாயன உரம் போட்டு சாகுபடி செய்யுற விவசாயிகளுக்கு சிலசமயம் பூ இல்லாம போயிடுது. ஆனா, இயற்கை முறையில எப்பவுமே பூத்துக்கிட்டே இருக்கு. இப்ப, என்னோட ஒரு ஏக்கர்ல 50 சென்ட் கரும்பு, 15 சென்ட் தீவனப்புல், 15 சென்ட் மல்லிகைப்பூ இருக்கு. மீதி 20 சென்ட், நெல் நடவுக்குத் தயாரா இருக்கு. குத்தகை நிலம் ஒரு ஏக்கர்ல நெல் போட்டிருக்கேன்” என்ற செந்தில்குமார் மல்லிகை மூலம் கிடைக்கும் வருமானம் குறித்துச் சொன்னார்.

15 சென்ட்டில் மாதம் 150 கிலோ!
“ஒரு கிலோ மல்லிகைப்பூ 50 ரூபாய்ல இருந்து 1,000 ரூபாய் வரை விற்பனையாகும். தினம் சராசரியா எனக்கு 5 கிலோ பூ கிடைக்குது. அந்த வகையில மாசத்துக்கு 150 கிலோ. கிலோவுக்கு சராசரி விலையா 100 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே மாசம் 15 ஆயிரம் ரூபாய் கிடைச்சுடும். செலவு 5 ஆயிரம் ரூபாய் போக, மீதம் 10 ஆயிரம் ரூபாய் லாபமாக கிடைக்கும்” என்ற செந்தில்குமார்,
“ரெண்டு வருஷத்துக்குப் பிறகு தினம் சராசரியா 10 கிலோ வீதம் பூ கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். அப்படி கிடைச்சா, மாசம் 20 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். எப்படியும் வருஷத்துல எட்டு மாசத்துக்கு இந்த வருமானம் கிடைச்சுக்கிட்டே இருக்கும்” என்று நம்பிக்கையுடன் சொன்னார்.

Saturday, March 28, 2015

சூரியகாந்தி சாகுபடி (Suriya Kaanthi Saagubadi) - Sunflower Cultivation


  • சூரியகாந்தி பயிரின் வயது 80-85 நாட்களாகும்.
  • சாகுபடிக்கு ஏற்ற ரகங்கள் அட்வான்ஸ் கார்கில், கே.பி.எஸ்.எச்.1, மாடர்ன் மற்றும் கோ.3. ஒரு ஏக்கருக்கு 6 கிலோ விதை தேவைப்படும்.
  • நீண்ட கால விதை ரகங்களை 60க்கு 15செ.மீ. இடைவெளியிலும், குறுகிய கால விதை ரகங்களை 30க்கு 15 செ.மீ. இடைவெளியிலும் விதைக்க வேண்டும்.
  • விதை முளைப்பு சீராக இருப்பதற்கு தண்ணீரில் ஊறவைத்து பின் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.
  • நீண்டகால ரகமாக இருந்தால் சதுரமீட்டரில் 12 செடிகளும், குறுகிய கால ரகமாக இருந்தால் சதுர மீட்டரில் 24 செடிகளும் இருக்கும்படி கவனித்துக்கொள்ள வேண்டும்.
  • ஒரு கிலோ விதையுடன் 42 கிராம் திரம் என்னும் மருந்தைக் கலந்து விதைக்க வேண்டும்.
  • ஏக்கருக்கு 10 முதல் 20 வண்டிகள் நன்கு மக்கிய தொழு உரம் இட்டு நிலத்தைப் பண்பட உழ வேண்டும்.
  • தொழு உரத்தோடு உயிர் உரமாகிய அசோஸ்பைரில்லத்தையும் கலந்து இடவேண்டும்.
  • 10 கிலோ தொழு உரம், 10 கிலோ மண் இவற்றுடன் 4 பாக்கெட் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தையும் கலந்து வயலில் சீராகத் தூவ வேண்டும்.
  • ஏக்கருக்கு அடி உரமாக தழைச்சத்து 8 கிலோ, மணிச்சத்து 8 கிலோ, சாம்பல்சத்து 8 கிலோ ஆகியவை கிடைப்பதற்கு ஏற்ற ரசாயன உரங்களை இடவேண்டும்.
  • கடைசியாக 5 கிலோ நுண்ணூட்டச் சத்துக்களை 15 கிலோ ஆற்று மணலுடன் கலந்து ஏக்கர் பரப்பில் சீராகத் தூவ வேண்டும்.
விதைத்தல்:
  • விதையுடன் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தைக் கலந்து விதைக்கலாம்.
  • விதைக்கும் நிலத்தில் விதையை உளுந்து தெளிப்பது போல் தெளித்து விதையை மண்ணால் மூடி, பின் பாத்தி கட்டி பாசனம் செய்து சதுர மீட்டரில் ரகங்களுக்குத் தக்கவாறு 12 அல்லது 24 செடிகள் உள்ளபடி செய்து அதிகமாக இருக்கும் செடிகளைக் களைந்துவிடலாம்.
  • இல்லையேல் பாருக்கு பார் 60 அல்லது 30 செ.மீ. உள்ளபடி அமைத்துக் கொண்டு விதையை பாருக்கு பக்கவாட்டில் 15 செ.மீ. இடைவெளியில் ஊன்றலாம்.
  • 10வது நாளில் நன்கு வளர்ந்த ஒரு செடியை விட்டுவைத்து மற்ற செடிகளைக் களையெடுக்க வேண்டும்.
  • சூரியகாந்தி பயிருக்கு ஒரு முறை களையெடுத்து நிலத்தைக் கொத்திவிட்டு பின் மீதமுள்ள தழைச்சத்தாகிய 18 கிலோ அளவை மேலுரமாக இடவேண்டும். இதற்கு 18 கிலோ யூரியா இடவேண்டும்.
  • விதை விதைப்பதற்கு முன் விதைத்த நான்காம் நாள் உயிர்த்தண்ணீர், விதைத்த 20ம் நாள், 35ம் நாள், 40ம் நாள், 60ம் நாள், 20-25வது நாள் மொட்டுகள் உருவாகும் சமயம், 30-45வது நாள் பூக்கள் மலரும் போதும், 50-60வது நாள் விதை முற்றும் சமயம் மண்ணில் ஈரம் இருக்கும்படியாக நீர் பாய்ச்ச வேண்டும்.
  • நிலத்தில் நீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
  • அறுவடைக்கு ஒரு வாரம் முன் பாசனத்தை முற்றிலும் நிறுத்திவிட வேண்டும்.
  • விதைத்த 30வது நாள் ஏக்கருக்கு 111 மில்லி பிளானோபிக்ஸ் பயிர் ஊக்கியை 250 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். இது பூக்களில் அதிக விதை பிடிக்க உதவுகின்றது.
  • சூரியகாந்தியில் அயல் மகரந்த சேர்க்கையை ஏற்படுத்தி அதிக விதை உற்பத்தி செய்யலாம். இதற்கு பூ மலர்ந்த பிறகு காலை 9 மணியிலிருந்து 11 மணிக்குள் தொடர்ந்து 10 நாட்களுக்குள் மற்றொரு பூவுடன் உராயும்படி செய்ய வேண்டும்.
  • பூக்களில் விதைகள் முதிர்ச்சி அடையும்போது பச்சைக்கிளிகள் பூக்கொண்டைகளை அலகால் கொத்தி கடும் சேதத்தை உண்டாக்கும். டப்பாக்களைத் தட்டி சத்தம் எழுப்பி கிளிகளைத் துரத்தவேண்டும்.

அறுவடை

  • சூரியகாந்தி பூக்களின் அடி பாகம் மஞ்சள் நிறமாக மாறிய உடன் பூக்களை அறுவடை செய்து களத்துமேட்டில் காயப்போட வேண்டும்.
  • பூக்கள் சரியாக காயாமல் இருக்கும்போது கோணிச்சாக்கில் சேமித்தால் அவற்றில் பூசணம் வளர்ந்து நஷ்டம் ஏற்படும்.
  • களத்துமேட்டில் அடிக்கடி பூக்களை கிளறிவிட்டு நன்கு காயப்போட வேண்டும்.
  • நன்கு உலர்ந்த பூக்களை தடியால் அடித்து விதையைப் பிரித்து அவற்றை சுத்தம் செய்து விற்பனை செய்துவிடலாம். நல்ல முறையில் சாகுபடி நுட்பங்களை அனுசரித்தால் கணிசமான லாபத்தை அடையமுடியும்.