Showing posts with label புடலங்காய். Show all posts
Showing posts with label புடலங்காய். Show all posts

Thursday, August 27, 2015

புடலங்காய் சாகுபடி- Snake Gourd Cultivation


தமிழகத்தில் எளிதாக பயிராகும் காய் வகைகளில், கொடி வகைத் தாவரமான புடலங்காய் சாகுபடி செய்தால் ஒரு ஹெக்டேருக்கு 20 முதல் 25 டன் வரை மகசூல் பெறலாம் என தோட்டக்கலைத் துறையினர் கூறியுள்ளனர். இது வேகமாக வளரக் கூடியதும், அதிக மகசூல் தரும் பயிராகும்.




மண், தட்ப வெட்ப நிலை:
புடலங்காய் ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். இதன் சாகுபடிக்கு 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தேவைப்படும். இருமண் பாங்கான மண் வகைகள் சாகுபடிக்கு ஏற்றவை. மேலும் மித வெப்ப மண்டலப் பகுதிகளிலும் சாகுபடி செய்யலாம்.
பருவம்: ஜூன்- ஜூலை மாதங்களும், டிசம்பர் -ஜனவரி மாதங்களும் சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும்.
 
நிலம் தயாரித்தல்:
நிலத்தை நன்றாக 3 அல்லது 4 முறை உழவு செய்ய வேண்டும்.கடைசி உழவின்போது 20 டன் மக்கிய தொழு உரத்தை இட்டு 2 மீட்டர் இடைவெளியில் 60 செ.மீட்டர் அகலத்தில் வாய்க்கால் எடுத்து நிலம் தயாரிக்க வேண்டும். அந்த வாய்க்காலில் 1.5 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீட்டர் நீளம், ஆழம், அகலம் கொண்ட குழிகளை எடுத்து மேல் மண் கலந்து நிரப்பி வைக்க வேண்டும்.
 
விதையளவு:
ஒரு ஹெக்டேருக்கு 1.5 முதல் 2 கிலோ விதையளவு தேவைப்படும். விதையை 2 கிராம் பெவிஸ்டின் என்ற பூஞ்சாண மருந்துடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு குழிக்கு 5 விதைகள் வீதம் ஊன்ற வேண்டும். விதை நட்ட 8 முதல் 10 நாள்களில் முளைக்கத் தொடங்கிவிடும். ஒரு குழியில் நன்கு வளர்ந்த 3 நாற்றுகளை மட்டும் விட்டு மற்ற நாற்றுகளை பிடுங்கி விட வேண்டும்.

 உரமிடுதல்:
ஒரு ஹெக்டேருக்கு அடியுரமாக 20 முதல் 30 கிலோ தழைச்சத்து, 30 முதல் 50 கிலோ மணிச்சத்து, 30 முதல் 40 கிலோ சாம்பல் சத்தை இட வேண்டும். மேலுரமாக 20 முதல் 30 கிலோ தழைச்சத்தை பூ பூக்கும் பருவத்தில் இட வேண்டும்.
 நீர் பாய்ச்சுதல்:
விதை ஊன்றியவுடன் குடம் அல்லது பூவாளி வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். நன்கு வளர்ந்தவுடன் வாரம் ஒரு முறை வாய்க்கால் மூலமாக தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும்.