Showing posts with label இயற்கை உணவு. Show all posts
Showing posts with label இயற்கை உணவு. Show all posts

Thursday, October 1, 2015

ரசாயனங்கள் இல்லாத உணவுகள் கற்றுத் தரும் "கியூபா" (Rasaayanam Illatha Unavugal Katru Tharum Cuba) - Agro-ecology: Lessons from Cuba on Agriculture, Organic Farming, Food and Climate change


அமெரிக்காவிற்கு அருகில் உள்ள ஒரு சிறிய நாடு "கியூபா"(CUBA) என்பது அனைவருக்கும் தெரியும்..... அந்த நாடு ஒரு வகையில் உலகத்துக்கே முன்னோடியாக இருக்கிறது.
*
அது எதில்....?
*

ரசாயனங்கள் இல்லாத உணவுகள் கற்றுத் தரும் "கியூபா"...

*
கியூபா... இது அமெரிக்காவின் அருகில் இருக்கும் சின்னஞ்சிறிய நாடு என்பதும், கம்யூனிச ஆட்சியின் கீழ் இருக்கிறது என்பதும் நமக்குத் தெரியும். கியூபா தான் ரசாயன உரமில்லாத இயற்கை வழி வேளாண்மையின் முன்னோடி நாடு என்று தெரியுமா....?
*
‘உலகின் சர்க்கரைக் கிண்ணம்’ என்பார்கள் கியூபாவை...!
*
கரும்பை மட்டுமே முக்கியப் பயிராகக் கொண்ட கியூபா, 1959ம் ஆண்டு ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையில் நிகழ்ந்த புரட்சியின் மூலம் கம்யூனிச நாடாக மாறியது. அருகிலிருக்கும் அமெரிக்காவிற்கு, மிகச்சிறிய நாடான கியூபாவின் மாற்றம் பிடிக்கவில்லை. அமெரிக்கக் கண்டத்தில் ஒரு கம்யூனிச நாடு செழித்து வளர்ந்தால், அது அருகில் இருக்கும் மற்ற நாடுகளுக்கும் பரவும் என்பது அமெரிக்காவின் பயம். அதனால் உலக நாடுகள் பலவற்றோடு இணைந்து, கியூபா மீது பொருளாதாரத் தடையை விதித்தது அமெரிக்கா.
*
கரும்பு மட்டுமே விளையும் கியூபாவுக்கு உணவு உட்பட எல்லா அத்தியாவசியப் பொருட்களும் பிற நாடுகளிடமிருந்து தான் வர வேண்டும். இந்நிலையில் அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை கடும் சிக்கலை கியூபாவிற்கு ஏற்படுத்தியது.
*
அப்போது சோவியத் ரஷ்யா கியூபாவிற்கு உதவ முன் வந்தது. கியூபாவின் சர்க்கரையைப் பெற்றுக் கொண்டு, கியூபாவிற்குத் தேவையான உணவுப் பொருட்களையும், இதர அத்தியாவசியப் பொருட்களையும் ரஷ்யா அனுப்பி வைத்தது.
*
அன்றைய கியூபாவின் உணவுத் தேவையில் அறுபது சதவீதம் ரஷ்யாவில் இருந்தே வந்தன. கரும்பு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கிய கியூபா, அதற்குத் தேவையான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், டீசல், வேளாண் எந்திரங்கள்... இப்படி அனைத்தையும் ரஷ்யாவிடமிருந்தே பெற்றது. நவீன வேளாண் முறையில் உணவு உற்பத்தியைத் துவங்கிய கியூபாவில் ஓர் ஆண்டிற்கு 13 லட்சம் டன் ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தப்பட்டன.
*
சுமார் 90,000 டிராக்டர்கள் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டன. ஒற்றைப் பயிர் சாகுபடியில் கியூபா முன்னிலையில் இருந்தாலும் கூட, பல்வேறு சூழலியல் பிரச்னைகளை எதிர்கொண்டது. ரசாயன வேளாண்மையின் பல்வேறு தீங்குகளையும் கியூபா சந்தித்தது. நிலங்கள் படிப்படியாக உற்பத்தித் திறனை இழந்தன.
*
தொழிற்சாலைகளைப் போல விவசாயம் நகர் மயமானதில் கிராமம் சார்ந்த பல தொழில்கள் நசிவைச் சந்தித்தன. விளைவு... கிராம மக்கள் நம் நாட்டைப் போலவே நகரங்களை நோக்கிப் பயணித்தார்கள். 1956ம் ஆண்டின் புள்ளி விவரப்படி கியூபாவில் கிராமங்களில் வசித்தவர்கள் அதன் மொத்த மக்கள் தொகையில் 56%. ஆனால் 1989ம் ஆண்டு புள்ளிவிவரப்படி கிராமங்களில் வசிப்போர் எண்ணிக்கை 28 சதவீதமாகக் குறைந்தது.
*
இந்தச் சூழலில் தான் சோவியத் ரஷ்யா சிதறுண்டது. கியூபா தன் தேவைகளுக்காக சார்ந்திருந்த ரஷ்யாவின் உதவிகள் கிடைக்கவில்லை. நவீன விவசாயத்தை சுய சார்போடு செய்ய முடியாத சூழலில் டீசல் உட்பட பல பொருட்களின் தேவை இருந்தது.
*
தயாரான சர்க்கரையை ஏற்றுமதி செய்ய முடியவில்லை. உணவுப்பொருட்கள், ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் எதையும் வெளிநாடுகளிலிருந்து வாங்க முடியாத சூழலில், ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்தார்.
*
அதன் படி, கரும்பு மட்டுமே விளைவிப்பது என்ற ஒற்றைப் பயிர் சாகுபடி முறையைக் கை விட்டது கியூபா. தங்களுக்குத் தேவையான எல்லா உணவுப் பொருட்களையும் தங்கள் மண்ணிலேயே உற்பத்தி செய்யும் முடிவிற்கு வந்தார் ஃபிடல்.
*
நாடு முழுவதும் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. உள்நாட்டிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு உயிர் உரங்கள் இயற்கை வழி வேளாண் முறையில் தயாரிக்கப்பட்டன. குடும்பத் தோட்டங்கள், நகர்ப்புற விவசாயம் என அனைத்து வகைகளிலும் தற்சார்பு வேளாண்மைக்குத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.
*
கியூப மக்களின் முக்கியமான உணவுகளில் ஒன்று, அரிசி. இயற்கை வழி வேளாண்மை துவங்கப்பட்ட ஒரே ஆண்டில், கியூபாவின் ஒட்டு மொத்த தேவையில் ஐம்பது சதவீத நெல் அங்கேயே விளைந்து செழித்தது.
*
கிழங்கு உற்பத்தியில் தென் அமெரிக்காவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது கியூபா. கியூபாவின் மொத்த மக்கள்தொகையில் 95% கல்வி கற்றவர்கள். அவர்கள் செய்த விவசாயத்தில் தான் கியூபாவின் உணவுத்தேவை நிறைவேறத் துவங்கியது. கிராமப்புறங்களில் மட்டுமல்லாமல், நகர்ப்புற காலியிடங்கள் எல்லாம் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டன.
*
பல்வேறு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கூட்டுறவு சங்கங்களுக்குச் சொந்தமான காலி இடங்கள் எல்லாம் விவசாய நிலங்களாக மாறின. 1.1 கோடி மக்கள் தொகையைக் கொண்ட கியூபாவின் குடிமக்கள் அனைவரும், தங்கள் உணவுத்தேவையைப் பூர்த்தி செய்வதற்கான சுய போராட்டத்தை தாங்களே நடத்தினார்கள். வீடுகளில் இருக்கும் குறைந்த இடங்களில் காய்கறி பயிரிட்டார்கள்.
*
மாடித்தோட்டம் மூலம் தங்கள் தேவையையும் நிறைவேற்றி, எஞ்சியவற்றை விற்கத் துவங்கினார்கள். இயற்கை வழி வேளாண்மையில் நிலத்தையும், சூரிய ஒளியையும் வீணாக்காமல் பயன்படுத்துவதன் அவசியத்தை விளக்குவார்கள். ‘‘ஒரு சதுர அடி இலைப் பரப்பின் மீது எட்டு மணி நேரம் தொடர்ந்து சூரிய ஒளி விழுந்தால் மூன்று கிராம் குளுகோஸ் ஒளிச்சேர்க்கையின் மூலம் தயாரிக்கப்படுகிறது’’ என்று சொல்வார் மராட்டிய கணிதப் பேராசான் ஸ்ரீபாத் தபோல்கர்.
*
அதே புரிதலோடு கியூபா சூரிய ஒளியை அறுவடை செய்தது. உணவிற்காக பிற நாடுகளை நம்பி இருக்க வேண்டிய அவசியத்தை உடைத்தெறிந்தது. தன் உணவுத் தேவையை தானே பூர்த்தி செய்து கொண்டது. 2000ம் ஆண்டில் நகர்ப்புற வேளாண்மையில் மட்டும் கியூபாவிற்குக் கிடைத்த உணவுப் பொருட்கள் 12 லட்சம் டன். விவசாய நிலங்களிலிருந்தும், கிராமப்புறங்களில் இருந்தும் கிடைத்த உணவுப்பொருட்களின் கணக்கு தனி.
*
இது எவ்வளவு பெரிய வேறுபாடு...? தங்களுடைய உணவுத் தேவைக்காகவும், விவசாயத் தேவைகளுக்காகவும் பிற நாடுகளைச் சார்ந்திருந்த கியூப மக்கள், சில ஆண்டுகளில் தற்சார்பு உணவு உற்பத்தியைச் சாத்தியமாக்கினார்கள். விவசாயத்திற்காக நாட்டிற்கு வெளியிலிருந்து எந்த ரசாயனமோ, பூச்சிக்கொல்லியோ அவர்களுக்குத் தேவைப்படவில்லை.
*
‘சூழலியலுக்கு உங்கள் கடனைச் செலுத்துங்கள். மக்களை அல்ல, பசியை எதிர்த்துப் போராடுங்கள்’ என ஃபிடல் காஸ்ட்ரோ விடுத்த அழைப்பை ஏற்று கியூப மக்கள் தங்கள் தேவைகளை சுய முயற்சி மூலம் பூர்த்தி செய்து கொண்டார்கள்.

Friday, February 27, 2015

இயற்கை முறையில் விளைந்த பொருட்கள் நேரடி விற்பனைக்கு


1. ரஸ்தாளி வாழைப்பழம் , முருகன் : 93627 94206
ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்.
(வாழைக்காயகாக தமிழகம் முழுவதும் பேக்கிங் செய்தே அனுப்பிவிடுகிறார். மார்க்கெட்டில் நீங்கள் வாங்கும் விலையை அனுசரித்தே இவருடைய விலை).

2. உளுந்தம் பருப்பு ( கருப்பு, தோல் நீக்காமல் ) 
சரவணன், விழுப்புரம் : 9488829993

3. ஆத்தூர் கிச்சடி புழுங்கல் அரிசி , Dr. புண்ணிய மூர்த்தி , தஞ்சை : 98424 55833
4. வெள்ளைப்பொன்னி அரிசி & திருப்பதி சாரம் இட்லி அரிசி
சுப்ரமணியன், விழுப்புரம் : 98423 97377

5. சிறுதானியங்களான வரகு, குதிரைவாலி, சாமை மற்றும் பல... & பாரம்பரிய அரிசி & காய்கற்கள் ஆகியவை விதையாகவோ அல்லது அரிசியாகவோ கிடைக்கும்
ஜெயராமன், சேலம் : 99424 43055

Monday, December 29, 2014

சத்து நிறைந்த சிறுதானியப் பயிர்கள் - புதிய தொழில் வாய்ப்பு


கேழ்வரகு, தினை, சாமை, வரகு, பனிவரகு மற்றும் குதிரைவாலி போன்ற பயிர்கள் சிறுதானியப் பயிர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தானியங்களில் அரிசி மற்றும் கோதுமையில் இருப்பதை விட 7 முதல் 12 சதம் புரதமும், 1.3 முதல் 4.7 சதம் வரை கொழுப்பு போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது. இது தவிர சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மாவுச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. சிறுதானியங்களின் மகத்துவத்தை அறிந்த சில சுயஉதவிக்குழுவினர் இந்த தானியங்களை தனித்தனியாக வாங்கி இடித்து மாவாக்கி அதனை தோசை மற்றும் புட்டு மாவாக விற்பனை செய்து வருகின்றனர். வளர்ந்த நகரங்களில் உள்ள சிறிய உணவகங்கள் முதல் நட்சத்திர உணவகங்கள் வரை சிறுதானிய உணவுகளுக்கு தற்போது புதிய சந்தை ஏற்பட்டுள்ளது. இந்த தயாரிப்புக்கு நல்ல வரவேற்பு உள்ளது. நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் சிறுகுழந்தைகள், பெரியவர்களின் உடல் நலனுக்கு ஏற்றதாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சிறுதானியப்பயிரின் உற்பத்தியை பெருக்கி விவசாயிகள் அதிக லாபத்தை காணமுடியும். 

கேழ்வரகு
கேழ்வரகு மானாவாரி மற்றும் குறைந்த நீரைப் பயன்படுத்தி பயிரிடப்படக் கூடிய ஒரு பயிராகும். ஆண்டு முழுவதும் நல்ல விளைச்சல் தருவது இதன் சிறப்பம்சம். தமிழக கிராமப்புற மக்களின் உணவில் கேழ்வரகு முக்கிய இடம் வகிக்கிறது. கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து உடல் பருமன், இதயநோய்களை கட்டுக்குள் வைக்கிறது. உடலில் உள்ள நச்சுத்தன்மையுள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. குடலில் ஏற்படும் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு தருகிறது. உடலுக்கு தேவையான மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பிற நுண்ணூட்ட சத்துக்களும் உள்ளன. கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவித்து மலச்சிக்கலை தவிர்க்கிறது. 

தினை
மலை வாழ் மக்களால் பெரிதும் விரும்பப்படக் கூடிய பயிர் வகைகளில் தினை முக்கியமானது. மிகவும் கடினமான வறட்சியைக் கூட தாங்கி வளரக்கூடியது. பலவகையான மண் வகையிலும் நன்கு வளரும் தன்மை உடையது. மண்வளம் குறைவான நிலங்களிலும் கூட தினை வளர்ந்து பலனை அளிக்கிறது. மனித நாகரீகம் தோன்றிய தொடக்க காலத்திலிருந்தே உடல் பலத்தை தரும் முக்கிய உணவாக தினை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தேனும், தினைமாவையும் கலந்து சாப்பிடும் பழக்கம் மலைவாழ் மக்களிடையே காணப்படுகிறது.