Friday, October 10, 2014

ஒரு மீன் முக்கால் கிலோ! ஒரு கிலோ 250 ரூபாய்!

10 மாதங்களில் அறுவடை! ஒரு மீன் முக்கால் கிலோ! ஒரு கிலோ 250 ரூபாய்!
 
விவசாயத்தோடு ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டால், விவசாயிகளுக்கு என்றைக்குமே தோல்வி இல்லை. இதை நிரூபிக்கும் வகையில், தென்னந்தோப்புக்கு நடுவே விரால் மீன்களை வளர்த்து வருகிறார்கள், நண்பர்களான மாரிமுத்து, செல்லப்பாண்டியன்.திருநெல்வேலி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, மூன்றாவது கிலோ மீட்டரில் இடது பக்கம் பிரியும் சாலையில் சென்றால், ஒன்பதாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, வீரகளப்பெருஞ்செல்வி கிராமம். திரும்பியப் பக்கமெல்லாம் வாழை மரங்கள், அந்த ஊரின் வளமையைச் சொல்லாமல் சொல்கின்றன. இக்கிராமத்தில்தான் இந்த நண்பர்களின் மீன் பண்ணை இருக்கிறது.
சிறிய இடமே போதும் 

ஒரு ஏக்கரில் அம்பை பதினாறு ரக நெல்லும், ஒரு ஏக்கரில் ரஸ்தாளி வாழையும் போட்டிருக்கிகோம். இது போக அரை ஏக்கரில் 21 தென்னை இருக்கிறது. எல்லாம் ஏழு வயதான மரங்கள்.  நடவு செய்யும்போதே 25 அடி இடைவெளி கொடுத்திருக்கிறார்கள். 6 சென்ட் குளம், 10 மாதம், 30 ஆயிரம் என்று விறு விறு லாபம் தரும் விரால் மீன் என்று சமீபத்தில் பசுமை விகடனில்  (10.11.10 தேதியிட்ட இதழ்) ஒரு கட்டுரை வந்திருந்தது. அதைப் படித்ததும்தான், சின்ன இடத்திலேயே இவ்வளவு லாபம் கிடைக்கும்போது  அரை ஏக்கர் இருக்கின்ற தென்னைக்கு இடையில் ஏன் விரால் மீன்கள் வளர்க்கக் கூடாது என்று  நண்பர் செல்லப்பாண்டியனிடம்  கூறி அவரும் இதில் ஆர்வமானதும் இரண்டு பேரும் சேர்ந்து விரால் வளர்க்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.சேவியர் கல்லூரியின் நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்துக்குச் சென்று, விரால் மீன் வளர்ப்புப் பற்றி தெரிந்து கொண்டு, உடனடியாக வளர்க்க ஆரம்பித்தார்கள். இப்பொழுது பத்து மாதம் ஓடிவிட்டது. மீனெல்லாம் விற்பனைக்குத் தயாரா இருக்கிறது என்றபடியே ஒரு மீனைப் பிடித்துக் காட்டிவிட்டு, விரால் மீன் வளர்ப்பு முறைகளை அடுக்க ஆரம்பித்தார், மாரிமுத்து.

நான்கடி உயரத்துக்குத் தண்ணீர் 
தென்னைக்கு இடையில், 150 அடி நீளம், 18 அடி அகலம், 5 அடி ஆழத்தில் தனித்தனியாக இரண்டு குளங்கள் வெட்டியிருக்கிறார்கள். இவர்கள் தோட்டம் முழுக்கவே களிமண் பூமி என்பதால் வண்டல் கொண்டு வந்து போட வேண்டிய அவசியமில்லை. நாலடி உயரத்துக்குத் தண்ணீர் நிறுத்தி ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து ஒரு மாத வயதுள்ள விரால் குஞ்சுகளை வாங்கி விட்டுள்ளனர். ஒரு குளத்துக்கு ஐயாயிரம் குஞ்சுகள் என்று இரண்டு குளத்திலும் பத்தாயிரம் குஞ்சுகள்.

நிழல் கொடுக்க தாமரை 
மீன் குஞ்சுகளை, பறவைகளிடமிருந்து காப்பாத்தறதுக்காக குளத்துக்கு மேல் வலையைக் கட்டியிருக்கிறார்கள். தென்னை மரங்களோட நிழல் கிடைப்பதால், மீன்களுக்கு வெயிலின் பாதிப்பு அதிகளவில் இருக்காது. கூடுதல் பாதுகாப்புக்கு, தாமரையையும் படர விட்டிருக்கிறார்கள்.

கொழுக்க வைக்கும் கொழிஞ்சி 

இரண்டு மாத வயது வரைக்கும், இரண்டு குளத்தில் இருக்கின்ற மீன்களுக்கும் சேர்த்து, ஒரு நாளைக்கு மூணு கிலோ கடலைப்புண்ணாக்கு போட்டுள்ளனர். இதை இரண்டாக பிரித்து காலையும் மாலையும் போடலாம். மூன்றாவது மாதத்துக்கு மேல் கொழிஞ்சி இலையை வெட்டி, சின்னச்சின்னக் கட்டுகளாக கட்டி குளத்துக்குள் போட்டுள்ளனர். அது தண்ணீரில் அழுகியதும், அதிலிருந்து நிறைய புழுக்கள் உருவாகும். அதை மீன்கள் நன்றாக சாப்பிட்டு கொழுத்தது. இரண்டு குளத்துக்கும் சேர்த்து, ஒரு மாதத்துக்கு ஒரு டன் கொழிஞ்சி இலை தேவைப்பட்டதாக கூறுகின்றனர்.

ஆறு மாதத்துக்கு மேல் கோழிக்கழிவு 
ஆறாவது மாதத்துக்கு மேல் மீன்களுக்குக் கோழிக்கழிவுதான் தீவனம். கோழிக்குடல், கறி என்று கறிக்கடையில் வீணாகும் கழிவுகளை வாங்கி வந்து, வேக வைத்து குளத்துக்குள் ஆங்காங்கே போட்டுள்ளனர். இரண்டு குளத்துக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு நாப்பது கிலோ கோழிக்கழிவு போடுகிறார்கள். அதனால் மீன்கள் நல்ல எடைக்கு வந்திருக்கின்றன.

பற்றாக்குறைக்கு ஜிலேபி மீன்கள்  
1,000 விராலுக்கு 25 ஜிலேபி மீன் என்கிற கணக்கிலேயும் மீன்கள் குளத்தில் விட்டிருக்கிறார்கள். இந்த ஜிலேபி மீன்கள் அடிக்கடி குஞ்சு பொரித்துக் கொண்டே இருக்கும். நாம் கொடுக்கும் உணவு பற்றாக்குறைக்கு இந்தக் குஞ்சுகளை விரால் மீன்கள் பிடித்து சாப்பிட்டுக்கொள்ளும்.

நோய்கள் தாக்காது 
விரால் மீனைப் பெரும்பாலும் எந்த நோயும் தாக்குவதில்லை. எப்பொழுதாவது அம்மை மாதிரியான கொப்பளம் வரும். அந்த சமயத்தில் மஞ்சள் மற்றும் வேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து தடவினால் சரியாகிவிடும். வயலுக்கான பாசன நீர், பம்ப் செட்டிலிருந்து முதலில் மீன் குளத்தில்தான் விழும். அதற்குப் பிறகுதான் வயலுக்குப் பாயும். அதனால் இந்தத் தண்ணீரே வயலுக்கு நல்ல உரமாகிறது என்ற மாரியப்பன், நிறைவாக விற்பனை வாய்ப்புகள் பற்றிச் சொன்னார்.

தேடி வரும் சந்தை வாய்ப்பு 
மீனைப் பிடித்து, சோதனைக்காக எடை போட்டுப் பார்த்தப்போது குறைந்தபட்சமாக முக்கால் கிலோவும் அதிகபட்சமாக ஒன்றே கால் கிலோ வரைக்கும் இருந்தது. 10 ஆயிரம் குஞ்சுகள் விட்டதில் இப்பொழுது, 8 ஆயிரம் மீன் வரைக்கும் குளத்துக்குள் இருக்கும் என்கிறார். பாதிக்குப் பாதி போனாலும், எப்படியும் 5 ஆயிரம் மீன்களுக்குக் குறையாது. தமிழ்நாட்டில், தேவையான அளவுக்கு விரால் மீன் உற்பத்தி இல்லாததால், வியாபாரிகளே பண்ணைக்குத் தேடி வந்து கேட்டுக்கிறார்கள். ஒரு மீன், முக்கால் கிலோ என்று வைத்துக் கொண்டாலும், பிடிக்கும்பொழுது மொத்தமாக, 3 ஆயிரத்து 750 கிலோ மீன் கிடைக்கும். மொத்த விலையில் ஒரு கிலோ 250 ரூபாய் என்று போகிறது. அதன்படி பார்த்தால், இரண்டு குளத்திலேயும் இருக்கின்ற மீன்கள் மூலமாக, 9 லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்கும். செலவெல்லாம் போக, எப்படி பாத்தாலும் ஆறு லட்ச ரூபாய்க்கு குறையாமல் லாபம் கிடைக்கும். இந்த லாபம் பசுமை விகடன் எங்களுக்குக் கொடுத்த பரிசு என்றபடி நன்றிப் பெருக்கோடு விடை கொடுத்தார், மாரிமுத்து.

தொடர்புக்கு
மாரிமுத்து,
செல்போன்: 98437-22112.

No comments:

Post a Comment