Thursday, October 9, 2014

கறவை மாடு வளர்ப்போர் கவனத்திற்கு!

கறவை மாடுகளில் சினைத்தங்காமை: கேள்வி பதில்
கறவை மாடு வளர்ப்பவர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினை சினை பிடிக்காததாகும். மாடுகள் சினைப்பருவத்திற்கு வந்திருப்பதை உரிய நேரத்தில் கண்டுபிடித்து அதற்கு சரியான நேரத்தில் இனவிருத்தி செய்யாதிருப்பதற்கு மாடு வைத்திருப்பவரிகளின் அறியாமைதான் முக்கிய காரணமாகும். இவ்வறியாமையை போக்கிட சில கேள்விகளை முன்வைத்து அதற்கான தீர்வுகளும் இக்கட்டுரை வாயிலாக அறியலாம்.

1. சினைப்பருவத்தைக் கண்டறிந்து சரியான நேரத்தில் இனவிருத்தி செய்யாமை:
அ) கிடேரிகளை சினைப்படுத்துவதற்கு ஏற்ற வயது என்ன?
பொதுவாக கலப்பினக் கிடேரிகளை நல்ல முறையில் பராமரிக்கும் பொழுது 15 முதல் 18 மாத வயதில் பருவமடைந்து சினைப்படுத்துவதற்கு தயாராகி வருகின்றன. அப்போது அதன் உடல் எடையும் (200 – 250 கிலோ), இனப்பெருக்க உறுப்புக்களும் போதுமான வளர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
ஆ) சினைத் தருண அறிகுறிகள் யாவை?
அ. மாடுகள் அமைதியின்றி காணப்படும்.
ஆ. தீவனம் மற்றும் தண்ணீர் வழக்கத்தைவிட குறைந்த அளவு எடுத்துக்கொள்ளும்.
இ. பிறமாடுகள் மேல் தாவும் மேலும் பிறமாடுகள் தன்மீது தாவ அனுமதிக்கும்.
ஈ. அடிக்கடி சிறுநீர் கழியும்.
உ. பிறப்புறுப்பிலிருந்து தெளிந்த கண்ணாடி போன்ற திரவம் வெளிப்படும் மேலும் இவை கயிறுபோல் வந்து தரையில் படவும் வாய்ப்பிருக்கிறது.

இ) ஊமை சினைத்தருண அறிகுறிகள் என்றால் என்ன?
எருமை மாடுகளில் சினைத்தருண அறிகுறிகள் எளிதாக வெளியில் தென்படுவதில்லை. குறிப்பாக கன்று ஈன்ற எருமைகள் நீண்ட நாட்களுக்கு சினைக்கு வராமல் இருக்கும். இதில் பெரும்பகுதி சினைப்பருவ அறிகுறிகளை வெளியில் காட்டாது. இதைத்தான் ஊமைச் சினைத்தருண அறிகுறிகள் என்று அழைக்கப்படுகிறது. எருமைகளில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது மற்றும் இரவு நேரங்களில் அதிகமாகக் கத்துதல்தான் முக்கிய சினைத்தருண அறிகுறிகளாக கருதப்படுகிறது.
ஈ)மாடுகள் பெரும்பாலும் அமாவாசை மற்றும் பெளர்ணமி காலங்களில்தான் சினைப்பருவத்திற்கு வருமா?
கறவை மாடு வளர்ப்போரிடையே மாடுகள் அமாவாசை மற்றும் பெளர்ணமி காலங்களில் சினைக்கு விடும் பழக்கம் உள்ளது. இது ஒரு தவறான நம்பிக்கையாகும். ஏனெனில் பருவமடைந்த கிடேரிகள் 21 நாட்களுக்கு ஒரு முறை சினைப் பருவத்திற்கு வரும். இத்தருணத்தில் இனவிருத்தி செய்து பயன்பெற வேண்டும்.


உ) மாடுகளை சினைப்படுத்த சரியான நேரம் எது?
இன்றைய சூழ்நிலையில் மாடுகளில் சினைத்தங்காமை ஏற்படுவதற்கு முக்கியக்காரணம் மாடுகளைச் சரியான தருணத்தில் சினைப்படுத்தாதது ஆகும். பொதுவாக கிடேரி மற்றும் பசுக்கள் 18 முதல் 24 மணிநேரம் சினைப்பருவத்தில் இருக்கும். இந்நேரத்தில் மாடுகளைச் சினப்படுத்திவிட வேண்டும். அதாவது காலையில் சினைப்பருவ அறிகுறிகள் தென்பட்டால் அன்று மாலையிலும், மாலையில் தென்பட்டால் அடுத்த நாள் காலையிலும் சினைப்படுத்த வேண்டும்.
2. கறவைமாடுகளில் சினைத்தங்காமையை குறைக்க எம்மாதிரியான தீவன மேலாண்மைகளை கடைபிடிக்க வேண்டும்?
கறவை மாடுகளுக்கு கொடுக்கக்கூடிய தீவனத்தில் சத்துக்கள் குறைவாக இருந்தால் பசுக்கள் சினைப்பருவத்திற்கு வரும் ஆனால் சினைத்தங்காது சிலசமயம் சினைப்பருவம் வந்து வெளியில் தெரியாமல் இருக்கும். சத்துக்குறைவு மிக அதிகமாக இருந்தால் மாடுகள் சினைப்பருவத்திற்கு வருவதே நின்றுவிடும். மேலும், சினைப்பருவ சுழற்சியும் தடைபட்டுவிடும்.
தீவனத்தில் 13-20 சதவிகிதம் புரதச்சத்து இருக்க வேண்டும். எரிசக்தி மற்றும் புரதசத்து பற்றாக்குறை ஏற்பட்டால் வளர்ச்சிக்குறைவு, தாமதமான பருவமடைதல், கன்று ஈன்றபின் காலம்தாழ்த்தி பருவத்திற்கு வருதல் ஆகிய பாதிப்புகள் உண்டாகலாம்.
உயிர்ச் சத்துக்கள் குறிப்பாக வைட்டமின் ஏ,இ, மற்றும் பாஸ்பரஸ், செம்பு, கோபால்ட், இரும்பு, துத்தநாகம், அயோடின், செலினியம் போன்ற தாது உப்புக்களின் பற்றாக்குறையால் மாடுகள் சினையாகாமல் இருக்கும். ஆகவே சரிவிகிதத் தீவனம் அளிக்கவேண்டும். அதாவது அடர் தீவனம், பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் சரிவிகிதத்தில் கொடுக்க வேண்டும். பசுந்தீவனம் 1.5 கிலோவும் ஒரு நாளைக்கு ஒரு மாட்டிற்கு கொடுக்க வேண்டும். பசுந்தீவனம் (Co-1,3, வேலிமசால்) 10-15 கிலோவும், உலர் தீவனம் 5 கிலோவும், அடர்தீவனம் 1.5 கிலோவும் ஒரு நாளைக்கு ஒரு மாட்டிற்கு கொடுக்க வேண்டும். இதைத்தவிர தாதுஉப்புகலவை ஒரு மாட்டிற்க்கு ஒரு நாளைக்கு 30 கிராமும் சினைமாட்டிற்க்கு 50 கிராமும் கொடுக்க வேண்டும்.
3) சந்தேகத்திற்குரிய விந்தின் தரம் என்றால் என்ன?
செயற்கை முறையில் இனவிருத்தி செய்யப்படும்போது உபயோகப்படுத்தும் விந்தின் தரம் உயர்ந்ததாக இருக்க வேண்டும். ஒரு விந்துக்குச்சியில் 10 மில்லியன் முன்னோக்கிய ஓட்டமுள்ள விந்தணுக்கள் இருக்க வேண்டும். குறைந்தது 30 சதவிகிதம் விந்தணுக்கள் முன்னோட்டமுள்ளவைகளாக இருக்க வேண்டும்.
4) சினைப்பிடிக்காமைக்கு மற்ற காரணங்கள் யாவை?
அ. இனப்பெருக்க உறுப்புகளின் மாற்றம்
இவை பிறப்பில் உருவானதாக இருக்கலாம் அல்லது கருப்பையில் ஏற்பட்ட நோயின் விளைவாக வரலாம்.
ஆ. இனப்பெருக்க உறுப்புகளில் நோய்
கருப்பை அழற்சி கிருமிகளால் ஏற்படுகிறது. இதன்காரணமாக சினைப்பருவ காலத்தில் ஏற்படும் திரவம் கோழை கண்ணாடிபோன்று தெளிவாக இல்லாமல் வெள்ளையாக இருக்கும். இவ்வாறு இருந்தால் அதற்கு சிகிச்சை செய்யவேண்டும்.
இ. கருமுட்டை வெளியாதலில் கோளாறுகள்.
கருமுட்டை சூலகத்திலிருந்து வெளிவராதிருத்தல், தாமதமாக வெளிவருதல் மேலும் சூலகத்தில் கட்டி போன்றவை பசுக்கள் சினைப்பிடிப்பதற்குத் தடையாக இருக்கினறன. சூலகக்கட்டி பால் கொடுக்கும் பசுக்களிலும், அதிகப் புரதச்சத்தைப் பெறும் பசுக்களிலும் காணப்படும். இதன் காரணமாக பசுக்கள் 21 நாட்களுக்கு ஒரு முறைக்கு பதிலாக 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

ஈ) குறிப்பிட்ட நோய்கள்:
டிரைக்கோமோனியாசிஸ், கேம்பைலோ பேக்டிரியாசிஸ் போன்ற நோய்கள் இளம் கரு இறப்பை ஏற்படுத்தி சினைத்தங்காமை அதிக அளவில் ஏற்படுத்துகின்றன.
கறவை மாடுகள் சினைபிடிப்பதற்கான இயற்கை வைத்தியம்

அ) மலடு நீங்க கருவேப்பிலை:
பருவத்திற்கு வந்து சினைப்பிடிக்காத மாடுகளுக்கு கறிவேப்பிலை இலையை தினமும் கால் கிலோ அளவில் 10 நாட்களுக்கு கொடுப்பதன் மூலம் 100க்கு 80 மாடுகள் சினைப்பிடித்துள்ளதாக கூறுகின்றனர். கறிவேப்பிலையில் இரும்பு, ஜிங்க், மாங்கனீசு மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ளதால் சினைப்பிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என ஆராயப்பட்டுள்ளது.
ஆ) பருவத்திற்கு வருவதற்கு சோற்றுக்கற்றாழை
பருவத்திற்கு வராத மாடுகளுக்கு முளைக்கட்டிய கொள்ளு கால் கிலோ, காலை மாலை இருவேளை மூன்று நாட்களுக்கும் கறிவேப்பிலை கால் கிலோ 7 நாட்களுக்கும் அதன் பிறகு சோற்றுக்கற்றாளை மடல் 4 நாட்களுக்கு கொடுத்ததன் மூலம் பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்ட மாடுகள் பருவத்திற்கு வருவதாக கூறுகின்றனர்.

No comments:

Post a Comment