தென்னை உள்ளிட்ட பயிர்களுக்கு உயிர் உரங்களை இட்டு உற்பத்தியைப் பெருக்க, விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது. இதுகுறித்து மேல்புறம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் தமிழ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
- தென்னை, ரப்பர் மரங்களுக்கு வேர் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா உயிர் உரம் இட்டு மகசூல் அதிகம் பெறலாம்.
- ஆனி, ஆடி சாரல் மழையைப் பயன்படுத்தி ரப்பர், தென்னை மரங்களுக்கு ரசாயன உரத்துடன் தொழு உரம் இடும் பழக்கம் மேல்புறம் வட்டாரப் பகுதியில் உள்ளது. பாதை வசதி இல்லாத மலைகளில் உள்ள தோட்டங்களுக்கு அதிக எடை கொண்ட ரசாயன உரம் மற்றும் தொழு உரத்தை கொண்டு சேர்ப்பது மிகவும் கடினமான பணியாகும். அதிகமாக கூலி ஆள்கள் தேவைப்படுவதால் செலவும் அதிகமாகும்.
- குறைந்த எடை கொண்ட உயிர் உரங்கள் மூலம் உரமிட்டால் அதிகச் செலவை தவிர்க்கலாம்.
- பயிருக்குத் தேவையான தழைச் சத்தை அசோஸ்பைரில்லம் மூலமாகவும், மணிச்சத்தை பாஸ்போபாக்டீரியா என்னும் உயிர் உரமாகவும் இடலாம்.
- அசோஸ்பைரில்லம் உயிர் உரம், காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து மண்ணில் சேர்ப்பதுடன் பயிர் ஊக்கிகளை வெளியிட்டு பயிர் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.
- உயிர் உரங்கள் இடப்பட்ட பயிர்கள் அதிக வேர் கிளைகளுடன் வளர்ந்து அதிகப்படியான நீர் மற்றும் உரச்சத்தை பயிர் கிரகிக்கச் செய்யும். இதனால் பயிர் வளர்ச்சி அதிகரிக்கும்.
- ரசாயன உரங்கள் இடுவதால் மண்ணின் தன்மை பாதிக்கப்படுவதுடன் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் இயக்கத்தையும் தடுத்துவிடும். எனவே உயிர் உரங்கள் மூலம் மரப்பயிர்களுக்கு உரமிடுவது சிறந்தது.
- மரம் ஒன்றிற்கு 50 மில்லி அசோஸ்பைரில்லம் மற்றும் 50 மில்லி பாஸ்போபாக்டீரியா உரத்தை நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து ஒரு வார காலம் நிழலில் வைத்திருந்து இடவேண்டும்.
- விவசாயிகளுக்குத் தேவையான உயிர் உரங்கள் மேல்புறம் வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை வாங்கி பயன்பெற விவசாயிகள் முன்வர வேண்டும் என்றார் அவர்.
No comments:
Post a Comment