Thursday, January 15, 2015

இயற்கை முறையில் இமாம்பசந்த் - மகசூல் கூட்டும் மகத்தான தொழில்நுட்பங்கள்

ரசாயன விவசாயமாக இருந்தாலும் சரி... இயற்கை முறை விவசாயமாக இருந்தாலும் சரி... வழக்கமாகக் கடைப்பிடிக்கும் சாகுபடி முறைகளோடு சில தொழில்நுட்பங்களைச் சேர்க்கும்போது விளைச்சலில் அபரிமிதமான மாற்றங்கள் உண்டாகின்றன. பல விவசாயிகள் இதை அனுபவப்பூர்வமாக நிரூபித்து வருகின்றனர். திண்டுக்கல், துரைபாண்டியன் அத்தகையோரில் ஒருவர். இவர், கிட்டத்தட்ட 98% இயற்கை முறை விவசாயத்தில் மா சாகுபடி செய்துவருகிறார்!
திண்டுக்கல்-சிலுவத்தூர் சாலையில் 19-வது கிலோமீட்டரில் உள்ள கம்பிளியம்பட்டி எனும் கிராமத்தில் இருக்கிறது, துரைபாண்டியனின் மாந்தோப்பு. தோப்பைச் சுற்றியுள்ள நிலங்களில் கடுமையான வறட்சி காரணமாக புற்கள்கூட கருகியிருக்கும் நிலையிலும், இவருடைய மாந்தோப்பு மட்டும் பசுமை கட்டி நிற்கிறது. முறையாக கவாத்து செய்யப்பட்ட மா மரங்களில் கொத்துக்கொத்தாக காய்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. நான்கு மா மரங்களுக்கு இடையில் ஒரு தென்னை... ஒவ்வொரு தென்னையைச் சுற்றியும் வாழை மரங்கள்... என அணிவகுத்து நிற்கின்றன. கொளுத்தும் வெயிலுக்கு இதமாக கொட்டகையில் அமர்ந்திருந்த துரைபாண்டியனைச் சந்தித்தோம்.
இமாம்பசந்த் ரகத்துக்கு அதிக விலை!
''லாரி டிரான்ஸ்போர்ட்தான் எனக்கு பிசினஸ். திண்டுக்கல்லுல ஒரு கல்யாண மண்டபம் இருக்கு. ரெண்டையும் பாத்துக்கிட்டு விவசாயத்தையும் செஞ்சிட்டு இருக்கேன். இந்த இடம் ஒரு காலத்துல கல்லுக் காடா இருந்துச்சி. 30 வருஷத்துக்கு முன்ன மா நடலாம்னு முடிவு செஞ்சேன். இது சம்பந்தமா என்னோட சொந்தக்காரர் பாஸ்கரன்கிட்ட பேசினப்போ, 'நல்ல யோசனை’னு தெம்பு கொடுத்தார். உடனே, ஆந்திர மாநிலம் 'ஜிதிகுப்பா’ங்கிற இடத்துக்குப் போய், கல்லாமை, செந்தூரம், பெங்களூரா, இமாம்பசந்த்னு பல ரகங்கள்ல தரமான மாங்கன்னுகளை வாங்கிட்டு வந்து நட்டோம். எல்லாம் வளர்ந்து காய்ப்புக்கு வந்த சமயத்துல, 4 இமாம்பசந்த மரங்கதான் இருந்துச்சு. ஆனா, அந்த ரகத்துக்குத்தான் அதிக விலை கிடைச்சிது. அதனால, தோப்பு முழுக்க இமாம்பசந்த் ரகத்தையே நட்டுடலாம்னு முடிவு செஞ்சிட்டோம். அதுக்காக, இமாம்பசந்த் பத்தின விஷயங்களைத் தெரிஞ்சுக்கலாம்னு நானும், பாஸ்கரனும் அலைஞ்சப்போ, ஒரு தகவல் கிடைச்சிது.
ஒட்டுச்செடியில் ஆண்டு முழுவதும் காய்ப்பு!
ஆந்திராவைச் சேர்ந்த தோட்டக்கலைப் பேராசிரியர் ஒருத்தர், 'இமாம்பசந்த், ஒரு வருஷம்விட்டு ஒரு வருஷம்தான் நல்ல மகசூல் கொடுக்கும். ஆனா, ஒரு சின்ன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வருஷம் முழுக்க காய்க்க வைக்க முடியும். ஃபீனா ரக மாஞ்செடியை (நீலம் ரக மாம்பழத்தை ஆந்திர மாநிலத்தில் இந்தப் பெயரில்தான் அழைக்கிறார்கள்) வேர்ச்செடியாகவும், இமாம்பசந்த்தை தாய்ச் செடியாகவும் வெச்சி ஒட்டுக்கட்டி... தரமான இமாம்பசந்த் செடிகளை உருவாக்கினா, மகசூலும் நல்லா இருக்கும். வருஷம் முழுசும் காய்க்கும்’னு சொல்லி... ஃபீனா ரகச் செடிகளை வாங்கிக் கொடுத்து, ஒட்டுக் கட்டுறதுக்கு ஆட்களையும் ஏற்பாடு செஞ்சி கொடுத்தாரு. ஃபீனா ரகம் நல்ல சுவையா இருக்கறதோட பழமும் பெருசா இருக்கும். அவர் சொன்ன மாதிரி ஒட்டுக் கட்டி நாத்து உருவானதும்... தோட்டத்துல இருந்த மத்த மரங்களை எல்லாம் வெட்டிட்டு... முழுக்க இமாம்பசந்த் செடிகளை நட்டுட்டோம். இப்போ, மொத்தம் 21 ஏக்கர்ல 800 இமாம்பசந்த் இருக்கு. கூடவே, மகரந்தச் சேர்க்கைக்காக சேலம், பெங்களூரா, செந்தூரம் ரகங்கள்ல 250 மரங்களை வெச்சிருக்கோம்'' என்ற துரைபாண்டியன், தொடர்ந்தார்.
''மரங்கள் எல்லாம் ஒவ்வொரு வருஷமும் நல்ல மகசூல் கொடுக்குது. ஆரம்பத்துல வெச்ச நாலு தாய் மரங்களும் இன்னமும் நல்லா காய்ச்சிட்டு இருக்கு. அதுல மறுபடியும் ஒட்டுக் கட்டி அடர்நடவு முறையில
20 ஏக்கர்ல இமாம்பசந்த் நடப்போறோம். தோப்புக்கு கிணத்துப் பாசனம்தான். ரெண்டு கிலோ மீட்டர் தள்ளி இருக்கற கிணத்துல இருந்து, தண்ணி கொண்டு வந்து சொட்டு நீர் மூலமா பாசனம் பண்றோம். கடுமையான வறட்சியிலயும் மரங்களைக் காய விடாம வெச்சிருக்கறது, சொட்டு நீர்தான்'' என்ற துரைபாண்டியன், இமாம்பசந்த் சாகுபடி முறைகளைச் சொல்ல ஆரம்பித்தார். அது பாடமாக இங்கே.

உழவே தேவையில்லை!
''ஏப்ரல், மே மாதங்கள் தவிர, மற்ற மாதங்களில் மா நடவு செய்யலாம். வரிசைக்கு வரிசை, செடிக்குச் செடி 30 அடி இடைவெளி இருக்குமாறு 2 அடிக்கு 2 அடி அளவில் குழியெடுத்து, ஆறப்போட வேண்டும் (அடர்நடவு முறையில் 15 அடிக்கு 15 அடி இடைவெளி கொடுத்தால் போதும். இவர் வழக்கமான முறையில் 30 அடி இடைவெளியில்தான் நடவு செய்துள்ளார்). குழியின் நடுப்பகுதியில் ஒட்டுச்செடியை வைத்து, ஒட்டுக் கட்டிய பகுதி நிலத்தின் மேல் மட்டத்தில் இருந்து, அரையடி உள்ளே இருக்குமாறு... மேல் மண், காய்ந்த இலை, தழைக் கழிவுகள் ஆகியவற்றை அடுக்கடுக்காக இட்டு, குழியை நிரப்ப வேண்டும். செடியைக் காய விடாமல், அதேநேரம் அதிக தண்ணீர் கொடுக்காமல்... சொட்டு நீர்ப்பாசனம் மூலமாக... காய்ச்சலும் பாய்ச்சலும் என்கிற வகையில் பாசனம் செய்யவேண்டும். நடவு செய்த முதல் 5 மாதம் வரை எந்த உரமும் கொடுக்கத் தேவையில்லை. 6-ம் மாதம் ஒவ்வொரு செடிக்கும் 3 கிலோ தொழுவுரம் கொடுக்க வேண்டும். நடவு செய்து 6 மாதங்கள் முடிந்த பிறகு, ஓர் உழவு செய்வது நல்லது. அதற்குப் பிறகு எப்போதும் உழவு தேவையில்லை.
கவாத்து கவனம்..!
செடி வளரும்போதே முறையாக கவாத்து செய்து வரவேண்டும். 8-ம் மாதத்தில் 2 மீட்டர் உயரம் வரை வளரும். அதுவரை செடிகளில் பக்கக் கிளைகள் இல்லாமல், நேராகச் செல்லுமாறு கவாத்து செய்ய வேண்டும். 2 மீட்டர் உயரத்துக்கு மேல்... தரமான, தெளிவான 2 அல்லது 3 கிளைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒன்றரை ஆண்டுகளில் தரமான 6 கிளைகளை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை கவாத்து செய்துவிட வேண்டும்.
இப்படி முறையாக கவாத்து செய்வதால், செடிகள் சீக்கிரம் வளர்ச்சியடையும். மா மரத்தில் அதிகக் கிளைகள் இருந்தால்தான் நிறைய காய்க்கும் என்கிற எண்ணத்தில், மரத்தைக் கவாத்து செய்யாமல் அடர்த்தியாக வைத்திருப்பார்கள். இதனால் மகசூல் பாதிக்கப்படுமே தவிர, நிச்சயம் அதிகரிக்காது. முறையாக கவாத்து செய்து மரத்தை காற்றோட்டமாகவும், அனைத்துப் பகுதியிலும் சூரிய ஒளி படுமாறும் வைத்துக் கொண்டால் அதிக மகசூல் கிடைக்கும். கவாத்து செய்த இடத்தில் இருந்து காய்கள் கொத்துக் கொத்தாகத் தொங்கும். பூச்சிகளும் அதிகம் தாக்காது.
களைகளும் அவசியம்!
கவாத்து போன்றே மூடாக்கும் ஓர் அருமையான தொழில்நுட்பம். தோப்புகளில் புதர்போல மண்டியுள்ள களைச் செடிகளை, அரையடி உயரம் வரை விட்டு, ரோட்டாவேட்டர் மூலம் 'கட்’ செய்துவிட வேண்டும். இப்படி வெட்டப்படும் களைகளைக் காய்ந்தவுடன் மா மரங்களைச் சுற்றி மூடாக்கு போட வேண்டும். நிலத்தில் அரையடி உயர செடிகள் சிறிது நாட்களில் காய்ந்து போகும். அடுத்து மழை வரும்போது, காய்ந்து பட்டுப்போன வேர்கள் இருந்த துளைகள் வழியாக, மழை நீர் நிலத்துக்குள் சேகரமாகும். இதன் மூலம் நிலத்தில் உள்ள களைகளையே உரமாகவும், மழை நீர் சேமிக்க உதவும் ஊடகமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மண்ணரிப்பைத் தடுக்கும் கரைகள்!
நிலத்தின் மேல் மண், அடுத்த நிலத்துக்குக் கரைந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக 10 மரங்களுக்கு ஒரு கரை அமைக்க வேண்டும். பள்ளமான பகுதியில் இருந்து, மண்ணை எடுத்து மேடாக்கி கரை ஏற்படுத்த வேண்டும். இப்படிச் செய்வதால் மேல்மண் அந்தந்த நிலத்தில் இருப்பதோடு, மண் எடுத்த பள்ளத்தில் மழைநீர் சேகரமாகும். மா சாகுபடியில் இந்த மூன்று தொழில்நுட்பங்களும் முக்கியமானவை. இவற்றை முறையாகச் செய்தால் அதிக மகசூல் எடுக்கலாம்.
நடவு செய்த 2-ம் ஆண்டிலிருந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஒவ்வொரு செடிக்கும்... தலா 10 கிராம் சூடோமோனஸ், டிரைக்கோ டிரம்மா விரிடி, பாஸ்போ- பாக்டீரியா, அசோஸ்பைரில்லம், வேம் ஆகியவற்றுடன் 2 கிலோ தொழுவுரத்தைக் கலந்து வைத்து வந்தால், வளர்ச்சி நன்றாக இருப்பதோடு, நோய்களும் தாக்காது. இப்படி, முறையான தொழில்நுட்பங்களையும் பராமரிப்பையும் கடைபிடித்தால், இமாம்பசந்த் ரகத்தை ஆண்டுதோறும் காய்க்க வைக்க முடியும்.  
காய்கள் இல்லாத நேரத்தில் கவாத்து!
3-ம் ஆண்டில் இருந்து மரங்கள் காய்க்கத் தொடங்கும். 10, 20 காய்கள் என ஆரம்பிக்கும் மகசூல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து, 10 ஆண்டுகளில் ஒரு மரத்தில் 50 கிலோ அளவுக்கு காய்க்கும். நன்கு விளைந்த காயின் காம்புப் பகுதியில் சிறிய பள்ளம் ஏற்பட்டு, காம்பு காயத் தொடங்கும். அதுதான் அறுவடைக்குச் சரியான பருவம். அறுவடை முடிந்த பிறகு, செழிம்பாகத் தண்ணீர் கொடுத்து, மரம் நன்றாக தழைந்ததும் பாசனத்தை நிறுத்திவிட வேண்டும். பிறகு, வழக்கம்போல சொட்டு நீர் மூலமாக காய்ச்சலும் பாய்ச்சலும் என்கிற வகையில் பாசனம் செய்தால் போதும். அறுவடை முடிந்து,  மரங்களில் காய்கள் இல்லாத சமயத்தில் கவாத்து செய்து... 20 மில்லி குளோர் பைரிபாஸ், 40 மில்லி வேப் பெண்ணெய், ஒரு லிட்டர் மாட்டு சிறுநீர் ஆகியவற்றை, 20 லிட்டர் தண்ணீரில் கலந்து மரம் முழுவதும் தெளிக்க வேண்டும். இதன் மூலம், மரங்களில், இலைகளில் இருக்கும் பூச்சிகளின் முட்டைகள் அழிக்கப்படும்.
ஆண்டுக்கு 18 லட்சம்!
சாகுபடி பாடம் முடித்த துரைபாண்டியன், ''21 ஏக்கர்ல இருக்கற மா மரங்கள்ல இருந்து வழக்கமா, 35 டன்ல இருந்து 40 டன் வரைக்கும் மகசூல் கிடைக்கும். ஆனா, இந்த முறை வறட்சி அதிகமானதாலயும், மேல்மழை இல்லாததாலும் 30 டன்தான் கிடைக்கும் போல. கிலோ காய் 100 ரூபாய்ல இருந்து
140 ரூபாய் வரைக்கும் விற்பனையாகுது. இந்த வருஷம் உருட்டு காண்ட்ராக்டா 23 லட்ச ரூபாய்னு பேசி விட்டுட்டேன். அதுல எல்லா செலவும் போக, 18 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கும். இவ்வளவு கடுமையான வறட்சி யிலயும் இந்த லாபம் கிடைக்கறதுக்கு, சின்னச்சின்னத் தொழில்நுட்பங்கள்தான் காரணம்'' என்று புன்னகையுடன் விடை கொடுத்தார்.

தொடர்புக்கு,  
பாஸ்கரன்,
செல்போன்: 94432-25256


தன்னைக் கொடுத்து, தென்னையை வாழ வைக்கும் வாழை!
இந்த மாந்தோப்பில் நான்கு மா மரங்களுக்கு மத்தியில், ஒரு தென்னையும் அதைச் சுற்றி வாழையும் ஊடுபயிராக நிற்கின்றன. இதைப் பற்றி பேசிய பாஸ்கரன், ''கடுமையான வறட்சியைச் சமாளிக்க நாங்க நம்புறது, தொழில்நுட்பங்களைத்தான். நாலு மா மரங்களுக்கு இடையில நல்ல இடைவெளி இருக்கு. அதுல, தென்னை நடலாம்னு யோசிச்சோம். ஆனா, 'தென்னைக்கு அதிக தண்ணி தேவைப்படும். இருக்கற தண்ணி மா மரத்துக்கே போதலயே’னு யோசிச்சப்பதான்... 'தென்னையைச் சுத்தி வாழை நடலாம்’னு யோசனை வந்தது.
இது, குட்டை நெட்டை ரகத்தைச் சேர்ந்த தென்னை. கர்நாடக மாநிலம், மாண்டியாவுல வாங்குனது. மொத்தம் 1,250 தென்னை மரங்கள் இருக்கு. ஆனா, எந்தத் தென்னைக்கும் நேரடியா பாசனம் செய்றதில்லை. ஒவ்வொரு தென்னையைச் சுத்தியும் நாலு வாழையை நட்டிருக்கோம். சொட்டு நீர் மூலமா வாழைக்கு மட்டும் பாசனம் செய்றோம். வாழையில இருந்து ஈரத்தை உறிஞ்சி தென்னை செழிம்பா வளருது. கற்பூரவல்லி, செவ்வாழை ரகங்களை மட்டும்தான் வெச்சிருக்கோம். வாழை தார் போட்டதும், மரத்தை வெட்டி தென்னைக்கு மூடாக்கா போட்டுடுவோம். அடுத்தடுத்து வர்ற பக்கக் கன்னுகள் மூலமாவே தென்னையைக் காப்பாத்திட்டு இருக்கோம். அதே நேரத்துல, வாழை மூலமாகவும் வருமானம் கிடைச்சிட்டு இருக்கு'' என்றார்.

சுவைக் கூட்டும் வேம்பு!
மா சாகுபடியில், பூச்சித் தொல்லையைக் கட்டுப்படுத்த குளோர் பைரிபாஸ் எனும் ரசாயானத்தை பயன்படுத்து கிறார் துரைபாண்டியன். இதைப்பற்றி, பூச்சியியல் வல்லுநர் நீ. செல்வத்திடம் கேட்டபோது, ''குளோர் பைரிபாஸ் என்பது ரசாயனம் சார்ந்த பொருள். இதை, மா அறுவடைக்குப் பின் மரங்களுக்குப் பயன்படுத்துவதில் பிரச்னை இல்லை. அதேசமயம், இதற்கு மாற்றாக, வேப்பங்கொட்டையை நன்றாக இடித்து, அதன் சாறில் 100 மில்லிக்கு 10 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து அடித்தால் நல்ல பலன் கிடைக்கும். பழங்களும் சுவையாக இருக்கும்'' என்று ஆலோசனை வழங்கினார்.

No comments:

Post a Comment