Tuesday, January 13, 2015

பழ மரங்களுக்கான தொழில் நுட்பங்கள்

பல்வேறு பழ மரங்களுக்கான டிப்ஸ்களை போடி தோட்டக்கலை இயக்குநர் தொகுத்துள்ளார்.

மா மரம்:

ஒட்டு மாங்கன்றுகளில் வேர் பாகத்திலிருந்து வளரும் தளிர்களை நீக்கிவிடவேண்டும். 5 ஆண்டு வரை பூக்கும் பூக்களை கிள்ளிவிடவேண்டும். பின்னர் நல்ல காய்கள் பிடிக்கும் வகையில் உள்நோக்கி வளரும் கிளைகளையும், பலவீனமான கிளைகளையும் நெருக்கமான நுனிக் கிளைகளையும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கவாத்து செய்ய வேண்டும். 2 ஆண்டுக்கு ஒருமுறை பசுந்தாள் உரப் பயிர்களை பயிரிட்டு மடக்கி உழுதல் வேண்டும்.
மா மரத்தில் ஊடுபயிராக 5 ஆண்டு வரையிலும் மரவள்ளி, நிலக்கடலை மற்றும் காய்கறிப் பயிர்களை பயிரிட்டு கணிசமான வருமானம் பெறலாம்.

கொய்யா:

கொய்யாவில் புதிய வாதுகளில் இலைகளின் பிரிவில்தான் பூக்கள் தோன்றி காய்கள் பிடிக்கும். செப்டம்பர், அக்டோபர் மற்றும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் முந்தைய ஆண்டு வாதுகளில் 10-15 செ.மீ. செடியின் நுனிக்கிளைகளை வெட்டிவிடவேண்டும். இதனால் புதிய தளிர்கள் தோன்றி காய்கள் அதிகம் பிடிக்கும். வெட்டிய காயமுள்ள பகுதியின் மூலம் பூஞ்சாள நோய்கள் பரவி விடாமல் தடுக்க 1 சதவீத போர்டோ கலவை அல்லது பைட்டோலான் 3 கிராம் 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
பூக்கள் அதிகம் பிடிக்க 1 கிராம் யூரியா 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். மேல் வளரும் குச்சிகளை வளைத்து கற்களை கட்டித் தொங்கவிடுவதன் மூலம் காய்ப்புத் திறனை அதிகரிக்கலாம். கொய்யாவில் விதைகள் அதிகம் தோன்றுவதை தடுக்க ஜிப்ரலிக் அமிலம் 1 கிராம் 10 லிட்டர் நீரில் கரைத்து மொட்டுகள் தோன்ற ஆரம்பித்த உடன் கைத்தெளிப்பானால் ஒருமுறை தெளித்தால் விதைகள் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

சப்போட்டா:

சப்போட்டாவில் காய்கள் பிடிப்பதை அதிகரிக்க போரிக் அமிலம் 1 சதவீதக் கரைசலை தெளிக்க வேண்டும். சப்போட்டா கன்றுகளில் வேர்ச்செடியிலிருந்து வரும் துளிர்களையும், நீர் போத்துக்களையும் அவ்வப்போது நீக்க வேண்டும். தரை மட்டத்திலிருந்து வளரும் பக்க கிளைகளை நீக்க வேண்டும். சப்போட்டாவில் ஒரே ரகமாக நடாமல் பல ரகங்களை கலந்து நடவு செய்தால் அயல்மகரந்த சேர்க்கை அதிகரிக்கும். காய்கள் உற்பத்தியும் அதிகரிக்கும்.

நெல்லி:

நெல்லி கன்றுகளில் தரையிலிருந்து 3 அடி உயரத்துக்கு பக்க கிளைகள் உருவாகாமல் அவ்வப்போது வெட்டிவிட வேண்டும். பின்பு பக்க கிளைகள் எதிரெதிர் திசைகளில் அனுமதித்தல் வேண்டும். ஒட்டுக்கு கீழே வளரும் கிளைகளை தொடர்ந்து நீக்கிவிடவேண்டும். நோய்வாய்ப்பட்ட உடைந்த மற்றும் குறுக்கே செல்லும் கிளைகளை நீக்கிவிட வேண்டும்.

எலுமிச்சை:

பூக்கள் பூக்கும் தருணத்தில் காய் பிடிப்பதை அதிகரிக்க 2, 4 டி-20 மில்லிகிராம் மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும். ஜிங்க் சல்பேட் கரைசல் 5 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்து ஆண்டுக்கு மூன்று முறை மார்ச், ஜூலை, அக்டோபர் மாதங்களில் தெளிக்க வேண்டும். காய்ந்த கிளைகளை அகற்றி கார்பன்டசிம் 1 கிராம் அல்லது காப்பர் ஆக்சிகுளோரைடு 3 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும்.

முந்திரி:

ஒட்டுக்கன்றுகளை நட்ட பின் வேர்செடிகளில் துளிர்த்து வரும் மொட்டுகளை அவ்வப்போது கிள்ளி எடுத்துவிடவேண்டும். முதல் 3 ஆண்டுகளுக்கு கன்றுகளில் 2 மீட்டர் உயரம் வரை தோன்றும் பக்க கிளைகளை வெட்டி செடி நேராக உயரமாக வளர வகை செய்ய வேண்டும். வெட்டி எடுத்த பகுதிகளில் பூஞ்சாணமருந்து பூசிவிட வேண்டும். கன்று நட்ட முதல் 2 ஆண்டுக்கு பூங்கொத்துக்களை அப்புறப்படுத்த வேண்டும். மூன்றாம் ஆண்டிலிருந்துதான் காய்பிடிக்க விடவேண்டும்.

மாதுளை:

காய்ந்த, நோய் தாக்கிய குறுக்கு நெடுக்குமாக வளர்ந்துள்ள கிளைகள் மற்றும் போத்துக்களை நீக்கிவிடவேண்டும். புதிய கிளைகளில் பழங்கள் தோன்றும். எனவே புதிய கிளைகளின் வளர்ச்சியைத் துரிதப்படுத்த பழங்களை அறுவடை செய்த பிறகு டிசம்பரில் பழைய கிளைகளை மூன்றில் ஒரு பகுதி நீக்கிவிடவேண்டும். பூக்கள் அதிகமாக இருந்தால் போதிய எண்ணிக்கை விட்டு, மீதமுள்ளவற்றை நீக்கிவிட்டால் பெரிய பழங்களைப் பெறலாம். திரவ பாரபின் ஒரு சதம் மருந்தை ஜூன் மாதத்தில் 15 நாள் இடைவெளியில் இருமுறை தெளிப்பதன் மூலம் பழங்களில் வெடிப்பு உண்டாவதைத் தடுக்கலாம்

No comments:

Post a Comment