செய்தி: தமிழக கிராம மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி இலவசமாக ஆடு, மாடுகளை வழங்கும் திட்டத்திற்கு அதிகாரிகளுடன் ஆலோசனை.
நெருக்கடி மிகுந்த சென்னை வேண்டாம் என்று சொல்லி, அங்கு ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்த கணவன் மனைவி இருவரும் அந்த வேலையை விட்டு விட்டு சொந்த ஊரான தஞ்சாவூருக்கு போய் ஆட்டு பண்ணை தொடங்கியதாக பசுமை விகடனில் ஒரு கட்டுரை வந்தது. ஆடு வளர்ப்பு என்பது அந்த அளவு மனநிம்மதியும், செல்வமும் தரும் ஒரு நல்ல தொழில்.
ஆடுகளும், மாடுகளும் "கால்நடைச் செல்வங்கள்" என்று மதிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த செல்வங்கள் மறக்கப்பட்டு இன்றைக்கு இந்த தொழில்கள் எல்லாம் நசிந்து போயிருக்கின்றன. மாடுகள் குறைந்து போனதால் பாலுக்கு திண்டாட்டமாகி இருக்கிறது. ஆனால் ஆடு, மாடுகளை பண்ணையாக அமைத்து தொழில் செய்வதன் மூலம் சுயமாக பொருளாதாரத்தில் வளர்ச்சியடைய முடியும் என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. வித்தியாசமான சிந்தனை உள்ளவர்கள் ஆடுகளை பெருமளவில் பெருக்கி ஆட்டின் பாலை "பாக்கெட் வடிவில் " பேக் செய்தும் விற்பனை செய்யலாம்.
தாய்ப்பாலுக்கு மிகவும் நிகரான புரதங்கள், நோய்எதிர்ப்பு சக்தி போன்றவை பசுவின் பாலை விட ஆட்டுப்பாலில் மட்டுமே அதிகம். இந்த நிலையில் போதிய இடவசதி இல்லாதவர்கள் கூட சிறிய இடத்தில் ஆடுகளை வளர்க்கும் வகையில் "பரண் மேல் ஆடு வளர்ப்பு " என்னும் ஒரு தொழில் நுட்பத்தை நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியை சேர்ந்த டாக்டர்.பூவராஜன் நமக்கு செய்தியாக அளித்துள்ளார். விவசாயம் செய்ய போதிய நிலமில்லாத இஸ்ரேல் நாடு இதே போல் வீட்டு அலமாரி போன்ற அமைப்பில் பயிர்களை விளைவித்து வருவது இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கது. இதோ பரண்மேல் ஆடு வளர்ப்பு உங்கள் பார்வைக்கு.........
தமிழகத்தின் பொருளாதார வளத்திற்கு கால்நடை செல்வங்கள் பெரிய பங்களிப்பை செய்து வருகின்றன. குறிப்பாக ஆடு வளர்ப்பு நல்ல லாபம் தரும் தொழிலாக இருக்கிறது. படித்த இளைஞர்கள் தற்போது இந்த தொழிலில் இறங்கி வருவது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மேலும் இந்த தொழிலில் இறங்க திட்டமிடுபவர்களுக்கு பரண்மேல் ஆடு வளர்ப்பு என்னும் நவீன முறை கைகொடுப்பதாக இருக்கும்.