Saturday, December 17, 2011

ஆடு மேய்க்கலாம்! ஆயிரமாயிரமா சம்பாதிக்கலாம்!

``நீயெல்லாம் ஆடு மேய்க்கத் தாண்டா லாயக்கு' என்று யாராவது உங்களைப் பார்த்து திட்டினால் கோபபபடாதீர்கள். சந்தோஷப்படுங்கள். ஏதோ ஒரு படிப்பைப் படித்து விட்டு நான்காயிரம், ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு ஆளாய் அலைவதை விட, வீட்டிலிருந்தபடியே உடம்பு நோகாமல் ஆடு வளர்த்து அதே பணத்தைச் சம்பாதிக்கலாம். இதுக்கு நான் கியாரண்டி'' - நம்பிக்கையோடு உறுதி தருகிறார் தாமோதரன்.

விழுப்புரம் - பாண்டிச்சேரி சாலையில் வில்லியனூருக்குப் பக்கத்தில் இருக்கிற சிறிய கிராமம் பெரம்பை. இங்கு பெஸ்ட் பார்ம் என்கிற பெயரில் ஒரு ஆட்டுப் பண்ணையை நடத்தி வருகிறார் தாமோதரன். அதில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆடுகளையும் வளர்த்து வருகிறார். ஆடு வளர்ப்புக்கு இவர் வந்ததே சுவாரஸ்யமான தனிக்கதை.

``நான் ஒரு சென்னைவாசி. பிறந்தது, படித்தது எல்லாம் சென்னையில்தான். தமிழ்நாட்டு கிராமங்களில் கலைப் பொருட்களை இலங்கை, மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா என்று பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதுதான் என் வேலை.

எனக்கு காந்தியத்தில் நிறைய ஈடுபாடு உண்டு. கிராமங்களின் முன்னேற்றம்தான் உண்மையான முன்னேற்றம் என்று உறுதியாக நம்புகிறவன் நான். முப்பத்திரண்டு வயதில் திடீரன் எனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அந்த வயதிலேயே `ஓப்பன் ஹார்ட் அறுவை சிகிச்சை நடந்தது. `இனிமேல் நீண்ட தூரம் அடிக்கடி பயணம் செய்யக்கூடாது என்றார்கள் மருத்துவர்கள். கிராமத்தில் தங்கி மக்களுக்காகப் பணி செய்ய சரியான வாய்ப்பு இது என்று நினைத்து, பாண்டிச்சேரிக்கு வந்தேன். ஆடு வளர்ப்பில் இறங்கினேன். இப்போது எனக்கும் ஓரளவுக்குச் சம்பாத்தியம் கிடைக்கிறது. மக்களுக்கும் வேலை தர முடிகிறது'' என்கிறார் தாமோதரன்.

ஆடு வளர்ப்பது பற்றி எ முதல் இசட் வரை அருமையாகச் சொல்லித் தருகிறார் தாமோதரன். அவர் சொல்வதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்போமா?

``ஆடு வளர்ப்பது லாபகரமான தொழில் என்பதில் யாருக்கும் எள்ளளவு சந்தேகமும் வேண்டாம். நாம் வளர்க்கும் ஆடுகளை மிக மிக எளிதாக மார்க்கெட்டிங் செய்துவிடலாம் என்பதால், இந்தத் தொழிலில் ஆண், பெண் வித்தியாசமின்றி யார் வேண்டுமானாலும் தாராளமாக இறங்கலாம்.

கொட்டில் முறையில் நீங்கள் ஆடு வளர்க்கப் போகிறீர்கள் என்றால் உங்களுக்கு சொந்தமான இடத்திலேயே ஷெட் அமைத்து, ஆடு வளர்க்கலாம். அதற்கு உங்களுக்கு இரண்டு ஏக்கர் இடம் இருந்தால் போதும். பகலில் வெளியே ஆட்டை மேயவிட்டு, இரவில் கொட்டிலில் அடைத்துவிடலாம். மழைக் காலங்களில் ஆட்டை வெளியே கொண்டு போய் மேய்க்க முடியாதபோது, உங்களிடம் உள்ள இரண்டு ஏக்கரில் வளரும் பசுந்தீவனத்தை ஆடுகளுக்கு உணவாகக் கொடுக்கலாம்.உங்களிடம் நிறைய இடம் இருக்கிறது. மேய்ச்சலுக்காக ஆடுகளை வெளியே அனுப்பத் தேவையில்லை என்றால், ஆறு ஏக்கரை முதலில் தனியாக ஒதுக்கிவிடுங்கள். ஆட்டுக்குத் தேவையான பசுந்தீவனத்தை இந்த ஆறு ஏக்கரில் வளர்த்து, சாப்பிடத் தாருங்கள். நீங்கள் ஆடு வளர்க்கும் இடத்தைச் சுற்றி மேய்ச்சல் நிலம் இல்லை என்றால் தனியாக இடம் ஒதுக்கி, பசுந்தீவனம் வளர்த்து, ஆட்டைப் பராமரிப்பது தவிர வேறு வழியில்லை.

கொட்டில் முறையில் வளர்க்கும் போது ஆடுகளுக்கு அடிக்கடி நோய் வர வாய்ப்புண்டு. மேய்ச்சல் முறையில் வளர்த்தால் ஆடுகள் நிறைய அலைய வேண்டியிருக்கும். இதனால் ஆட்டின் உடல் எடை குறையும். இரண்டையும் சம அளவில் கலந்து வளர்க்கப்படும் ஆடுகள், நல்ல உடல் எடையோடு ஆரோக்கியமாக இருக்கும்.

நம்மூரில் நிறைய வகை ஆடுகள் உண்டு. நாட்டு ஆடுகள் வளர்ப்பதற்குச் சிறந்தவை. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள் செங்கனி, பால்கனி அருமையான ஆடு வகைகள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியாடும் நல்ல இறைச்சி தரக்கூடியவை.

ஆடுகளை வளர்க்க நிலங்கள் தயார் என்றால், சில விஷயங்களை அவசியம் தெரிந்து கொள்வது நல்லது. முதலில் ஆடுகளை சந்தையில் வாங்குவதைவிட, பண்ணைக்கு போய் வாங்குவது நல்லது. இரண்டாவது, உங்களுக்கான பசுந்தீவனத்தை நீங்களே வளர்த்தால்தான் செலவு குறையும். கலப்பினத் தீவனத்தை ஆடுகளுக்கு நிறைய தந்தால், நமக்குத்தான் செலவு அதிகமாகும்.

தொழில் ரீதியில் ஆடு வளர்க்க விரும்புகிறவர்கள், குட்டி ஆடுகளை வாங்காமல், ஒன்றரை வயதுள்ள இரண்டு பல்லுள்ள ஆடுகளாகப் பார்த்து வாங்க வேண்டும். அந்த மாதிரி ஆடுகள்தான் அடுத்த ஆறு மாதத்தில் குட்டி போடும். பதினைந்து மாதங்களுக்குப் பிறகு நல்ல உடல் எடையோடு இருக்கும். விற்றாலும் நல்ல விலைக்குப் போகும்.

ஒரு ஆட்டின் விலை ஆயிரம் ரூபாய் முதல் ஐம்பதாயிரம் ரூபாய் வரை விற்கிறார்கள். எந்த இனத்து ஆடுகளை வாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து ஆட்டின் விலை மாறும்'' - அடிப்படையான விஷயங்களை சொல்லிக் கொண்டே போகிறார் தாமோதரன்.

ஓரளவுக்கு வருவாய் தரக்கூடிய வகையில் எல்லோரும் ஆடு வளர்க்கிற மாதிரி ஒரு புதிய முறையை பல கிராமங்களில் அறிமுகப்படுத்தி இருக்கிறார் தாமோதரன். இரண்டு ஏக்கர் நிலமும் மூன்று பேர் வேலை பார்க்க்கூடிய ஒரு குடும்பத்துக்கு அல்லது ஒரு குழுவிற்கு 25 அல்லது 50 ஆடுகளைக் கொடுக்கிறார். இதற்காக அவர்கள் ஒரு நயா பைசாகூட கொடுக்க வேண்டியதில்லை. இந்த ஆடுகளை ஆரோக்கியமாகப் பராமரித்து, வளர்க்க வேண்டிய வேலை அவர்களுடையது. ஒரு ஆடு, இரண்டு ஆண்டுகளுக்குள் சராசரியாக மூன்று குட்டிகளை ஈணும். ஐம்பது ஆடுகளை நீங்கள் வளர்க்கிறீர்கள் என்றால் ஏறக்குறைய 150 குட்டிகள் உங்களுக்குக் கிடைக்கும். இதில் 75 குட்டிகளை நீங்களே வைத்துக் கொள்ளலாம். மீதமுள்ள குட்டிகளை தாமோதரனுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் அக்ரிமெண்ட்.

ஆடு வளர்க்கும் போது ஒன்றிரண்டு ஆடுகள் இறந்தாலும் அதற்காக அவர்கள் நஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை. அருகிலுள்ள கால்நடை மருத்துவரிடமிருந்து ஒரு சான்றிதழ் வாங்கிக் கொடுத்தாலே போதும். அதற்கான இன்ஷுரன்ஸை வாங்கிவிடுகிறார் தாமோதரன்.

``பாரம்பரியமான இந்த முறை நல்ல மேய்ச்சல் நிலம் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் அதிவேகமாகப் பரவி வருகிறது. நூறு ஆடுகளை நாம் வளர்க்கும் பட்சத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 2.25 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். நாங்களே பதிமூன்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆடுகளைக் கொடுத்து வளர்த்து வருகிறோம்'' என்கிறார் தாமோதரன்.

இன்னும் சில ஆண்டுகளில் கோழி வளர்ப்பு போல, ஆடு வளர்ப்பும் தனிப் பெருந் தொழிலாக வளர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தாமேதரனுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறவர்கள் 094437-37094 என்கிற எண்ணுடன் தொலைபேசலாம்.

கொசுறுத் தகவல் : மகாராஷ்டிராவில் SELF என்கிற ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார் தாமோதரன் என்கிற மராத்திக்காரர். கிராமங்களில் ஆடு வளர்ப்பதை ஊக்குவிப்பதுதான் இவரது அமைப்பின் வேலை. இந்த அமைப்பின் ஒரு ஆண்டு டேர்ன் - ஓவர் எவ்வளவு தெரியுமா? 650 கோடி ரூபாய்!

No comments:

Post a Comment