Saturday, August 29, 2015

வெண்டை சாகுபடியில் அதிக விளைச்சல் பெற ஆலோசனைகள்


வெண்டை சாகுபடியில் விளைச்சல் பெருக திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் விவசாயிகளுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
  • ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப சத்து மிகுந்த வெண்டை சாகுபடிக்கு ஆடிப்பட்டம் மிகவும் ஏற்ற தருணம். எனவே, விவசாயிகள் வெண்டை சாகுபடி முறைகளைத் தெரிந்து பயிர் செய்தால் அதிக விளைச்சல் பெறலாம்.
  • வெண்டையில் கோ-2, எம்.டி.யு. 1, அர்கா அனாமிகா,பார்பானி கிராந்தி, பூசா சவானி மற்றும் வர்சா உப்கார் ஆகிய சாதாரண ரகங்கள் மற்றும் யு.எஸ். 7902, கோ 3, யு.எஸ்.9ஏ, ஆர்த்தி, வர்ஷா, எம்- 10, எம்- 12, விஜயா, விஷால் ஆகிய வீரிய ஒட்டு ரகங்களும் சாகுபடிக்கு ஏற்றவை.
  • வெண்டையை அனைத்து வகை மண்ணிலும் பயிரிடலாம். நல்ல உரச் சத்துள்ள மண் வகைகளில் நன்றாக வளரும். கார,அமில நிலையை ஓரளவு தாங்கி வளரும். வெண்டை பயிரிட ஜூன்- ஆகஸ்ட் மற்றும் பிப்ரவரி- மார்ச் மாதங்கள் ஏற்றவை.
  • விதையைப் பொருத்தவரை சாதாரண ரகங்களுக்கு ஏக்கருக்கு 3 கிலோவும், வீரிய ஒட்டு ரகங்களுக்கு ஏக்கருக்கு 1.5 கிலோவும் தேவை. மூன்று முதல் நான்கு முறை நிலத்தை உழ வேண்டும். அடியுரமாக ஏக்கருக்கு 10 டன் தொழு உரமிட வேண்டும்.
விதை நேர்த்தி மற்றும் விதைத்தல் :
  • வெண்டை விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் கிலோவுக்கு 2 கிராம் கார்பண்டசிம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைகளை 400 கிராம் அசோஸ் பைரில்லம் மற்றும் ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலரவைக்க வேண்டும். 45 செ.மீ., இடைவெளியில் பார் அமைத்து 30 செ.மீ. இடைவெளியில் 2 விதைகள் வீதம் 2 செ.மீ. ஆழத்தில் ஊன்ற வேண்டும். பத்து நாள்களுக்குப் பின் நன்றாக உள்ள செடியை வைத்துக் கொண்டு மற்றதைக் களைத்துவிட வேண்டும்.
  • விதைத்த பின் வாரத்திற்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும். சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பது உன்னதமானது.

ஒருங்கிணைந்த உர நிர்வாகம் :
  • அடியுரமாக ஏக்கருக்கு 8 கிலோ தழைச்சத்து தரக்கூடிய 18 கிலோ யூரியா, 20 கிலோ மணிச்சத்து தரக்கூடிய 125 கிலோ சூப்பர் பாஸ்பேட், 16 கிலோ சாம்பல் சத்து தரக்கூடிய 27 கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை அடியுரமாக இட வேண்டும்.
  • விதைத்த 30 நாள்கள் கழித்து 8 கிலோ தழைச்சத்து தரக்கூடிய 18 கிலோ யூரியாவை மேலுரமாக இட வேண்டும். ஏக்கருக்கு 800 கிராம் அசோஸ் பைரில்லம் மற்றும் 800 கிராம் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை, 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து மண்ணில் நேரடியாக இட்டு, தழை மற்றும் மணிச்சத்து உரத் தேவையைக் குறைத்துக் கொள்ளலாம்.
இலைவழி உரமளித்தல்:
  • ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் யூரியா கலந்து பெறப்பட்ட ஒரு சத யூரியா கரைசலை விதைத்த 30-ம் நாள் முதல் பத்து நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 17 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் கலந்து பெறப்பட்ட ஒரு சத கரைசலை விதைத்த 30, 45 மற்றும் 60 -ம் நாள்களில் என மூன்று முறை தெளிக்க வேண்டும். இவ்வாறு இலைவழி ஊட்டம் அளிப்பதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம்.
ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகம்:
  • காய்த் துளைப்பானைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 5 இனக் கவர்ச்சிப் பொறி வைத்து, தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். காய்ப் புழுக்களால் தாக்கப்பட்ட காய்களைச் சேகரித்து அழித்துவிட வேண்டும். முட்டைகளை அழிக்க ஏக்கருக்கு 40 ஆயிரம் டிரைகோ கிரம்மா முட்டை ஒட்டுண்ணிகளை விட வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் பேசில்லஸ் துரிஞ்சென்சிஸ் என்ற உயிர்ப் பூசணக் கொல்லியை கலந்து தெளிக்கலாம்.
  • ஒரு லிட்டர் நீருக்கு 50 கிராம் வேப்பங்கொட்டைப் பொடி அல்லது 2 கிராம் கார்பரில் நனையும் தூள் அல்லது 2 மி.லி. மானோகுரோட்டோபாஸ் மருந்துகளில் ஒன்றைத் தெளிக்க வேண்டும். சாம்பல் நிற வண்டுகளைக் கட்டுப்படுத்த கார்போபியூரான் 3 ஜி குருணை மருந்து ஏக்கருக்கு 5 கிலோ இட வேண்டும்.
  • நூற்புழு தாக்குதல் மண் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டால், ஏக்கருக்கு 160 கிலோ வேப்பம் புண்ணாக்கை அடியுரமாக, பிற உரங்களுடன் கலந்து இட வேண்டும். மேலும் ஏக்கருக்கு 400 கிராம் 3 சத கார்போபியூரான் அல்லது 10 சத போரேட் குருணை மருந்து இடலாம்.
  • அசுவிணியைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. மிதைல் ஓ டெமட்டான் அல்லது 2 மி.லி. டைமிதியேட் மருந்துகளில் ஒன்றைத் தெளிக்க வேண்டும்.
  • மஞ்சள் நரம்புத் தேமல் நோய்: இது வெள்ளை ஈ எனும் பூச்சியால் வெண்டையில் பரவக்கூடிய ஒரு நச்சுயிரி (வைரஸ்) நோய். எனவே வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. வேப்ப எண்ணெய் அல்லது 2 மி.லி. மானோகுரோட்டாபாஸ் மருந்துகளில் ஒன்றைத் தெளிக்க வேண்டும்.
  • வெள்ளை ஈக்களைக் கவர்ந்திழுக்க மஞ்சள் ஒட்டும் பொறிகளை வயலில் அமைக்கலாம்.
  • கோடைக் காலங்களில் இந்நோய் மிக அதிக அளவில் தாக்குமாதலால் இந் நோயைத் தாங்கி வளரக்கூடிய அர்கா அனாமிகா, யு.எஸ்.9ஏ, ஏ.யு.எஸ்.7902 போன்ற ரகங்களைச் சாகுபடி செய்ய வேண்டும்.
  • சாம்பல் நோய்: நோயின் அறிகுறி தென்பட்டவுடனும், பின் 15 நாள்கள் கழித்தும் ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் நனையும் கந்தகம் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடை:
  • விதைத்த 45-ம் நாள் முதல் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். 90 முதல் 100 நாள்களில் ஏக்கருக்கு ஆறு டன் வரை மகசூல் எடுக்கலாம். எனவே, வெண்டை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் இந்த ஆடிப்பட்டத்தில் முறையான சாகுபடி முறைகளைக் கடைப்பிடித்து நிறைவான மகசூல் பெற்று பயனடையலாம் என்றார் அவர்.

வெண்டையில் காய்ப்புழு

வெண்டையில் காய்ப்புழு
சேதாரத்தின் அறிகுறிகள்:
  • இளம்புழுக்கள் இளந்துளிர்களை உன்னும்
  • முதிர்ந்தபுழுக்கள் வட்டவடிவில் காய்களில் துளையிடும்.
  • இப்புழுக்கள் காயிணைத் துளைத்து தலைப்பகுதியை உட்செலுத்தி உடலின் பாதிப்பின் பகுதியை வெளியே வைத்தக்கொண்டு சாப்பிடும்.

பூச்சியின் விபரம்:
  • முட்டை : பெண் அந்துப்பூச்சி சொரசொரப்பான வெள்ளைநிற முட்டைகளை தனித்தனியே இளம் இலையின் மேற்பகுதியில் இடுகின்றது.
  • புழு : பச்சை மற்றும் பழுப்பு நிற வேறுபாடுகளை தோற்றுவிக்கும். வளர்த்த புழுக்கள் பச்சை நிறமாகவும் உடலின் பக்கவாட்டில் சாம்பல் நிறக் கோடுகளுடன் காணப்படும்.
  • கூட்டுப்புழு :  கூட்டுப்புழு பழுப்பு நிறத்தில், மண், இலை மற்றும் பண்ணைக் கழிவுகளில் காணப்படும்.
  • முதிர்பூச்சி : பெண் அந்துப்பூச்சி வெளிர் பழுப்பு நிறமாக இருக்கும். ஆண் அந்துப்âச்சி வெளிர் பச்சை நிறத்தில் V – வடிவக் கோடுகள் இருக்கும்.
  • முன் இறக்கை : பழுப்பு நிற முன் இறக்கையில் V – வடிவக் கோடு இருக்கும்.
  • பின் இறக்கை : ஓரப்பகுதி அடர்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள் :
  • தாக்கப்பட்ட பழங்கள் மற்றும் வளர்ந்த புழுக்களையும் சேகரித்து அழிக்கவும்.
  • நாற்பது நாள் வயதுள்ள ஆப்ரிக்கன் உயர சாமந்தி பூச்செடிகளை கவர்ச்சிப்பயிராக 10 வரிசை தக்காளிசெடிக்கு 1 வரிவை பூச்செடி பயிரிடலாம்.
  • இனக்கவர்ச்சிப் பொறி ஹெலியூர் ஹெக்டேர்க்கு 15 வைக்கவும்.
  • முட்டை ஒட்டுண்ணிப்பான ட்ரைக்கோகிராம்மா கைலோனிஸ் ஹெக்டேருக்கு 50,000 எனும் அளவில் வாரம் ஒரு முறையாக 6 முறை விடவேண்டும்.
  • கிரைசோப்பெர்லா கார்னியா எனும் இரை விழுங்கிப் âச்சிகளை நட்ட 30 – ம் – நாள் முதல் வாரம் ஒரு முறை 50,000 முட்டைகள் அல்லது புழுக்களை விட வேண்டும்.
  • ஹெலிகோவெர்பா நிäக்ளியர் பாலிஹிட்ரோசிஸ் வைரஸ் [எச்.எ.என்.பி.வி ] திரவத்தினை ஹெக்டேருக்கு 500 புழு சமன் அளவுடன் பருத்தி விதை எண்ணெய் ஹெக்டேருக்கு 300 கிராம் அளவில் மாலை நேரத்தில் தெளிக்கவும்.
  • கார்பரில் 2 கிராம் / லிட்டர் அல்லது பெசில்லஸ் துருஞ்ஐியென்சிஸ் 2 கிராம் / லிட்டர் அளவில் தெளிக்கவும்.காய்கள் கனிந்ததற்கு பிறகு பூச்சிக்கொல்லிகளை தெளிக்கக்கூடாது.

வெண்டை சாகுபடி - Ladies Finger Farming

தோட்டக்கலைப் பயிர்களில் ஒன்றான வெண்டை சாகுபடியில் ஒருங்கிணைந்த மேலாண்மை நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நல்ல மகசூல் மற்றும் சிறந்த வருமானம் பெறலாம்.


இரகங்கள்: கோ 2, எம்டியு 1, அர்கா அனாமிகா, அர்கா அபஹாப், பார்பானி கிராந்தி, கோ 3, பூசா சவானி மற்றும் வர்சா உப்கார்.
மண் மற்றும் தட்பவெப்பநிலை: வெண்டை பயிரானது வெப்பத்தை விரும்பும் பயிராகும். நீண்ட நேர வெப்ப நாள்கள் இதற்கு தேவை. பனி மூட்டங்களால் இதன் வளர்ச்சி பாதிக்கப்படும். குளிர்காலத்திலும், குளிர் பிரதேசங்களிலும் வெண்டை நல்ல முறையில் வளராது.
வெண்டையை எல்லா வகை மண் வகையிலும் பயிரிடலாம்.
நல்ல உரச்சத்துள்ள மண்களில் மிகவும் நன்றாக வளரும். கார அமில நிலையை ஓரளவு தாங்கி வளரும்.
பருவம்: ஜூன்- ஆகஸ்ட் மற்றும் பிப்ரவரி மார்ச்.
விதையளவு: ஹெக்டேருக்கு 7.5 கிலோ தரமான விதைகளை தேர்வு செய்ய வேண்டும்.
நிலம் தயாரித்தல்: மூன்று முதல் நான்கு முறை நிலத்தை உழவேண்டும். கடைசி உழவுக்கு முன்பு 25 டன் தொழு உரம் இட்டு, 45 செ.மீ. இடைவெளி விட்டு வரிப்பாத்திகள் அமைக்க வேண்டும்.
விதை நேர்த்தி மற்றும் விதைத்தல்:
விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு ஒரு கிலோவுக்கு 2 கிராம் கேப்டான் அல்லது திராம் கொண்டு நேர்த்தி செய்யவேண்டும்.
பின்பு விதைகளை 400 கிராம் அசோஸ்பைரில்லம் கலவையுடன் கலந்து விதைக்கவேண்டும்.
நிழலில் ஆறவைத்த அரிசி கஞ்சியுடன் அசோஸ்பைரில்லம் தூளை நன்கு கலக்கவேண்டும். பிறகு இந்தக் கலவையில் வெண்டை விதையை நன்கு கலந்து அரை மணி நேரம் உலர வைக்கவேண்டும்.
இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை வரியில் 30 செ.மீ. இடைவெளியில் 2 விதைகள் என்ற விகிதத்தில் 2 செ.மீ. ஆழத்தில் ஊன்றவேண்டும். 10 நாள்களுக்குப் பிறகு 2 செடிகளை விட்டு மீதம் உள்ளவற்றை களைதல்வேண்டும்.
நீர் நிர்வாகம்:
நட்டவுடன் நீர் பாய்ச்சவேண்டும். பிறகு வாரத்துக்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.
உரமிடுதல்:
அடியுரமாக 20 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து மற்றும் 30 கிலோ சாம்பல் சத்து வரிகளில் ஒரு பக்கத்தில் இட்டு மண்ணுடன் நன்கு கலந்து இடவேண்டும்.
நட்ட 30 நாள்கள் கழித்து மேலுரமாக 20 கிலோ தழைச்சத்து இடவேண்டும்.
2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியம் நுண்ணுயிர் கலவையை 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து நேரடியாக மண்ணில் இட்டு, தழைச்சத்தின் தேவையை குறைத்துக் கொள்ளலாம். மேல் உரம் இட்டு மண் அணைத்து தண்ணீர் கட்டுவது மிகவும் அவசியமாகும்.
இலைவழி ஊட்டம்:
ஒரு சத யூரியா கரைசலை விதைத்த 30 நாள்கள் கழித்து 10 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவேண்டும்.
மீயூரேட் ஆப் பொட்டாஷ் 17 கிராம் ஒரு லிட்டர் நீரில் கரைத்து விதைத்த 30, 45 மற்றும் 60 ஆவது நாளில் தெளிப்பதன் மூலம் விளைச்சலை அதிகப்படுத்தலாம்.
காய்த்துளைப்பான்:
வெண்டையில் காய்த் துளைப்பான் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். இவற்றைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறி ஹெக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும்.
காய்ப் புழுக்களால் தாக்கப்பட்ட காய்களைச் சேகரித்து அழித்துவிடவேண்டும். ஹெக்டேருக்கு முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோ கிரம்மா ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையில் விடவேண்டும்.
கார்பரில் நனையும் தூள் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும் அல்லது எண்டோசல்பான் 1.5 மில்லி இவற்றுடன் ஒரு லிட்டர் நீர் கலந்து தெளிக்கவேண்டும். அல்லது வேப்பம் கொட்டைப் பொடி 50 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும்.

Thursday, August 27, 2015

பெல்லாரி வெங்காயம் பயிரிடும் முறை - Bellary Onion cultivation method


  • ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெங்காயம் பயிரிட்டால் நல்ல மகசூல் பெறலாம்
  •  உள்நாட்டுத் தேவை மற்றும் ஏற்றுமதி மூலம் அந்நிய செலாவணியை பெற்றுத்தருவதால் பெரிய வெங்காயம் என்று அழைக்கப்படும் பெல்லாரி வெங்காயம் ஒரு முக்கியமான காய்கறி பயிராக உள்ளது.
  • நமது நாட்டில் வெங்காயம் பல்வேறு சீதோஷ்ண நிலைகளில் பல்வேறு பருவங்களில் பயிரிடப்படுகிறது.
  •  நமது நாட்டில் தற்போதைய உற்பத்தி ஹெக்டேருக்கு 10 முதல் 12 டன்கள் மட்டுமே. வெங்காயத்தில் அதிக உற்பத்திக்கு நாற்றங்கால் மற்றும் நடவு வயல்களில் சிறந்த மேலாண்மை முறைகளுடன் அதிக மகசூல் தரவல்ல ரகங்களை தக்க பருவங்களில் சாகுபடி செய்வதே தீர்வாக உள்ளது.
 பருவம்:
  • தென்னிந்தியாவைப் பொறுத்த வரையில் மே, ஜூன் (கரீப் பருவம்) மாதங்களிலும் மற்றும் ஆகஸ்ட், செப்டம்பர் (ரபி பருவம்) மாதங்களிலும் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.
  • எனினும் குளிர் கால வெங்காய பயிர்களில்தான் சிறந்த மகசூல் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரகங்கள்:
  • தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மூலம் பல்வேறு ரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு ரகங்கள் வெளியிட்டிருப்பினும் அடர் சிகப்பு ரகங்களில் என் – 53, அக்ரிபவுன்ட், வெளிர் சிகப்பு ரகங்களில் பூசா சிகப்பு, என்-2-4-1, அக்ரிபவுன்ட் ஆகியவை முக்கிய ரகங்களாக சாகுபடியில் உள்ளன.

பயிரிடும் முற :
  •  பொதுவாக பெல்லாரி வெங்காயம் 125 முதல் 140 நாள்கள் வயதுடையதாகும்.
  • இதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள சமமான, வளம் நிறைந்த மண் தேவைப்படுகிறது.
  • மண்ணின் கார அமிலத் தன்மை 7 முதல் 7.6 வரை இருக்க வேண்டும்.
  • தண்ணீர் தேங்கும் களிமண் நிலங்களை வெங்காய சாகுபடிக்கு தவிர்ப்பது நல்லது.
  • விதை ஹெக்டேருக்கு 5 முதல் 6 கிலோ.
  • நாற்றங்கால் ஒரு ஹெக்டேருக்கு தேவைப்படும் நாற்றுகளை உற்பத்தி செய்ய 7.5 மீ. நீளம், 1 மீ. அகலம், 15 செ.மீ. உயரம் கொண்ட மேட்டுப்பாத்தி தேவைப்படும்.
  •  உரங்கள் முறையாக பயன்படுத்தினால் 6 முதல் 8 வாரங்களில் நடவுக்கு தயாராகிவிடும்.
  • நடவுக்குப் பின் 4 முதல் 6 நாள்களுக்கு ஒரு முறை மண்ணின் ஈரத்திற்கு ஏற்றவாறு நீர் பாய்ச்ச வேண்டும்.
  •  வெங்காய பயிரினை இலைப்பேன் மற்றும் இலைக்கருகல் மற்றும் பியூசேரியம் தண்டு அழுகல் மற்றும் வெங்காய அழுகல் போன்ற நோய்கள் பெருமளவில் தாக்கி சேதம் ஏற்படுத்துகிறது.இவற்றிற்கு தோட்டக்கலைத் துறை அலுவலர்களின் ஆலோசனையின்படி மருந்து தெளித்து பாதுகாக்கலாம்.
  •  கோலியனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட விவசாயிகள் பிடாகம், மரகதபுரம், சுந்தரிபாளையம், நல்லரசன்பேட்டை ஆகிய கிராமங்களில் பெல்லாரி வெங்காயம் சாகுபடி செய்துள்ளனர்.
  • விவசாயிகள் நாற்றுவிட்டது மற்றும் நடவு செய்த காலம் முதல் வெங்காய பயிரினை கவனமாக கவனித்து வரவேண்டும். அதில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் அதுகுறித்து சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள தோட்டக் கலை அலுவலர்களை அனுகி விவரம் பெற்று பயன்பெறலாம்.
விவசாயிகள் ஹெக்டருக்கு ரூ.7,500 மதிப்பில் 19:19:19 நீரில் கரையும் உரங்கள், இமிடாகுளோபிரீட், கார்பன்டாசிம் மற்றும் மான்கோசெப், சூடோமோனாஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா மற்றும் நுண்ணுரங்கள் போன்ற இடு பொருள்களை 50 சதவீத மானிய விலையில் உயர் தொழில் நுட்பத்தில் வெங்காய சாகுபடி திட்டத்தின் கீழ் பெற்று பயன்பெறலாம்
இவ்வாறு  பெல்லாரி விழுப்புரம் தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர் என். பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

பெல்லாரி வெங்காயத்தில் அதிக விளைச்சல் பெற - Bellary Onion


  • தமிழ்நாட்டில் கோவை, ஈரோடு, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெல்லாரிவெங்காயம் சாகுபடியாகிறது.
  • விதைக்கு ஏற்ற சரியான பருவம் மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நாற்று விட்டுப் பயிர் செய்தால் சிறப்பாக இருக்கும்.
  • ஏற்ற இரகங்கள் அக்ரி பவுண்டு, கருஞ்சிவப்பு, அல்கா கல்யாண்.
  • மார்ச் – ஏப்ரல் நாற்று விடும்போது நாற்றங்காலில் நோய் தாக்கும். நாற்று அழுகல் நுனிக்கருகல் நோய்கள் போன்றவை.
  • தண்ணீர் தேங்காத நிலத்தை தேர்வு செய்ய வேண்டும். மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும். 20 செ.மீ உயரத்தில் இருக்க வேண்டும். பாத்தியின் நீளம் 3 – 3 1/2 மீட்டர் அகலம் 30 செ.மீ. இருக்க வேண்டும். நல்ல மக்கிய தொழுஉரம் இட்டு கொத்தி விட வேண்டும்.
  • டிரைகோடெர்மா விரிடி 100 சதுர மீட்டருக்கு 15 கிராம் அளவில் இயற்கை உரத்துடன் கலந்து இட வேண்டும்.
  • 500 கிராம் யூரியா, 500 கிராம் சூப்பர், 400 கிராம் பொட்டாஷ் உரம் இட வேண்டும். ஒரு கிலோ விதைக்கு திரம் 2 கிராம் என்ற அளவில் கணக்கிட்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • பாத்தியில் 5-7 செ.மீ. இடைவெளியில் கோடுகள் இருக்க வேண்டும்.
  • விதைகளை 2 செ.மீ. ஆழத்தில் விதைக்க வேண்டும். 1 கிலோ விதைக்கு 100 சதுர மீட்டர் போதுமானது. சாதாரணமாக ஒரு ஏக்கருக்கு 300 சதுர மீட்டரில் 3 கிலோ விதை கொண்டு நாற்றங்கால் அமைக்க வேண்டும்.
  • காய்ந்த சருகு அல்லது வைக்கோல் கொண்டு மூடாக்கு போட வேண்டும் விதைகள் முளைத்து வந்தவுடன் மூடாக்கினை அகற்றி விட வேண்டும்.
  • நாற்றழுகல் நோய் தென்பட்டவுடன் திரம் மருந்தினை தெளிக்க வேண்டும். 1 லிட்டருக்கு 3 கிராம் என்ற அளவில் 10 நாட்கள் கழித்து மீண்டும் தெளிக்க வேண்டும். ரோகார் அல்லது மெடாசி ஸ்டாக்ஸ் போன்ற பூச்சி மருந்துகளைத் தெளிக்க வேண்டும்.
  • 1 லிட்டர் நீருக்கு 2 மிலி என்ற அளவில் நடவின் போது நாற்று 0.5 – 0.8 செ.மீ. விட்டத்துடன் பருமனாக இருக்க வேண்டும். 4 – 5 இலைகள் இருக்க வேண்டும். நாற்றுக்களைப் பறித்து 1 லிட்டர் நீருக்கு 1 கிராம் கார்பன்டாசிக் மானோகுரேஸ் 1 மிலி / லிட்டர் நீர் என்ற அளவில் கலந்து ஒட்டும் திரவம் சேர்த்து தெளிந்த பின் நடவு செய்ய வேண்டும்.
  • நாற்றுக்களை கவனத்துடன் தயாரித்தால் 7வது வாரத்தில் நாற்று நடவுக்கு தயார் ஆகி விடும்.
  • அடியுரமாக 45 கிலோ யூரியா, 400 கிலோ சூப்பர் பாஸ்பேட், 50 கிலோ பொட்டாஷ் இட வேண்டும். தவிர நன்கு மக்கிய தொழுஉரம் ஏக்கருக்கு 10 டன் இட வேண்டும்.
  • தொழுஉரத்தினை 20 கிலோ துத்தநாக சல்பேட்டையும் சேர்த்து இட வேண்டும். நாற்று நட்ட 30 நாட்கள் கழித்து 5 கிலோ யூரியா நன்கு பொடிசெய்த வேப்பம்புண்ணாக்குடன் கலந்து இட வேண்டும். தசகவ்யா ஒரு லிட்டர் நீருக்கு 3 மிலி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். 4-5 முறை தெளிக்கலாம். ஏக்கருக்கு 10 லிட்டர் அளவில் நீரிலும் கலந்து விடலாம்.
  • நடவு வயலில் 3-4 முறை உழுது 45 செ.மீ. இடைவெளியில் பார் அமைக்க வேண்டும். நாற்றுகளை பாரின் இருபுறமும் 10 செ.மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
  • 5-7 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
  • சின்ன வெங்காயம் சாகுபடி டிப்ஸ் - Small Onion Cultivation Tips

    சின்ன வெங்காயத்தில் ஏற்படும் இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து  விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப வல்லுனர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.  சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில் நுட்ப வல்லுனர்  ராஜாஜோஸ்லின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    • சின்ன வெங்கயமானது கோ.1 முதல் 5வரை மற்றும் எம்டியு 1. ஆகிய ரகங்கள் ஏற்றதாகும். நல்ல வடிகால் வசதியுடன் கூடிய வண்டல் மண் மிகவும் உகந்தது. க
    • ளிர் நிலங்கள் ஏற்றவை அல்ல. களிமண் நிலத்தில் வெங்காயம் சாகுபடி மிகவும் கடினம்.
    • வெப்பமான பருவ நிலையில் போதுமான அளவு மண்ணின் ஈரப்பதத்தில் இப்பயிர் நன்கு வளரும். சிறந்த மகசூலுக்கு மண்ணின் கார அமிலத்தன்மை 6-7 இருத்தல் வேண்டும்.
    • இதன் பருவமானது ஏப்ரல் -மே மற்றும் அக்டோபர்-நவம்பர் ஆகும். நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவு செய்ய வேண் டும்.
    • கடைசி உழவின்போது 45செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.
    • ஏக்கருக்கு அடியுரமாக 12 கிலோ தழைச்சத்து, 24கிலோ மணிச்சத்து மற்றும் 12 கிலோ சாம்பல் சத்து மற்றும் யூரியா 26 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 150 கிலோ, பொட்டாஷ் 20 கிலோ என்ற அளவில் ரசாயன உரங்களை அளிக்க வேண்டும்.
    • மேலும் நடுத்தர அளவுள்ள நன்கு காய்ந்த வெங்காயத்தை பார்களின் இருபுறமும் சரிவில் 10 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
    • விதைத்த மூன்றாம்  நாளும், பின்பு வாரம் ஒரு முறையும் நீர்ப்பாய்ச்ச வேண்டும். தேவைப்படும் போது களை எடுக்க வேண்டும்.
    • வெங்காயம் நட்ட 30 நாட்கள் கழித்து மேலுரமாக  ஏக்கருக்கு 12 கிலோ தழைச்சத்து கொடுக்க கூடிய யூரியா உரத்தை அளிக்க வேண்டும்.
    • சின்னவெங்காயத்தில் பல்வேறு நோய் தாக்குதலுக்கு உள்ளாகி மகசூல் இழப்பை உண்டு பண்ணுகிறது. அதன்படி இலைப்பேன் தாக்குதலால் பெரும் இழப்பை விவசாயிகளுக்கு ஏற்படுத்தி வருகிறது.

    • இந்நோய் தாக்குதலின் போது  பூச்சிகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இப்பூச்சிகள் இலைகளை சுரண்டி உறிஞ்சும். இதனால் இலைகள் வெண் திட்டுக்களாக காணப்படும்.
    • இலைகள் நுணியில் இருந்து வாடும். இதனை கட்டுப்படுத்த ஏக்கருக்கு மீதைல் டெமட்டான் 200மி அல்லது பாஸ்போமிடான் 200 மி என்ற அளவில் தெளிக்க வேண்டும். அதிகம் தழைச்சத்து இடுவதையும், நெருங்கி நடுவதையும் விவசாயிகள் தவிர்க்க வேண்டும்.
    • மேலும் வெங்காய ஈ தாக்குதலின்போது மண்ணில் உள்ள இடுக்களில் முட்டையிடும். அவற்றிலிருந்து வரும் சிறிய வெண்ணிறப் புழுக்கள் நிலத்தடியில் உள்ள தண்டுப்பகுதி மற்றும் வெங்காயத்தைக் குடைந்து தின்று அழுக செய்யும்.
    • இதை கட்டுப்படுத்த புரபனோபாஸ் 50 இசி, ஒரு மி.லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
    • அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன்னர் மாலிக்¬ட்ரகசைடு என்ற பயிர் முளைப்பை கட்டுப்படுத்தும் பயிர் விளையல் ரசாயனப்பொருளை 2500 பிபிஎம்(2.5 மி.லி லிட்டர் தண்ணீர்) என்ற விகிதத்தில் இலைவழி ஊட்டமாக தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வெங்காயத்தின் சேமிப்பு காலத்தை அதிகப்படுத்தலாம்.
    • மேலும் வெங்காயத்தை பிடுங்கிய பின்னர் மேல்தாள்களை நீக்கி வெங்காயத்தை காய வைக்க வேண்டும்.
    • பின்பு நல்ல காற்றோட்டமுள்ள அறை களில் சேமித்து வைக்க வேண்டும். இவ்வாறு செய் வதன் மூலம் சின்ன வெங்காயத்தில் அதிக மகசூல் பெற முடியும்.
    • மேலும் இது தொடர்பாக தகவல் பெற சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய அலுவலகத்தை தொடர் கொண்டு தகவல் பெறலாம். எனத்தெரிவித்துள்ளார்.

    விதை மூலம் சின்ன வெங்காயம் சாகுபடி - Small Onion Cultivation

    விதை மூலம் சாம்பார் வெங்காயம் நாற்று பாவி சாகுபடி செய்பவர்கள் கீழ்க்காணும் சிறப்பு விதிமுறைகளைக் கடைபிடித்து சிறப்பான மகசூல் எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


    பசுந்தாள் உரப்பயிர்களும் வெங்காயமும்:
    • பசுந்தாள் உரப் பயிர்களை வளர்த்து மடக்கிவிடும் தொழில்நுட்பத்தால் வெங்கா யத்தில் தரமான கிழங்குகளைப் பெறமுடியும்.
    • இதற்கு வெங்காய நாற்றுவிடுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பே தக்கைப்பூண்டு அல்லது சணப்பு அல்லது சோயாபீன்ஸ் அல்லது கொத்தவரை விதைகளை ஏக்கர் ஒன்றுக்கு 20 கிலோ விதைத்து 50 நாட்களில் ரோட்டவேட்டர் கருவி கொண்டு இரண்டுமுறை உழவேண்டும்.
    • நிலம் நன்கு ஆறியபின் அந்த நிலத்தில் ஒரு மாத இடைவெளி விட்டு வெங்காய நாற்றுகளை நடவேண்டும்.
    • அதற்கு தகுந்தாற்போல் கணக்கிட்டு வெங்காய விதை பாவும் தேதியை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.
    • இவ்வாறாக பசுந்தாள் உரமிட்டு வளம் கூட்டும் நிலத்தில் ஏக்கர் ஒன்றுக்கு 2 கிலோ சூடோமோனாஸ், 2 கிலோ டிரைக்கோ டெர்மா விரிடி, 5 கிலோ பாஸ்போபாக்டீரியா, 5 கிலோ அசோஸ்பைரில்லம் ஆகிய நுண்ணுயிரிகளை நன்கு மக்கிய மாட்டு எரு அல்லது மண்புழு உரம் 100 கிலோவுடன் உரநேர்த்தி செய்து பின் பாத்தி அமைத்தல் நலம்.
    உழவு மேலாண்மை:
    • வெங்காய விதை பாவி நாற்றங்காலுக்கு வயது 25 என்ற நிலையில் சாகுபடிக்குத் தேவையான நிலத்தை தேர்வுசெய்து இரண்டு மூன்று தடவை நன்கு உழவு செய்ய வேண்டும்.
    • ஏர் உழவு எனில் பதமான சூழலில் 4 உழவு போடவேண்டும்.
    • ஏழு கலப்பை அல்லது ஐந்து கலப்பை கொண்டு ஒரு வார இடைவெளியில் 2 தடவை உழுது கடைசியாக கொக்கி கொண்டு 2 உழவு போடுதல் அவசியம்.
    அடி உரம் மற்றும் உரமேலாண்மை:
    • அடி உரமிடுவதற்கு வாய்ப்பு உள்ளவர்கள் ஆட்டுக்கிடை மறிக்கலாம்.
    • தொழு எரு பயன்படுத்தும் பட்சத்தில் ஏக்கருக்கு 10 டன் இடலாம்.
    • கோழி எரு எனில் ஏக்கர் ஒன்றுக்கு 2 டன்னுக்கு மிகாமல் பயன்படுத்த வும்.கோழி எரு பயன்படுத்தும் பட்சத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பே வாங்கி நிழலில் கொட்டி ஒரு டன் உரத்திற்கு 50 கிலோ சூப்பர் பாஸ்பேட் கலந்து வைத்து பின் பயன்படுத்துவது மிக நன்று.முடிந்தால் வாரம் ஒரு முறை நீர் தெளித்துவந்தால் நன்கு மக்கிய, தரமான கோழி எரு கிடைக்கும்.
    பாத்தி அமைத்தல்:
    • அனைத்து அடி உரங்களும் இட்டபின் 8” அல்லது 20 செ.மீ. அகலம் கொண்ட கீழ் பார்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.
    நடவு மேலாண்மை:
    • தகுதியான நாற்றுகள் 45 முதல் 50 நாட்களில் உருவாகும்.
    • அதிகபட்சமாக 60 தினங்களில் நாற்று நடவை முடிக்கவும்.
    • நாற்றுகளை நடவுக்கு முந்தைய தினம் நீர் பாய்ச்சி, பறித்து, நீள்-பதியம் (நெட்டுப் பதியம்) வைத்து மறுதினம் நடவு செய்ய வேண்டும்.
    • அன்றே பறித்து உடனுக்குடனும் நடலாம். முந்தைய தினம் நாற்றுகளை எடுத்து பதியன் வைத்துக் கொண்டால் தொய்வில்லாமல் நடவு செய்யலாம்.
    • பறித்து வைத்த நாற்றுகளை சிறு சிறு முடிகளாகக் கட்டி, நடவு செய்வதற்கு முன் சீராக நாற்றின் முன்பகுதியை பதமான அரிவாள் கொண்டு கீழே கட்டை ஒன்றை வைத்துக்கொண்டு தேவையான அளவு கச்சிதமாக ஒரு கைப்பட வெட்டி நடவு செய்ய வேண்டும்.
    • நாற்று முடியின் நுனியை கழுத்தைத் திருகி தாள்களைக் கசக்கி எறிவது எக்காரணம் கொண்டும் தவிர்க்கப்பட வேண்டும்.
    • இவ்வாறு செய்வதால் பாரின் இருபக்கம் நடும் நாற்றுகள் காற்றில் சாயாமல் உறுதியாக நிற்கும். நாற்று நடவும் விரைவாகச் செல்லும்.
    • எடுத்து வைத்துள்ள நாற்றுகளை 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் வாளியில் 20 கிராம் சூடோமோனாஸ், 20 கிராம் டிரைகோடெர்மா விரிடி, 20 கிராம் அசோஸ்பைரில்லம் மூன்றையும் ஒன்றாகக் கரைத்து நாற்றின் வேர்ப்பகுதியை கரைசலில் முக்கி நடுவது மிக மிக நன்று. நாற்றுகள் நோய் தவிர்த்து விரைவில் பச்சை பிடிக்க ஏதுவாக இருக்கும்.
    மேலும் விபரங்களுக்கு: கண்மணி சந்திரசேகரன், 404, கண்மணி இயற்கை அங்காடி, ரயில்வே நிலையம் எதிரில், பழனிப்பாதை, ஒட்டன்சத்திரம்-624 619. அலைபேசி எண்: 09865963456

    முருங்கை சாகுபடி - Moringa Oleifera Drumstick Tree

    தானிய பயிர், பணப்பயிர், சாகுபடிகளைக் காட்டிலும் அதிக லாபத்தை விவசாயிகளுக்கு கொடுக்கக் கூடியது நிச்சயம் தோட்டக் கலையின் கீழ் வரும் காய்கறி சாகுபடிதான். காய்கறி சாகுபடியில் விற்பனை விலை எனும் ஒரே ஒரு இடத்தில்மட்டும்தான் விவசாயிகள் பெரும் இன்னலையும் ஏற்ற இறக்கத்தையும் சந்திக்க வேண்டியுள்ளது.


    மொரிங்கா ஒலிபெரா (Moringa Olefera) எனும் தாவரவியல் பெயருடைய முருங்கை ஆங்கிலத்தில் டிரம்ஸ்டிக் (Drumstick) என்று அழைக்கப்படுகின்றது. தமிழ்ப் பெயரும், ஆங்கிலப்பெயரும் இரண்டுமே காரணப் பெயர்கள்தான். முருங்கை மரத்தின் இலைகள் மிகவும் எளிதில் முறிந்துவிடும் தன்மையை உடையது. இப்படி முறிந்துவிடும் தன்மையை உடைய மரம் என்பதால் முருங்கை மரமானது ட்ரம் எனும் தாள வாத்தியம் வாசிக்கின்ற குச்சிப் போன்ற தோற்றத்தை உடையதால் ஆங்கிலத்தில் டிரம்ஸ்டிக் (Drumstick) எனும் பெயர் இந்த காய்க்கு சூட்டப்பட்டது.
    உரைபனி, கொட்டும் பனியை அறவே விரும்பாத முருங்கை ஒரு வெப்ப மண்டல பயிர். லேசான அமிலத்தன்மையுள்ள, தண்ணீர் தேங்காத, வடிகால் வசதியுள்ள நல்ல மண்வளம் உள்ள பகுதியில் செழித்து வளரும். முருங்கை வறட்சியும், வெப்பத்தையும் விரும்புகின்ற மரவகை. இதை மிக எளிதில் சாகுபடி செய்யலாம். இந்தியாவில் உற்பத்தியாகும் சுமார் 1.5 மில்லியன் மெட்ரிக் டன் முருங்கைக் காயின் உற்பத்தியில் முதலிடத்தை பெறுவது தமிழகம் என நினைத்தால் அது தவறு. முருங்கை உற்பத்தியில் முதலிடம் ஆந்திராவிற்கும், இரண்டாம் இடம் கர்நாடகாவிற்கும் கிடைத்தபின் தமிழகத்திற்கு மூன்றாம் இடம்தான். இந்தியாவைத் தவிர தாய்லாந்து, இலங்கை, பிலிபைன்ஸ், தைவான்,மத்திய அமெரிக்கா, ஆப்ரிகா, கரீபியன் தீவுகளிலும் முருங்கை பயிரடப்படுகின்றது.
    முருங்கையில் இரண்டே வகைகள்தான் உண்டு. ஒன்று மரமுருங்கை மற்றொன்று செடி முருங்கை. இதில் மர முருங்கை நீண்ட காலப் பயிர். இதனை குச்சி (பொத்து) மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். இது பல்லாண்டு கால நிரந்தர பயிர். சுமார் 1 ½ சுற்றளவும், 40 அடி உயரமும் வளரக் கூடிய மர வகை. செடி முருங்கை என்பது விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுபவை. இது குறுகிய காலப்பயிர் மூன்று அல்லது நான்கு காய்ப்புகளுக்குப் பின் காய்க்கும் திறன் குறைவதால் இதனை வெட்டி அப்புறப்படுத்திவிட்டு வேறு முறை நடவு செய்ய வேண்டும். இதைச் செடி முருங்கை என பரவலாக அழைக்கின்றனர்.
    செடி முருங்கையில் pkm1m pkm2, யாழ்பாண முருங்கை, ரோகிட் 1, துர்கா, கோகன், GKVK 1, GKVK 2, GKVK 3, KM 1, CO2 சாகவச்சேரி என பல்வேறு வகைகள் இருந்த போதிலும் pkm1 எனும் ரகம்தான் சக்கைப்போடு போடுகின்றது.
    செடி முருங்கை எல்லாவகையான மண்ணிலும் வளரும் என்றாலும் மணல் கலந்த செம்மண் பூமி, கரிசல் பூமி, வடிகால் வசதியுள்ள வண்டல் நிலம் மிகவும் ஏற்றது. ஜூன், ஜூலை பட்டத்திலும், நவம்பர் டிசம்பர் பட்டத்திலும் நடவு செய்யாமல் எட்டு அடி X எட்டு அடி இடைவெளியில் 1 ½ X 1 ½ X 1 ½ அளவில் குழி எடுத்து ஆறவிட்டு அதில் மக்கிய தொழு எரு, மேல் மண் ஆகியவற்றை சம அளவில் கலந்து நிரப்பி, இரண்டு அடி வட்டப்பாத்தி அமைத்து வாய்க்கால் பாசனமோ, சொட்டி நீர்ப் பாசனமோ அமைக்க ஏற்பாடு செய்து விதை ஊன்ற வேண்டும். தரமான, நல்ல முளைப்புத் திறன் உள்ள பொறுக்கு விதையாக இருப்பின் ஏக்கருக்கு 300 கிராம் விதை போதுமானது. விதையின் முளைப்புத் திறனை அதிகரிக்க 10 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி பஞ்ச காவ்யா கலந்து அதில் விதைகளை 12 மணி நேரம் ஊற வைத்து குழிக்கு 2 விதைகள் வீதம் விதை சேதமடையாமல் ஊன்ற நீர்ப் பாய்ச்சவேண்டும். மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின் நிலத்தின் தன்மை, வெயிலின் அளவு, காற்றின் ஈரப்பதம் போன்ற காரணிகளை அனுசரித்து நீர்ப் பாசனம் மேற்கொள்ளவேண்டும்.

    விதைத்த இரண்டு மாதங்கள் வரையிலும் நிலத்தில் களைகளின்றி பராமரிக்க வேண்டும். செடி முருங்கை நடவு செய்யும்போதே ஊடுபயிராக வெங்காயம், தட்டைப்பயறு, கொத்துமல்லி போன்ற மிகக் குறுகிய காலப் பயிரை ஊடு பயிராக சாகுபடி செய்யலாம்.
    செடி முருங்கை நமது நெஞ்சு மட்டத்திற்கு வந்ததும் சுமார் 3 ½ அடி உயரம் அதன் நுனியைக் கிள்ளி செங்குத்து வளர்ச்சியை நிறுத்திப் பக்கவாட்டு வளர்ச்சியை அதிகப்படுத்தவேண்டும். ரசாயன விவசாயிகள் செடி ஒன்றிற்கு 100 கிராம் யூரியா, 100 கிராம் சூப்பர் பாஸ்பேட், 50 கிராம் பொட்டாஷ் உர உப்பை விதைத்த மூன்றாவது மாதத்திலும், ஆறாவது மாதத்தில் 100 கிராம் யூரியா மட்டும் இடவேண்டும். இயற்கை வழியில் சாகுபடி செய்வோர் அதற்கு ஈடான இயற்கை உரத்தை கொடுக்க வேண்டும். அதிக காய்ப்புத் திறனுள்ள செடி முருங்கைகளுக்கு அதன் உற்பத்தி திறனுக்கு ஏற்ற ஊட்டச் சத்து கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.
    நஞ்சில்லா காய்கறி சாகுபடி செய்ய வேண்டும் என நினைத்தால் முருங்கையில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு அவசியம். முருங்கை விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு 100 கிராம் சுடோமோனாஸ் புளூரசன்ஸ் எனும் உயிர் மருந்தைக் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். உயிர் உர நேர்த்தியாக அசோஸ்னபரில்லம் 200 இளம், பாஸ்போ பேக்ட்ரீயம் 200 எடுத்துக்கொண்டு ஆறிய அரிசி வடிகஞ்சி அல்லது ஆறிய மைதாமாவு பசைக் கரைசலுடன் கலந்து இந்தக் கரைசலுடன் 1 கிலோ முருங்கை விதையை புரட்டி நிழலில் காயவைத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
    நடவு குழியில் மக்கிய தொழு உரம் 15 கிலோ, மண்புழு உரம் 5 கிலோ, அசோஸ்பைரில்லம் 50 கிராம், பாஸ்போ பேக்ட்டீரியம் 50 கிராம், வேம் (VAM) எனும் வேர் நுண் உட்பூசணம் 100 கிராம், வேப்பம் புண்ணாக்கு 250 கிராம் கலந்து இட வேண்டும். 5% வேப்பங் கொட்டை கரைசல் 0.03% நிமிசிடின் கரைசல் போன்றவற்றை காய் மடிப்புப் பருவத்தில் ஒரு மரத்திற்கு 2 லிட்டர் தெளித்துப் பூச்சி நோயைக் கட்டுப்படுத்தலாம். பஞ்சகாவ்யம் 3 சதம் தெளித்து அதிக மகசூல் பெறலாம்.
    ஒரு வருடம் கழித்து காய்ப்பு முடிந்த பிறகு, செடிகளைத் தரை மட்டத்திலிருந்து சுமார் மூன்று அடி உயரத்தில் வெட்டிவிட வேண்டும். இதனால் புதிய குருத்துகள் வளர்ந்து மீண்டும் 4 முதல் 5 மாதங்களில் காய்க்கத் துவங்கும். இதுபோல் ஒவ்வொரு காய்ப்புக்கு பிறகும் மரத்தை வெட்டி மூன்று ஆண்டுகள் வரை மறு தாம்புப் பயிராக பராமரிக்கலாம். ஒவ்வொரு முறை கவாத்து செய்தபின்னும் தேவையான ஊட்டச் சத்து உரங்களை இட்டு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.

    வேண்டாம் ரசாயன உரங்கள் மாற்றாக இயற்கை உரங்கள் - Benefits of Using Organic Fertilizers

    முதன் முதலாக ரசாயன உரங்கள் அறிமுகப் படுத்தப்பட்டபோது விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
    தொழு உரம், தழையுரம், சாண உரம் என்று தேடியலைய வேண்டியதில்லை. காசைக் கொடுத்தால் விதவிதமான ரசாயன உர மூட்டைகள் வீட்டில் வந்து இறங்கிவிடும். எந்தப் பயிருக்கு, எந்த உரத்தை எவ்வளவு இட வேண்டும் என்பதையெல்லாம் விவசாயிகளுக்குப் பாடம் நடத்தின உர நிறுவனங்கள்.

    முதல் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு விளைச்சல் அபரிமிதமாகத்தான் இருந்தது. மேலும் மேலும் அதிக அளவில் ரசாயன உரங்களைப் போட்டால் இன்னும் அதிக அளவில் விளைச்சல் வருமென்று எண்ணிக் கடன்பட்டுக்கூட ரசாயன உரங்களை வாங்கி வயல்களில் கொட்டினார்கள். அடுத்து விளைச்சல் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. மண்ணின் இயற்கை வளம் குறைந்துபோயிற்று. வயலில் போட்ட முதலைக்கூட மீட்க முடியாமல் விவசாயிகள் இழப்புக்கு ஆளானார்கள். உலகம் முழுவதிலும் இதே மாதிரியான பிரச்சினைகள் தலைதூக்கின.
    இயற்கை உரங்களின் நன்மைகள்
    உலகெங்கிலும் உள்ள விவசாய விஞ்ஞானிகள் செயற்கையான ரசாயன உரங்களால் ஏற்பட்ட விளைவுகளைத் தீவிரமாக ஆராயத் தொடங்கினார்கள். பிரான்ஸில் உள்ள இன்செர்ம் எனும் உடல் நல மருத்துவ ஆய்வு நிலையம் தொழு உரம், இலையுரம் போன்ற இயற்கையான நைட்ரஜன் அடங்கிய உரங்களைப் பயிர்களுக்கு வழங்குவதால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியலிடுகிறது.
    லெட்டூஸ் செடிகளுக்கு இயற்கை உரங்களை இடும்போது அவற்றின் எடை, விளைச்சலின் அளவு மற்றும் புரத உள்ளடக்கம் ஆகியவை குறைவதில்லை. ஆனால், அவற்றில் தீமை செய்கிற நைட்ரேட் எச்சங்களின் அளவு மிகவும் குறைந்துவிடுகிறது. இதற்கு மாறாக, செயற்கை ரசாயன உரங்கள் ஊட்டி வளர்க்கப்பட்ட லெட்டூஸ் இலைகளில் உட்கவரப்படாத நைட்ரேட் சத்துகள் அதிக அளவில் போய்த் தேங்கிவிடுகின்றன.
    பிரான்ஸ் ஆய்வர்கள் ஆமணக்குப் பிண்ணாக்கை ஒரு பாத்தியில் உள்ள லெட்டூஸ் செடிகளுக்கு இட்டார்கள். அதே அளவான இன்னொரு பாத்தியிலுள்ள செடிகளுக்கு அதே அளவு நைட்ரஜன் சத்தைத் தருகிற அளவிலான அம்மோனியம் நைட்ரேட், சோடியம் நைட்ரேட் ஆகிய ரசாயன உரங்களைப் போட்டார்கள். இயற்கை உரத்தை உண்டு வளர்ந்த செடிகளில் இருந்ததைவிட இரண்டு மூன்று மடங்கு அதிகமான நைட்ரேட் எச்சங்கள் செயற்கை உரமிடப்பட்ட செடிகளின் இலைகளில் காணப்பட்டன.
    குடிநீரில் நைட்ரேட் நச்சு
    வயல்களில் தூவப்படும் ரசாயன உரங்களின் கணிசமான விகிதம் பாசன நீரில் கரைந்து அடித்துச் செல்லப்பட்டு வெளியேறி, நிலத்தடி நீரிலும் அருகிலுள்ள நீர் நிலைகளிலும் போய்ச் சேர்ந்துவிடுகிறது. இதன் காரணமாக அவற்றில் நைட்ரேட் செறிவு பாதுகாப்பான அளவைவிடக் கூடுதலாகிவிடுகிறது. பிரான்ஸின் குடிநீர் விநியோகம் மற்றும் பராமரிப்புத் துறை அதிகாரிகளுக்கு இது ஒரு பெரிய பிரச்சினை. எந்த ஒரு ஊரிலிருந்தும் குடிநீரில் நைட்ரேட் நச்சு அளவுக்கு மீறிப் போய்விட்டதாக நுகர்வோர் அமைப்புகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வழக்குத் தொடர ஆயத்தமாக இருக்கிறார்கள்.
    நீர்நிலைகளில் ரசாயனங்கள் கலப்பது நீரை மாசுபடுத்தி,(Water runoff) அதில் வாழும் உயிரினங்களுக்கும் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜனின் செறிவையும் குறைத்துவிடுகிறது. நீர்த்தாவரங்களும் மீன்களும் இதனால் பாதிக்கப்படுகின்றன. அந்த நீரைப் பருகும் குழந்தைகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையால் உண்டாகும் நீலநிறக் குழந்தை நோய் மற்றும் ரத்த சோகைக் கோளாறுகள் தோன்றுகின்றன.
    ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஆக்சிஜனை உட்கவர்ந்துகொண்டு அதை உடலின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச்சென்று விநியோகிக்கிறது. ரத்தத்தில் நைட்ரேட்டுகள் புகுந்துவிட்டால் ஹீமோகு ளோபின் மெட்ஹீமோகுளோபினாக மாற்றப்படும். அதற்கு ஆக்சிஜனுடன் இணைகிற திறன் இராது. எனவே, உடலுக்குள் ஆக்சிஜன் விநியோகம் பாதிக்கப்பட்டு, உறுப்புகளுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் போகும்.

    புடலங்காய் சாகுபடி- Snake Gourd Cultivation


    தமிழகத்தில் எளிதாக பயிராகும் காய் வகைகளில், கொடி வகைத் தாவரமான புடலங்காய் சாகுபடி செய்தால் ஒரு ஹெக்டேருக்கு 20 முதல் 25 டன் வரை மகசூல் பெறலாம் என தோட்டக்கலைத் துறையினர் கூறியுள்ளனர். இது வேகமாக வளரக் கூடியதும், அதிக மகசூல் தரும் பயிராகும்.




    மண், தட்ப வெட்ப நிலை:
    புடலங்காய் ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். இதன் சாகுபடிக்கு 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தேவைப்படும். இருமண் பாங்கான மண் வகைகள் சாகுபடிக்கு ஏற்றவை. மேலும் மித வெப்ப மண்டலப் பகுதிகளிலும் சாகுபடி செய்யலாம்.
    பருவம்: ஜூன்- ஜூலை மாதங்களும், டிசம்பர் -ஜனவரி மாதங்களும் சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும்.
     
    நிலம் தயாரித்தல்:
    நிலத்தை நன்றாக 3 அல்லது 4 முறை உழவு செய்ய வேண்டும்.கடைசி உழவின்போது 20 டன் மக்கிய தொழு உரத்தை இட்டு 2 மீட்டர் இடைவெளியில் 60 செ.மீட்டர் அகலத்தில் வாய்க்கால் எடுத்து நிலம் தயாரிக்க வேண்டும். அந்த வாய்க்காலில் 1.5 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீட்டர் நீளம், ஆழம், அகலம் கொண்ட குழிகளை எடுத்து மேல் மண் கலந்து நிரப்பி வைக்க வேண்டும்.
     
    விதையளவு:
    ஒரு ஹெக்டேருக்கு 1.5 முதல் 2 கிலோ விதையளவு தேவைப்படும். விதையை 2 கிராம் பெவிஸ்டின் என்ற பூஞ்சாண மருந்துடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு குழிக்கு 5 விதைகள் வீதம் ஊன்ற வேண்டும். விதை நட்ட 8 முதல் 10 நாள்களில் முளைக்கத் தொடங்கிவிடும். ஒரு குழியில் நன்கு வளர்ந்த 3 நாற்றுகளை மட்டும் விட்டு மற்ற நாற்றுகளை பிடுங்கி விட வேண்டும்.

     உரமிடுதல்:
    ஒரு ஹெக்டேருக்கு அடியுரமாக 20 முதல் 30 கிலோ தழைச்சத்து, 30 முதல் 50 கிலோ மணிச்சத்து, 30 முதல் 40 கிலோ சாம்பல் சத்தை இட வேண்டும். மேலுரமாக 20 முதல் 30 கிலோ தழைச்சத்தை பூ பூக்கும் பருவத்தில் இட வேண்டும்.
     நீர் பாய்ச்சுதல்:
    விதை ஊன்றியவுடன் குடம் அல்லது பூவாளி வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். நன்கு வளர்ந்தவுடன் வாரம் ஒரு முறை வாய்க்கால் மூலமாக தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும்.

    காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை


    இந்தியாவில்  காய்கறி உற்பத்தி உலகளவில் 2 ம் இடத்தில் உள்ளது. சாகுபடி பரப்பு குறைவு, நுண்ணூட்டச்சத்து குறைபாடு போன்றவற்றால் காய்கறி உற்பத்தி குறைந்துள்ளது. நுண்ணூட்டச்சத்து குறைபாட்டை தடுக்க பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி கழகம் சிறப்பு நுண்ணூட்ட கலவையை கண்டுபிடித்துள்ளது. இதனை காந்திகிராம வேளாண் அறிவியல் மையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
    இவற்றை தக்காளி, முட்டைகோஸ், காலிபிளவர், குடைமிளகாய் பயிர்களுக்கு 5 கிராம், மிளகாய், கத்தரி, வெங்காயத்திற்கு 3 கிராம், பீன்ஸ், தட்டைபயறு, வெண்டைக்கு 2 கிராம், பீர்க்கு, பாகல், புடலை, தர்பூசணி, சுரைக்காய்க்கு ஒரு கிராம் பயன்படுத்தினால் போதும். அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், தொழில்நுட்ப வல்லுனர் செந்தில்குமார் கூறியதாவது:
    நுண்ணூட்ட கலவையை இலைவழியாக தெளிக்கும்போது அனைத்து நுண்ணூட்ட சத்துகளும் பயிர்களுக்கு கிடைக்கும்.இதனால் மகசூல் அதிகரிக்கும். நடவு செய்த 30 நாட்கள் அல்லது 45 வது நாளில் தெளிக்கலாம்.அதன்பின் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கலாம்.அவற்றை பூச்சிக்கொல்லி மருந்துடன் சேர்த்து தெளிக்க கூடாது.ஒரு கிலோ ரூ.150 க்கு தருகிறோம், என்றனர்.
    தொடர்புக்கு: 04512452371