ஆறே மாதத்தில்... 69 ஆயிரம்... அசத்தல் வருமானம் தரும் ஆடு வளர்ப்பு
அணுவைக் கொண்டு ஆக்கல், அழித்தல் என்ற இரண்டு வேலைகளையும் செய்வது போலத்தான் தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியும். ஆக்கமா... அழிவா... என்பது நாம் பயன்படுத்தும் முறையில் தான் இருக்கிறது. அந்த வகையில், இன்றைக்கு சமூகச் சீர்கேடுகளில் ஒன்றாக 'ஃபேஸ்புக்' எனும் 'முகநூல்' விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த முகநூல் மூலமாகவே நண்பர்களாகி, விவசாயத்திலும் ஆடு வளர்ப்பிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார்கள் நான்கு இளைஞர்கள் என்றால், ஆச்சர்ய சங்கதிதானே!
விருதுநகரைச் சேர்ந்த விஜயகுமார், சிங்கப்பூரில் இருக்கும் ராமசாமி, கோயம் புத்தூரில் இருக்கும் எத்திராஜ், ஓமன் நாட்டில் இருக்கும் நவநீதகிருஷ்ணன் ஆகிய நால்வரும் தங்கள் பணிகளுக்கு இடையில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்வதுடன், கொட்டில் முறை ஆடு வளர்ப்புத் தொழிலையும் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
நத்தம்-மதுரை சாலையில் 7-வது கிலோ மீட்டரில் வருகிறது சாத்தாம்பாடிவிலக்கு. இங்கிருந்து இடதுபுறம் திரும்பும் தார்சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் வருகிறது சாத்தாம்பாடி. சாலையை ஒட்டியுள்ள மாமரங்களுக்கு இடையில் இருக்கிறது இவர்களுடைய பசுமைப் பண்ணை. நாம் அங்கே ஆஜரானபோது...
ஆடுகளுக்குத் தீவனம் வைத்துக் கொண்டிருந்த விஜயகுமார், நம்மை உற்சாகத்துடன் வரவேற்றுப் பேசினார்.
''எனக்குச் சொந்த ஊரு விருதுநகர். அடிப்படையில ஒரு இன்ஜினீயர். நாலு வருஷமா 'பசுமை விகடன்' படிச்சுட்டு வர்றேன். அதை படிக்கப் படிக்க விவசாயத்து மேல ஆர்வம் வந்துடுச்சு.
அதேபோலவே நண்பர்கள் மூணு பேரும் 'பசுமை விகடன்' வாசிக்கறவங்கதான். நாங்க, நாலு பேரும் இன்ஜினீயர்ங்கிற அடிப்படையிலதான் நட்பானோம். ஃபேஸ்புக்ல அப்பப்ப கமெண்ட் போட்டுக்குவோம். அதுல பெரும் பாலும் விவசாயம் தொடர்பான விஷயத்தைப் பத்தித்தான் பேசுவோம். பசுமை விகடன்ல படிச்ச செய்தியைப் பத்தி விவாதிச்சுக்கு வோம்.
பாதை காட்டிய பசுமை விகடன்!
2012 டிசம்பர்ல இருந்து ரொம்ப நெருக்கமான நண்பர்களாயிட்டோம். 2013 ஜனவரியில நாலு பேரும் நேர்ல சந்திக்கத் திட்டமிட்டோம். ராமசாமியின் சொந்த ஊரான சிவகாசி அருகே உள்ள வடமலா புரத்தில் நாலுபேரும் குடும்பத்தோட ஆஜராகி, ஒருத்தருக்கு ஒருத்தர் மனசுவிட்டு பேசிக்கிட்டோம்.
அதுவரைக்கும் 'ஃபேஸ்புக்' நண்பர்களா இருந்த நாங்க, அதிலிருந்து குடும்ப நண்பர்களா கிட்டோம். ஒரு கட்டத்துல, 'எல்லாரும் சேர்ந்து ஏன் விவசாயம் செய்யக் கூடாது?'னு முடிவு செஞ்சோம். நண்பர்கள் மூணு பேரும் வெளியூர்ல இருக்கறதால, நான் மட்டுமே பண்ணையைப் பாத்துக் கறதுனு முடிவாச்சு. உடனே ராமசாமியோட மாமியார் தோட்டத்தை, குத்தகைக்கு எடுத் தோம்.
இந்த 40 ஏக்கர் தோட்டத்துல... 20 ஏக்கர் மா, 17 ஏக்கர் தென்னை இதெல்லாம் இருக்கு. இங்க இருக்கற மூணு கிணத்துலயும் தாராளமான தண்ணியும் கிடைக்குது. அதனால, ஒருங்கிணைந்தப் பண்ணையா இதை மாத்த நினைச்சோம். கிணத்துல விரால் மீன் வாங்கி விட்டோம். பிறகு, நாட்டுக்கோழி வளர்க்கலாம்னு 50 கோழிகளையும் வாங்கினோம். அந்த நேரத்துல 'பசுமை விகடன்' தண்டோரா பகுதியில வந்த விளம்பரத்தைப் பாத்துட்டு, திண்டுக்கல், கால்நடை அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்துல நடந்த ஆடு வளர்ப்புப் பயிற்சியில கலந்துக்கிட்டேன். அதுக்குப் பிறகு, ஆட்டுப்பண்ணை வெக்குற ஆர்வம் வந்துச்சு.
பசுமை விகடன் மூலம் அறிமுகமான ஆட்டுப் பண்ணைகள நேர்ல போய் பாத்தோம். பல பண்ணைகளைப் பாத்ததுல... 'தலைச்சேரி ஆடுகளை வாங்கி, போயர்ல கிராஸ் பண்ணி குட்டி எடுத்து வித்தா நல்ல லாபம் வரும்!'னு தெரிஞ்சுக் கிட்டோம்'' என்று சொன்ன விஜயகுமார், அடுத்தக் கட்டமாக நண்பர்களுடன் ஆலோசித்து, களத்திலும் இறங்கியிருக் கிறார்.