Friday, November 27, 2015

அற்புதமான நாட்டு கோழி வளர்ப்பு


கிராமபுரங்களில் இன்றும் அவசர தேவைக்கும் , அன்பான விருந்தாளிகளுக்கு விருந்து வைக்கவும் ரொம்பவும் உதவியாய் இருப்பது நாட்டு கோழிகளும், வளர்ப்பு ஆடுகளும்தான்.

கோழிவளர்ப்பு மிகவும் குறைந்த முதலீட்டில் ஆரம்பித்துவிடலாம். இடத்தேவையும் மிகவும் குறைவே. கிராம மக்கள் கண்டிப்பாக 20 க்கும் அதிகமான கோழிகளை வீட்டிலேயே வளர்ப்பார்கள். அதையே கொஞ்சம் சிரத்தை எடுத்து எண்ணிக்கை அதிகமாக்கினால் மிகுந்த லாபம் பெறலாம். இன்றைய சூழ்நிலையில் நாட்டு கோழி நல்ல விலை போக கூடியதாக உள்ளது.ஆடு நிக்குது, கோழி இருக்குதுன்னு சொல்லுவாங்க. ஆனா அதை நல்ல முறையில் பார்த்து வளர்க்கிறது கிடையாது. அப்படி செய்தல் கண்டிப்பா நிறைய லாபம் கிடைக்கும்னு உணர்வது இல்லை. இதை ஒரு உப தொழிலா நெனச்சு செய்யணும். கொஞ்சம் பராமரிப்பு இருந்தா போதும்.

கோழிகளோட வருமானத்தையும் நாம லாபகணக்குல தவறாம சேர்த்துடலாம்.
ராஜ் டேனியல் என்பவரின் கோழி வளர்ப்பு நுணுக்கங்களை நாமும் தெரிந்துகொள்வோம்.

ஒரு பெட்டைக்கோழி வருஷத்துக்கு மூணு பருவங்கள்ல முட்டை போடும். ஒவ்வொரு முறையும் தொடர்ச்சியா பதினைஞ்சு முட்டை வரை போடும். அதை தேதி வாரியா எழுதி வைக்கணும். கடைசியா போட்ட ஒன்பது முட்டைகளை அடை காக்க வைக்கறதுதான் லாபமானது. 

நல்லா வளர்ச்சி அடைஞ்ச ஒரு பெட்டைக்கோழியால ஒன்பது முட்டைகளை மட்டும்தான் அடை காக்க முடியும். அதுக்கு மேல வெச்சா, ஒழுங்கா குஞ்சு பொரியாது. அடுப்புச் சாம்பலும் மணலும் நிரப்பின கூடையிலதான் அடைகாக்க வைக்கணும். கூடையில மூணு மிளகாயையும் போட்டுட்டா பூச்சி, பொட்டு அண்டாது. ஈரப்பதத்தை உறிஞ்சி கதகதப்பா வைக்கறதுக்காக கரித்துண்டு… இடியைத் தாங்கிக்கறதுக்காக இரும்புத் துண்டு… இதையெல்லாம் கூடையில போட்டு வைக்கணும். இந்த மாதிரி வெச்சா… ஒன்பதும் பொரிச்சிடும். 

முதல் வாரம், தினமும் தண்ணியில் மஞ்சதூள் கலந்து குஞ்சுகளுக்குக் கொடுக்கணும். அப்புறம் முணு வாரத்துக்கு ஏதாவது வைட்டமின் டானிக்குகளை சில சொட்டுகள் கலந்து கொடுத்தா போதும். சனிக்கிழமை தோறும் அரசு கால்நடை மருந்தகங்கள்ல கோழிக்கு இலவசமா தடுப்பு ஊசி போடுவாங்க. இதையெல்லாம் தவறாம செய்தா… எந்த இழப்பும் இல்லாம கோழிகளை வளர்த்தெடுத்துடலாம். புதுசா வேற எந்த டெக்னிக்கும் தேவையில்ல
கோழி குஞ்சு வளர்ப்பு.

முழுக்க நாட்டுப்புறத்துல வளர்க்கற மாதிரியேதான் வளர்க்கணும். 450 சதுர அடி இருந்தா போதும். பத்து கோழிகளை வளர்த்து மாதம் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அந்த இடத்தைச் சுத்தி நாலடி உயரத்துக்கு கோழி வலை அடிச்சு வேலி போட்டுக்கணும். வேலியோரம் கீழ் மண்ணைக் குவிச்சி சிமென்ட் பாலை ஊத்தி கொஞ்சம் கெட்டியாக்கிட்டா, மத்த உயிரினங்களால கோழிக்கு தொந்தரவு இருக்காது. வலை போட்ட இடத்துக்குள்ள மூணுக்கு மூணு அடி சதுரத்துல மூணு அடி உயரத்தில் மூணு குடிசைகளை சின்னச்சின்னதா போட்டுக்கணும்.

கோழிகள் ராத்திரியில தங்கறதுக்கு ஒரு குடிசை. நாலு பக்கமும் தரையிலிருந்து அரை அடி உயரத்தில் சுவர் எழுப்பி, வலை அடிச்சு, கீழே கடலைத் தோலை பரப்பி வைக்கணும். இன்னொரு குடிசை தூசிக் குளியலுக்கு. நாட்டுக்கோழிங்க குப்பையில புரண்டு றெக்கைகளை உதறுறதைப் பார்த்திருக் கலாம். உடம்புல இருக்கிற சின்னச்சின்ன உயிரினங்களை (செல்) துரத்துறதுக்காக இப்படி அந்தக் கோழிங்க செய்யும். பண்ணையில குப்பைக் குழி இருக்காது. அதனால, தரையில சாம்பலையும் மணலையும் கலந்து இந்த குடிசையில வைக்கணும்.

மூணாவது தீவனக் குடிசை. இதுல தீவனத் தொட்டியையும், தண்ணீர் குவளையையும் வெச்சுரணும். கோழிகளை பூட்டி வைக்கற வேலையே இங்க கிடையாது.

நல்ல வெடக்கோழிகளா பத்தும் சேவல் ஒண்ணும் வாங்கி வந்து வளர்க்க வேண்டியதுதான். கோழிங்க சமயத்துல பறந்து வெளியில போயிரும். அதனால பறக்கற கோழியை மட்டும் பிடிச்சி, ஒரு பக்க றெக்கையை நாலு விரக்கடை அளவு வெட்டி விட்டுட்டா பறக்காது. அப்பறம் முட்டைகளை சேகரிச்சு பொரிக்க வைக்க வேண்டியதுதான்.

பத்துக் கோழிகளை வளர்க்கறது ஒரு யூனிட். அப்படியே யூனிட் யூனிட்டா பெருக்கிக்கிட்டே போகலாம். குஞ்சுகள் தாயிடம் இருந்து பிரிஞ்சதும், அதை வெச்சே இன்னொரு யூனிட் அமைக்கறது நல்லது.

நாட்டுக்கோழிகளை நாட்டுக் கோழியா நினைச்சு மேய விட்டுதான் வளக்கணும். மனிதனுக்கான தீவனத்தை வாங்கிப்போட்டு எந்த உயிரினத்தை வளர்த்தாலும் பெரிசா லாபம் பார்க்க முடியாது. நாமளே கரையான் உற்பத்தி பண்ணி கொடுக்கலாம். அடுப்படிக்கழிவு, காய்கறிக்கழிவுகள், இலை தழைகள் கொடுத்து வளர்த்தாலே போதும் ஐந்தே மாசத்துல ஒன்றரை கிலோ அளவுக்கு வளர்ந்துடும். வீணாகிற தானியங்களை வேணும்னா கொடுக்கலாம். 

நாட்டுக் கோழியை விக்கறதுக்கும் பெரிசா அலைய வேண்டியதில்லை. ஒரு முறை விஷயத்தைத் தெரியப்படுத்திட்டா… வீடு தேடி வந்து வாங்கிக்குவாங்க.

நாட்டுக்கோழி வளர்ப்பில் இரண்டு வருடங்களாக ஈடுபட்டு வருபவர் நாமக்கல் மாவட்டம் காளிசெட்டிப்பட்டியை சேர்ந்த ரகுநாதன் (அலைபேசி: 94426-25504). ‘பண்ணை முறையிலான நாட்டுக்கோழி வளர்ப்பு’ பற்றி அவர் இங்கே விவரிக்கிறார்.

“வீட்டில் இருந்தே பாக்குற மாதிரி ஏதாவது பண்ணைத் தொழில் செய்யலாம்னு நாமக்கல்ல இருக்கற கே.வி.கே. மையத்துல போய் கேட்டேன். ஆடு, கோழி வளர்க்கலாமேனு சொன்னாங்க. கோழி வளர்ப்பு பயிற்சி வகுப்புல சேர்ந்து விஷயங்களைத் தெரிஞ்சிகிட்டேன். பிறகு, சென்னை – நந்தனத்துல இருக்கற கோழியின ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து நாட்டுக்கோழி, கின்னிக் கோழினு வாங்கிட்டு வந்து தொழிலை ஆரம்பிச்சேன். மத்த இனங்களுக்கு அவ்வளவா விற்பனை வாய்ப்பு இல்லாததால, நாட்டுக்கோழிங் களை மட்டும் தொடர்ந்து வளர்க்கிறேன்.

படிப்படியா வளர்ந்து, இப்பப் பெரிய பண்ணையா மாத்திட்டேன். வாரத்துக்கு 50 கோழிங்க விற்பனை ஆகுது. எப்பவுமே 500 கோழிங்க தயாரா இருக்கும். ஆரம்பத்துல, பாரம்பரிய முறைப்படி அடைகாக்க வெச்சேன். விற்பனையும் தேவைகளும் அதிகமாயிட் டதால இப்ப இங்குபேட்டர் பயன்படுத்துறேன்.

‘மேய்ச்சலுடன் கூடிய கொட்டில் முறை’யிலதான் நான் வளர்க்கிறேன். மதியத்திலிருந்து இருட்டுற வரை வெளியில மேயவிட்டு, பிறகு கூண்டுங்கள்ல அடைச்சிடுவேன். அப்ப அடர் தீவனம் கொடுப்பேன். விலைக்கு வாங்காம நானே தயாரிக்கிறதால தீவன செலவு ரொம்பவும் குறைச்சல்தான். வெளிய வாங்கினா ஒரு கிலோ 13 ரூபாய். நாமே தயார் செய்தா 8 ரூபாய்தான்.

தவறாம தடுப்பூசி போடணும், மருந்துகளையும் கொடுக்கணும். தடுப்பூசி போட்டாதான் கோடைக்காலத்துல வர்ற வெள்ளைக்கழிசல் நோய் வராம பாதுகாக்கலாம்” என்று விவரித்தார்.

நன்றி: வேளாண்மை நண்பர்.

தொடர்புக்கு: தோழமை ரகுநாதன் 9442625504, நாமக்கல்.

2 comments:

 1. சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் இவைகளுக்கு வங்கி கடன் பெற்று பயனடைய விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் -9944209238

  ReplyDelete
 2. எங்களிடம் அனைத்து வகையான கோழிகளும் அசல் தரத்துடன் கிடைக்கும்.
  Country chicken
  Aseel chicken
  Chittang chicken
  Kadaknath Chicken
  ஒரு பண்ணை அமைக்க தேவையான நாட்டு கோழி குஞ்சுகள் கிடைக்கும்
  நாட்டு கோழி பண்ணை அமைக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்.
  Available:1 day chick
  15day chick
  1 month chicks கிடைக்கும
  Mobile8667653917

  ReplyDelete