மழை இல்லாத கோடையிலும் விவசாயம்.
வறட்சி
எதிர்பாராத வறட்சி விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. வறட்சி வரும் என்பதை கணித்து அதில் இருந்து பயிர்களை தற்காத்துக் கொள்ள நமது முன்னோர்கள் பல உத்திகளை கையாண்டுள்ளனர். அதில் பண்ணைக் குட்டைகள் என்ற நீர் சேமிப்பு குழிகளும் ஒரு வகை உத்தி ஆகும்.
மழை காலத்திலும், கோடை மழை காலங்களிலும் பெய்யும் மழைநீரை பண்ணைகுட்டை எனப்படும் குழிகளில் தேக்கி வைத்தனர். வறட்சி காலத்தில் பயிர்களுக்கு இதில் சேமிக்கப்பட்டிருக்கும் நீரை பயன்படுத்தியுள்ளனர். சில நேரங்களில் இதே குழிகளில் விவசாய கழிவுகளை மக்க வைத்து உரமாக மாற்றி இயற்கை உரமாக பயிர்களுக்கு அளித்து நல்ல மகசூலையும் பெற்று வந்துள்ளனர்.
வேளாண்மையின் உயிர்நாடிகள்
போதிய நீரும், வளமான மண்ணும் வேளாண்மையின் உயிர் நாடி ஆகும். புவியியல் அமைப்பு அடிப்படையில் தமிழகம் மிகக் குறைந்த நிலத்தடி நீரை கொண்டதாக இருக்கிறது. மழைநீரை நம்பித்தான் பெரும்பாலான விவசாயிகள் பயிர் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. பொதுவாக, மானவாரி நிலங்களில் மழைநீரை சேமித்து பயிர்களுக்கு தேவைப்படும் சமயத்தில் பயன்படுத்திக் கொள்ள முடிவதில்லை.
மேலும், அதிக மழை பொழியும் காலங்களில் நிலத்தில் விழுந்து ஓடும் மழைநீரும் அதனால் ஏற்படும் மண் அரிமானமும் மண்ணின் வளத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்படி வழிந்து ஓடும் நீரை கட்டுப்படுத்த வயல் தோறும் ஒரு பண்ணைக்குட்டையை அமைக்கலாம். குறிப்பிட்ட நீள, அகல மற்றும் ஆழத்தில் அமைக்கப்படும் இந்த அமைப்பில் மழை நீரை சேமித்து வைப்பதன் மூலம் பயிரிடப்படும் நிலங்களில் மண் அரிப்பை தடுக்கலாம்.
எருக்குழி
மழை பெய்யும் போது, நிலத்தில் வழிந்தோடும் நீரால் பயிரிடப்படும் மண்ணில் உள்ள சத்துக்கள் நீரால் அரித்து செல்லப்படும். அப்போது அந்த மண்ணில் பயிரிட தேவையான சத்துக்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும். அப்போது, நிலத்தில் மக்கு மற்றும் தொழுஉரங்களை இட்டு மீண்டும் மண்ணில் பயிர் செய்வதற்கான போதிய சத்தை நிலைநிறுத்த வேண்டியுள்ளது.
பொதுவாக, இது போன்ற நிலைகளில் விவசாயிகள் அவசர நிலை கருதி நன்கு மக்காத எருவை வயலில் இடுவார்கள். அப்போது, அந்த மக்காத எருவில் இருக்கும் களைவிதைகளும் நிலத்தில் விழுந்து முளைக்க தொடங்குகின்றன. இந்த நிலையில் முக்கிய பயிரை சாகுபடி செய்யும் போது அதனுடன் சேர்ந்து நிலத்தில் முளைத்திருக்கும் களைகளும் உணவுக்கும், ஊட்டச்சத்திற்கும் போட்டி போடுகின்றன. இதனால் மகசூல் குறைகிறது.
இது போன்ற நிலையில் விவசாய கழிவுகளை மக்கிய உரமாக மாற்ற "வயல் தோறும் எருக்குழி" என்ற அமைப்பை நிறுவலாம். இது பயிர்களுக்கு தேவையான மக்கிய உரத்தை உற்பத்தி செய்யும் அமைப்பாக இருக்கிறது.
அருமையான பண்ணைக்குட்டைகள்
பயிரை விளைவிக்கும் போது அதற்கு தேவையான உரத்தை இடுவது மிகவும் முக்கியம். அதே போல் அந்த பயிருக்கு தேவையான நீரை குறைவில்லாமல் பாசனம் செய்வதும் அதை விட முக்கியம். இந்த இரண்டுக்கும் உதவுவதே பண்ணைக்குட்டைகள் என்ற அமைப்பு ஆகும்.
வயல்வெளிகள் தோறும் விவசாயிகள் சிறிய பண்ணைக்குட்டை அமைப்பை ஏற்படுத்திக் கொண்டால் அதில் நீரையும் சேமிக்கலாம். அதையே சமயங்களில் விவசாயக் கழிவுகளை மக்க வைத்து பயன்படுத்தும் உரசேமிப்பு குழியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.