Thursday, February 27, 2014

ஆடுகளைத் தாக்கும் நோய்களும், தடுப்பு முறைகளும்ஆடு வளர்ப்பது ஆதாயம் தரும் தொழில் என்பதால், ஆடுகளுக்கு வரும் நோய்கள், தடுக்கும் முறைகளை தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மற்ற கால்நடைகளுக்கு தனியாக கலப்பு தீவனம் தரப்படுவது போல் செம்மறி ஆடுகளுக்கு கலப்பு தீவனங்கள் தரப்பட வேண்டிய அவசியம் இல்லை. பொதுவாக புல்வெளியில் பச்சை புல் மேய்ச்சல் இருந்தாலே போதுமானது. இயற்கையாகவே ஆடுகளின் உதடு அமைப்பு பூமியில் சிறு அளவில் இருக்கும் புற்களைக் கூட மேய்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளதால் வறட்சி சமயத்தில் தரையோடு ஒட்டியிருக்கும் குறைந்த அளவு உள்ள புல்களைக் கூட விடாமல் மேய்ந்து தேவையை நிறைவு செய்கிறது.
எனவே, மற்ற கால்நடைகளை விட ஆடு வளர்ப்பில் தீவனச் செலவு குறைந்து லாபம் அதிகம் காணப்படுவதால் கிராமப்புற ஏழைகளுக்கு ஆடு வளர்ப்பு சிறந்ததாகும்.
ஆடுகளுக்கு வரும் நோய்களும் தடுப்பு முறைகளும்:
வெக்கை நோய்: அதிக காய்ச்சல், வயிற்றுப் போக்கு, சாணம் நாற்றம் அடித்தல், உடல் மெலிதல், கண், மூக்கு, வாய் வழியே நீர் வடிதல், உதடுகளின் உள்புறம் ஈறுகள், நாக்கின் அடிப்பாக பகுதிகளில் புண்கள் காணப்படுதல் போன்ற அறிகுறிகள் கொண்ட இந்த நோய் வந்த ஆடுகளில் 75 சதம் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விடுகின்றன.
இந்த நோய் தாக்காமல் இருக்க ஆறுமாத வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆடுகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும். ஒரு முறை தடுப்பூசி போட்டால் 3 ஆண்டுக்கு நோய் வராது. நோய்வாய்ப்பட்ட ஆடுகளை அகற்றி கிருமி நாசின் மருந்தால் சுத்தம் செய்ய வேண்டும்.

ஆட்டம்மை நோய்: வாய், பின்னங்கால்களுக்கு இடைப்பட்ட பகுதி, வாலுக்கு அடிப்புறம், பால்மடி போன்ற இடங்களில் கொப்புளங்கள் தோன்றுதல், அதிக காய்ச்சல், இரை தேட திறனில்லாமை நோயின் அறிகுறியாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஆடுகளை மற்ற ஆடுகளிடம் இருந்து பிரிக்க வேண்டும். பாலை குட்டிகளுக்கு கொடுக்கக் கூடாது.
அடைப்பான் நோய்: அதிக காய்ச்சல், தொண்டை மற்றும் நாக்கு பகுதியில் வீங்குதல், மூக்கு, காது வழியாக ரத்தல் கசிதல் ஏற்பட்டு இறக்க நேரிடும். இக்கொடிய நோய் ஒரு வகை நுண்ணுயிரியினால் ஏற்படும் தொற்று நோயாகும்.
இறந்த கால்நடைகளிலிருந்து இந்த வியாதி அதிவிரைவில் பரவுவதோடு, மனிதர்களையும் பாதிப்பதால் இறந்த கால்நடைகளை ஆழ புதைத்தோ, எரித்தோ விட வேண்டும். நோய்வாய்ப்பட்ட ஆடுகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.
துள்ளுமாரி நோய்: மழை பெய்த பிறகு வரக்கூடிய இந்த நோய், துளிர்ப்புல்லை அதிகம் மேய்வதால் நுண்ணுயிரியினால் தாக்குகிறது. நடக்கும் போது திடீரென துள்ளி விழுந்து இறந்து விடும். இதைத் தவிர்க்க அனைத்து ஆடுகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும்.
கோமாரி நோய்: ஒரு வகை நச்சுயிரியினால் ஏற்படுகிறது. தீவனம், தண்ணீர் உள்கொள்வது குறையும். வாயின் உள்புறம் சிறு கொப்புளங்கள் ஏற்பட்டு புண் உண்டாகும். குளம்பின் நடுவிலும், மேல்புறத்திலும் புண்கள் இருக்கும். வாயிலிருந்து உமிழ்நீர் அதிகமாக வடியும்.
இந்த நோயினால் உயிரிழப்பு குறைவாக இருப்பினும் வளர்ச்சி குன்றி கருத்தரிப்பில் சிக்கல் ஏற்படும். குட்டிகளின் உயிரிழப்பு அதிகமாக இருக்கும். நோய் பாதிப்புக்குள்ளான ஆடுகளை தனியாகப் பிரித்து பராமரிப்பதோடு, பாலை குட்டிகளுக்கு கொடுக்கக் கூடாது.
கால்நடைகளைத் தாக்கும் நோய்களைப் பற்றியும், தடுப்பு முறைகள் குறித்து மேலும் விவரங்கள் தேவைப்படுவோர் குண்டல்பட்டியில் உள்ள கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை அணுகலாம் என்றார் பெ.பாஸ்கர்.

No comments:

Post a Comment