Saturday, May 3, 2014

ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு


நெற்பயிரோடு மீன்வளர்ப்பு:
நெல் வயல்களில் நாற்று நட்டது முதல் அறுவடை வரை நெற்பயிரோடு மீன்வளர்த்தல் முறை, அறுவடைக்குப் பின் மழைக்காலங்களில் பெருமளவு நீர் வயல்களில் நிரம்புவதால் அவற்றில் மீன் வளர்த்தல் மற்றொரு முறை. பொதுவாக வயல்களில் நெல், உளுந்து, கேழ்வரகு என்ற பயிர் சுழற்சியையே நாம் அறிவோம். ஆனால் வெவ்வேறு இடங்களில் சூழ்நிலைக்கேற்ப ஒரு முறை நெல்லும் மறுமுறை மீனும் வளர்த்து நிலத்தையும் நீரையும் முழுமையாகப் பயன்படுத்துதல் ஒரு புதுமுறை சுழற்சி எனலாம். இம்முறை பயிர் – மீன் சுழற்சியால் அதிக பயன் அடைவதோடு பயிர்களை தாக்கும் பூச்சி, புழுக்களையும் களைகளையும் கட்டுப்படுத்தலாம்.
நெல்வயல்களில் வளரும் மீன்கள் நிலத்தை தொடர்ந்து கிளறிவிடுவதோடு, மீனின் கழிவில் நிறைந்துள்ள தழைச்சத்து பயிர்களுக்கு தொடர்ந்து கிடைக்கின்றது. நெல்மணியோடு விலை குறைந்த, புரதம் நிறைந்த மீனும் கிடைப்பதால் புரதப்பற்றாக்குறை நீங்குகிறது. நெல்லையும் மீனையும் சேர்த்து வளர்க்க, விளையும் வயல்களில் குறைந்தது நான்கைந்து மாதங்களாவது நீர் தேங்கியிருக்க வேண்டும். இவ்வகை வயல்களின் வரப்புகள் உறுதியாகவும் உயரமாகவும் இருப்பது அவசியம். வயலின் பள்ளமான பகுதிகளில் ஆழமான குளங்களும் அவற்றிலிருந்து பிரிந்து செல்லும் பல வாய்க்கால்களும் அமைத்தால் வயலின் நீர் குறைந்து தரைமட்டத்தை அடையும் காலங்களில் மீன்கள் மடிந்துபோகாமல் வாய்க்கால்கள் வழியாக குளத்தை வந்தடைந்து பிழைக்கக்கூடும். வாய்க்கால்கள் 50 செ.மீ. அகலமும், 30 செ.மீ. ஆழமும் கொண்டதாய் இருக்க வேண்டும். வயலுக்கு நீர் பாய்ச்சும் வழியின் மூலமாகவும், வெளியேறும் வழி மூலமாகவும் மீன்கள் தப்பிச்செல்வதை தடுக்க வலைகளைப் பொருத்த வேண்டும்.
மேற்கூறிய வசதிகளைக் கொண்ட வயல்களில் உறுதியான வேர்களுடன் குறைந்த வெப்பத்தையும் தேங்கி நிற்கும் நீரையும் தாங்கக்கூடிய காலப்பயிர்களை பயிரிடலாம். நெற்பயிரின் நடவுக்குப் பின் விரலளவு மீன் அல்லது அதற்கு மேல் வளர்ந்த மீன்களை நெல்வயல்களில் எக்டேருக்கு 2000 வரை இருப்பு செய்யலாம். இத்தகைய பயிர் வகைகளை பயிரிட்டால் நான்கைந்து மாதங்களில் எக்டர் ஒன்றுக்கு 500 கி.கி. மீன்கள் கிடைக்கிறது. இம்முறையில் நெற்பயிர்களுடன் சாதாக்கெண்டை, திலோப்பியா, விரால் போன்ற மீன் இனங்களையும் நன்னீர் இறால்களையும் வளர்த்தெடுக்கலாம்.
நிலவாழ் தாவரங்கள் – மீன்வளர்ப்பு: காய்கறி, பழமரங்கள், தென்னைமரம், புல் வகைகள் மற்றும் பூச்செடிகள் ஆகியவைகளை குளக்கரையின் மேல் வளர்க்கலாம். இப்பயிர் வகைகள் உணவாகவும், உரமாகவும் பயன்படுகிறது.


கால்நடைகளோடு மீன்வளர்ப்பு:
மீன்களை கால்நடைகளுடன் கூட்டமாக சேர்த்து பண்ணைகளில் வளர்க்கலாம். இம்முறையில் ஆடு, மாடு, குதிரை மற்றும் பன்றி போன்றவைகளின் கொட்டகைகளை மீன்வளர்க்கும் குளங்களின் கரைகளிலோ அல்லது குளத்தின் நடுவிலோ அமைத்திடலாம். குளத்தின் நடுவில் கொட்டகை அமைக்கும் போது கால்நடைகளை உள்ளே அடைக்கவும், வெளியே கொண்டுவரவும் பலகையினால் பாலம் அமைத்தல் அவசியம். ஒரு எக்டேர் குளத்திற்கு 2-3 பசுக்கள் அல்லது எருமைகள் போதுமானது. குளத்தில் எக்டேருக்கு 4000 மீன் குஞ்சுகளுக்கு மேல் இருப்பு செய்யலாம். அதனால் கால்நடைகளின் கழிவுகள் மீன் வளர்ப்புக் குளத்தில் நேராக கலந்து உரமாக பயன்படுகின்றன. மீன் உற்பத்திக்கென்றே தனியாகக் குளங்களில் உணவிடவோ அல்லது உரமிடவோ அவசியம் ஏற்படாது.
கோழியுடன் மீன்வளர்ப்பு:
கோழியுடன் மீன் வளர்ப்பில் கோழிக்குடிலை குளத்தின் தண்ணீர் மட்டத்திற்கு மேல் சுமார் 5 அடி உயரத்தில் அமைக்கலாம். குளத்தின் மேல் குடில் அமைக்க சிரமமாக இருப்பின் அதன் அருகாமையில் இருக்கும் நிலப்பரப்பிலும் அமைக்கலாம். கோழியிலிருந்து கிடைக்கும் எச்சம் நேரடியாக குளத்தில் விழுந்து மீன்களுக்கு உணவாகவும், குளத்திற்கு உரமாகவும் பயன்படுகிறது. ஒரு எக்டேர் பரப்பளவுள்ள குளத்தில் 300 கோழிகளையும், 4000 முதல் 5000 மீன் குஞ்சுகளையும் வளர்த்திடலாம். ஒரு முட்டைக்கோழி வருடத்திற்கு 250 முதல் 300 வரை முட்டைகளை இடும். இம்முறையில் 4 டன் மீன் உற்பத்தியைப் பெறுவதுடன் 400-500 கி.கி. வரை கோழி இறைச்சியும் பெற முடியும்.

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு 9944209238

    ReplyDelete